அதிகாரக் குவிப்பு
atikārak kuvippu
அதிகாரக் குவிப்பு என்பது, பொது ஆட்சி இயவில் (Public Administration) காணப்படும் அமைப்புப் பற்றிய (Organisation) ஒரு சீரிய கோட்பாடாகும், பொதுவாக, ஆட்சித்துறையை (Administrative Department), மேல்மட்டத்திலுள்ள மேலாண்மை நிலை என்றும் (Top Management), நடுமட்டத்திலுள்ள மேலாண்மை நிலை என்றும் (Middle Management), கீழ்மட்டத்திலுள்ள களநிலையங்கள் என்றும் (Field Establishments) பிரிப்பர். நடுமட்டத்திலுள்ள அதிகாரிகளுக்கும் களநிலைய அதிகாரிகளுக்குமிடையே உள்ள தொடர்பு, அதிகாரக் குவிப்பு என்ற கோட்பாட்டினாலோ (Centralisation of Powers) அதிகாரப்பரவல் என்ற கோட்பாட்டினாலோ (Decentralisation of Powers) உருவாக்கப்படுகிறது. மேல் நிலையிலுள்ள அதிகாரி தனக்குக் கீழ்நிலையிலுள்ள அதிகாரிக்குத் தன் அதிகாரங்களுள் சிலவற்றையோ முழுவதையுமோ வழங்காமல், அதிகாரங்களனைத்தையும் பொறுப்புகளையும் தன்னிடமே வைத்துக் கையாளுவாரேயானால், அஃது அதிகாரக் குவிப்பு முறை ஆகும். இதற்குத் தக்க எடுத்துக்காட்டாக, ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக் கழகத்தாரால் ஏற்படுத்தப்பட்ட இந்திய ஆட்சிமுறையையும், அக்கழகம் கி.பி. 1857–ஆம் ஆண்டில் மறைந்த பின்னர், இந்தியப் பேரரசில் ஆங்கிலேயரால் நிறுவப்பட்டு 1947-ஆம் ஆண்டுவரை செயல்பட்ட, ஆங்கிலோ-இந்திய ஆட்சி முறையையும் கூறலாம். ஆங்கிலேயர் நம்நாட்டிற்கு அயலவராகையினால், இங்குத் தமது பேரரசாட்சியைப் (Imperial Rule) பாதுகாப்பாக நீடித்து வைக்கும் பொருட்டு, அடுக்கு ஆட்சி முறையில் அமைந்த (Hierarchical system) அதிகார வருக்கத்தை (Bureaucracy) நிறுவி, அதிகாரக் குவிப்புமுறையைப் பின்பற்றினர். அஃதாவது, பல்வேறு வகைப்பட்ட அதிகாரிகளை ஒன்றின்கீழ் ஒன்றாகப் பலபடிகளில் அமைத்து, ஒவ்வோர் அதிகாரியிடமும் ஆட்சி அதிகாரத்தைக் குவித்து (Centralise) வைத்தனர். இதைக் கீழ்வரும் ஒரு வரைவின் மூலம் காணலாம்.
இந்த அடுக்காட்சி முறையில் எல்லா இந்திய ஆட்சி அதிகாரமும் மேல்நிலையிலுள்ள (எண் 1) இந்தியச் செயலரிடமும், அடுத்தபடியாக (எண் 2) அரசப் பிரதிநிதியிடமும், அதற்கடுத்த கீழடுக்கில் (எண் 3) மாகாண ஆளுநரிடமும், இறுதியாக (எண் 4) மாவட்ட ஆட்சியரிடமும் குவித்து வைக்கப்பட்டு, ஒவ்வோர் அடுக்கிலுள்ள அதிகாரியும், தம் செயல்களுக்குத் தமக்கு அடுத்த மேலடுக்கில் உள்ள மேலதிகாரிக்குப் பொறுப்பாக இருக்குமாறு ஆக்கப்பட்டார். ஆகையால் அதிகாரக் குவிப்புமுறை என்பது, அடுக்கடுக்காக அமைந்து பணிபுரியும் அதிகாரிகளுடைய ஆட்சிமுறையை ஏற்படுத்துகிறது என்பதும் இதில் ஒவ்வோர் அதிகாரியும் தம் செயல்களைப் பொறுத்தவரையில் தமக்கு அடுத்த மேலடுக்கு அதிகாரிக்குத்தான் பொறுப்பாக இருக்கிறாரே தவிர, தமது செயலால் பாதிக்கப்படும் மக்களுக்குப் பொறுப்பாக இல்லை என்பதும், இவ்வகையாகப் பார்க்கும் போது அதிகாரக்குவிப்பு முறையானது குடியாட்சி இயல்பு உடையது அன்று (Undemocratic) என்பதும், எனவே இது தேசியவாதிகளால் (Nationalists) எப்பொழுதும் வெறுக்கப்படுகிறது என்பதும் தெரிய வருகின்றன. சட்டம் இயற்றும் அதிகாரம், நிருவாக அதிகாரம், நீதி அதிகாரம் முதலியவை எல்லாம் மேலே கூறப்பட்ட மேல்மட்ட மூவகை அதிகாரிகளிடமே நெடுங்காலமாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தன; இந்தியர்களுக்கு மைய, மாநிலச் சட்ட, நிருவாக மன்றங்களில் நெடுங்காலமாகப் பங்கு இல்லை. 1885-ஆம் ஆண்டுத் தோன்றிய இந்தியத் தேசிய காங்கிரசு, இத்தகைய அதிகாரக் குவிப்புமுறை பொது மக்களுக்கு எவ்வளவு நன்மை பயப்பதாக இருப்பினும் அது மக்களைச் சுய ஆட்சிமுறைக்குத் தக்கவராக ஆக்காது என்று கூறி, ஆங்கில நாட்டிலும், பிற குடியேற்ற நாடுகளிலும் உள்ள அமைப்பைப் போன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்கள். சட்டமன்றத்துக்குப் பொறுப்பான நிருவாக அமைப்பு, சட்டத்தின் ஆட்சி என்ற நீதிமுறை முதலியன எல்லாம் இந்நாட்டில் நிறுவப்படுதல் வேண்டுமென்று கிளர்ச்சிகள் செய்தது. 1919-ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கச் சட்டத்தின் மூலமாக ஓரளவு அதிகாரப்பரவலும் (Decentralisation) 1935-ஆம் ஆண்டுச் சட்டத்தின் மூலமாக மேலும் சிறிது அதிகாரப்பரவலும் ஏற்பட்டன. எளிறும் 1947-ஆம் ஆண்டில் இந்தியா முழு விடுதலை பெறும் வரையிலும் மேற்கூறிய நான்கு அதிகாரிகளிடம் அதிகாரங்கள் குளித்துத்தான் வைக்கப்பட்டிருந்தன. எவ்வாறெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களும் பொறுப்புள்ள நிருவாகக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், சட்டமன்றம் நிறைவேற்றும் எந்தச் சட்டத்தையும் தள்ளுபடி செய்யவும் அதனால் மறுக்கப்பட்ட மசோதாவைச் சட்டமாக விளம்பரம் செய்யவும், நிருவாக ஆணைகளை விடுக்கவும், முதல் மூன்று அடுக்குகளிலும் உள்ள அதிகாரிகள் (இவர்கள் யாவரும் ஆங்கிலேயரே) – முழு அதிகாரம் பெற்றிருந்தனர், அதிகாரக் குவிப்பு முறை, இவ்வாறு அடுக்காக அதிகாரிகளின் ஆட்சியாக இருந்தாலும் சில நன்மைகளையும் பயப்பதாக இருந்தது; அதனால் தான் குடியாட்சிக்கு மாறாகவும் சில நன்மைகளைச் செய்தும் இருந்த ஆங்கில ஆட்சியை “தன்மை செய்த வல்லாட்சி” (Benevolent Despotism) என்று ஆசிரியர்கள் குறிப்பிடுவர். மேலதிகாரிகளின் ஆணைகளைப் பெற்றுக் களஅதிகாரிகள் குறைந்த காலத்தில் திறமையாகப் பணிகளை நிறைவேற்றி, மேலவர்களுக்குத் தெரிவித்துப் பொறுப்பாக இருந்தனர். இப்பணிகள் பல பொது மக்களுக்கு நன்மை பயப்பனவாக இருந்தன. எனவே அதிகாரக் குவிப்புமுறை ஆட்சியில் ஆளப்படுவோருக்குப் பங்கு இல்லை (Participation) என்ற குறையைத் தவிர, அதில் விரைத்து செயலாற்றுதல், திறமையாகச் செயலாற்றுதல், சிக்கனமாகச் (குறைந்த செலவில்) செயலாற்றுதல் என்னும் பலசிறப்புகளும் காணப்படுகின்றன. எனவே நாட்டின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு முதலியவற்றுக்கு உகந்த ஓர் அமைப்பாக அதிகாரக் குவிப்பு முறை கருதப்படுகின்றது. குடிமக்களுக்குக் கூடுதலான அளவில் பங்கு இருக்கத்தக்க ஓர் ஆட்சி அமைப்பு, கூட்டாட்சி அமைப்பு (Federal System) ஆகும். இதில் அதிகாரக் குளிப்பு முறை இல்லை; அதிகாரங்களை மைய, மாநில அரசுகளுக்கிடையே பங்கீடு செய்கின்ற அதிகாரப்பரவல் முறை கையாளப்படுகின்றது. சுதந்திர இந்திய அரசியலமைப்பு முறையிலே, அதிகாரக் குவிப்பு முறையும், அதிகாரப்பரவல் முறையும் முரண்பாடு இல்லாமல் பொருத்தமாக இணைக்கப்பட்டுள்ளன.
மேல்நிலையிலுள்ள அதிகாரி தன் அதிகாரங்களையும் பொறுப்புகளையும் கீழ்நிலை அதிகாரிகளுக்கு வழங்காமல் தானே வைத்துக் கொண்டு கையாளுவாராயின், அது அதிகாரக் குவிப்பு (Centralisation) எனப்படும். மேல்நிலை அதிகாரி, தனக்குக் கீழ்ப்பட்ட அதிகாரிகளுக்குத் தன் அதிகாரங்களை வழங்கி, அவ்வதிகாரங்களைக் கையாளுதற்கான பொறுப்பைத் தன்னிடமே வைத்துக் கொள்ளுவாரேயானால், இது அதிகார அளிப்பு (Delegation of Power) எனப்படும்; இதற்கும் அதிகாரக் குறிப்புக்கும் இடையே பெருவேறுபாடு இல்லை. பெருமளவில் இவ்வகையில்தான் இந்திய அலுவலரும் அதிகாரிகளும் பணிபுரிகின்றனர். மேலதிகாரி, கீழ்நிலை அதிகாரிக்கு அல்லது அதிகாரிகளுக்கு அதிகாரத்தையும் பொறுப்பையும் வழங்குவாரேயானால், அது அதிகாரப்பரவல் முறை (Decentralisation of Power) எனப்படும்; இதில் கீழதிகாரி தனது அதிகாரத்தைக் கையாளுதலில் மேலதிகாரிக்குப் பொறுப்பாக இல்லாமல் மக்களுக்குப் பொறுப்பாக இருக்கிறார். அதிகாரப் பரவல் என்ற கோட்பாடு (Decentralisation), இப்போது தமிழ் நாட்டில், உள்ளாட்சி அரசாங்க முறையில் (Local Government) செயல்படும் மூன்றடுக்கு அமைப்பில் (Three Tier System) காணப்படுகிறது. இதில் மேலடுக்கில் மாவட்ட வளர்ச்சி மன்றம் (District Development Council) செயல்படுகிறது. வளர்ச்சிப் பணிகளும் அதிகாரங்களும் நிதி ஆதாரங்களும் இதற்குக் கொடுக்கப்படாமல், இதற்குக் கீழே இரண்டாம் அடுக்கிலுள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கும் (Panchayat Union Councils), அவற்றிற்கும் கீழடுக்கிலுள்ள ஊராட்சிகளுக்கும் (Village Panchayats) பரவலாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அதிகாரங்களும் பொறுப்புகளும் கீழ்நிலை ஆட்சிக் கூறுகளுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதால், இது அதிகாரப் பரவல் முறையே (Decentralisation) ஆகும்.
கள அலுவலகங்களை ஏற்படுத்தி, அவைகளுக்கு எவ்வளவு அதிகாரங்களையும் பொறுப்புகளையும் வழங்குதல் வேண்டும் என்னும் சிக்கல் தோன்றுகிறது. அதிகாரக் குவிப்பையுடைய ஆட்சி அமைப்பிலே கள அலுவலகங்கள், மேல்நிலை அல்லது மைய அலுவலகங்களின் செயலிகளாக மட்டுமே (Executive Agencies) செயல்படுகின்றன. அவைகளுக்குத் தம் முயற்சி அதிகாரமோ (Initiative) தங்களுடைய உள்நிலை ஆட்சியைக் கட்டுப்படுத்தும் அதிகாரமோ கிடையாது. இதற்கு மாறாக அதிகாரப் பரவல் என்ற கோட்பாட்டையுடைய ஆட்சி அமைப்பிலே, கள அலுவலகங்களுக்கு சில குறிப்பிட்ட செயல்களில் தாங்களே முடிவுகளைச் செய்யும் அதிகாரமும், தங்களுடைய நிறுவன அமைப்பின்மீது தங்களுடைய முழுக்கட்டுப்பாட்டை நிறுவும் அதிகாரமும் இருக்கின்றன. இத்தகைய அதிகாரப்பரவல் முறையிலும், கள அதிகாரியின் முடிவுகளுக்கு எதிராக மேல்நிலையிலுள்ள மைய அதிகாரிக்கு முறையீடு செய்துகொள்ள வழியும் இருக்கிறது.
ஓர் ஆட்சித்துறையில் அதிகாரக்குவிப்பு அல்லது அதிகாரப் பரவல் கையாளப்படுவது நான்கு காரணிகளைப் பொறுத்திருக்கிறது. முதலாவது ஆட்சிப் பொறுப்பு என்ற காரணி (Factor of Administrative Responsibility); ஆட்சிப் பொறுப்பு என்பது, அதிகாரப் பரவல் முறைக்கு உகந்ததன்று; அது அதிகாரக் குவிப்பு முறைக்குத்தான் உகந்தது. எவ்வாறெனில் ஒவ்வொரு ஆட்சித்துறையின் தலைவரும் தமது துறையில் உள்ள ஆட்சிச் செயல்களுக்கும் நிருவாகத்திற்கே (Executive) பொறுப்பு உடையவராக இருக்கிறார். மேலும் அவர், நடுவண் வரவு செலவுத்திட்ட அதிகாரிக்கும் கணக்கு அதிகாரிக்கும் தணிக்கை அதிகாரிக்கும் ஆட்சேர்ப்பு நிறுவனத்துக்கும் தமது துறையின் எல்லா ஆட்சிச் செயல்களுக்கும் பொறுப்பாக இருந்து, தமது துறையின் செயல்கள் சட்டத்திற்கு ஒத்தவையா, தமது துறைக்கு உரியவையா என்று தீர்மானிப்பதில் நீதிமன்றத்துக்குப் பொறுப்பாக இருக்கிறார். இதனால் இந்தக் காரணி கூடுதலான அளவில் அதிகாரக் குவிப்பை ஏற்படுத்துகிறது என்று கூறுவர். கள நிலை அதிகாரிகள், மேல்நிலை அதிகாரிகளுக்குப் பொறுப்பாக இருக்கவேண்டிய காரணத்தால் அவர்களுக்குக் கூடுதலான அளவில் தன்விருப்ப அதிகாரம் (Discretionary Power) வழங்கப்படுவதில்லை. இரண்டாவது ஆட்சியியல் பற்றிய காரணிகள் (Administrative factors); இவை அதிகாரப் பரவல் முறையை மிகுதியாகத் தடுப்பதாய், அதிகாரக் குவிப்பு முறைக்கே ஏற்றவையாக இருக்கின்றன. ஓர் ஆட்சி நிறுவன- மானது நெடுங்காலமாக இருந்து பணியாற்றி இருப்பின், அதற்குப் பட்டறிவு மிகுதியாக இருக்குமாகையால், அவ்வாட்சி நிறுவனம் வெற்றியான அதிகாரப் பரவல் முறைக்கு ஏற்றதாக இருக்கும்; அவ்வாறில்லாமல் அது சிறிது காலத்திற்கு முன்னர்த்தான் தோன்றிப் பணிபுரிந்து வந்திருக்குமாயிள் அது அதிகாரச் குவிப்புக்குத்தான் ஏற்றதாக இருக்கும். ஆட்சி நிறுவனத்தின் கொள்கைகளும் செயல்முறைகளும் திட்டவட்டமாக அமைந்து, அதனுடைய கள அதிகாரிகள் திறமை மிக்கவர்களாக இருந்தாலும், அந்நிறுவனம் விரைவாகவும் சிக்கனமாகவும் செயல்பட்டாலும், அங்கு அதிகாரக் குவிப்பு ஏற்படாமல் அதிகாரப்பரவல் ஏற்படுகிறது. மூன்றாவது ஆட்சி அமைப்புச் செய்கின்ற பணியின் இயல்பு (Functional-Factors); இதைப் பொறுத்தும் அதிகாரக் குவிப்பு அல்லது அதிகாரப் பரவல் ஏற்பட இயலும். பணிஇயல் காரணியைப் பின்வருமாறு விளக்கலாம். ஓர் ஆட்சித்துறை ஆற்றுகின்ற பணி, வல்லுநரால் அல்லது திறமையாளராம் மட்டுமே (Experts or Technically Trained Persons) செய்யப்பட வேண்டிய பணியாக இருந்தாலும், அல்லது செய்யப்பட வேண்டிய பணி நாடு முழுவதிலும் ஒரே சீராகச் (Uniform) செய்யப்படவேண்டிய பணியாக இருந்தாலும், அப்பொழுது அந்த ஆட்சி நிறுவனத்தில், அதிகாரக் குவிப்புத்தான் மிகுந்து காணப்படும். எடுத்துக்காட்டாக வருமான வரி வாங்கும் பணி ஒரே சீராக நாடு முழுவதிலும் நடைபெற வேண்டிய பணியாக இருப்பதால், அதனைச் செய்யும் ஆட்சி நிறுவனமானது, அதிகாரக் குவிப்பை உடையதாக இருக்கிறது. வேளாண்மை, வனத்துறை முதலிய பணிகளில் பல நோக்குமுறை கையாளப்படவேண்டியிருப்பதால், இப்பணிகளைச் செய்யும் ஆட்சித் துறைகள், அதிகாரப் பரவல் முறையில் அமைந்திருக்கின்றன. தொழில் நுட்பவியலுடைய பணிகளெல்லாம் (Technical Services) அதிகாரக் குவிப்புக் கொள்கையில் தான் அமைக்கப்பட இயலும், இவ்வாட்சித்துறைகளில் மேல்நிலை அதிகாரிகள், கள அதிகாரங்களை வழங்க மாட்டார்கள்; எனவே இவற்றில் உள்ள கள அதிகாரிகள், பொதுவான ஆட்சியாளரே தவிர (Generalists), தனிப்பட்ட பயிற்சியோ தொழில்நுட்ப அறிவோ (Special Training} பெற்றவர்களல்லர். தொழில்நுட்ப அறிவும் (Technical Knowledge) தனிப் பயிற்சியும் அதிகாரக் குவிப்புக்குத்தான் வழிவகுக்கும். நான்காவது, நாடு முழுவதிலுமுள்ள மக்களை வளர்ச்சித் திட்டம் போன்ற ஒரு திட்டப்பணியில் ஈடுபடுத்த வேண்டியிருக்கும்போதும், கூட்டாட்சி அரசியலமைப்பையுடைய நாட்டில், கூட்டாட்சி அரசாங்க நிறுவனங்கள், மாநில அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கிடையே, சிலபணிகளில் – எடுத்துக்காட்டாக, கல்வித் திட்டம் பற்றிய பணிகள், சுகாதாரம் பற்றிய பணிகள், நீர்ப்பாசனத் திட்டங்கள் பற்றிய பணிகள் ஆகியவற்றில் – ஒத்துழைப்பை ஏற்படுத்தவேண்டிய நிலை தோன்றும்போதும், இவ்வகைப் பணிகளைச் செய்யும் ஆட்சித் துறைகள், அதிகாரக் குவிப்பை ஒட்டியே செயல்படுகின்றன.
முதலாவதாக, இம்முறை துறைமுழுவதும் ஒரு கட்டுப்பாட்டிலிருப்பதற்கு வழி ஏற்படுத்துகிறது. கள நிறுவனங்களை மேல்நிலை அலுவலகம், தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்து, ஆணைகளை விடுத்துச் செயல்படுமாறு தூண்டுகிறது. இரண்டாவதாக, அதிகாரக் குவிப்பு முறையானது, ஆட்சித்துறையின் கொள்கையிலும் (Policy) முறையிலும் (Method), தொழில் நுணுக்கத்திலும் (Technique) வேறுபாடுகள் இல்லாத, ஒரேவகையான அல்லது சீரான தன்மை (Uniformity) தோன்றுவதற்கு வழிவகுக்கிறது. மூன்றாவதாக, அதிகாரக் குளிப்புமுறையில் செயல்படும் ஆட்சிநிறுவனத்தால் ஆட்சேர்ப்பு, பணியாளர்களைக் கண்காணித்தல், செயல்களுக்கு வேண்டிய தளவாடப் பொருள்களை வாங்குதல் முதலியவற்றில் தவறுகள் ஏற்படாவண்ணம் தடுத்தல் இயலும்.
ஆனால் அதிகாரக் குவிப்பு முறையில் பல குறைபாடுகளும் இருக்கின்றன. 1. இந்த முறையில் எதனையும் பற்றி உடனடியாகத் தீர்மானம் செய்யவோ விரைவாக நடவடிக்கை எடுக்கவோ இயலாது; ஏனெனில் தீர்மானம் செய்யும் களங்களில் அதிகாரம் பரவலாக்கப்படாமல், மேல்நிலை அதிகாரியிடம்தான் குவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த முறை சிவப்பு நாடா அல்லது காலந்தாழ்த்தல் என்னும் குறை தோன்ற வழிவகுக்கிறது. 2. அதிகாரக்குவிப்பினால் செயலாற்றும் அலுவலர் எண்ணிக்கை பெருகுகிறது. அதனால் ஆட்சிச் செலவு பெருகவும் வழி ஏற்படுகிறது. 3. இதில் நடுவண் அலுவலகம், கிளை அல்லது உள்ளூர் நிலைகளைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ளாமல், தவறான முடிவெடுத்துச் செயற்படக்கூடிய குறைபாடும் தோன்றுகிறது. 4. அதிகாரக் குவிப்பு முறை ஆட்சியானது, சட்டங்களை ஒட்டியே செயல்படும் முறையையும் மேற்சான்றுகளை அல்லது முன் நிகழ்வுகளை (Precedents) ஒட்டியே செயற்படும் வழக்கத்தையும் ஏற்படுத்துகிறபடியால், பலமாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இக்காலத்தில், அது முன்னேற்றத்துக்கு ஒரு தடையாக இருக்கிறது. இதற்கு மாறாக அதிகாரப் பரவல் முறை மேற்கூறிய குறைபாடுகளை நீக்குகிறது.
அதிகாரப் பரவல்முறை, சூழ்நிலைகளுக்கேற்ப ஆட்சி இயந்திரம் நெகிழும் தன்மையையும் (Flexibility) திறமையை வெளிப்படுத்தக் கூடிய தன்மையையும் உடையதாய், ஓரளவு செலவில் சிக்கனத்தையும் ஏற்படுத்துகிறது. அது ஆட்சிமுறையைக் குடி- யாட்சி இயல்புடையதாக (Democratic) ஆக்குகிறது. அப்போது, குடிமக்கள் ஆட்சி முறையை எளிதில் அணுக முடிகிறது. மேலும் இத்தகைய ஆட்சிமுறையில், பயிற்சி இல்லாமல் புதிதாகச் சேருபவர்களுக்குப் பயிற்சி பெற வாய்ப்பு இருக்கிறது. அரசு, பொது நலவாழ்வுக்குரிய பல பணிகளை ஏற்கும்போது, அதன் ஆட்சி அமைப்புக்கு அதிகாரப்பரவல் முறை தேவைப்படுகிறது.பா.சூ.
துணை நூல்கள்
Meyer, P., “Administrative Organization”, 1957.
Gladden, E.N., “Essentials of Public Administration”, 1962.
Pfiffner, N.M., & Presthus, R.V., “Public Administration”, 1960.
White, LD., “Introduction to the study of Public Administration”, 1965.
Pylec, M.V., “Constitutional government in India.”
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 342)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/69rkb3tk/
தமிழ்“அதிகாரக் குவிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/69rkb3tk/APA
Oliyon Research. (2026). அதிகாரக் குவிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/69rkb3tk/MLA
"அதிகாரக் குவிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/69rkb3tk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment