பன்னெடுங் காலமாகவே அரசு எந்தக் காலத்தில் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துவதற்காகத் தலையிட வேண்டும், எந்தக் காலத்தில் தலையிடக் கூடாது என்று உறுதி செய்வது மிகவும் சிக்கலான ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. அரசின் கட்டுப்பாடுகள் தேவையா, இல்லையா என்ற முடிவுக்குப் பிறகுதான், எந்த அளவுக்குக் கட்டுப்படுத்துவது, எப்படிக் கட்டுப்படுத்துவது என்னும் முடிவுகள் எடுக்க முடியும். ஆடம் சுமித்து கி.பி. 1776–இல் அவருடைய “நாடுகளின் செல்வம்” (Wealth of Nations) என்னும் கைக் புகழ்பெற்ற நூலில் ‘கண்காணாக் கைக் கோட்பாட்டை’ (Theory of Invisible Hand) விளக்கியிருக்கிறார். இக்கோட்பாட்டின்படி, தனியாருடைய தன்னல நடவடிக்கைகள் சமுதாயத்தின் பொதுவான கண்காணாத நடவடிக்கைகளாக மாற்றப்படுகின்றன. உணவுப்பண்டத் தயாரிப்பாளரோ விற்போரோ மக்களின் பட்டினியைப் பார்த்துப் பரிதாபப்பட்டுத் தங்களுடைய பொருள்களை அங்காடிக்குக் கொண்டு வருவதில்லை. அந்தப் பொருள்களை விற்பதனால் கிடைக்கும் ஆதாயத்தைக் கருதியும் தன்னலத்தாலும் அந்தப் பொருள்கள் அங்காடிக்கு வருகின்றன. ஆனால், அவை அங்காடியில் விற்பனைக்கு வருவதனால்தான், அவை தேவைப்படுபவர்களுக்கு வேண்டும்போது, வசதியான இடத்தில், விரும்புகிற வகையில் கிடைக்கின்றன. இந்தக் கூற்றை மறுப்பவர்கள், வேலைநிறுத்தங்கள், கதவடைப்புக்கள் நிகழ்வதால் அங்காடிகளில் இன்றியமையாப் பொருள்கள் கூடக் கிடைக்காமல் அவதிப்படும்போதுதான் அதன் முழு உண்மையையும் உணர முடிகிறது. தன்னலத்தினால் உந்தப்பட்டு மேற்கொள்ளப்படும் அங்காடி நடவடிக்கைகள், எந்த அரசின் கட்டுப்பாட்டினாலோ கட்டளையினாலோ மேற்கொள்ளப்படுவதில்லை. அவை தன்னிச்சையாக நிகழ்பவை. அங்காடியின் சிறப்பியல்பே, கட்டுப்படுத்தப்படாத, தன்விருப்பமான நடவடிக்கைதான். இந்தக் கண்காணாத கைத்தேற்றத்தின் அடிப்படையில், ஆடம் சுமித்து என்பவர் அரசின் கட்டுப்பாடுகளும் தலையீடுகளும் பல காலங்களில் தேவையற்றவையென்றும், அவை எதிர்பார்க்கும் நற்பலன்களைத் தருவதற்குப் பதிலாக எதிர்பாராத தீய விளைவுகளை உண்டாக்கலாம் என்றும் எச்சரித்தார். எனினும், அவர் தனியார் நடவடிக்கைகளில் பலவற்றை அரசு கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டார். எடுத்துக்காட்டாகக் கல்வி வசதி வழங்குவதில் தனியார் நடவடிக்கை போதுமான அளவு ஊக்கத்தோடு செயல்படாது என்பதால், அரசு இந்தத் துறையில் ஈடுபடுவது இன்றியமையாதது என்று வலியுறுத்தினார். ஆடம்சுமித்தின் இந்தக் கண்காணாத கைக் கோட்பாடு முதலாளித்துவ சமுதாய வளர்ச்சிக்கு ஓர் அடிப்படைத் தத்துவமாக மாறிவிட்டது. எர்பர்ட்டு இசுபென்சர் (Herbert Spencer) 19–ஆம் நூற்றாண்டில் சமுதாயத் தார்வின் கொள்கை (Social Darvinism)யை வெளியிட்டார். இந்தக் கொள்கை 19–ஆம் நூற்றாண்டின் விலங்கியல் வல்லுநரான தார்வினின் தத்துவப்படி திறமை மிக்க உயிரினங்கள் தொடர்ந்து வாழ்கின்றன; திறமையற்றவை வாழ்க்கைப் போராட்டத்தில் தோற்று அழிந்து விடுகின்றன. இதைப் போலவே, சமுதாயத்திலும் திறமை மிக்கவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள்; திறமையற்றவர்கள் அழிந்து போவார்கள் என்று சமுதாயத் தார்வின் கோட்பாடு கூறியது. திறமையற்றவர்களுக்கு ஆதரவு அளிப்பதால் சமுதாயத்தின் மொத்த நலந்தான் குறையுமே தவிர, ஆதரவு பெற்றவர்களுக்குப் பெரு நன்மை விளையப் போவதில்லை என்பதும் இக்கோட்பாட்டின் கருத்தாகும். இந்த வாதங்கள் அனைத்துமே அரசுகள் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்குத் தத்துவ விளக்கம் தந்தன. உலகெங்கிலும் கி.பி. 18–ஆம் நூற்றாண்டு முதல் தலையிடாக் கொள்கை பெருமளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. உலக வாணிகமும் உலகச் செல்வமும் பன்மடங்கு விரிவடைந்தன. தலையிடாக் கொள்கையின் மிகப்பெரிய நன்மையாக முதலீட்டின் பெருக்கம் விளைந்தது எனலாம். ஆனால், முதல் உலகப் போருக்குப் பின் தலையிடாக் கொள்கையின் ஆதிக்கம் குறையத் தொடங்கியது. கீன்சு பிரபுவின் (Lord Keynes) “தலையிடாக் கொள்கையின் முடிவு” (The End of Laissez Faire) என்னும் கட்டுரை (1926) மிகவும் புகழ்பெற்றது. பின்னர் 1929, 1930 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட உலகப் பெருமந்தம் தலையிடாக் கொள்கையை ஆழ்குழியில் புதைத்தது என்றே கூறலாம். தீன்சு பிரபுவின் பொதுக்கோட்பாடு (General Theory – 1936) முதலீட்டை அரசாங்கம் கட்டுப்படுத்துவது இன்றியமையாதது என்று வாதிட்டது. தத்துவ அடிப்படையிலும் பேராசிரியர்கள் சாமுவேல்சன், டி. கிராசி போன்றவர்கள், ஆடம்சுமித்தின் கண்காணாத முறை, செயற்படுத்த முடியாத பல தீவிரமான எடுகோள்களின் அடிப்படையில் உருவாகியிருக்கிறது என்பதை விளக்கினார்கள். கண்காணாத கைத்தேற்றம் முழுமையாக வெற்றி பெற்று, அரசின் தலையீடில்லாத ஒரு தன் விருப்பமான அங்காடி அமைப்பு உருவாக வேண்டுமென்றால் (1) சொத்து அனைவருக்கும் தொடக்கத்தில் சமமாகப் பங்கிடப்பட்டிருத்தல் வேண்டும். (2) அனைவருக்கும் அங்காடியைப் பற்றிய முழு அறிவும் இருந்திருக்க வேண்டும். (3) சமூகப் பொருள்களின் (Social Goods) தேவையும் அளிப்பும் இருக்கக் கூடாது. (4) புறச் சிக்கனங்கள் (External Economics) செயற்படக்கூடாது. இந்த அனுமானங்கள் அனைத்துமே நடைமுறை உலகில் காண முடியாதவை. எனவே, தத்துவ அடிப்படையில் அரசின் பொருளாதாரக் கட்டுப்பாடும் ஒழுங்கு முறைகளும் (Govt. Control of Economy and Regulations) இன்றியமையாதவை என்பதைப் பொருளியல் அறிஞர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். கட்டுப்பாடுகளின் அளவு அரசின் கட்டுப்பாடுகள் தேவை என்பதை அனைவரும் ஒப்புக் கொண்டாலும், எந்த அளவுக்குக் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்பதில் பெரிய வேறுபாடுகள் நிலவுகின்றன. சமநிலைச் சமுதாயவாதிகள் (Socialists) உற்பத்திக் காரணிகளின் சொத்துரிமை முழுவதும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்கிறார்கள். அதன் அடிப்படையில் அங்காடி நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்படும் எல்லாச் செயல்களும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும். இதற்கு எதிரிடையாக நோபல் பரிசு பெற்ற பிரைட்ரிக்கு வான் எய்க்கு (F.V. Hayek) மில்ட்டன் பிரைடுமேன் (Milton Friedman) போன்ற பொருளியல் வல்லுநர்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாடு எந்த அளவுக்குக் குறைந்திருக்கிறதோ, அந்த அளவுக்குப் பொதுமக்கள் நலம் விரிவடையும் என்னும் கருத்தினை விளக்குகிறார்கள். அமெரிக்காவில் அண்மைக் காலத்தில் புகழ்பெற்றுள்ள அளிப்புப் பொருளியல்வாதிகள் (Supply side Economists) இவர்களைவிட ஒருபடி மேலே போய், அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் தனியாருடைய ஊக்கத்தையும் தன்முயற்சியையும் குறைத்து, நாட்டின் செல்வம் வளர்வதைத் தடுக்கிறது என்று கூறுகிறார்கள். அமெரிக்க அதிபர் இரீகன் (Reagan) இந்த அடிப்படையில் நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிற சில நடவடிக்கைகள் ‘இரீகனாமிக்சு’ (Reaganomics) அல்லது இரீகன் பொருளாதாரம் என்னும் பெயரைப் பெற்றுள்ளது. அரசாங்கத் தலையீடு பற்றிச் சில கருத்துகள் அரசாங்கப் பொருளாதாரத்தில் தத்துவ அடிப்படையிலும் நடைமுறை அடிப்படையிலும் சில சிக்கல்கள் உருவாகின்றன. ஏ.சி.பிகு (A.C. Pigou) அங்காடி இயக்கத்தின் காரணமாகப் பொதுப் பொருள்களின் அளிப்பு குறைவாகவே இருக்கும் என்று வாதிடுகிறார். அவர் தனிப்பட்டவரின் உற்பத்திச் செலவையும், அதிலிருந்து பெறக்கூடிய நன்மையையும் ஒப்பிடுகிறார். எடுத்துக்காட்டாக, சிமிண்டு உற்பத்தியாளர் அதன் உற்பத்திச் செலவைக் கணக்கிடும்போது, அதற்கான கச்சாப் பொருட்செலவு, உழைப்புக் கூலி, முதலுக்கு வட்டி, நிலத்துக்கு வாரம், நியாயமான ஆதாயம் ஆகியவற்றைத்தாம் கூட்டிக் கொள்கிறார்களே தவிர, சிமிண்டுத் தொழிற் சாலையிலிருந்து வெளியேறும் ஏராளமான தூசிகளால் சுற்று வட்டாரத்தில் வாழும் மக்களுக்கு நேரிடும் இடையூறுகள், நலக்குறைவு, தூய்மைக் குறைவு ஆகியவற்றினால் ஏற்படும் செலவுகளைக் கணக்கில் கொள்வதில்லை. இத்தகைய காரணங்களால் சமுதாயத்தின் செலவுக் கணக்கும், தனியார் செலவுக் கணக்கும் வேறுபடுகிறது. சமுதாயத்தின் செலவுக் கணக்கில் சிமிண்டுத் தொழிற்சாலையின் தூசி, மற்றும் புகையினால் ஏற்பட்ட தூய்மைக் கேட்டால் உண்டாகும் மருத்துவச் செலவு, சுற்றுப் புறத்தைத் தூய்மைப் படுத்துவதற்கான செலவு ஆகியவையும் சிமிண்டு உற்பத்திச் செலவுகளோடு கூட்டப்பட வேண்டியிருக்கும். இத்தகைய சூழ்நிலையில் தனியார் உற்பத்தி கூடுதலாகவும், இதற்கு மாறாகப் பொதுப் பொருள் உற்பத்தி குறைவாகவும் இருக்கும். எந்தெந்தப் பொருள்களில் தனியார் செலவைவிடச் சமுதாயச் செலவு மிகுதியாக இருக்கிறதோ, அப்பொருள்களின் அளிப்புக் குறைவாக இருக்கும். பிகு என்பவரின் இந்த வாதம் மிகுந்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த வாதத்தின் அடிப்படை உண்மை பெருமளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், தனியார் செலவுகள் சமுதாயச் செலவுகளைவிடக் குறைவாக உள்ள உற்பத்திப் பண்டங்களின் மீது வரிகள் விதித்து, சமுதாய நன்மை தனிப்பட்டவர் நன்மையை விட மிகுதியாக இருக்கும் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்குவதற்காக அந்த வரிப்பணம் செலவு செய்யப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, சிமிண்டு உற்பத்திமீது வரி விதித்து, அந்த வரிப் பணத்தை மருத்துவமனைகளைப் போற்றுவதில் செலவிட வேண்டும். கால்பிரெய்த்து (J.K Galbraith) கருத்துப்படி தனியார் பொருள்களை விற்பதற்காக ஏராளமான விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. தனியார் அந்தப் பண்டங்களைப் பெருமளவில் வாங்குகிறார்கள் ஆனால், பொதுப் பொருள், விற்பனை விளம்பரங்களால் ஊக்குவிக்கப்படுவதில்லை. இத்தகைய சூழ்நிலையில் விளம்பரங்களால் கவரப்பட்ட ஒருவர், தெருவில் சோளப்பொரி வாங்கிச் சாப்பிட்டுவிட்டு அதன் பொட்டலங்களைத் தெருவில் வீசியெறிந்து விட்டுப் போய்விடலாம். அதனால், தனியார் நுகர்ச்சி மிகுகிறது. அதே சமயத்தில் தெருவைத் துப்புரவு செய்ய வேண்டிய பொதுப் பணியும் மிகுகிறது. தனியார் தங்கள் பொருள்களில் எடுத்துக்கொள்ளும் அளவுக்குப் பொதுப் பொருள்களின் மீது அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. ஒருவர் தம்வீட்டுச் சுவரில் எதனையும் கிறுக்க விரும்புவதில்லை. ஆனால், மகாபலிபுரத்துக்குச் சென்றால், அங்குள்ள பாறைகளில் தம் பெயரை எழுதி அலங்கோலப்படுத்துகிறார். இதிலிருந்து தனியார் தம் பொருள்களின் மீது வைத்திருக்கிற அக்கறை, பொதுப் பொருள்களின் மீது வைப்பதில்லை என்று தெரிகிறது. ஒருவர் தமக்குத் தேவையான பொருள்களை வாங்கும் போது, அவர் செலவு செய்வதால் ஏற்படும் இழப்- பையும், செலவு செய்து வாங்கப்போகிற பொருள்கள் தரக்கூடிய நன்மையையும் உடனடியாக உணர முடிகிறது. ஆனால், அரசு வரிவிதித்து, அதனால் சமூக நன்மைக்கான பணிகளைச் செய்யும்போது, தனியார் வரிப்பளுவை உணருகிற அளவு, அதிலிருந்து பெறக்கூடிய சமுதாய நன்மையை உடனடியாக உணரமுடிவதில்லை. இவை அனைத்தும் அரசின் பணிகள் ஏன் போதுமான அளவு வளர்வதில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, அரசின் தலையீடும் கட்டுப்பாடுகளும் இன்றியமையாதவை என்று தெளிவுபடுத்துகின்றன. இதற்கு எதிரிடையாக வேறு சிலர், அரசின் செலவுகள் தேவைக்கு மிகுதியாகச் செய்யப்படுகின்றன என்றும் வீணடிக்கப்படுகின்றன என்றும் கூறுகின்றனர். அரசின் செலவுகள் வீணடிக்கப்படும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது என்பதை மில்ட்டன் பிரைடுமேன் (Milton Friedman) கீழ்வரும் பட்டியலில் சுட்டிக் காட்டுகிறார். I II III IV இந்தப் பட்டியலில் முதல் கட்டம், உங்கள் பணத்தை உங்களுக்காகவே செலவிடுவதைக் காட்டுகிறது. நீங்கள் சிக்கனமாகச் செலவழிப்பதோடு, செலவழிக்கும் ஒவ்வொரு உரூபாய்க்கும் அதற்குரிய மதிப்பைப் பெற முயல்வீர்கள். உங்கள் குடும்பத்துக்கு உணவும் காய்கறிகளும் வாங்கினால் தரமான அரிசியையும் சிறந்த காய்கறிகளையும் பேரம் பேசி வாங்குவீர்கள். இரண்டாம் கட்டம், உங்கள் பணத்தை அடுத்தவர்களுக்காகச் செலவிடும்போது என்ன நடக்கிறது? உங்கள் பணத்தைச் செலவழிப்பதால் நீங்கள் சிக்கனமாக இருக்க விரும்புவீர்கள். ஆனால், அடுத்தவர்களுக்காகச் செலவழிப்பதால், அப்படிச் செலவிடும்போது உங்கள் மதிப்பு எவ்வளவு உயர்கிறது என்றுதான் பார்ப்பீர்களே தவிர, யாருக்காக அந்தப் பணம் செலவிடப்படுகிறதோ, அவருக்கு அதனால் முழு மனநிறைவு ஏற்படுகிறதா என்பதைப் பற்றிக் கவலைப்பட மாட்டீர்கள். ஒரு தனியாருக்குப் பரிசு கொடுக்க வேண்டுமென்றால், வெள்ளித் தட்டு பரிசளிப்பீர்கள். அதில், அவர் நாள்தோறும் உணவருந்தப் போவதில்லை. உங்களுக்காக வாங்கினால், நீங்கள் எவர்சில்வர் தட்டை வாங்கி, நாள்தோறும் பயன்படுத்துவீர்கள். அதாவது, வெள்ளித்தட்டு மற்றவர்கள் முன்னிலையில் உங்கள் மதிப்புக்காகத் தரப்படுகிறதே தவிர, பரிசு பெறுகிறவரின் முழுப் பயனுக்காக அன்று. மூன்றாம் பிரிவு, மற்றவர்களின் பணத்தை உங்களுக்காகச் செலவழிப்பதைக் காட்டுகிறது வேறொருவர் உங்களுக்கு விருந்து கொடுப்பதாகச் சொன்னால், நீங்கள் ஐந்து நட்சத்திர உணவு விடுதியில் உணவு பெற விரும்புவீர்கள். அப்போது சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது உங்கள் நோக்கமாக இராது. ஆனால், பணத்துக்கான முழு மதிப்பையும் பெறும் நோக்கம் உங்களுக்கு இருக்கும். நான்காம் பிரிவு, மற்றவர் பணத்தை மற்றவர்களுக்காக நீங்கள் செலவழிப்பதைக் காட்டுகிறது. மற்றவர் பணம் என்பதனால் சிக்கனமும் இருப்பதில்லை. உங்களைத் தவிர மற்றவர்களுக்காகச் செலவு செய்வதால் பணத்தின் முழு மதிப்பையும் பெறும் நோக்கமும் இருப்பதில்லை. சுருக்கமாகச் சொன்னால், மற்றவர்கள் பணத்தை மற்றவர்களுக்காகச் செலவழிக்கும் போது அந்தப் பணம் வீணாவதற்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன. அரசுத் துறையில் நிதியமைச்சர், மற்றவர்களிடமிருந்து பெறுகிற வரிப்பணத்தைத் தனக்கு அல்லது பொது மக்களுக்குச் செலவழிக்கிறார். அவர் பொதுநல நோக்கோடு நல்ல முறையில் செலவழிக்கக் கூடும். ஆனால், அது நான்காம் பிரிவைச் சேர்ந்ததாகையால் அவர் சிக்கனமாகவும் இல்லாமல், பணத்தின் முழு மதிப்பையும் பெறாமல் வீணடிக்கும் வாய்ப்புகள் மிகுதியாக இருக்கின்றன. கோலாகலமான, பயனற்ற விழாக்களில் பொதுமக்களின் வரிப்பணம் அள்ளி இறைக்கப்படலாம். அதாவது, அரசின் இன்றியமையாக் கடமைகளைச் செய்வதைத் தவிர, மற்றச் செயல்களில் அரசு ஈடுபடுமானால், அங்கெல்லாம் பொது மக்களின் பணம் வீணாக்கப்படும் வாய்ப்புகள் மிகுதி. சேம்சு எம். புக்கானன், கார்டன் துல்லோக் (James M Buchnan and Gorton Tullock) ஆகியோர் பெரும்பான்மை வாக்கினால் ஏற்படுகிற கூட்டு அரசுகளில் பொதுப்பணிகள் தேவைக்கு மிகுதியாக மேற்கொள்ளப்படுகின்றன என்று கூறுகின்றனர். வரிப்பளு எல்லோர் மீதும் விழுகிறது. ஆனால், பொதுப்பணிகளோ நாட்டின் ஒரு பகுதியினருக்கு மாத்திரமே பயனளிக்கின்றன. நாட்டின் எல்லா மக்களும் வரி செலுத்தி, அதன் மூலம் உருவாகிற ஒரு தொழிற் பள்ளியில் ஒரு சில மாணவர்கள் மாத்திரமே பயிற்சி பெற முடிகிறது. இந்தச் சூழ்நிலையில் தன்மைகள் பெறக்கூடிய குழுக்கள் எல்லாம் ஒன்று திரண்டு 51 விழுக்காட்டுக்கு மேல் வாக்குகளைக் கைப்பற்றி விட்டால், மற்ற 49 விழுக்காடு மக்களும் விரும்பாத பணிகளைக் கட்சி செய்யக் கூடும். பெரும்- பான்மை வாக்குகளால் வந்த அரசு, தங்கள் தலைவர்களுக்கு நினைவுக் கூடங்கள் அமைக்கக் கூடும். இதனை மற்ற 49 விழுக்காடு மக்களும் விரும்பாவிட்டாலும், இந்த நினைவுக் கூடங்களை அமைக்கும் செலவுக்காக அவர்களும் வரிகளைச் செலுத்தியே தீருவார்கள். இதுபோன்ற காரணங்களால் அரசுத் துறையின் தேவையற்ற செலவுகள் மிகுகின்றன என்று கூறுகிறார்கள். அரசுப் பொருளாதாரத்தில் ஆற்றல் உட்குழுக்களின் (Pressure Groups) பங்கு வேறு சில சிக்கல்களை உருவாக்குகிறது. காரல் மார்க்சின் தத்துவப்படி முதலாளித்துவ அரசு, முதலாளிகளின் இனத்தை ஊக்குவிக்கிறது. முதலாளித்துவ நாடுகளின் அரசுகள், தனியாரின் சொத்துரிமையைப் பாதுகாக்கவும், தனியாரின் வருவாயைப் பெருக்கி, வருவாய் ஏற்றத் தாழ்வுகளை மிகுவிக்கவும் தேவையான ஏற்பாடுகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்து கொண்டேயிருக்கும். இந்தக் கருத்தின் அடிப்படையில் பொருளாதாரத்தில், அரசு தனியார் துறை மீது ஆதிக்கம் செலுத்துவது ஒரு கட்டுக்குள்தான் இருக்கும் என்பது வெளிப்படை. தனியார் துறை மீது அரசு ஆதிக்கம் செலுத்தினாலும், அந்த ஆதிக்கத்தின் காரணமாகத் தனியார் துறைக்குத்தான் மிகுந்த ஆதாயம் கிடைக்கிறது என்று மார்க்சீயவாதிகள் தெரிவிக்கிறார்கள். இந்திய அரசுத் திட்டங்களால் போக்குவரத்து வசதிகள், மின்சார உற்பத்தி, வங்கிக் கடனுதவி போன்ற அகக் கட்டுமான வசதிகள் பெருகியுள்ளன. இப்படிப் பெருகிய அடிப்படை வசதிகள் அனைத்தும் தனியார் துறை முதலாளிகளுக்கு, மேலும் முதலை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புகளை நல்கியுள்ளன. கடந்த 30 ஆண்டுகளில், சமதருமத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்த போதிலும், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களின் செல்வம் மேலும் வளர்ந்துள்ளது. அரசாங்கத்தின் குறிக்கோள்கள் எத்தகையனவாக இருப்பினும், நடைமுறையில் அரசுப் பொருளாதாரத்தின் இயக்கம் தனியார் செல்வக் குவிப்பை ஊக்குவித்து மிகச் செய்கிறது. ஆதலின், இது சமப்படுத்துவதாக அமையாது என்பது மார்க்சீயவாதிகளின் வாதமாகும். புரட்சியின் அடிப்படையில் அரசின் பங்கைப் பற்றிய மார்க்சீய வாதத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், உட்குழுக்களின் ஆதிக்க ஆற்றலால் அரசாங்கம் செயல்படுவதை மாற்றியமைக்கலாம் என்னும் கருத்தை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஒரு சில ஆற்றல் உட்குழுக்கள், தங்களுடைய நன்மைக்காக, சட்டமன்ற நடவடிக்கைகளிலும் அவற்றின் முடிவுகளிலும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி மாறுதல்களை ஏற்படுத்துகின்றன. இத்தகைய நடவடிக்கைகளை ஊடுவழி (Lobbying) என்று குறிப்பிடுகிறார்கள். இத்தகைய ஆற்றல் உட்குழுக்களின் செல்வாக்கு நடவடிக்கைகளினால், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்குக் கொடைகள் மிகுதிப்படுத்தப்படலாம் அல்லது வரிப்பளு குறைக்கப்படலாம். தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள் என்னும் காரணத்தால் நலிந்த தொழிற்கூடங்கள் (Sick Mills) அரசுடைமையாக்கப்படலாம். சட்டமன்றத்தின் முடிவுகள் அக்குழுக்களின் மிகையான செல்வாக்கினால் உறுதியாகப் பாதிக்கப்படுகின்றன. மேற்கூறிய சிக்கல்கள் அனைத்துமே, அரசாங்கத்தின் தலையீடுகளும் கட்டுப்படுத்தல்களும் ஒழுங்கு முறைகளும் எவ்வாறு உருவாகக் கூடும் என்பதைக் குறியிட்டுக் காட்டுகின்றன. கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால், பொதுப் பணிகள் அளிப்புக் குறைவாகவும், தனிப்பொருள்கள் அளிப்பு மிகுதியாகவும் இருக்க வாய்ப்புள்ளது. கட்டுபாடுகள் அனுமதிக்கப்பட்டால், அரசின் தலையீடு மிகுதியாகிப் பொதுப்பணம் வீணடிக்கப்படுகிறது. ஆற்றல் உட்குழுக்கள், கட்டுப்பாடுகளைத் தங்களுக்குச் சாதகமாகத் தங்கள் தனி வளர்ச்சி்க்காகத் திசை திருப்பிவிடக் கூடும். மத்திய, மாநில வேற்றுமையுணர்வு காரணமாக இரண்டு அரசுகளுமே தேவையற்ற கட்டுப்பாடுகளை உருவாக்கிச் செயல்படுத்தக் கூடும். எனவே, கட்டுப்பாடுகளுக்கும் ஒழுங்குமுறைகளுக்கும் ஓர் எல்லையை அல்லது வரையறையை எளிதில் கூற இயவாது. அரசின் கட்டுப்பாடுகளுக்கும் தலையீட்டிற்கும் எதிராகக் கூறப்படும் காரணங்கள் அரசின் கட்டுப்பாடுகள், தனியார் உரிமையைக் குறைக்கின்றன. மேலும், அரசின் ஆற்றலை அதிகப்படுத்துகின்றன. இதனை எதிர்த்துத் தனி மனிதர் எளிதில் போரிட முடிவதில்லை. எனவே, அரசின் கட்டுப்பாடுகள், அரசுக்கு வேண்டாதவர்களின் நசுக்குதலுக்காகப் பயன்படுத்தப்படலாம். அரசிடம், ஆட்சிப்பணிகள் முன்னரே அளவிறந்து குவிந்து கிடக்கின்றன. அவற்றோடு புதிய கட்டுப்பாடுகளைக் கண்காணிக்கும் பணியும் சேரும்போது, புதிய பணிகளை நிருவாகம் தள்ளிவைப்பதிலும் புறக்கணிப்பதிலும் திறமையை வீணடிக்கக்கூடும். அரசு எடுத்துக்கொள்ளும் அக்கறையைவிடத் தனியார் தங்கள் பொருளாதார நடவடிக்கைகளில் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள். அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக நன்மை அடைந்தவர்கள், நிலையாக அந்த நன்மைகளைத் தொடர்ந்து பெற விரும்புகிறார்கள். கட்டுப்பாடுகள் உற்பத்திக் காரணிகளின் இயல்பான நடவடிக்கைகளைக் குறைத்து, சமுதாய நன்மையைக் குலைத்து விடக்கூடும். எடுத்துக்காட்டாக, மின்சார உற்பத்தி அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செய்யப்படுவ- தால், தமிழ்நாடு ஆண்டுதோறும் மின்சார வெட்டினால் தாக்கப்படுகிறது. தொழிலர்களை மின்சார உற்பத்தி செய்ய அனுமதிப்பதுதான் நல்லது என்று ஒரு கருத்து நிலவுகிறது. கட்டுப்பாடுகள் மக்கள் செல்வத்தை வீணாக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரக்கூடும். சிறந்த விஞ்ஞானிகள் கூட, இறக்குமதிக் கட்டுப்பாட்டின் விதிகளின்படி ஒருசில இன்றியமையாக் கருவிகளை வாங்க முடியாமல் போவதாலும், வேண்டிய காலத்தில் கிடைக்காமல் போவதாலும், அவர்களுடைய புதிய கண்டுபிடிப்புகள் தடைப்படுகின்றன. கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கும் அல்லது அவற்றிலிருந்து விடுபடுவதற்கும் கையூட்டுக் கொடுத்தல் போன்ற தூண்டுகோல்களை உருவாக்கி ஊழல்களைப் பெருக்குவர். கறுப்புப்பணம் உருவாவதற்கு அரசின் கட்டுப்பாடுதான் அடிப்படைக் காரணம் என்று கருதப்படுகிறது. இத்தகைய வாதங்களில் ஓரளவு உண்மையிருக்கிறது. எனினும், கட்டுப்பாடில்லாத, தன்விருப்பமான அங்காடி அமைப்பில் வலுவுள்ளவர்கள் முன்னேறுவார்கள், வலுவற்றவர்கள் நசுக்கப்படுவார்கள்; பரிதாபத்திற்குரியவர்கள் பலியிடப்படுவார்கள் என்பது வெளிப்படை. இந்த நிலையைத் தடுக்க வேண்டுமானால், அரசின் தலையீடும் கட்டுப்பாடுகளும் இன்றியமையாதவை. அரசின் ஒழுங்கு நடவடிக்கைகள் அரசாங்கத்தின் தலையீடு, அரசின் கட்டுபாடுகள், சில குறிப்பிட்ட துறைகளில் தவிர்க்க முடியாதவை. மருத்துவ, பொறியியல் கல்லூரிகளின் பாடத் திட்டங்களை உறுதி செய்து, அவற்றின் தரத்தைக் காப்பாற்றுவது அரசின் முக்கியக் கடமைகளில் ஒன்றாகும். ஏனெனில், தரக் கட்டுப்பாடு இல்லாவிட்டால் வெளிவரும் மருத்துவர்கள் சமுதாயத்துக்கே கேடு விளைவிக்கக் கூடும். அதுபோலவே மருந்துகள், நுகர்வோர் பண்டங்கள் போன்றவற்றிற்குத் தர வரையறை செய்வதும் அவற்றைக் கண்காணிப்பதும் அரசின் கடமைகளாக உள்ளன. உரிமம் வழங்கி உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதும், பங்கீட்டு மூலம் பகிர்வைக் கட்டுப்படுத்துவதும், மதுவிலக்குச் சட்டங்கள் மூலம் நுகர்ச்சியைக் கட்டுப்படுத்துவதும் தேவையெனக் கருதும் அரசின் நடவடிக்கைகள், வேலைநேரம், வேலை செய்யுமிடத்தின் சுகாதார வாய்ப்புகள், இன்னல் தவிர்ப்பு, கூலி போன்றவற்றைக் கட்டுப்படுத்தி, உழைப்பு ஆற்றலையும் கட்டுப்படுத்துகின்றன. இன்றியமையாப் பொருள்களான உணவுப் பண்டங்கள், சர்க்கரை, சிமிண்டு, இரும்பு போன்றவற்றின் விலைகளை அரசு கட்டுப்படுத்துகிறது. அதுபோலவே, வளர் வீத வரிகளின் மூலமும் தனியார் நிறுவனங்களில் சம்பளங்களின் மீது உச்சவரம்பு விதிப்பதன் மூலமும் வருவாய் ஏற்றத்தாழ்வை அரசு கட்டுப்படுத்துகிறது. போக்குவரத்துத் தடங்களுக்கு அனுமதி வழங்கியும் (Route Permits), பேருந்துகளில் செல்லக்கூடிய பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியும், பயணச் சீட்டுகளில் கட்டணங்களைக் கட்டுப்படுத்தியும், மற்றும் போக்குவரத்து வசதிகளை அரசுடைமையாக்கியும், அரசு போக்குவரத்தைக் கண்காணிக்கிறது. திரைப்படங்களுக்கும் இதழ்களுக்கும் தணிக்கை விதிகளை ஏற்படுத்தி, அருவருப்பான, மற்றும் பாதிக்கும் கருத்து வேற்றுமைகள் பரவுதலை அரசு கட்டுப்படுத்துகிறது. அதுபோவவே, உரிமை விதிகள், மற்றும் செய்தித் தொடர்புகள் ஆகியவற்றைச் சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தலாம். தனியார் தம் வாக்குரிமைகளை விலைக்கு விற்கக்கூடாது. எவரும் பிற சாதியார், மதத்தினர் ஆகியோரைப் புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது; எழுதக்கூடாது. இவை மக்களின் அரசியல் சமுதாய உரிமைகளைக் காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டு மக்கள் வெளிநாடுகள் செல்வதானால் அனுமதிச்சீட்டு வாங்க வேண்டும் என்பதும், வெளிநாட்டினர் நம் நாட்டுக்கு வர வேண்டுமானால் நுழைவுச்சீட்டுப் பெறவேண்டும் என்பதும் பன்னாட்டு உறவு நிலைபெற அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளாம். உள்நாட்டிலேயே குடும்பக் கட்டுப்பாட்டினை நன்கு விளக்கஞ் செய்து ஊக்குவிப்பதும், தாய்மையடைந்த பெண்களுக்கு மருத்துவ வசதிகள் செய்து தருவதும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு, மற்றும் நல்வாழ்விற்கான கட்டுப்பாடுகளாம். பொருட்கொடைகள், சுங்கவரிகள் மூலம் வெளிநாட்டு வாணிகத்தைக் கட்டுப்படுத்துதல், உள்நாட்டுத் தொழில் துறைக்கு வாய்ப்புகளைப் பெருக்குதல், சாதகமான வணிகச் சமநிலை பெற்று மிக்க அயற்செலவணியைப் பெருக்குதல், உள்நாட்டிலேயே எல்லாவிதமான உண்டாக்க பொருள்களையும் ஊக்குவித்தல், இறக்குமதிப் பொருள்களின் மீது சுங்க வரி விதித்தல் மற்றும் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு உதவிகள் செய்தல் ஆகியவை நேரிடையான பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். விடுதலைக்கு முன், நாட்டில் பல்வேறு வகையான எடைகள் (weights) வழங்கியிருந்தாலும், இப்போது எல்லா இடங்களிலும் ‘மெட்ரிக்’ முறை நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதனால், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் பொருள்களின் விலைகளை அவற்றின் எடைகளோடு ஒப்பிட்டு அறிந்து கொள்வது எளிதாகிறது. இந்தகைய கட்டுப்பாடுகள் உள்நாட்டு வாணிகத்தைப் பெருக்குவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தித் தருகின்றன. மத்திய வங்கி பண அளிப்பையும், வங்கிகளின் அமைப்பையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. அதுபோலவே நிதிகள், சேமிப்- புச் சீட்டுகள் (Chits) போன்றவற்றையும் அரசின் சட்டங்கள் கட்டுப்படுத்துகின்றன. தொழில், வாணிகம் மீதான கட்டுப்பாடுகள் உற்பத்தி, பகிர்வு, நுகர்ச்சி ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகள் தொழில்களையும் வாணிகத்தையும் பெருமளவில் தாக்கக் கூடியவை. பலவகைச் சட்டங்கள் மூலமாகவும் அமைப்புகளின் மூலமாகவும் அரசு, தனியார்துறை நிறுவனங்கள் முற்றுரிமை ஆதாயத்தைப் பெறாமல் தடுக்க முயற்சி செய்கிறது. இதற்காகப் பலவகைத் தொழில் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. முதலாவதாக, தொழிலில் நுழைவதற்கே உரிமம் வழங்குவதில் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. மிகப் பெரிய நிறுவனங்கள் புதிய உரிமங்கள் பெறுவதைக் கடினமாக்கும் சட்டங்கள் உள்ளன. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதைக் கட்டுப்படுத்தும் அயற்செலாவணி ஒழுங்குச் சட்டம் நடைமுறையில் உள்ளது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள். இந்தியாவில் தொழிலில் முதலீடு செய்வதைக் கட்டுப்படுத்தும் சட்டங்களும் உள்ளன. தொழிற்சாலைகளில் உற்பத்தியான பொருள்கள் மக்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கும், அவற்றின் தரத்தைப் பாதுகாப்பதற்கும், அவற்றால் வரக் கூடிய இன்னல்களைத் தவிர்ப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அளிப்பை விடத் தேவை மிகுதியான பொருள்களுக்குக் கட்டுப்பாடுகள் மிகத் தேவை. முன் பதிவு விண்ணப்பமும் தேவைகளின் முதன்மையும் ஆராயப்படுகின்றன. சிமிண்டு, சருக்கரை போன்ற பொருள்கள் பங்கீட்டு முறையில் பலருக்கும் கிடைக்குமாறு செய்யப்பட்டுள்ளன. மருந்துகள், குளிர்பானங்கள் போன்ற பல நுகர்வுப் பண்டங்கள் கடுமையான தரக்கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை. வேளாண்மைக்குரிய மருந்துகள் இடர் பயப்பவையாயின், அவற்றை விற்பவர்கள், வாங்குபவர்கள், உற்பத்தியாளர்கள் அனைவருமே அரசின் விதிகளுக்கு உட்பட்டுத்தான் செயற்படவேண்டும். நிறுவனங்களின் நிதி நடவடிக்கைகள், கணக்கு முறைகள் (Financial Practices, Accounting Method) ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் கம்பெனிச் சட்டம், பொதுப்பங்கு நிறுவனங்கள் எப்படிப் பங்குகளை விற்பனைக்குக் கொண்டு வர வேண்டும், வங்கிகளிடமிருந்து நிதியுதவி பெறுவதற்கு எத்தகைய முறைகளைக் கையாள வேண்டும் என்பன போன்ற பலவகை ஒழுங்குமுறைகளைச் செய்திருக்கிறது. நிறுவனங்களின் கணக்கு முறைகள் எத்தகையவாக இருக்கவேண்டும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளன. விலை வரையறை செய்வதில் அரசு, பல வித வழிகளைக் கையாள்கிறது. பெரும்பாலான விலைகள், அங்காடியாலேயே உறுதிசெய்யப்படுகின்றன. ஆனால் அரிசி, சர்க்கரை போன்ற இன்றியமையாப் பொருள்களுக்கு அரசு விலைக்கட்டுப்பாடு செய்துள்ளது. சில பொருள்கள் பொதுப் பங்கீட்டு முறையில் விற்கப்படுமானால் குறைந்த விலையும், தனியார் அங்காடியில் விற்கப்படுமானால் மிக்க விலையுமாக இருப்பதை அரசே அனுமதிக்கிறது. பெருநகர்ப் பேருந்துகள், இரயில்வேக்கள், மருத்துவ விடுதிகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் வெறும் ஆதாயத்தை மாத்திரம் கருத்தில் கொள்ளாமல், சமூக நலத்தை முதன்மையாகக் கருதி விலை வரையறுக்கப்படுகிறது. மின்சாரத்தை அளித்தலில் வேளாண்மைக்குக் குறைந்த கட்டணமும் தொழிலுக்கு, கூடுதலான கட்டணமும் வீட்டு உபயோகத்துக்கு மிகக் கூடுதலான கட்டணமுமாக அரசு வரையறை செய்திருக்கிறது. விலை வரையறை செய்தலில் அரசின் கட்டுப்பாடு மிக இன்றியமையாததாக விளங்குகிறது. விலைக் கட்டுப்பாடும் நுகர்வோர் பொருள் பங்கீட்டில் ஒழுங்கு முறைகளும் அரசு விலைகளைப் பல விதங்களில் கட்டுப்படுத்துகிறது. என்றாலும், அதற்குப் பலவித நோக்கங்கள் இருக்கக்கூடும். போர்க் காலங்களில் மிகுதியான பணப்புழக்கம் இருக்கும் போது எல்லாவகை உற்பத்திக் காரணிகளும் போர்முனைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, இன்றியமையாப் பண்டங்கள் கிடைப்பதற்கு அருமையாக மாறி விடுகின்றன. அதனைக் கட்டுப்படுத்துவதற்காக எல்லா நாடுகளிலும் பங்கீட்டு முறைகள் வருகின்றன. அதுபோலவே, அமைதிக் காலத்திலும் பணவீக்கத்தினாலும் ஏற்றத்தினாலும் விலைவாசி சராசரி மக்களின் அன்றாடத் தேவைப் பொருள்கள் குறைந்த விலையில் கிடைக்காமல் போகும்போது, விளையக் கூடிய துன்பத்திலிருந்து காப்பாற்றுவதற்காக விலைக் கட்டுப்பாட்டு முறைகள் நடைமுறைக்கு வருகின்றன. விலைவாசி உயர்வைத் தடுப்பதற்கு விலைக் கட்டுப்பாடு ஒரு முக்கியக் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இன்றியமையாத சில பண்டங்களையும், மூலப் பொருள்களையும் பகிர்வு செய்வதற்கு விலைக் கட்டுப்பாடு தேவைப்படுகிறது. சில சக்தி வாய்ந்த, பெரிய நிறுவனங்களும் பல சக்தி குறைந்த சிறிய நிறுவனங்களும் மிகவும் தேவையான சில மூலப் பொருள்களுக்கு போட்டியிடும்போது, விலைக் கட்டுப்பாடு இல்லாவிட்டால், பெரிய நிறுவனங்கள் மிகுந்த விலைகொடுத்து, அந்த மூலப் பொருள்கள் முழுவதையுமே தங்கள் வசமாக்கிக் கொள்ளக்கூடும். இதனைத் தடுத்துத் தக்க முறையில் பகிர்வு செய்வதற்கு விலைக் கட்டுப்பாடு இன்றியமையாதது. சில சூழ்நிலைகளில் விலைகளைக் கொடைகள் வழங்கி மாற்றியமைக்க வேண்டி வரலாம். கைத்தறித் தொழிலை வளர்ப்பதற்காகக் கைத்தறித் துணியின் அங்காடி விலையில் ஓரளவு அரசே உதவித்தொகை கொடுப்பதனால், அங்காடி விலையை விட உற்பத்தியாளர்களுக்கு அதிக விலை கிடைக்கலாம். இதன் காரணமாகக் கைத்தறித் துறையில் உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது. நுகர்வோர் சில பொருள்களை நுகராமல் குறைப்பதற்கும் அரசின் விலைக் கட்டுப்பாடு பயன்படுத்தப்படலாம். சீமைச்சாராய வகைகளின் விலைகளை உயர்த்துவதனால் அவற்றின் நுகர்ச்சி தடைப்படுத்தப்படுமானால், அரசு அந்த நோக்கத்தோடு அவற்றின் விலைகளை உயர்த்தக்கூடும். நல அரசுகளும் பொருளாதாரக் கட்டுப்பாடுகளும் சமநிலைச் சமுதாய அரசுகள் (Socialist States) தனி மனிதரின் பொருளாதார நடவடிக்கைகள் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். காவல் அரசுகள் அவற்றில் தலையிடா. எனவே, தனி மனிதர் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற இடர்ப்பாடுகளைத் தாங்கிக் கொள்ள வேண்டும். தனி மனிதர், மரபு வழியாலோ தடையிலாத அங்காடி அமைப்பாலோ உருவாகிற எல்லா இடர்ப்பாடுகளையும் தாங்கிக் கொள்ள வேண்டும் என்கிற நிலை மாறி, தனி மனிதனுக்கு வருகிற துன்பங்களைக் கூடிய அளவுக்கு அரசு தவிர்க்க வேண்டும் என்கிற நிலை வரும்போது, நல அரசுகள் உருவாகின்றன. இந்த அரசுகள் வறுமையை ஒரு சமுதாயத் துயரமாகக் கருதி, அதனை அறவே ஒழிக்க முயல்கின்றன. இதற்காக ஏழை மக்களின் வருவாயைப் பெருக்க முயற்சியை மேற்கொள்கின்றன. இத்தகைய முயற்சிகளால் தனியார்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே, நல அரசுகளின் செயற்பாடு விரிய விரிய, அரசின் கட்டுப்பாடுகளும் மிகுந்து கொண்டே செல்கின்றன. ஏழைகளின் வருவாயைப் பெருக்குவதற்காக நல அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகள் வளர்ந்துவிட்டன. பொதுப்பணிகளான மருத்துவம், கல்வி, சாலையமைப்பு, அணைக்கட்டுகள் போன்றவற்றை அரசு செய்யும்போது பலவகைக் கட்டுப்பாடுகள் கூடவே உருவாகின்றன. எடுத்துக்காட்டாகப் பொது மருத்துவ வசதியைப் பெருக்கும் அரசு, அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் மருத்துவத் தொழில் நடத்த முழுமையான தடையோ பகுதிக் கட்டுப்பாடோ விதிக்க வேண்டிவரும். வளர்விகித வரி முறைகளாலும் தொழிலாளர் நன்மைக்காகத் தொழில் நிறுவனர்கள் பங்கு கொடுக்கும்படியும் அரசு நடவடிக்கைகள் எடுக்கிறது. பெரிய நிறுவனங்களில் வழங்கும் பாதுகாப்புச் சேமநல நிதி (Contributory Provident Fund) செயற்படும்போது, தொழிலாளர் சேமநல நிதிக்கு எவ்வளவு தொகை செலுத்துகிறாரோ அதே அளவுக்குத் தொழில் நிறுவனர்களும் செலுத்த வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உழைப்பாளர் சட்டங்கள் மூலம் கூட்டுப் பேர முறை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ஊக்கத்தொகை தொடுக்கப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் தொழிற் கூடங்களில் வேலைக்கு அமர்த்தப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. வேலை நேரத்தின் உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோரைப் பாதுகாக்கத் தரவரையறைகள் செய்யப்பட்டுள்ளன. இவையனைத்தும், செல்வ வளம் குவிந்தவர்களுடன் போட்டியிடும் ஆற்றலை ஏழைத் தொழிலாளர்களுக்கும் உண்டாக்கி வாய்ப்புகளைப் பெருக்கும் முறைகளாகும். நன்கு அமையப்பெற்ற நிறுவனங்களில் (Organised Sector) குறைந்த அளவுக் கூலி வரையறை இருப்பதால், ஏழைத் தொழிலாளி தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளும் அளவுக்குக் கூலி கிடைக்க வகைகள் செய்யப்பட்டுள்ளன. வேலையில்லா நிலையிலிருந்து காப்புறுதி, பெண்களுக்கு மகப்பேற்றுக் காப்புறுதி, இடர் காப்புறுதி, நோய்க்காலக் காப்புறுதி போன்ற பல சமூகப் பாதுகாப்புச் சட்டங்கள் நிறைவேற்றப்படும் போது அவை கட்டுப்பாடுகளாகத் தோன்றினும், தொழிலாளர்களுக்கு வரக்கூடிய பெரிய இடர்ப்பாடுகளைத் தவிர்த்துத் தொழிலாளர்கள் இன்னல் அடையாமலிருக்க உதவுகின்றன. இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும் கட்டுப்பாடுகளும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஒரு நலம் தரும் அரசை உருவாக்க விழைகிறது. இதன் அடிப்படையில் மக்களுக்குச் சில அடிப்படை உரிமைகளும் சில கடமைகளும் அதில் வரையறுக்கப்பட்டுள்ளன. அரசியல் அமைப்புச் சட்டத்தின் நான்காம் பகுதி, அரசுக் கொள்கைகளுக்கு வழிகாட்டும் விதிகளை (Directive Principles of State Policy) அமைத்துள்ளது. அரசியல் அமைப்பு 36 ஆம் விதியிலிருந்து 51–ஆம் விதிவரை இவை கூறப்பட்டுள்ளன. இவற்றை அரசின் குறிக்கோள்களாக அரசியல் அமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது. அவற்றுள் முக்கியமானவை, நாட்டின் மூலவளப் பொருட்காரணிகள் (Material Resources) சமமான முறையில் பங்கிடப்படுதலும், செல்வம் ஒரு சிலரிடம் குவிவதைத் தடுத்தலும், எல்லோருக்கும் வேலைவாய்ப்புத் தருதலும், ஆண், பெண் பாகுபாடின்றி வேலைக்குச் சமமான கூலி வழங்குதலும், குழந்தைகள் கடுமையான வேலைகளில் அமர்த்தப்படுதலைத் தடுத்தலும், வேலைவாய்ப்பற்றவர்கள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் ஆகியோர்க்கும் பாதுகாப்பு நல்குதலும், அனைவருக்கும் வாழ்வுத் தரம் நல்கும் கூலி தருதலும், எல்லாக் குழந்தைகளுக்கும் படிப்பு வசதிகள் செய்து தருதலும் ஆகும். இவற்றை நோக்கமாகக் கொண்டு தொழிற் கொள்கை 1948–இல் வெளியிடப்பட்டது. இதன்படி ஒரு சில துறைகள் அரசுக்கு மாத்திரம் முற்றுரிமையாகவும், வேறு சில துறைகள் தனியாருக்கும் அரசுக்கும் பொதுவாகவும், மற்றவை தனியாருக்கு மாத்திரம் உரியவாகவும் வரையறுக்கப்பட்டன. ஆனால், எல்லாத் துறைகளிலுமே அரசு தலையிட உரிமை பெற்றிருக்கிறது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசு திட்டங்களை அமைத்து, அரசியல் அமைப்புச் சட்டத்தின் இலக்குகளை அடைய முயல்கிறது. அதற்கு உறுதுணையாக 1951–இல் தொழில் முன்னேற்றக் கட்டுப்பாட்டுச் சட்டம் (The Industries Development and Regulation Act), 1956 இல் கம்பெனிச் சட்டத் திருத்தம், 1948–இல் தொழிலாளர் அரசு பாதுகாப்புச் சட்டம் (Employees State Insurance Act), குறைந்த அளவுக் கூலிச் சட்டம் (Minimum Wages Act, 1948), 1956–இல் இன்றியமையாப் பொருள்கள் சட்டம் (Essential Commodities Act, 1956), முற்றுரிமை, வாணிகத்தடைச் சட்டம் (MRTP), வெளிநாட்டுச் செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டம் (FERA), மற்றும் 1949-ஆம் ஆண்டு முதல் அரசுகள் வேளாண்மையைக் கட்டுப்படுத்திய ‘சமீன்’ (Zamin) ஒழிப்புச் சட்டங்கள், உச்சவரம்புச் சட்டங்கள், குத்தகைப் பாதுகாப்புச் சட்டங்கள், போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் மாநிலப் போக்குவரத்துச் சட்டங்கள், வணிகத்தைக் கட்டுப்படுத்தும் கடைச்சட்டங்கள் (Shop Acts), எடைகளையும் தரத்தையும் கட்டுப்படுத்தும் ‘எடைகள், அளவு கருவிகள் சட்டங்கள்’, உணவுப் பொருள் கலப்படத் தடுப்புச் சட்டங்கள், மருந்து வகைத்தரக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் போன்ற எண்ணற்ற கட்டுப்பாடுகளும் ஒழுங்குமுறைகளும் நடைமுறைக்கு வந்துள்ளன. இவை உற்பத்தியைப் பெருக்கவும் தரங்களைக் காப்பாற்றவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள். நம் நாட்டுக் கட்டுப்பாடுகளின் பட்டியல் மிக நீண்டது. வேளாண்மை, தொழில்கள், உழைப்பாளர் அளிப்பு – நலம், போக்குவரத்து, மின் சக்தி, பொருள் விற்பனை, தரக்கட்டுப்பாடு, கல்வித் துறையில் மாணவர் அனுமதி, கல்வித்தரம், மருத்துவ வசதிகள் போன்ற எல்லாப் பகுதிகளுக்குமே பல்வேறு கட்டுப்பாடுகள் மத்திய அரசாலும் மாநில அரசுகளாலும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு (Fundamental Rights) உட்பட்டவையாகவே இருக்க வேண்டும். மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கக்கூடிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் வழக்குமன்றம் சென்று அக்கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை பெறும் உரிமை பெற்றிருக்கிறார்கள். இந்திய அரசுகளின் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் அனைத்துமே மாநில உயர்நீதி மன்றங்களாலும், இந்திய உச்சநீதி மன்றத்தினாலும் பல்வேறு காலங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகள், ஒழுங்குமுறைகள் பற்றிய ஆய்வுக் குழுவின் கருத்துகள் இந்திய அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளின் ஒழுங்குமுறைகளின் நடைமுறை விளைவுகளைக் குறித்துப் பல ஆய்வுக் குழுக்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளன. 1965–இல் முற்றுரிமை ஆய்வுக் குழுவின் அறிக்கை (Monopolies Inquiry Committee Report – 1965) வெளிவந்தது. முற்றுரிமை நிறுவனங்கள், அரசுகளின் கட்டுப்பாடுகளிலும் ஒழுங்கு முறைகளிலும் இருக்கும் இடைவெளிகளை நன்கு தெரிந்து கொண்டு, அவற்றைத் தங்களுக்கு உதவியாகப் பயன்படுத்துகின்றன என்று தெரிவித்தது. பி.கே. ஆச்சாரியாவின் (P.K. Acharya) “தொழில் திட்டங்களும் உரிமம் வழங்கும் கொள்கைகளும் பற்றிய இறுதி அறிக்கை” (Industrial Planning and Licensing Policy–Final Report) 1967–இல் வெளிவந்தது. மாறுபடும் தேவைக்கேற்பவும் உற்பத்தித் திறனுக்கும் வெளியீட்டிற்கும் உள்ள தொடர்புக்கேற்பவும் உரிமம் வழங்குவதில் ஒருங்கிணைப்பு ஏற்படவில்லையென்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரே பொருளின் உற்பத்திக்குப் பெரிய நிறுவனங்கள் பல்வேறு பெயர்களில் விண்ணப்பங்கள் செய்து தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி உரிமங்களைப் பெற்று விடுவதால், சிறிய நிறுவனங்கள் அவற்றுடன் போட்டியிட முடியாமல் போய்விடுகிறது என்பதையும் அவர் விளக்கியிருக்கிறார். தொழில் உரிமக் கொள்கை விசாரணை அறிக்கை (Industrial Licensing Policy Inquiry Report) 1969–இல் வெளிவந்தது. தொழில் உரிமங்களைப் பெறுவதன் மூலம், பெரிய முற்றுரிமை நிறுவனங்கள், தொழில் வங்கிகள், ஆயுள் காப்பீட்டுக் கழகம் போன்றவற்றிடமிருந்து குறைந்த வட்டியில் கடனுதவி பெற்றுத் தங்கள் செல்வத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்பதை இந்த அறிக்கை தெளிவாக்குகிறது. ‘நேர்முக வரிகள் ஆய்வுக் குழு அறிக்கை’ (Direct Taxes Enquiry Committee Report) 1971–இல் வெளி வந்தது. ‘வாஞ்சுக் குழு’ (Wanchoo–Commitee) எனப் பெயர் பெற்ற இந்தக் குழு, இந்தியாவில் ஓர் இணைப் பொருளாதாரம் (Parallel Economy), சட்ட முறையிலமைந்த பொருளாதாரத்திற்கு இணையாகச் சட்டத்திற்குப் புறம்பான விதத்தில் இயங்குகிறது என்றும், கறுப்புப் பண நடமாட்டம் இந்த இணைப் பொருளாதாரத்தில் மிகுதியாக இருக்கிறது என்றும் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அரசு உற்பத்தியையும் பகிர்வையும் கட்டுப்படுத்த மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சியையும் இணைப் பொருளாதார இயக்கத்தில் பங்கு கொண்டவர்கள் தங்கள் ஆதாயத்திற்காகவும் செல்லக் குவிப்புக்காகவும் திசை திருப்ப முடித்திருக்கிறது என்றும் இந்த அறிக்கை கூறுகிறது திரு. வாதிலால் தாக்லி (Mr. Vadilal Dakli) தலைமையில் 1978 பிப்பிரவரியில் அமைக்கப்பட்ட “கட்டுப்பாடுகள், உதவித்தொகைக் குழு” (The Committee on Controls and Subsidies) அதன் அறிக்கையை 1979–மே மாதம் அளித்தது. தேவையற்ற பல கட்டுப்பாடுகள் அரசின் சட்டங்களாக இருக்கின்றனவென்றும், ஒரு சில கட்டுப்பாடுகள் இருப்பினும் அவை ஒன்று திரட்டப்பட்டு வெளியிடப்படாமையால் மேலதிகாரிகள் கூட அவை பற்றி முழுமையாக அறிந்திருக்க வில்லையென்றும், தேவையற்ற கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டுமென்றும், ஆண்டுதோறும் பாராளுமன்றத்திற்கு நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் பற்றி அறிக்கைகள் தர வேண்டுமென்றும், ஒரே பொருளைப் பற்றிப் பல கட்டுப்பாடுகள் இருந்தால் அவையனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு வெளியிடப்பட வேண்டுமென்றும், கட்டுப்பாடுகள் எளிமையாக்கப்பட வேண்டுமென்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது. இந்தியாவின் கலப்புப் பொருளாதாரத்தில் ஒழுங்கான வருவாய்ப் பகிர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு மத்திய, மாநில அரசுகள், அங்காடி நடவடிக்கைகளின் மீது கட்டுப்பாடுகளும் ஒழுங்குமுறைகளும் விதித்து வழி நடத்த முயல்கின்றன. உச்ச வரம்புச் சட்டங்களும் உரிமம் வழங்கும் முறைகளும் இன்றியமையாப் பொருள்கள் பற்றிய சட்டங்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும் நோக்கத்தோடுதான் கொண்டு வரப்பட்டன. ஆனால், இவை போன்ற கட்டுப்பாடுகளும் ஒழுங்குமுறைகளும் அரசுகளின் பல்வேறு துறைகளால் செயற்படுத்தப்படுகின்றன. ஒரு துறை, மற்றொரு துறைக்கு எதிர்மறையாகச் செயற்படுகிறது. இதனைச் சாதகமாக்கிக் கொண்டு, பொருளாதார வலுவுள்ளவர்கள், இந்தக் கட்டுப்பாடுகள், ஒழுங்கு முறைகளின் நோக்கங்களைத் தோல்வியடையச் செய்யக் கூடிய வழிகளில் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இதனைத் தவிர்ப்பதற்காக அரசுகள் மேலும் மேலும் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வருகின்றன. அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகள் முற்றிலும் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்பதற்குப் பதிலாகக் கட்டுப்பாடுகள், அவை மிகுமாறு செய்ய வழி வகுக்கின்றன. கட்டுப்பாடுகளையும் ஒழுங்குமுறைகளையும் முழுவதும் கைவிடுவதனால் பொருளாதார வலுவற்றவர்கள் ஒரேயடியாகக் கைவிடப்படுவார்கள். சக்தி உள்ளவர்கள், சக்தி இல்லாதவர்களை நசுக்குவதால் பொருளாதார உரிமை பாழ்படுகிறது. எனவே, கட்டுப்பாடுகளும் ஒழுங்குமுறைகளும் வேண்டும். ஆனால், அந்தக் கட்டுப்பாடுகளும் ஒழுங்குமுறைகளும் நடைமுறையில் அவற்றின் நோக்கத்தை நிறைவேற்றுகின்றனவா என்று தொடர்ந்து கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும். கட்டுப்பாடுகளிடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். அவற்றை நிறைவேற்றுவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும். இவையனைத்தையும் தொடர்ந்து செய்து கொண்டேயிராவிடில், அவை எதிர்மறையான விளைவுகளைக் கொடுக்கக் கூடும்; கொடுக்கின்றன.எஸ்.நீ. துணை நூல்கள் Keynes, J.M., “General Theory of Employment Interest & Money”, Mc. Millan, London, 1936. Pigou, A.C., “Economics of Welfare”, Mc. Millan, London, 1932. Hayek, F.A., “The Road To Serfdom”, The Chicago University Press, Chicago, 1969. Milton Androse Frieudman, “Free To Choose”, Harcount, Brace, Jahonavich, New York, 1980. Galbraith, J.K., “Affluent Society”, Houghton, Mifflin Boston, 1958. Marx, K., “Capital”, Foreign Publishing House, Vol–I, Moscow. 1961.