சூரியச் சூடாக்கம்
cūriyac cūṭākkam
இது சூரியனின் வெப்பக் கதிர் வீச்சை, தொழில் நுட்பத் தேவைகளுக்கென, வெப்ப ஆற்றலாக மாற்றும் முறையாகும்.
இது சூரியனின் வெப்பக் கதிர் வீச்சை, தொழில் நுட்பத் தேவைகளுக்கென, வெப்ப ஆற்றலாக மாற்றும் முறையாகும். சூரியனின் ஆற்றல் மின் காந்த ஆற்றலாக 0.3-3.1 nm என்ற அலை நீளத்தில் கிடைப்பதை, வெப்பத் திரட்டிகளின் மூலம் திரட்டி, ஏறத் தாழ 70–7000°F வெப்ப நிலையைப் பெறலாம். இவ்வுயர் வெப்ப நிலையைப் பல்வேறு எந்திரவியல், நீர்மவியல் இயக்கங்களுக்கு உட்படுத்தலாம்.
சூரிய ஆற்றல் முதன்மையாகப் பொருள்களை உலர்த்தவும், நேரிடையாக வெப்ப ஆற்றலாக நீரைச் சூடுபடுத்தவும், குளிர் காலத்தில் கனப்பு அளிக்கவும், மிகைப்படுத்தப் பட்டால், உலோகங்களை உருக்கவும் பயன்படுகிறது. சூரிய ஆற்றலை நேரிடையாக மின்னாற்றலாக்கியோ, வெப்பப் பொறிகளுக்கு ஊட்டியோ ஆற்றலைப் பெறலாம்.
வெப்பத்தினை எளிதில் உட்கவரும் தன்மையுடைய உலோகத்தில் மிகு கருமை நிறம் பூசப்பட்டிருக்கும். ஏனெனில், கருமை நிறத்திற்கு வெப்பத்தினை முழுவதுமாக உட்கவரும் தன்மையுண்டு. கருமை நிறம் பூசப்பட்ட உலோகத் தகடுகளைத் தகுந்த கோணத்தில், சூரியனின் ஒளிக் கதிர்கள் நேரிடையாகப் படுமாறு எதிர் நோக்கி வைக்க வேண்டும். இத்தகடுகள் சூரியனின் வெப்ப ஆற்றலை உட்கவர்ந்து தகடுகள் அமைந்துள்ள கலத்திலிருக்கும் நீரைச் சூடாக்கி நீராவியை உற்பத்தி செய்ய முடியும்.
சூரிய உப்பாக்கல். இது பழமையான முறையாகும். உப்பளங்களில் கடல் நீரைத் தேக்கி வைத்து, சூரிய வெப்பத்தால் நீரை ஆவியாக்கிய பின், உப்பு சேகரிக்கப்படுகிறது.
உப்பு நீர்ப் பதனம். பாலைவனங்களிலும், நிலத்தடி நீர் உப்புப் பொருள்களைக் கொண்டிருந்தாலும், அந்நீரைக் குடிநீராக்க உதவும் முறையே உப்பு நீர்ப் பதனம் (salt water treatment) ஆகும். இம்முறையில் சூரியனின் ஆற்றல் இன்றியமையாததாகக் கருதப் படுகிறது. உப்பு நீர்ப் பதன முறையில், ஒரு தொட்டியில் உப்பு நீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கும். அதன் மேற்பகுதியில் மூடியுள்ள ஒளியூடுருவுக் கண்ணாடிகள் வழியே, சூரியனின் கதிர்க் கற்றைகள் உட்புகுந்து, நீரைக் கொதிக்க வைத்து ஆவியாக்கும். இந்நீராவிகள் மேற்சென்று குளிர்ந்து, வடிகுழாய்கள் வழியே சென்று பின், குடி நீர்த் தொட்டியை அடையும். இவ்வகைக் குடி நீர் எவ்வித உப்புக் கலப்புகளும் இன்றி, அருந்தத் தக்க அளவில் இருக்கும். உப்பு நீர் சூரியக் கற்றை மூலம் ஆவியாக்கப்படுகையில், அதில் கரைந்துள்ள உப்புப் படிவங்கள் நீங்கி விடும். உப்பு நீர்ப் பதன முறை கிரேக்கத் தீவுகளிலும், ஆஸ்திரேலியாவின் மையப் பகுதிகளிலும் மையக் கிழக்கு நாடுகளிலும் இந்தியாவிலும் பரவலாகத் தற்போது பயன் படுகிறது.
சுடு நீர் ஆக்கிகள் (water heaters). வீடுகளுக்கும், தொழிலகங்களுக்கும் சுடு நீர் இன்றியமையாத் தேவையாக இருப்பதை, சூரிய ஆற்றல் மூலம் பெருமளவில் பெற இயலும், இவ்வகைச் சுடு நீர் ஆக்கிகள் வெப்ப வடி குழாய்த் தத்துவத்தில் (thermosyphon system) இயங்குகின்றன.
வெப்ப வடி குழாய்த் தத்துவம், சுடு நீரின் அடர்த்தி குறைவதால், வேறு எந்தப் புற ஏற்று விசையுமின்றி தானே மேலேறி, பின் வடிதலாகும். சுடு நீர் ஆக்கிகளில் பெரும்பாலும், சம தளத் தட்டு வகை வெப்பத் திரட்டிகள் பயன்படுகின்றன. ஏற்புத் தகடு (absorption plate) பெரும்பாலும் தாமிரம், அலுமினியம் போன்ற உலோகங்களால் செய்யப் பட்டு, அதனோடு உட்புறத்தில் மெல்லிய குழாய் வழிகளைக் கொண்டிருக்கும். இக்குழாய் வழிகள் மேல் மற்றும் கீழ்த் தொட்டிகளோடு முறைப்படி இணைக்கப் பட்டிருக்கும். இதன் அமைப்பை வரைபடத்தில் காணலாம். இம்முறையில், நீரின் வெப்ப நிலை கோடைக் காலங்களில் ஏறத் தாழ 180° F கொண்டும், கார் காலங்களில் ஏறத் தாழ 120°F கொண்டுமிருக்கும். வசதியுள்ள சூழ்நிலையில் சராசரி சுடு நீர் உற்பத்தித் திறன் வெப்பத் திரட்டியின் ஒரு சதுர அடிப் பரப்பிற்கு 1 காலன் சுடுநீராகும். இவ்வகைச் சுடு நீராக்கிகள் இஸ்ரேல், வட ஆஃப்ரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளிலும் இந்தியாவிலும் பரவலாக அமைக்கப்பட்டுள்ளன.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சூரிய ஆற்றல் அடுப்பு. மக்களின் அன்றாட வாழ்விற்குச் சூரிய ஆற்றலின் பயனைத் தற்போது நடைமுறையிலுள்ள சூரிய அடுப்பின் உதவியினால் சமையலை விரைவாகவும், சிக்கனமாகவும் நடை பெறச் செய்வதன் மூலம் காணலாம். இவ்வடுப்பு படம் 2 இல் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இரண்டு தட்டுகள் (trays) இருக்கும். ஒன்று ஏறத் தாழ 66×66×17 செ.மீ. நீள் சதுரமாகவும் மற்றொன்று ஏறத் தாழ 60×42×12 செ.மீ. அளவுள்ள கோடக வடிவாகவும் (trapezoidal) மென் எஃகில் 1.25 மி.மீ. கனத்திற்குச் செய்யப்பட்டிருக்கும். இரண்டு தகடுகளுக்குமிடையே ஏறத் தாழ 5 செ.மீ. இடைவெளி இருக்கும். இந்த இடைவெளி மரத் தூள், ஒலி வெப்பத் தடைக் காப்பு, சலனப் பொருள் அல்லது கண்ணாடி இழைக் கம்பளி (glass wool) போன்ற வெப்பக் காப்புப் பொருள்களால் நிரப்பப்பட்டிருக்கும். இவ்வமைப்பு பெரும்பாலும், 3 மி.மீ. கனமுள்ள கண்ணாடிக் கூட்டினுள் இறுக்கிப் பொருத்தப்பட்டிருக்கும். கூட்டின் வெளிப்புறமும், உட்புறமும் கரும் பூச்சுப் பூசப்பட்டிருக்கும். வெப்ப நிலை இவ்வமைப்பினால் 60°C அளவிற்கு எளிதில் உயரும்.
பல பயன்களைத் தர வல்லதாயினும், தட்ப வெப்ப நிலை, எடுத்துக் கையாளுதல், அடுப்பினைப் பொருத்துதல் அல்லது நிலைப்படுத்துதல், இட அமைவு, செயலாக்குவதற்கான கால அளவு ஆகியவை சூரிய அடுப்பைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள்.
சூரிய ஆற்றல் சூடேற்றிகள் சூரிய ஆற்றலைக் கொண்டு, கட்டடங்களையோ, சில அமைப்புகளையோ சூடான நிலையில் வைத்திருக்கலாம். இதைச் செயல் படுத்தத் தகுந்த, தட்டு அமைப்புடன் கூடிய சூரிய ஆற்றல் சூடேற்றிகள் வழக்கில் உள்ளன. துத்தநாகத்தினாலான நீள் சதுரத் தகடுகளால் உருவாக்கப் பட்ட கலனும் உள்ளது. இதன் அளவீடு ஏறக் குறைய 112x80×10 செ.மீ. இருக்கும். 90 லி. கொள்ளளவு இருக்கக் கூடும். வெப்பத் தொடர்பிலாத நுண்ணிழைகளாலான கண்ணாடித் தகட்டு அமைப்புகள் துத்தநாகத் தகடுகளுக்குக் கீழே பொருத்தப்பட்டிருக்கும். தகட்டின் மேலே, சன்னல் கண்ணாடிகளாலான இரண்டு மூடிகள் 3 மி.மீ. கனத்துடன் பொருத்தப்பட்டிருக்கும். இச்சன்னல் கண்ணாடி களின் மேற்பகுதி கரும் பலகை வண்ணப் பூச்சால் பூசப்பட்டிருக்கும்.
சூடேற்றப்பட்ட நீர், சூரியச் சூடு கலத்தின் மேற்பகுதியிலிருந்து வெளியேறும். குளிர் நீர் புனல் வழியாக ஊற்றப்படலாம். பொதுவாக, இவ்வகை அமைப்புகள் கிடை மட்டத்திற்கு 11° கோணத்திலிருக்கும். நடைமுறையில் காலை 8 மணியளவில் நீர் ஊற்றப் பட்டு, சூரிய ஒளிக் கதிர்கள் தகடுகளில் முழுமையாகப் படும்படி வைக்கப்படும். அவ்வப்போது சுடுநீர் பயன்பாட்டிற்கு எடுக்கப்படலாம். இரவு நேரங்களில், வெப்பப் பாய்வு வெளியேறாத வகையில், வெப்பக் காப்பாக மூடப்பட்டிருக்கும். இவ்வமைப்பில், கணிப்பின் படி மாலை 4 மணியளவில் வெப்ப நிலை ஏறத் தாழ 65°C இருக்கக் கூடும் என்று கண்டறிந்துள்ளனர்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சூரிய ஆற்றலின் நிறை குறைகள் நிறைகள். எளிய அமைப்பு, எரி பொருள் முதலீடு இல்லாமை, உயவிடல், குளிர்வித்தல், சிக்கலற்ற திட்ட அமைப்பு, இயக்க மாறுதல், வரம்பு மீறிய இயல்புகள் போன்றவற்றால், சூரிய ஆற்றலில் இயங்கும் அமைப்பு நிறுத்தப்படுவதோ, ஆபத்தை விளைவிப்பதோ இல்லை.
குறைகள். அமைப்பின் அளவீடு அடக்கமாக இராது. கிடைக்கக் கூடிய ஆற்றல் சீராக இராது. வானிலை மாற்றத்தால், சூரியனிலிருந்து கிடைக்கும் ஆற்றலைத் தொடர்ந்து சீராகச் சேகரிக்க இயலாது; பகல் நேரத்தில் மட்டுமே சூரிய ஆற்றலைச் சேகரிக்க இயலும்; இரவு நேரத்தில் பயன்படுத்த வேண்டுமாயின், பகல் நேரத்தில் சேகரித்து வைத்துப் பின்னர், பயன் படுத்தக் கூடிய சேகரிப்பிகள் (collectors) தேவைப் படும். மேகக் கூட்டங்கள், மந்தமான தட்ப வெப்ப நிலை ஆகியவை சூரிய ஆற்றல் சேகரிப்பைத் தடை செய்யும். ஆற்றல் சேகரிப்பை விட, அதைத் தேக்கி வைத்துப் பயன்படுத்தும் முறை சிக்கலானதும், சற்றே செலவு மிகுதியானதுமாகும். —கே.ஆர். கோவிந்தன் —வி. சண்முகசுந்தரம் நூலோதி. Frank Kreith, Principles of Heat Transfer, Third Edition, Harper and Row Publishers, New York, 1973.
<!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்து ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 631)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/66xxwkvj/
தமிழ்“சூரியச் சூடாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/66xxwkvj/APA
Oliyon Research. (2026). சூரியச் சூடாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/66xxwkvj/MLA
"சூரியச் சூடாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/66xxwkvj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment