ஆய்வகங்களில் பொதுவாகப் பயன் படும் நுண்ணோக்கி கண் காணும் ஒளியின் அலை வரிசைகளில் பொருள்களைப் பெரிதாக்கிக் காட்டுகிறது. உடன் ஒளிர்வு நுண்ணோக்கி (fluorescent microscope) புற ஊதா, ஊதா, அரிதாக நீல நிற ஒளியிலும், பொருள்களைப் பெரிதாக்கிக் காணப் பயன் படுகிறது. இந்நுண்ணோக்கியில்,ஆய்வுக்குரிய பொருளின் மீது புற ஊதாக் கதிர் படும் போது, அப்பொருள் ஒளிர்கிறது. அதாவது, புற ஊதாக் கதிர், பொருளின் மீது படும் போது, அப்பொருள் தானே ஒளி விடும் பொருள் போலத் தோன்றுகிறது. அப்போது, பெரும்பாலும் பொருள்கள் வண்ணமுடையவையாகத் தோன்றும். ஒளிர்விக்கப் பட்ட பொருளில், எலெக்ட்ரான்கள் மாற்றி அமைக்கப் படுவதால் அது ஒளிர்கிறது. உட்சுவர் நிற மாலைப் பெருமங்கள் 300X109 அலை நீளத்திற்கும் குறைவாக உள்ள நிறமாலைகளைக் கொடுக்கும் பொருள்களைக் காணும் போது, நுண்ணோக்கியின் குவிக்கும் வில்லைகளாகக் கண்ணாடிக்குப் பதிலாகக் குவார்ட்ஸ் வில்லைகளைப் பயன் படுத்த வேண்டும். மேலும், நுண்ணோக்கியில் அலுமினியம் பூச்சுக் கொடுக்கப் பட்ட எதிர்பலிக்கும் முன் பரப்புக் கண்ணாடி இருக்க வேண்டும். ஏனென்றால், வெள்ளிப் பூச்சு உள்ள ஆடிகள் புற ஊதாக் கதிர்களைச் சிறப்பாக எதிர்பலிப்பதில்லை. ஆய்விற்குரிய பொருளின் ஒளிரும் பிம்பம் மிகப் பொலிவுடையதாகத் தோன்றுவதுடன், பொருளின் பல்வேறு பகுதிகளும் நன்றாக வேறு படுத்தி, அறியக் கூடியவையாக இருக்கும். வலிமை குறைந்த ஒளிர்வு உள்ள போது, ஒரு கண்ணால் மட்டும் பார்க்கப் படும் நுண்ணோக்கியைப் பயன் படுத்துவதோடு, ஆய்வுகளை இருட்டறையில் மட்டுமே செய்ய வேண்டும். வலிமை மிக்க ஒளிர்வு உள்ள போது, இரு கண்களாலும் காணும் நுண்ணோக்கியைப் பயன் படுத்தலாம். ஒளி இழப்பைக் குறைக்க, நுண்ணோக்கியின் காற்று–கண்ணாடிப் பரப்பு உரிய எரி பொருளால் பூசப் பட்டிருக்க வேண்டும். இந்நுண்ணோக்கியில் ஒளிர்வு செய்யாப் பொருளருகு கருவிகள் பயன் படுத்தப் படலாம். 8 மி.மீ. குறுக்களவும், 20 X பெருக்கு திறன் உள்ள கண்ணருகு கருவியும் சேர்ந்த கூட்டு அமைப்பு, பெரும்பாலும் சிறந்ததாகும். எண்ணியல் பிளவு 1.40 உள்ள அப்பே குவிப்பான் ஆய்விற்குரிய பொருளின் மீது கூடுதல் கதிர் வீச்சைக் குவிக்கும். நிறப் பிறழ்ச்சியற்ற (achromatic) குவிப்பானைப் பொருளருகு கருவியாகப் பயன் படுத்துவதில்லை. ஏனென்றால், இத்தகைய குவிப்பானில் இரண்டு வில்லைகள் ஒட்டப் பட்டிருக்கும். அவை ஒட்டப் பட்டிருக்கும் பகுதி, தானாக ஒளிர்வு செய்வதால், கண் கூசும் ஒளி தோன்ற வாய்ப்பு உண்டு. அவ்வாறே, ஃபுளுரைட் தனிமங்களாலான பொருளருகு கருவிகளையும் பயன் படுத்தக் கூடாது. சில ஆய்வுகளில், ஒளிப் புலக் குவிப்பானுக்குப் பதிலாகப் பர வளைய இருள் புலக் குவிப்பான் பயன் படுத்தப் படுகிறது. ஒளியை உட்கவரப் பயன் படுத்தப் படும் வடிப்பான் (filter) பொருளருகு கருவிக்கும், காண்போரின் கண்ணுக்கும் இடையில் வைக்கப் படும். இதனால், ஆய்விற்குரிய பொருளால் உட்கவரப் படாத பிற கதிர்கள் இருந்தால், அவை அகற்றப் பட்டுப் புற ஊதாக் கதிர்களை மட்டும் உட்கவரக் கூடிய வண்ணமற்ற வடிப்பானாக இருக்கலாம். அல்லது, வடிப்பான் ஆய்வில் பயன் படுத்தப் படும் ஒளியின் வண்ணத்திற்கு மிகை நிரப்பு வண்ணமுடையதாக இருக்கலாம். காட்டாக, நீலம் மற்றும் புற ஊதாக் கதிர்களை உட்கவரும் பொருள்களுக்கு ஒரு மஞ்சள் வடிப்பானைப் பயன் படுத்தலாம். அது பொருளைக் கடந்து செல்லும் நீல நிற ஒளியை உட்கவர்ந்து பொருளின் மஞ்சள் நிற ஒளிர்வை மட்டும் கண்ணிற்குச் செலுத்தும். பொருளை நன்றாகக் காண்பதற்குக் குறுக்கு–வடிகட்டி கூட்டு அமைப்புகளைப் பயன் படுத்தலாம். நோய் நுண்ணுயிரை அறிதல். வைரஸ், பாக்டீரியா போன்ற ஒவ்வாமைப் பொருள்கள், உடலின் திசுக்களுக்குள் நுழைந்தால், அவற்றுடன் தனித்து வினை புரியும் கரையும் பொருள்கள் திசுக்களில் ஏற்படுத்தப் படுகின்றன. இக்கரையும் பொருள்கள் எதிர்ப்பு ஆற்றல் பொருள்கள் எனப் படும். அவை தோன்றக் காரணம், ஒவ்வாமைப் பொருள்களேயாகும். நீர்மத்தில் உள்ள எதிர்ப்பு ஆற்றல் மிக்க பொருள்கள் கரையக் கூடிய ஒவ்வாமைப் பொருள்களுடன் சேர்க்கப் பட்டால், தகுந்த சூழ்நிலையில் ஒரு வீழ் படிவு தோன்றும். அல்லது ஒவ்வாமைப் பொருள் குறிப்பிட்ட வினை மட்டும் ஏற்படுத்தக் கூடியதாக இருந்தால், துகள்கள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளும். எதிர்ப்பு ஆற்றலுடைய பொருள்களைத் தகுந்த வேதி முறையில் ஒளிர் விடும் சாயங்களுடன் பிணைக்கலாம். அவ்வாறு, பிணைக்கப் படும் போது, எதிர்ப்பு ஆற்றலுடைய பொருள் ஒவ்வாமை பொருளுடன், குறிப்பிட்ட வினை புரியும் தன்மை மாறி விடாதவாறு இருத்தல் வேண்டும். ஃபுளோரசின் ஓர் ஒளிர் விடும் சாயம் ஆகும். இவற்றையும், உடன் ஒளிர்வு நுண்ணோக்கியையும் பயன் படுத்தி, நோய்களை ஏற்படுத்தும் வைரஸ், பாக்டீரியாக்கள் ஆகியவை கண்டறியப் படுகின்றன. —ப. தர்மலிங்கம்