கால்நடைகளுக்குச் சாதாரணக் காய்ச்சல், கழிச்சல், வயிற்று உப்புசம், கல்லீரல் அழற்சி, நுரையீரல் அழற்சி, இதய நோய் போன்ற தொற்றாத நோய்களும், வைரஸ் (parasite), பூசணக் காளான் (fungus) போன்ற தொற்று நோய்களும் ஏற்படும். நோயுற்ற கால்நடைகளைக் காத்தல் எனும் போது, அவற்றிற்கு மருத்துவம், ஏற்ற உணவு, இருப்பிடம், பராமரிப்பு, சுகாதாரம் இவற்றில் பொதுவாகக் கவனம் செலுத்த வேண்டும். தொற்று நோய் கொண்ட கால்நடைகளைக் காக்கும் போது, மற்றக் கால்நடைகளுக்கு அந்த நோய் பரவாத வகையில், முன் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவற்றை, மனிதர் நடமாட்டமில்லாத பகுதியில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். நோயுற்ற கால்நடைகளைக் கண்டுபிடித்தல். பண்ணையில் மாடுகளோ, மந்தையில் ஆடுகளோ கூட்டமாக இருக்கும் போது, இவற்றில் நோயுற்றவை இருப்பின், அறிகுறிகள் மூலம் அடையாளம் கண்டு கொள்ளலாம். பொதுவாக, நோயுற்ற கால்நடைகள் சோர்வுற்று இருக்கும். வழக்கமான உணவு , தீவனம் உண்ணாது, உதட்டின் மேற்புறம் உலர்ந்து இருக்கும். கண்களின் நிறம் மாறுபாடாக இருக்கும். சிறுநீர் மற்றும் சாணத்தின் நிறம், தன்மை அளவு ஆகியன மாறியிருக்கும். உடல் வெப்பத்தின் ஏற்றத் தாழ்வு இருக்கும். மற்ற அறிகுறிகள் நோய்க்குத் தக்கபடி வேறுபாடு காட்டும். மனிதர் நடமாட்டமில்லாத பகுதியில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். ஓரிடம் விட்டு மற்ற இடத்திற்குக் கொண்டு சென்றால் நோய் விரைவில் பரவும். நோயற்ற விலங்குகட்கும் துன்பம் விளையும். நாய், பூனை , காக்கை, எலி போன்றவற்றால் நோய் கண்ட கால்நடைகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன், அவற்றின் மூலமும் நோய் நுண்ணுயிரிகள் பரவிட வாய்ப்பு உண்டு. தொற்று நோய் கொண்ட விலங்குகளைக் கையாள்பவர் நல்ல மாடுகளை அணுகாதிருத்தல் நலம். அத்தகைய சூழ்நிலை ஏற்படின், சுகாதார முறைகளைக் மேற்கொள்ளவேண்டும். நீர், கழிவு தேங்காத இடமாக இருந்தால் ஈ, கொசு இரா. மேலும், நோயுற்றவைக்குப் பயன் படுத்திய வைக்கோல், புல், தீவனம், நீர் ஆகியவற்றை நல்ல மாடுகளுக்குப் பயன்படுத்தினால், நோய் நுண்ணுயிரிகள் மற்ற மாடுகளுக்குப் பரவிடக் கூடும். தொண்டை அடைப்பான் (Haemorrhagic septicaemia) எனும் நுண்ணுயிர் நோய் கண்ட மாடு கூடுதலான காய்ச்சல், மார்புச் சளி, தாடை–கழுத்துப் பகுதி வீக்கத்துடன் இருக்கும். இதற்கு நுண்ணுயிர் எதிர் மற்றும் சல்ஃபா மருந்துகளை மருத்துவர் மூலம் வழங்கலாம். சப்பை நோய் (flock quarter) எனும் நுண்ணுயிரி நோய், கடும் காய்ச்சலையும், முன் அல்லது பின் சப்பை வீங்கித் தள்ளாடி நடக்க இயலா நிலையையும் கொண்டிருக்கும். இதற்கு, பென்சிலின் மற்றும் நுண்ணுயிர் எதிர் மருந்துகளை ஊசி மூலம் வழங்கலாம். வீங்கிய பகுதிக்கு மென்மையாக ஒற்றடம் கொடுக்கலாம். எளிதில் செரிக்கக் கூடிய கஞ்சி, புல் போன்ற உணவுடன் தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும். ஈரமில்லாத குளிர் மற்றும் வெயில் தாக்காத காற்றோட்டமான கொட்டகைகளில், நோயுற்ற கால் நடைகளை வைக்க வேண்டும். அடைப்பான் (anthrax). இது ஆடு மாடுகளைத் தாக்கி, உடனடியாக இறப்பினை ஏற்படுத்தும் நுண்ணுயிரி நோய். சில நேரங்களில் கடும் நிலையில் நோய்க் குறிகளுடன் இருந்து, ஓரிரண்டு நாள்களில் கால்நடை இறந்து விடும். எனவே, தீவிர மருத்துவத்துடன் உணவு உண்ணாத நிலையில், குளுக்கோஸ் போன்ற சத்து நீரைக் குருதி வழி ஏற்றலாம். நோயுற்ற மாடுகளின் கழிவுகளையும், குருதிக் கழிவுகளையும், உடனடியாக அகற்றிச் சுண்ணாம்பு நீருடன் புதைத்தல் அல்லது எரித்தல் நலம். நுண்ணுயிரிக் கொல்லி (disinfectants) மருந்து மூலம் இடத் தூய்மையைக் காக்க வேண்டும். வெக்கை நோய் (rinder pest). நச்சுயிரியால் தாக்கப் படும் மாட்டினமும், ஆட்டினமும் கடும் காய்ச்சல், வாயில் புண், கடும் கழிச்சலைக் காட்டும். உடன், பண்ணையிலிருந்து பிரித்துத் தொற்று நோய்ப் பிரிவில் தனியே வைத்துத் தொடர் மருத்துவம் வழங்க வேண்டும். கழிச்சலால் ஏற்படும் நீரிழப்பினை ஈடுசெய்யச் சத்து நீரைக் குருதி வழியே செலுத்தலாம். அரிசிக் குருணைக் கஞ்சியும், ஆற வைத்த குடிநீரும் வழங்கலாம். கால் மற்றும் வாய் நோய் (foot and mouth disease) நச்சுயிரித் தாக்குதலால் கால், குளம்பு, வாய், ஈறு, நாக்குப் பகுதிகளில், கொப்புளங்கள் ஏற்பட்டு வாய் திறக்க இயலா நிலையில் உள்ள கால்நடைகளைத் தனியே வைத்துக் காக்க வேண்டும். தரை, சேறு, சகதி, ஈரமில்லாது இருந்தால்தான், கால்ப் புண்கள் வழியாக, நுண்ணுயிரிகள் நுழையா. ஈ மொய்த்து இடையூறு தருவது மட்டுமன்றிப் புழுக்களும் உற்பத்தியாகித் தாங்கொண்ணாத் துன்பமும் ஏற்படுத்தி விடும். ஈ அணுகாதிருக்கக் கால் புண்ணில், வேப்பெண்ணெய் தடவலாம். புண்ணைப் பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசலால் கழுவி, களிம்பு தடவலாம். இந்நோய்க்கு மருத்துவம் வழங்க வேண்டும். எனினும், பராமரிப்பும், சுகாதாரமும் மிகவும் மேலானவை. சாதாரணக் கழிச்சல், வயிறு உப்புதல் போன்ற உணவுப் பாதை தொடர்பான நோய் கண்ட மாடுகளுக்குத் தீவனக் கட்டுப்பாடு தேவை. சினை மற்றும் கன்று ஈன்ற பசுக்களுக்குத் தனியான பராமரிப்பும், கண்காணிப்பும் வேண்டும். கன்று பேணல். குருதிக் கழிச்சல், கன்றுக் கழிச்சல் போன்ற நுண்ணுயிரி நோய்களால் பாதிக்கப் படும் கன்றுகளுக்குத் தேவைான நுண்ணுயிர் எதிர் மருந்துகளையும், வைட்டமின் மருந்துகளையும், கழிச்சலால் ஏற்படும் நீரிழப்பினைத் தவிர்க்க, சர்க்கரை உப்பு சத்து கலந்த மருந்து நீரையும் அளிக்கலாம். பொதுவாக, நோயுற்ற கன்றுகளைக் குறுகிய தொழுவத்தில் நெருக்கமாக அடைக்காமல், குளிரோ, வெப்பமோ, தடுக்காத காற்றோட்டமான இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும். காய்ச்சி ஆற வைத்த குருணைக் கஞ்சி, நல்ல குடி நீர், மிதமான அளவு பசும்பால் வழங்கலாம். காய்ச்சலில் உடல் நடுங்கினால், உடலைப் போர்த்தி விடலாம். மென்மையான வைக்கோல் மெத்தையில் படுக்க வைக்கலாம். நோய் கண்ட ஆட்டினம் பேணல். வெக்கை நோய், கால் மற்றும் வாய் நோய், அடைப்பான் கண்ட ஆடுகளையும், மாடுகளைப் போலவே பராமரிக்க வேண்டும். பேரிழப்பை ஏற்படுத்தும் அம்மைத் (sheep pox) தொற்று நோய் கண்ட ஆடுகளைத் தனியே பிரித்துப் பேண வேண்டும். கால் குளம்பு, வாலின் அடி, தொடை, பால் மடி, இனவுறுப்பு, வாய், உதடு ஆகிய இடங்களில் கொப்புளங்கள் தோன்றி, நமைச்சலை ஏற்படுத்தும். இதனால், சுவர், மரம் போன்றவற்றில் உராய்ந்து, கொப்புளங்கள் உடைந்து, புண்ணாகிச் சீழ்ப் பிடிக்கத் தொடங்கும். ஈ மொய்த்துப் புழு உருவாகி விடும். தரை தூய்மையின்றி இருப்பின், சேறும், சகதியும் புகுந்து விடும். எனவே, மாடுகளில் கால் மற்றும் வாய் நோய்க்குச் செய்யும் சுகாதார முறைகளையே இதற்கும் கையாள வேண்டும். வாயில் புண் இருப்பதால், மென்மையான புல், கஞ்சி, தூய நீர் வழங்க வேண்டும். துள்ளுமரி. நோய் கண்ட ஆட்டினைக் காற்றோட்டமான இடத்தில் படுக்க வைக்க வேண்டும். வலியினால் புரண்டு விழும் போது, சிறிய இடமாகவோ, அடைசலாகவோ இருந்தால், அடி பட்டுக் காயங்கள் ஏற்படும். நோயுற்ற ஆட்டுக் குட்டிகளை, மேலும் நன்முறையில் பாதுகாப்பான இடத்தில் வைத்துப் பேண வேண்டும். நோய் கண்ட நாயினம் பேணல். நாயின் நோய்க் குறிகள் அதனுடன் பழகுபவர்களுக்கு எளிதில் தெரிந்து விடும். கழிச்சல் ,குருதிக் கழிச்சல், வயிற்றுப் பொருமல் , சளி போன்ற சாதாரண நோய்களுடன் டிஸ்டம்பர் (Distember) போன்ற வைரஸ் நோய்களும் தாக்கும். நோய் நிலைக்குத் தக்கவாறு, மருத்துவம் செய்ய வேண்டும். எப்போதும் கொடுக்கப் படும் உணவில், நோய்க்குத் தக்கபடி மாறுதல் செய்வதுடன், குடிநீர், புதிய ரொட்டி, காய்ச்சி ஆற வைத்த பால், முட்டை இவற்றைக் கொடுக்கலாம். நோயுற்ற நாய்க்கு வழக்கத்தை விடக் கூடுதலான பராமரிப்பினையும், கண்காணிப்பினையும் வழங்க வேண்டும். ஆனால், மனிதர்களுக்குத் தொற்றக் கூடிய கொடுமையான வைரஸ் நோய், வெறி நோய் (rabies) என்று ஐயப்பட்டால், அதனைத் தனியான கூண்டுக்குள் வைத்துக் கண்காணிக்க வேண்டும். யாரும் தொடாமல், அதன் எச்சிலோ, கழிவுப் பொருள்களோ படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாய் இறந்து விட்டால், அதனையும், கழிவு, மற்றும் பயன்பட்ட பொருள்களையும் புதைத்தலோ, எரித்தலோ நலம். நோய் கண்ட பன்றியினம் பேணல். உயிரினப் பன்றிகள் வளர்க்கப்படும் பண்ணையில் நோயுற்ற பன்றிகள், நல்ல பன்றிகளிலிருந்து தோற்றத்தில் மாறுபாடு காட்டும். இவற்றைப் பண்ணையிலிருந்து பிரித்து, நோயின் தன்மையினை ஆய்வு செய்து, தனியான அறையில் வைத்து மருத்துவம் செய்ய வேண்டும். பன்றிகளுக்குப் பொதுவாகப் பன்றிக் காய்ச்சல் (Swine fever) அம்மை (SWine pox), எரிசிபிலேஸ் (Erysepelas) போன்ற தொற்று நோய்களும், காய்ச்சல், கழிச்சல், சளி, வயிற்றுக் கோளாறு போன்ற நோய்களும் ஏற்படும். மற்றக் கால்நடைகளைப் போலவே, நோயுற்ற பன்றிகளுக்கும், நோய்க்குத் தகுந்த மருத்துவம் செய்வதுடன், இடச் சுகாதாரம், சுற்றுப் புறத் தூய்மை, கண்காணிப்பு ஆகியன தேவை. உணவும், நோய்க்குத் தக்கவாறு தூய்மையாகவும், எளிதில் செரிக்கக் கூடியதாகவும், சத்தானதாகவும் அமைய வேண்டும். நோய் கண்ட கோழியினம் பேணல். கோழிக் கழிச்சல் (bacillary white diarrhoea), கோழி டைபாய்டு (foul typhoid), கோழிக் காலரா(fowl cholera), வெள்ளைக் கழிச்சல் (ranikhet diseases), குருதிக் கழிச்சல் (coccodopsrs) எனும் நோயால் பாதிக்கப் பட்டால், பண்ணையிலிருந்து அந்தக் கோழிகளை உடன் பிரித்துத் தனிக் கொட்டகையில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் . மருந்துகளைத் தீவனத்துடன் கலந்து வைப்பதை விட, நீரில் கலந்து வைப்பது நல்லது. அதனை விடவும், தனித் தனியே வாய் வழியாகவோ, ஊசி வழியாகவோ செலுத்தினால், பயன் மிகுதியாக இருக்கும். கழிவுகளை உடனுக்குடன் அகற்றி, நுண்ணுயிர்க் கொல்லிகளால் இடத் தூய்மையைப் பேண வேண்டும். எளிதில் செரிக்கக் கூடிய குருணை போன்ற தீவனம் வழங்கலாம். சளி நோய் (coryza). சுவாசக் குழாய் நோய்((infections Bronchitis) போன்றவற்றால் பாதிக்கப் பட்ட கோழிகளுக்கு, குளிர் வாட்டாத கதகதப்பான, ஆனால், காற்றோட்டமான இடம் தேவை. கோழி இருக்கும் இடங்களில் தோன்றும் புற ஒட்டுண்ணிகளை நீக்க வேண்டும். கீரிப் பிள்ளை, எலி, பாம்பு, பருந்து இவற்றால் ஊறு நேராத இடமாக அது இருக்க வேண்டும். —ச. தமிழரசன்