உயிர் சார் படிமலர்ச்சியில் ஒரு கூறான இனப்பெருக்க மக்கள்தொகை (Breeding Population) இனச் சந்ததியினரை உருவாக்கும் திறன் பெற்ற மக்கள் குழுவாகும். இந்த மக்கள்தொகை ‘மெண்டலின் மக்கள் தொகை’ (Mendelian Population) அல்லது ‘வகையுறா உயிர்த்தொகுதி’ (Deme) எனவும் கூறப்படுகிறது. மக்கள்தொகை என்னும்சொல் பல முறைகளில் பல்வேறு வழக்குகளில் பயன்படுத்தப்படுவதால் இச்சொல் வழக்கைக் கவனித்து வரையறை செய்தல் இன்றியமையாததாகிறது. எடுத்துக் காட்டாக ‘இந்திய மக்கள் தொகை’ என்னும் தொடர் இந்திய நாட்டின் அனைத்து மாநில மக்களையும் வயது, பால் ஆகியவற்றின் அடிப்படையிலல்லாது குறிப்பிடப்படுவதாகும். இதைப் போன்றே ‘இனக்குழு மக்கள் தொகை’ (Ethnic Population) என்னும் தொடர் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் ஒத்த பண்பாட்டைக் கொண்ட ஒருபடித்தான மக்களினத்தைக் குறிப்பதாகும். இதனாலேயே மானிடவியலில், படிமலர்ச்சிச் (Evolution) சொல் வழக்கில் ‘மக்கள் தொகை’ என்பது இனப்பெருக்கம் செய்யும் தகுதியுடைய குழுவினைச் சுட்டுவதாகும். இனப் பெருக்க மக்கள் தொகையினைப் பற்றித் தெளிவாக அறிய வேண்டுமாயின் மரபணுப் பொதுச் சேர்மம் (Gene Pool) என்னும் நிலையில் பிரித்தெடுத்து அறியலாம். மரபணுப் பொதுச் சேர்மம் என்பது குறிப்பிட்ட மக்கள் குழுவின் மரபுசார் இயற்பண்பின் தொகுப்பாகும் (Corporate genetic endowment), அல்லது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் மக்கள் குழுவில், ஒரே இடத்தில் காணப்படும் அனைத்து மரபணுக்களின் தொகுப்பாகும். இனப்பெருக்க மக்கள் தொகையின் வரம்பு குறிப்பிட்டு வரையறுத்துக் கூறுவது கடினம். உயரின உயிரிகளில் மரபணு ஒரு மக்கள் குழுவிலிருந்து மற்றொரு மக்கள் குழுவிற்குப் பரவும் தன்மையது. மனிதனை உள்ளடக்கிய இருபாலுயிரிகள் அனைத்திலும் வயது வந்த ஒரு உறுப்பினர் தம் குழுவைச் சார்ந்த எந்தவொரு எதிர்பாலாருடனும் இனப்பெருக்கம் செய்யும் நிலையைப் பெறுவர். ஆனால், ஒவ்வொரு உயிரியின் இனப்பெருக்கத் திறனும் ஒரே அளவினதாக அமையாது. இதனால், ஓர் இனப்பெருக்க மக்கள் தொகையில் பல படிநிலைகள் காணப்படுகின்றன. ஒரு சிறு பரப்பில் வாழும் சமூகத்தில் பல இனப்பெருக்க உறுப்பினர்களும் காணப்படலாம். ஆனால், பரந்த வாழிடப் பரப்பைக் கொண்ட சமுதாயத்தில் குறைந்த எண்ணிக்கையிலான இனப் பெருக்க உறுப்பினர்களே காணப்பெறுவதுமுண்டு. மனித இனப்பெருக்க மக்கள்தொகையில் பல உட்குழு (Sub units) மக்கள்தொகை காணப்படுகின்றது. இதற்குக் காரணம் ஒவ்வொரு குழுவிலும் மரபணுப் பொதுச் சேர்மத்தின் தன்மை வேறுபடுவதேயாகும். மனித இனங்கள் ஒவ்வொன்றும் மற்றதினின்று புறத்தோற்றத்தாலேயே பெரிதும் வேறுபடுகின்றது. இதற்குக் காரணம் மரபணுப் பொதுச் சேர்மத்தின் தன்மை ஒவ்வோர் இனத்திலும் மாறுபட்டுக் காணப்படுவதேயாகும். மனித இனங்கள் அல்லது மெண்டலின் மக்கள்தொகையில் காணப்பெறும் இந்த வேறுபாட்டுத் தன்மையினை இயற்கைச் சூழலில் காணப்படும் பொதுவான எடுத்துக்காட்டுகளின் வழி அறியலாம். ஒரு பரந்த நகரத்தின் பூங்காவில் வாழும் அணில்கள், சிறு கிராமத்தில் வாழும் எலிகள், சிறு வாழிடப் பகுதியில் பல மாடிக் கட்டிடங்களில் வாழும் பூனைகள் ஆகிய இவ்வனைத்தும் தத்தம் இனப்பெருக்கக் கூட்டமாகின்றன. அணில், எலி, பூனை ஆகிய உயிரிகள் தாம் வாழும் பரப்பிலிருக்கும் எதிர்பாலாருடனே இனப்பெருக்கம் கொள்கின்றன. ஆனால், மனிதர்களுள் இனப்பெருக்கத் தன்மை பண்பாட்டின் விதிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. புவியமைப்பு எல்லையே பெரும்பாலும் முதன்மையானதாகக் காணப்படுகிறது. சமயம், இனம், சமூகம், பொருளாதாரச் சூழல், மொழி, கல்வி, உளப்பாங்கு முதலான பண்பாட்டுக் காரணிகளும் உடன் நிற்கின்றன. மேற்கண்ட அனைத்துக் காரணிகளாலும் கட்டுப்பட்ட குழுக்களிலிருந்தே மக்கள் தத்தம் எதிர்பாலாரைத் தேர்ந்தெடுக்க வேண்டியதாகிறது. இம்மக்கள் தொகை ‘இனப்பெருக்கத் தனிக்குழு’ (Breeding Isolate) எனக் கூறப்படுகிறது. இந்த அனைத்துப் பண்புகளையும் கருத்திற்கொண்டே மனித இனப்பெருக்க மக்கள் தொகையைப் புவியமைப்புச் சார்ந்த சமூகக் குழு (Geographic Social Group) என்றும் கூறப்படுகிறது. பொதுவாக உலகமனைத்திலும் மக்கள் தத்தம் பண்பாட்டுப் பண்பினைப் போற்றி வாழுதலைத் தலையாயதாகக் கொண்டுள்ளனர். கிரீன்லாந்து (Greenland) எசுகிமோக்கள், பசுபிக்குப் பரப்பில் வாழும் பிட்கேய்ரன் (Pitcairn), தென் அட்லாண்டிக்கில் வாழும் திரிசுடான் டா குன்கா (Tristan da cunha), சுவிட்சர்லாந்தின் மலை சார்ந்த கிராமங்கள், அரிசோனாவின் (Arizona) சுபய் இந்தியர் (Supai Indian), வங்காளக் கடலில் வாழும் அந்தமான் தீவினர், இந்தியாவில் வாழும் கொச்சின் யூதர்கள் அனைவரும் புவியமைப்புக் காரணங்களால் இனப் பெருக்கத் தனிக்குழுக்களாக வாழுகின்றனர். வாழிடப் பரப்பைப் போன்றே மொழி, சமயம் முதலானவையும் இனப்பெருக்கத் தணிக்குழுக்களை அமைக்கின்றன. இந்தியப் பெருநாடு பல சமயங்களையும் பண்பாடுகளையும் கொண்டதாகும். பலவேறுபாடுகளைக் கொண்ட இந்திய நிலப்பரப்பில் மொழி, சமயம், முதலானவற்றால் பாகுபட்ட இந்திய மக்கள் தொகையில் 40,000க்கும் மேற்பட்ட இனப்பெருக்க மக்கள் தொகை உள்ளதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இனப்பெருக்க மக்கள்தொகை உருவாவதில் மரபுப் பண்பு மட்டுமல்லாமல் புறப்பண்புகளும் காரணமாகின்றன. வேட்டையாடி உணவு சேகரித்து வாழும் நிலை முதல் தொழிற்சாலை நிரம்பியுள்ள நகர வாழ்க்கை வரை மக்கள் குழுக்கள் பலவாறாகப் பாகுபட்டுக் காணப்படுகின்றன. புவியமைப்புச் சூழல் சார்பிலும் மக்கள் பல துணைக் குழுக்களாகக் காணப்படுகின்றனர். இவ்வேறுபாடுகளைக் கொண்டு மரபு சார் மக்கள் தொகையியலார் (Population Geneticists) இனப்பெருக்க மக்கள்தொகைக் குழுக்களிடையே நிலவும் வேறுபாடுகளைக் கண்டறிவதில் ஈடுபட்டுள்ளனர். மரபற்று அடுக்கு நிகழ்வின் (Frequency) காரணமாகவும் இணைமரபுக்கீற்றில் (Allele) அடுக்கு நிகழ்வில் காணப்படும் வேறுபாடுகளாலும் மக்கள் குழுக்களிடையே வேற்றுமைகள் காணப்படுகின்றன. இவையே இனப்பெருக்க மக்கள் தொகையை அறுதியிடுவதில் தலைமைப் பங்கை வகிக்கின்றன. கே.நி.