சாலைகள்
cālaikaḷ
இருப்புப் பாதைகளும், சாலைகளும் முக்கிய போக்குவரத்து வசதிகளாகப் பயன்படுகின்றன.
இருப்புப் பாதைகளும், சாலைகளும் முக்கிய போக்குவரத்து வசதிகளாகப் பயன்படுகின்றன. இவற்றில், சாலைப் போக்குவரத்து மிகுதியாகப் பயன்படுகிறது. ஏனெனில், குறைந்த அளவு உள்ள சுமைகளைக் கொண்டு செல்லச் சாலைப் போக்குவரத்தே ஏற்றது; இம்முறையில் எவ்வளவு தொலைவு வேண்டுமானாலும், கொண்டு செல்ல முடியும்; வாகன ஓட்டுநர்களின் நேரடிப் பார்வையில் இருப்பதால், பொருள்களும் சுமைகளும் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்;குறைந்த செலவில் சுமைகளைக் கூட்டி வைக்க முடியும்; மிகுந்த உயரங்களுக்கும், பள்ளங்களுக்கும் சாலைகளை அமைத்துச் செல்ல முடியும்; எந்நேரமும், அனைத்துக் கால நிலைகளிலும் சாலை வசதியைப் பயன்படுத்த முடியும்; மொத்தச் செலவைக் கணக்கிட்டால், பிற போக்குவரத்துகளை விடக் குறைவாகவே இருக்கும்; பல மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும்.
சாலைகள் வேளாண்மை, தொழிற்சாலை, வணிகம், சுகாதாரத் தூய்மையாக்கம் போன்றவற்றில் பயன்படக் கூடியன. அவசரத் தேவைகளில் சாலை வசதியின் இன்றியமையாமை புலப்படும். சாலைகளின் உதவியால் கடிதப் போக்குவரத்து எளிதாகிறது; சாலைகள் உள்ள இடங்களில் நிலத்தின் விலை மதிப்புப் பெருகக் கூடும்.
அசோகர் ஆட்சியில் மிகச் சிறந்த சாலை அமைப்புகளும், சாலைகளின் பராமரிப்பு வசதிகளும், சாலைகளின் அருகே ஓய்வு விடுதிகளும் இருந்தன. பதினைந்தாம் நூற்றாண்டில் சாலைகளின் அமைப்பு, மழை நீர் வழிந்து செல்ல வசதியாக ஆமை முதுகு போல அமைக்கப்பட்டிருந்தது. முகலாய மன்னர்கள் காலத்தில் குறிப்பிடத்தக்க பல நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில், இருப்புப் பாதை நிர்வாகத்துடன், சாலை கட்டும் பணியும் சேர்க்கப்பட்டது. முதல் உலகப் போருக்குப் பின், ஊர்திகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
சாலைகளின் பராமரிப்புப் பணிக்கென நிதி நிர்வாகம் 1928 ஆம் ஆண்டு கெய்சர் குழுவின் கீழ் அமைக்கப்பட்டது. சாலை வரிகள் விதிக்கப்பட்டன. மையச் சாலை மேலாண்மை நிறுவனம் 1930 இல் நிறுவப்பட்டது. இந்திய சாலைக் குழு 1934 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்குழு, சாலை அமைக்கும் முறைகள் பற்றியும், தரக் கட்டுப்பாடு பற்றியும், புதிய கட்டுமான முன்னேற்றங்கள் பற்றியும் தெளிவாக விளக்கியுள்ளது. சாலை வளர்ச்சிக்கான ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளது. போக்குவரத்து அறிவுரைக் குழு 1935ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. சாலைப் போக்குவரத்து மேலாண்மைக்கென 1939ஆம் ஆண்டு ஊர்திச் சட்டம் இயற்றப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை மேலாண்மை மைய அரசின் கீழ்க் கொண்டு வரப்பட்டது. சாலை முன்னேற்றத்-
திற்கென ஐந்தாண்டுத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> ஆசிய நாடுகளுக்கிடையே வணிக, சமூக, கலைப் பண்பாட்டு முன்னேற்றத்திற்கென, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பல நாடுகள் சாலைகளை அமைக்க முயற்சி செய்தன. தலைநகர்கள், துறைமுகங்கள், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களை இணைக்கும் சாலைகள் அமைக்க, ஆசிய நெடுஞ்சாலைத் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. 38,500 கி.மீ. தொலைவிற்குச் சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கிழக்கு மேற்குத் தடமாக 10,800 கி.மீ. சாலை ஒன்று 1972ஆம் ஆண்டு நிறைவுற்றது. இச்சாலைத்திட்டம் ஈரான்—துருக்கி எல்லையில் தொடங்கி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், பர்மா, தாய்லாந்து ஆகிய நாடுகள் வழியே சென்று வியட்நாமில் முடிவடைகிறது. இந்தியாவில் ஆசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ் 15,700 கி.மீ. நீளத்திற்குச் சாலைகள் அமைக்கப்பட்டன.
முதலில் சாலைகள் ரோம் நகரில் கற்பலகைகளையும், கல், சுண்ணாம்புக் கற்காரையையும் கொண்டு கட்டப்பட்டன. பிரான்சில் நொறுங்கிய கற்களைப் பயன்படுத்தும் முறை கண்டுபிடிக்கப் பட்டது. இம்முறை டிரசாகுட் முறை எனப்பட்டது. பின்னர், ஜான் மெட்காப் முறையில் கூழாங்கற்களால் சாலை அமைக்கும் முறை வந்தது. மிகப் பெரிய அடித்தளக் கற்களைப் பயன்படுத்திச் சாலை கட்டும் தாமஸ் டெல்போர்டு முறை கண்டுபிடிக்கப்பட்டது. சிறு கற்களை அடுக்காக இறுக்கமடையச் செய்து, சாலை அமைக்கும் மக்காடம் முறையும் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவில் சாலை மேலாண்மைக்கென முறையான அமைப்புகளும், கட்டுக்கோப்புகளும், சட்டங்களும் உண்டு. மைய அரசு, மாநில அரசு, மாவட்டக் கூட்டமைப்பு, நகராட்சி, ஊராட்சி, வட்ட முன்னேற்றத் துறை ஆகிய பல்வேறு அமைப்புகளும் சாலை மேலாண்மையில் தொடர்பு கொண்டவை. மையப் பொதுப்பணித் துறை, மாநிலப் பொதுப் பணித் துறை, நகராட்சி முதலியவை சாலைகளை அமைத்தல், பராமரித்தல் ஆகிய பணிகளைக் கவனித்துக் கொள்கின்றன. இவற்றின் கீழ், முறையான பொறியாளர், மேலாண்மை செய்து சாலை அமைத்தலையும், பராமரித்தலையும் கண்காணித்து வருகின்றனர்.
மக்களும், சுமைகளும் பாதுகாப்பாக, சிக்கனமான செலவில் வசதியாக, விரைவாக இடம் மாறிச் செல்ல உதவுமாறு சாலைகளை அமைக்க வேண்டும். இயற்கை வசதிகளைப் பயன்படுத்தி, மிகுந்த பயன் கிடைக்குமாறும், பொருளாதார வசதி பெருகுமாறும் திட்டமிட வேண்டும். சாலைகள், தேசிய அளவில் அமைக்கப்படும் சாலை அமைப்புகளுக்கு உதவும் வகையில் அமைய வேண்டும். இச்சாலைகளுக்கு, போக்குவரத்துத் தேவைகளுக்கேற்ப முக்கியத்துவம் அளிக்க வேண்டும். —ஏ. எஸ். எஸ். சேகர்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 148)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5zqy36a7/
தமிழ்“சாலைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5zqy36a7/APA
Oliyon Research. (2026). சாலைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5zqy36a7/MLA
"சாலைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5zqy36a7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment