அதியமான் நெடுமானஞ்சி
atiyamāṉ neṭumāṉañci
எழினி என்றும் (புறம். 158), அஞ்சி என்றும் (புறம்.
எழினி என்றும் (புறம். 158), அஞ்சி என்றும் (புறம். 91), வழங்கப்பட்டுச் சங்க காலத்தில் வாழ்ந்த வள்ளலும் பெரு வீரனுமாவான். கடைஎழு வள்ளல்களுள் ஒருவன். இவன் ஒளவையாருக்களித்த நெல்லிக்கனிக் கொடையினை ‘அமிழ்துவிளை தீங்கனி ஒளவைக்கீந்த’ எனச் சிறுபாணாற்றுப்படை (சிறு. 101–103) பாராட்டுகிறது. தமக்களித்த இக்கொடைச் சிறப்பினை ஒளவையாரும் புறப்பாடலில் போற்றியுள்ளார் (புறம். 91). இவன் மழவர்கள் என்னும் வீரர்களுக்குத் தலைவனாக விளங்கினான் (புறம். 88, 90). இவன் ஒளவையாரைத் தன்னுடைய அரசியல் தூதுவராகத் தொண்டைமான் பால் அனுப்பினான் (புறம். 95). அதியர் குடியில் தோன்றிச் சிறந்தவனாக இவன் விளங்கியமையால், அதியர் கோமான் எனப்பட்டான் (புறம். 91). இவன் முன்னோர் தேவர்களை வழிபட்டு, விண்ணுலகிலிருந்து கரும்பினை இவ்வுலகிற்குக் கொண்டுவந்தனர் என்று கூறப்பட்டுள்ளது (புறம். 99). இவன் சேரர் குடியினைச் சார்ந்தவனாதலின், பனந்தோட்டினாலாகிய மாலையினை அணிந்திருந்தான் (புறம். 99); ஏழு மன்னர்களோடு போர் செய்து வென்றான். இவனது கோவலூர் வெற்றியைப் பரணர் பாராட்டியுள்ள செய்தியினை ஒளவையார் புகழ்ந்துள்ளார் (புறம். 99). குதிரை மலை இவனுக்குரியது. இவன் மகன் பொகுட்டெழினி எனப்படுவான். இப்பொகுட்டெழினியும் புலவர் போற்றும் பெருவீரனாக விளங்கினான் (புறம். 102). பெருஞ்சேரலிரும்பொறை பெரும் படையொடு சென்று தகடூரை முற்றுகையிட்டு அழித்து. அதிகமானையும் ஏனை இரு பெருவேந்தரையும் வென்றான் என்று பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்துப் பதிகம் கூறுகிறது. அதிகமான் என்று அப்பதிகம் குறிப்பிடுவது இந்த அதியமானையேயாகும். சேரமான் வரும்வரை அதியமான் தகடூர்க் கோட்டையின் உள்ளே இருந்த செய்தி, தொல்காப்பியப் புறத்திணை நூற்பா ஒன்றிற்கு நச்சினார்க்கினியர் எழுதிய குறிப்பாலும் அறிய முடிகிறது (தொல்.புறம். 7. நச்.), அதியமான், மார்பில் வேல்பட்டு மாய்ந்தபோது, ஔவையார் பெரிதும் இரங்கிக் கையறுநிலைச் செய்யுளொன்று பாடியுள்ளார். அதன்கண் இவனது பெருங்கொடையும் பெரு வீரமும் சிறப்பிக்கப்பட்டுள்ளன. ‘ஆசாரு எந்தையாண்டுளன் கொல்லோ? இனிப் பாடுநருமில்லை, பாடுநர்க்கு ஒன்று ஈகுநருமில்லை’ (புறம். 235) என்று ஏங்கியுரைக்கும் கூற்றில் ஒளவையார் எய்திய அவலத்தின் ஆழம் புலனாகிறது. இவனை ஒளவையார், பரணர், பெருஞ்சித்திரனார், பொன்முடியார் ஆகியோர் பாடியுள்ளனர்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 363)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5x3t84y9/
தமிழ்“அதியமான் நெடுமானஞ்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5x3t84y9/APA
Oliyon Research. (2026). அதியமான் நெடுமானஞ்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5x3t84y9/MLA
"அதியமான் நெடுமானஞ்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5x3t84y9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment