வான நெட்டாங்கு, புவிப் பரப்பு நெட்டாங்கு என நெட்டாங்கை (longitude) இரு வகைப் படுத்தலாம். வான நெட்டாங்கு. சூரியத் தோற்றப் பாதையின் (ecliptic) மேல் உள்ள மேட முற் புள்ளியிலிருந்து (first point of Aries) துருவத்தையும், விண் மீனையும் இணைக்கும் குத்து வட்டத்தின் அடி வரையிலுள்ள அளவு வான நெட்டாங்கு என்பதாகும். இது λ என்னும் எழுத்தினால், பொதுவாகக் குறிக்கப் படும். சூரியனின் ஆண்டு இயக்கத் திசையிலேயே வலஞ் சுழியாக (கிழக்காக) λ அளக்கப் படும். படத்தில் C,L சூரியனின் தோற்றப் பாதை; M,KSM என்னும் குத்து வட்டத்தின் அடி; τ மேட முதற்புள்ளி rM வான நெட்டாங்கின் அளவாகும். r, S,M மூன்றுமே நிலையானதால், நெட்டாங்கும் நிலையாக இருக்கும். புவிப் பரப்பு நெட்டாங்கு. புவியின் வட, தென் துருவங்கள் வழியாக, புவியின் நடு வரைக்குக் (terrestrial equator) குத்தாகச் செல்லும் பெரும் வட்டங்கள், நெட்டாங்கு வட்டங்கள் (circles of longitude) எனப் படும். புவியின் மேல் உள்ள ஓர் இடத்தின் வழியாகச் செல்லும் நெட்டாங்கு, அந்த இடத்தின் புவி உச்சி வட்டம் (terrestrial meridian) என்றும் குறிப்பிடப் படும். கிரீன்விச் நாட்டின் வழியாகச் செல்லும் நெட்டாங்கு 0° நெட்டாங்கு என்றும், அதற்குக் கிழக்கே 15°, 30°, 45°… என 180° வரையிலும், மேற்காக 15°, 30°, 45°, … 180° வரையிலும் குறிக்கப் பட்டிருக்கும் புவி கோள வடிவத்திலிருப்பதால், கிழக்கு, மேற்காகக் குறிக்கப் பட்டிருக்கும் 180° நெட்டாங்கு ஒரே நெட்டாங்கைக் குறிக்கிறது. புவி மேற்கிலிருந்து கிழக்காகத் தன் அச்சை ஒரு முறை சுற்ற எடுக்கும் நேரம் 24 மணி ஆகிறது. அதாவது 360° சுற்ற 24 மணி நேரமானால், ஒரு மணிக்கு 15° வீதம் புவி சுழல்கிறது. கிரீன்விச்சிலிருந்து கிழக்காக உள்ள இடங்களில் 15°க்கு ஒரு மணி வீதம் (1மணி). கிரீன்விச் மணியை விட முன்னதாகவும், மேற்கில், அதே அளவு பின்னதாகவும், நேரங் காட்டும். கப்பலிலோ, வான ஊர்தியிலோ பயணம் செய்பவர்களுக்கு, கிழக்காகச் சென்று 180° அடையும் போது, 12 மணி நேரம் முன்னதாகவும், மேற்காகச் சென்றால் 12 மணி நேரம் பின்னதாகவும் இருக்கும். எனவே, 180° நெட்டாங்கை அனைத்துலக நாட்கோடு (international date line) எனக் குறிப்பிட்டு, எப்பக்கத்திலிருந்து வந்தாலும், அக்கோட்டை அடையும் போது, நேரத்தை கிரீன்விச் நேரப் படித் திருத்திக் கொள்ள வேண்டும் என அனைத்து நாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்நெட்டாங்கு, இயற்கையாகவே நாடு, தீவு வழியாகச் செல்லாமல், பசுபிக் பெருங்கடல் வழியாக, ஓரிரு சிறு தீவுகள் வழியாக மட்டுமே செல்கிறது. கிரீன்விச் நாட்டிலிருந்து ஓரிடத்தின் நெட்டாங்குத் தொலைவினைக் கணக்கிட்டு, அதிலிருந்து அந்த இடத்தின் நியம நேரம் (Standard time) கணக்கிடப் படுகிறது. —பங்கஜம் கணேசன்