அனைத்து மனித சமுதாயங்களும் திருமணத்திற்கான விதிமுறைகளைக் கொண்டுள்ளன. ஏனெனில், சமுதாயத்திலுள்ள அனைத்துப் பெண்களும் புணர்ச்சிக்குரியவர்களாக ஏற்றுக் கொள்ளாத வரன்முறை ஒவ்வொரு பண்பாட்டிலும் காணப்படுகிறது. பால் உறவுத் தடைகள் பல மக்களிடையே பல்வேறுபட்ட உறவினர்களுக்கு விதிக்கப்படுகின்றன. எவ்வாறிருப்பினும் எல்லா மக்களும் ஏதாவதொரு முறையில் தகாப்புணர்ச்சித் (Incest) தடைகளை ஏற்றிருப்பர். இது பண்பாட்டில் பல அமைப்புகளை நெறிப்படுத்த உதவுகிறது. மக்கள் தம் வாழ்க்கைத் துணையைத் தாம் சார்ந்துள்ள இரத்தக் குழுவினருடன் அன்றி வேற்றுக் குழுவினரிடமிருந்து பெறுவது பெரும்பான்மைச் சமுதாயங்களில் காணப்படுகிறது. ஆனால், சில சமுதாயங்களில் மக்கள் தாம் சார்ந்துள்ள குழுக்குள் மணத் துணையை ஏற்பர். அதாவது, ஒரே மூதாதையரைக் கொண்டவர்கள் இரத்த உறவினர்கள் நெருக்கமான கால்வழி உறவினர்கள் ஆகியோருக்குள் மண உறவு கொள்ளுதல் உட்குழு மணமுறை (Inbreeding) எனப்படும். உட்குழு மணமுறையில் இரண்டு வகையுண்டு. ஒன்று, தேர்வுமுறையற்ற உட்குழு மணவுறவு (Random Inbreeding). இவ்வகை மணவுறவு புலியமைப்பில் மிகவும் தனித்துக் காணப்படும் சிறிய சமூகங்களில் நிகழ்கிறது. இவர்களின் சமூகத்தில் இரத்த உறவற்ற தகுதியான வேற்றுக் குழு மணத் துணை கிடைப்பதரிது. ஒவ்வொரு தலைமுறையிலும் உறவற்றவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்லும் தன்மையும் காணப்படும். ஆதலால், இவ்வகையான சமூகங்களில் ஏதாவதொரு துணையை ஏற்றுக்கொள்வர். கால்வழியினருடன் மிகவும் நெருக்கமுள்ள வாழ்க்கைத்துணை ஒரு குறிப்பிட்ட உறவினராக இருப்பதில்லை, பெற்றோரின் உடன்பிறந்தோரின் மக்கள் (First Cousin), அம்மக்களின் மக்கள் (Second Cousin) முதலான ஏதாவதொரு குறிப்பிட்ட உறவினரை மணக்காத குழுவினர், தேர்வு முறையற்ற உட்குழு மணவுறவினர் எனக் கூறப்படுவர். சில சமூகத்தினர் உறவினர்களுள் ஒரு குறிப்பிட்ட உறவினரையே திருமணத்திற்கு மிகவும் ஏற்புடையராகக் கருதுவர். இம்மணமுறைத் தேர்வு முறையுடைய உட்குழு மணமுறை (Nonrandom Inbreeding) ஆகும். சில சமூகத்தில் பெற்றோரின் உடன்பிறந்தார் மக்களை மட்டும் மணப்பது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட முறையாக உள்ளது. இம்முறை பெரும்பாலும் சொத்துரிமையையும் உடைமைகளையும் தத்தம் குடும்பத்திலிருந்து வேற்றுக் குடும்பத்திற்கு மாறாமலிருக்கச் செய்து கொள்ளப்படுகிறது. பண்டைய எகிப்து, அவாய் (Hawaii), இன்கா (Inca) ஆகிய அரச குடிகளிடையே உட்குழு மணமுறை காணப்பட்டது. இவர்கள் தவிர்த்துப் பென்சில்வேனியா (Pennsylvania), அமிசு (Amish) குடிகளிடையேயும் உட்குழு மணவுறவு காணப்பட்டது. இன்று இம்முறை சில ஆப்பிரிக்க, ஆசுத்திரேலிய பழங்குடிகளிடையேயும் காணப்படுகிறது. தமிழகத்தில் வாழும் பழநி மலைப் பழங்குடிகளிடையே பாட்டன் பேத்தியை மணக்கும் முறையும் குறிப்பிடத்தக்கது. முகமதியர்கள் தம் குடும்பச் சொத்தினையும் பிற உடைமைகளையும் தம் குடும்பத்தில் நிலைநிறுத்த உடன்பிறந்தாரின் மக்களை மணக்கின்றனர். எனினும், அனைத்துச் சமுதாயத்திலுமே தந்தை–மகள், தாய்–மகன், உடன்பிறந்தாள்–உடன்பிறந்தான் முதலோரிடையே மணவுறவு தடுக்கப்பட்டுள்ளது. உட்குழு மணவுறவு மரபுசார்ந்த விளைவுகளை மிகுதியாக ஏற்படுத்தக் கூடியது. ஒத்த பாலணுக்களையுடைய இருவருக்குத் தோன்றும் சந்ததியினரும் ஒத்த பாலணுக்களை உடையவராய்த் (Homozygosity) தோன்றுவர். தம் பெற்றோர் கொண்டிருந்த மரபணுக்களின் பெருந்தன்மையினை மக்களும் பெற மிகுதியான வாய்ப்புள்ளதால், ஒடுங்குதன்மையுடைய மரபுசார்ந்த கோளாறுகளான (Recessive Genetic Disorders) குள்ளத்தன்மை (Dwarfism), குறை உடற் பண்புகள் உடையவர்களாகவும் வலிமையற்றவர்களாகவும் மரபு வழியில் தன் இனத்திற்குத் தீங்கான பண்புகளை ஏற்றுள்ளவர்களாகவும் காணப்படுவர். திருமண உறவமைப்பை விவரிக்கும் பொருட்டு உட்குழு மணவுறவு தவிர்த்தல் (Inbreeding Avoidance) பற்றிய கோட்பாடு கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் தோன்றியது. இக்கோட்பாட்டினர் உட்குழு மணவுறவால் குறைப்பண்புகன் வளர்கின்றன எனச் சுட்டிக்காட்டினர். ஆனால், பிற்கால வல்லுநர்கள் இம்மண முறை சிறப்புப் பண்புகளையும் சிறப்பற்ற பண்புகளையும் உண்டாக்க வல்லது என இதனை ஆதரித்துப் பேசினர். இன்றைய மக்கள் தொகை மரபியல் (Population Genetics) ஆய்வுகள் உட்குழுமணவுறவு பெரும்பாலும் மனித இனத்திற்குத் தீங்கிழைக்கக் கூடியதாக உள்ளது என்ற முற்காலக் கோட்பாட்டாளரின் கருத்திற்கு உடன்பாடாக உள்ளது.