அகத்திய பண்டிதர்
akattiya paṇṭitar
அகத்தியர் என்னும் பெயர் கொண்ட ஒரு பிற்காலப் புலவர்.
அகத்தியர் என்னும் பெயர் கொண்ட ஒரு பிற்காலப் புலவர். இவர் ஊர், காலம் முதலியன பற்றிய விவரங்கள் தெரியவில்லை, தமிழில் அகத்தியர் என்னும் பெயரில் பலர் குறிக்கப் படுகின்றனர். தமிழிலுள்ள புலத்துறை ஒவ்வொன்றிலும் அகத்தியரை ஒரு முன்னவராகக் கூறும் மர- புண்டு. முதலிடைச் சங்கங்களில் இருந்து, முத்தமிழ் இலக்கணம் இயற்றியவர் ஒருவர்; தேவாரத்திரட்டு இயற்றியவர் ஒருவர்; ஆறெழுத்தந்தாதி எழுதிய முருகபத்தரான ஒருவர் என்று பலர் கூறப்படுகின்றனர். இவர் பொதியமலையில் பலகாலம் வாழ்ந்தவர் என்றும் கூறப்படுகிறார். அகத்தியர், பல அருஞ்செயல் புரிந்துள்ளார் என்று புராணங்கள் மொழிகின்றன. சித்தர்களுள் ஒருவர் அகத்தியர் பெயரில் இருந்துள்ளார். இவர்கள் எல்லோரையும் ஒருவராகவே கொண்டு, தமிழ் நூல்கள் சில குறிப்பிடுகின்றன. இலக்கியம், சமயம், புராணங்கள் ஆகியவற்றில் கூறப்படும் அகத்தியரையேயன்றி, யோகம், ஞானம், இரசவாதம், வைத்தியம், காயகற்பம், சோதிடம், பூசை, தீக்கை, ஆரூடம், வாகடம் முதலிய பல துறைகளில் அமைந்த பல நூல்களின் ஆசிரியராகக் கூறப்படும் அகத்தியரையும் ஒருவராகக் கொள்வது ஏற்புடையதன்று. இவர்கள் அனைவரும் வெவ்வேறு காலங்களில் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தவராகலாம். மருத்துவம் முதலிய துறைகளில் நூல்களை எழுதி அவற்றை அகத்தியர் செய்தார் என்று கூறும் வழக்கமும் பிற்காலத்தில் இருந்துள்ளது. அகத்தியர் பெயரில் 200-க்கும் மேலான நூல்கள் ஏடுகளில் உள்ளன. சென்னை, அரசாங்கக் கீழ்க்கலைக் கையெழுத்துச்சுவடி நூலகத்தில் 150-க்கும் மேலான சுவடிகள் உள்ளன.
அகத்திய பண்டிதர் என்பவர் இவ்வாறு வழங்கப் பெறும் பல்துறை நூல்களில் ஒன்றையோ, சிலவற்றையோ எழுதிய ஒரு புலவராவார், பண்டிதர் என்னுஞ்சொல் பொதுவாகப் புலமை சான்றவர் என்னும் பொருளதாயினும், பிற்காலத்தில் மருத்துவப் புலமை உடையவர்களைக் குறிக்கப் பொதுமக்கள் வழங்கும் பெயராக உள்ளது. இதனால் இவர் வைத்தியத்துறை வல்லவராகவும், அத்துறையில் நூல் இயற்றியவராகவும் இருக்கலாம். கி.கோ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 76)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5sv5qx33/
தமிழ்“அகத்திய பண்டிதர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5sv5qx33/APA
Oliyon Research. (2026). அகத்திய பண்டிதர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5sv5qx33/MLA
"அகத்திய பண்டிதர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5sv5qx33/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment