அந்தமான்–நிக்கோபார் தீவுகள்
antamāṉ–nikkōpār tīvukaḷ
இந்தியக் குடியரசின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும் (Union Territory).
இந்தியக் குடியரசின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும் (Union Territory). இத்தீவுகள் வங்கக் கடலில் ஏறத்தாழ 800 கி.மீ. தூரத்திற்கு வடக்கு–தெற்காகப் பரவிக் கிடக்கின்றன. அந்தமான் தீவுகளையும் நிக்கோபார் தீவுகளையும் பத்துப் பாகைக் கடற்சந்தி ஒன்று பிரிக்கிறது. இச்சந்தி, ஏறத்தாழ 150 கி.மீ. அகலமுள்ள நீர்ப்பரப்பாகும். இதன் வடக்கில் அந்தமான் தீவுகளும் தெற்கில் நிக்கோபார் தீவுகளும் உள்ளன. அந்தமான்–நிக்கோபார் தீவுகள் 6–14–ஆம் குறுக்குக் கோடுகளுக்கு இடையிலும் 92–94–ஆம் பாகை நெடுங்- கோடுகளுக்கிடையிலும் அமைந்துள்ளன. அந்தமான்–நிக்கோபார் தீவுகளின் மொத்தப் பரப்பு 8136 சதுரக் கி.மீ. இவற்றில், அந்தமான் தீவுகளின் பரப்பு 6,401 சதுரக் கி.மீ. நிக்கோபார் தீவுகளின் பரப்பு 1,645 சதுரக் கி.மீ. ஆகும். இத்தீவுக்கூட்டங்களில் மொத்தம் 293 தீவுகள் உள்ளன. அந்தமான் தீவுகளின் எண்ணிக்கை மட்டில் 204 ஆகும். இத்தீவுகள் கல்கத்தாவிலிருந்து 1255 கி.மீ. தெற்கிலும், சென்னையிலிருந்து 1,190 கி.மீ. கிழக்கிலும், பர்மாவின் நெகிராய்சு முனைக்கு (Cape Negrais) மேற்கிலும், ஏறத்தாழ 193 கி.மீ. அகலமும் 467 கி.மீ. நீளமும் கொண்டு பரந்து கிடக்கின்றன.
அந்தமான் - நிக்கோபார் தீவுகள்
அந்தமான் தீவினைப் பெரிய அந்தமான், சிறிய அந்தமான், சிறு தீவுகள் என்று மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். பெரிய அந்தமான், ஒரே தீவாகக் கருதப்பட்டாலும், இது குறுகிய கடல் நீரோடைகளால் வடக்கு அந்தமான், மத்திய அந்தமான், பரடாங்கு, தென் அந்தமான் என்று நான்கு தனித் தீவுகளாகப் பகுக்கப்படுகிறது. பெரிய அந்தமான், 256 கி.மீ. நீளமும் 32 கி.மீ. அகலமும் கொண்டதாகும். இதன் தெற்கில் அமைந்திருக்கும் சிறிய அந்தமான் 42 கி.மீ. நீளமும் 26 கி.மீ. அகலமும் உடைது.
அந்தமான் தீவுகளின் கடற்கரையில் சிறு சிறு கடற்கழிகளும் வளைகுடாக்களும் உள்ளமையால் இயற்கைத் துறைமுகங்கள் பல அங்கு உள்ளன. ஆண்டுக்கு எட்டு மாதங்கள் அங்கு மழைக்காலம். திசம்பர் முதல் மார்ச்சு முடிய நான்கு மாதங்கள் மழை பொழியவல்லை. நில நடுக்கோட்டுக்கு மிக அண்மையில் வடக்கே 10-14-ஆம் பாகைக் குறுக்குக் கோடுகளுக்கிடையில் அமைந்துள்ளமையால், இத்தீவுகளில் வெப்பம் மிகுதி. எனினும், கடல் சூழ்ந்துள்ளதால் இவ்வெப்பம் ஓரளவு தணிகிறது.
வரலாறு
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உரோமானிய நிலநூலாசிரியர் தாலமி தமது முதல் உலகப் படத்தில் இத்தீவுகளை நற்பேற்றுத் தீவுகள் (Lands of Good Fortune) என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கு வந்த சீனப் பயணியான இத்சீங் (Itsing) என்பவர் கி.பி. 672 ஆம் ஆண்டளவில் அந்தமான் தீவுகளின் வழியாகவே வந்தார் எனத் தெரிகிறது. பின்னர்ப் பல அரபு நாட்டுப் பயணிகள் இத்தீவுகளைக் கண்டு குறிப்புகள் எழுதியுள்ளனர். இராசேந்திர சோழனது கடற்படை, கடாரப் படையெடுப்பு நிகழ்த்தியபோது, நக்கவாரம் (நிக்கோபார்) வழியாகச் சென்றது. வணிகக் கப்பல்களும் போர்க் கப்பல்களும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அடிக்கடி சென்று வந்தன. 1286–இல் மார்க்கோபோலோவும், 1322-இல் ஒடோரிக் என்ற கிறித்தவத் துறவியும், 1430–இல் நிக்கோலோ காண்டியும் இத்தீவுகளுக்கு வருகை தந்தனர். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியத் தலைமை ஆளுநரான (Viceroy) காரன்வாலிசுப் பெருமகனாரின் ஆணையின்படி கேப்டன் ஆர்ச்சிபால்டு பிளேர் என்பவர் அந்தமான் சென்று, தென்கிழக்குக் கரையில் குற்றவாளிகள் குடியிருப்பு ஒன்றை 1789–இல் நிறுவினார். அப்போது அது போர்ட்டு காரன்வாலிசு எனப் பெயரிடப்பட்டது. அக்குடியிருப்பு, சில ஆண்டுகளில் பெரிய அந்தமானின் வடகிழக்குப் பகுதிக்கு மாற்றப்பட்டது. தென்கிழக்கில் 1858–இல் ஒரு புதிய குடியிருப்பை ஆங்கிலேயர் நிறுவினர். அதற்குப் போர்ட்டு பினேர் (Port Blaire) எனப் பெயரிட்டனர். முதல் இந்திய விடுதலைப் போரில் சிறை பிடிக்கப்பட்ட இந்தியர்களில் பலரைக் கொன்றபின், எஞ்சியவர்களை இங்குத்தான் ஆங்கிலேய அரசு குடியமர்த்திற்று. அவர்களுள் மிகப் பலர் அத்தீவுகளின் மழைப் பகுதியாகிய நிலப்பரப்பில் பல்வேறு கொள்ளை நோய்களுக்கு ஆளாகி மடிந்தனர். உயிருடன் இருந்த ஒரு முகமதியக் குற்றவாளி 1872–இல் போர்ட்டு பிளேருக்கு வந்த தலைமை ஆளுநர் மேயோவைக் கொலை செய்தான். 1866–இல் தொடங்கி 1910–இல் கட்டிமுடிக்கப்பட்ட ‘செல்லுலர்’ சிறைச் சாலை என்ற கொடிய சிறைச்சாலையில்தான் விடுதலைப் போராட்ட வீரர்கள் (வாசுதேவ பல்வந்த பட்கே, வீர சாவர்க்கர் போன்றோர்) 1938 வரை அடைக்கப்பட்டுக் கிடந்தனர். 1941–இல் நிலநடுக்கத்தாலும், சப்பானியரின் குண்டு வீச்சினாலும் இச்சிறைக்கூடம் சேதமுற்றது. இன்றும் இச்சிறைக்கூடம் உள்ளது.
சப்பானியர் 1942 மார்ச்சு 23–இல் இத்தீவுகளைக் கைப்பற்றினர். அவர்களின் கொடுமைகள் காரணமாக, அவற்றின் மக்கள் தொகை 34,000 ஆக இருந்தது 18,000 ஆகக் குறைந்தது. சுபாசு சந்திர போசின் இந்தியத்தேசியப் படையின் தளமாகவும் அந்தமான் சிறிது காலம் இருந்தது. 1945 அக்டோபர் 8-இல் அந்தமான் தீவுகளை ஆங்கில ஆட்சிக்குட்பட்ட இந்திய அரசு மீண்டும் பெற்றது. அன்று முதல் குற்றவாளிகள் குடியிருப்புக் கலைக்கப்பட்டுச் சில கைதிகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர்.
அந்தமான் பழங்குடிகள்
அந்தமான் தீவின் மக்கள், வளர்ச்சியற்ற மேம்படாத பண்பாட்டைக் கொண்ட முதுபழங்குடியாகவும், தென்கிழக்கு ஆசியாவின் நீக்கிரோ இனப் பேராளர்களில் தொன்மையானவர்களாகவும் திகழ்கின்றனர். இத்தனிமைத் தீவினை எவ்வாறு இவர்கள் தாயகமாகக் கொண்டனர் என்பதும் எங்கிருந்து வந்தனர் என்பதும் ஏன் உலகப் பண்பாட்டில் மிகவும் குன்றிய நிலையை ஏற்றுள்ளனர் என்பதும் மானிடவியலாளரால் ஆராயப்பட்டு வருகின்றன.
அந்தமானின் நான்கு பெரும் முதுபழங்குடிகளாகப் பெரிய அந்தமானியர், சாரவா, ஓஞ்சி, சென்டினல்கள் காணப்பட்டாலும் இவர்களிடையே கிளைக் குழுக்களும் காணப்படுகின்றன. பெரிய அந்தமானியர் தாங்கள் பேசும் மொழி அல்லது கிளை மொழியின் அடிப்படையில் வடபகுதிக் குழுவினர், தென்பகுதிக் குழுவினர் எனப் பாகுபடுகின்றனர். வடபகுதிக் குழுவினர் அகா–காரி, அகா–கோரோ, அகா–டோ, அகா–சேரு என நான்கு குழுக்களாகவும், தென்பகுதிக் குழுவினர் அகா–கேடே, அகா–கோல், அகா–பீ, ஓகோ–சீவாசு, அ–புசீக்வார், அகார்–பாலே என ஆறு குழுக்களாகவும் காணப்படுகின்றனர். தென் அந்தமானின் மேற்குப் பகுதியில் சரவாக்களும், வட சென்டினல் தீவில் சென்டினல்களும், சிறிய அந்தமானில் ஓஞ்சி மக்களும் வாழ்கின்றனர். முற்கால இன ஒப்பாய்வியல் வழக்கில் சிறிய அந்தமானியருக்கு (ஓஞ்சி) மின்கோபி என்ற பெயரும் இருந்தது.
நீக்கிரோ இனத்தின் முக்கியமான பேராளராகத் திகழும் அந்தமானியர் கருமை நிறத் தோலும் அடர்ந்து சுருண்ட தலை முடியும் ஏறத்தாழ 145 செ.மீ. உயரமும் உள்ள உடல் அமைப்பைக் கொண்டுள்ளனர். ஓஞ்சி பெண்களின் இடைப்பகுதி மிகுந்த வளர்ச்சி பெற்றிருப்பதால் நெடுந்தூரம் செல்லும்பொழுது குழந்தைகளை இடையின்மேல் நிற்க வைத்தே கொண்டு செல்கின்றனர்.
அந்தமான் ஓஞ்சி இனப் பெண்கள்
இத்தீவின் அனைத்துப் பிரிவுகளின் மொத்த மக்கள்தொகை 1981-ஆம் ஆண்டுக் கணக்குப்படி 1,88,254 ஆகும். ஆனால் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நான்கு முதுபழங்குடியினரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனை அடுத்த பக்கத்திலுள்ள பட்டியலில் காணலாம்.
பெரிய அந்தமானில் அதிக நிலப்பரப்பும் காட்டுப் பகுதியும் இருப்பதால் பெரும்பாலான சாரவாப் பழங்குடியினர் காட்டுவாசிகளாகவும், கடலோரச் சாரவாக்கள் கரையோரவாசிகளாகவும் வாழ்கின்றனர். சிறிய அந்தமானின் பெரும்பகுதி நிலப்பரப்பு, கடலோரத்தைச் சார்ந்திருப்பதால் ஓஞ்சியினர் கரையோரவாசிகள் என்றழைக்கப்படுகின்றனர்.
கரையோரவாசிகளின் பொருளாதார அமைப்பு மீன்பிடிக்கும் தொழிலைச் சார்ந்ததாகும். பெண்கள் கடலோரத்தில் வலை கொண்டும் ஆண்கள் சிறுபடகில் சென்றும் கடலில் மீன்பிடிப்பது இவர்களிடையே காணப்படும் பொருளாதாரச் செயல்முறைப் பாகுபாடாகும்.
காட்டுவாசிகளின் முதன்மைத் தொழில் வேட்டையாடுதலும் உணவு சேகரித்தலுமாகும். இவர்கள் வேட்டை முறையை மூன்று கால நிலைகளாக அந்தமான் முதுபழங்குடிகளின் மக்கள் தொகை
::முதுபழங்குடி ஆண்டு ::{|
அமைத்து, ஒரு சில நாள் வேட்டையைத் தங்கள் நிரந்தரக் குடியிருப்புப் பகுதியிலிருந்தும், ஓரிரு வார வேட்டையை வேட்டைத் தளத்திற்கு அருகில் சாங்-தரங்கா என்ற எளிமையான குடிசையை வாழ்விடமாகக் கொண்டும், ஓரிருமாத வேட்டையைச் சாங்-தொர்ங்கா என்ற இடைக்காலக் குடிசையைத் தங்குமிடமாகக் கொண்டும் மேற்கொள்கின்றனர். இவர்களின் அன்பளிப்புப் பரிமாற்றம் சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது. இவர்களுக்கு மிகவும் பிடித்தமானது டென்டாலியம் கிளிஞ்சல் (Dentalium Octogonum) ஆகும்.
அந்தமான் தீவினர் தங்கள் குடியிருப்புப் பகுதியில் பெரிய சமூகக் குடில்களை அமைத்துப் பொதுச் சமையற் கூடமாகவும், நடனமாடும் இடமாகவும் கைம்பெண்கள், ஆண், பெண், தங்கும் இளையவர் கூடமாகவும் பயன்படுத்துகின்றனர். வீட்டில் பெண்களும் சமூகக் குடில்களில் ஆண்களும் சமைக்கின்றனர். அந்தமானியருக்கு நெருப்பு உண்டுபண்ணத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தீவினரிடையே பூப்புச்சடங்கு முறை கடினமானதாகும். பெண்கள் பூப்பெய்தியவுடன் கடலில் இரண்டு மணி நேரம் நீராடியபின் மூன்று நாள்களுக்குத் தனிக் குடிலில் அமர்த்தப்படுகின்றனர். பின் ஒரு மாத காலத்திற்கு நாள்தோறும் காலையில் நீராடிய பின்னரே அன்றாடச் செயல்களில் ஈடுபட வைக்கின்றனர். ஆண்களுக்கு உடலின் பெரும் பகுதியில் வெட்டுக் கோடுகளை வரைகின்றனர். பெண்களுக்குப் பொதுவாக நெற்றியில் மட்டுமே இவ்விதக் கோடுகளை வரைகின்றனர்.
திருமணத்திற்கு முன் பாகுபாடில்லாக் கலவி காணப்பட்டாலும் குருதி உறவுடையோருடன் கலவியை ஏற்பதில்லை. ஒருதார மணத்தையும் நடுவணுக் குடும்பத்தையும் ஏற்றுள்ளனர். குழந்தை பிறப்பதற்கு முன்னரே பெயர் சூட்டும் முறை காணப்படுவதால் இரு பாலாரும் பொதுவான பெயர்களையே கொண்டுள்ளனர்.
அந்தமான் தீவினர் தங்கள் திறந்த மேனியைப் பல வண்ணப் பூச்சுகளால் அணிசெய்து கொள்கின்றனர். அன்றாட வாழ்வில் ‘ஒது’ (Odu) என்னும் சாதாரணக் களிமண்ணாலும் ‘தொல் ஒது’ (Tol-Odu) என்ற வெண்மைக் களிமண்ணாலும் அணிசெய்து கொள்கின்றனர். விழாக்காலங்களில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் சிவப்பு ஆக்சைடு ஆகியவற்றை எரித்துக் கிடைக்கும் ‘கெயிப்’ (Keyib) என்னும் சிவந்த வண்ணத்தைக்கொண்டு அணிசெய்து கொள்கின்றனர்.
அந்தமான் ஓஞ்சி இளைஞன்
அந்தமானியரிடம் ஒருங்கிணைந்த கட்டுக்கோப்பான ஆட்சியமைப்பு இல்லையாதலால் சமுதாயச் செயற்பாடுகளை அக்குழுவினரின் முதியவர்கள் கண்காணிக்கின்றனர். இக்குழுவின் மூத்த ஆடவரை ‘மய்யா’ (Maia) அல்லது ‘மய்’ (Mai) என்னும் மதிப்பு விளியாலும் மூத்த பெண்டிரை (Mimi) என்னும் மதிப்பு விளியாலும் அழைக்கின்றனர். வேட்டைத்திறன், போர்த் திறன், கொடை உள்ளம், அன்புள்ளம் கொண்ட இளையவர்களுக்கு முதியவர்களைப் போன்றே மதிப்பளித்துச் சமுதாயச் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் பொறுப்பையும் அளிக்கின்றனர்.
ஆவியுலகக் கோட்பாட்டுச் சமயத்தை இத்தீவினர் கொண்டுள்ளனர். காடு, புயல், கடல் ஆகியவைகளுக்கு ஆவி உண்டென்று நம்புகின்றனர். நில நடுக்கம் ஏற்படுவதற்கு முன்னோர்களின் ஆவியே காரணம் என்று நம்புவதால், முன்னோர் வழிபாடும் இவர்களிடையே காணப்படுகிறது. இயற்கைக்கப்பாற்பட்ட ஆற்றலுடையோர், இச்சமுதாயத்தில் சிறப்பிடம் வகிக்கின்றனர்.
இறந்தவர்களுக்குச் செய்யும் இறுதிச் சடங்குகளில் இருவித வழக்குகன் உள்ளன. இறந்தவர்களுடன் அவர்கள் பயன்படுத்திய அம்பு, வில் போன்றவற்றை வைத்துப் புதைகுழியில் இடுவர்; அல்லது பைகசு லேசிபரா (Ficus laccifera) மரத்தினால் கட்டப்பட்ட மேடைமீது இறந்தவரின் உடலை வைத்துக் கிளிஞ்சலில் தாய்ப்பாலீட்டுச் சுடுமிடத்திற்குக் கீழே புதைப்பர். இவ்விடத்தைத் துக்ககாலமாக மூன்று மாதம் வரை காப்பர். உடல் அழுகியவுடன் எலும்புகளை இறந்தவரின் மனைவி தோண்டி எடுத்துக் கடலில் கழுவி வண்ணக் களிமண்ணால் அணிசெய்து புதைப்பாள், குறிப்பிட்ட எலும்புத்துண்டுகளைப் புதைத்து விடாமல் தாங்கள் நோயுறும் காலத்தில் அணிந்து கொள்வர்.
மேன், வித்தியார்த்தி, பவுமிக்கு முதலான மானிடவியலாரின் அண்மைக்கால ஆய்வுகளின்படி, 10 முது பழங்குடிகளாக இருந்த பெரிய அந்தமானியர், இப்பொழுது பல்வேறு கலப்பினத்தவராக உள்ளனர். தனித்தனி மொழி அல்லது கிளை மொழியைக் கொண்டிருந்த இவர்கள், இனம், மொழி, பண்பாடு ஆகிய அனைத்துக் கூறுகளிலும் கலந்து நீக்கிரிட்டோ இனத் தனிப் பண்புகளை இழந்து வருகின்றனர் என்றும், ‘செரு’ (Jeru) என்னும் கிளை மொழியையே இவர்கள் பேசுகின்றனர் என்றும் தெரிகிறது. வேட்டையாடுதலும் உணவுப் பொருள் சேகரித்தலும் ஆகிய தொன்மை நிலையினைக் கொண்ட அனைத்து மனிதக் குழுக்களிலும் குறைந்த இனப்பெருக்கத் திறனும், அதிகக் குழந்தைச் சாவும் காணப்படுவதால், அக்குழுக்களின் எண்ணிக்கை குறைய நேரிடும் என்ற பொது நியதிக்கேற்ப, அந்தமான் தீவினரும் மேற்கண்ட குறைந்த மக்கள்தொகையைக் கொண்டுள்ளவர்.
நிக்கோபார் பழங்குடிகள்
நிக்கோபார் பகுதியில் பத்தொன்பது தீவுகள் உள்ளன. இவை வங்காளக்குடாக்கடலின் தென் கோடியில் வடக்கு நில நேர்க்கோட்டில் ஆறாவதற்கும் பத்தாவதற்கும் இடையிலும், கிழக்கு நிரைகோட்டில், 92° 40–க்கும் 94°-க்கும் இடையிலும் இருக்கின்றன. இப்பத்தொன்பது தீவுகளுள், பன்னிரண்டு தீவுகளிலேயே மக்கள் வாழுகின்றனர். இத்தீவுகளில் நிக்கோபாரி, சோம்பென் ஆகிய இரு பழங்குடிகளே வாழ்கின்றனர். கார் நிக்கோபார் என்னும் வடகோடித் தீவின் நான்கில் மூன்று பகுதியில் நிக்கோபாரிகள் வாழ்கின்றனர். இங்கே பிக்லபாடி என்னும் சிற்றூர் உள்ளது. இவ்வூரே, தம் மூதாதையர்களின் பிறப்பிடம் என நிக்கோபாரிகள் எண்ணுகின்றனர். தீவின் நாட்டாண்மைக்காரன் இந்த ஊரைச் சேர்ந்தவனாகவே இருப்பான். தீவின் சமூக நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்த ஊரிலேயே நிகழும்.
நிக்கோபாரிகளுடன், ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே, கிறித்தவத் தொண்டர்கள் தொடர்பு கொண்டு அவர்களை நாகரிகப்படுத்தினர். 1895-இல், இங்கே வந்து சேர்ந்த தமிழ் நாட்டுக் கிறித்தவப் பாதிரியார் வேதப்பன் சாலமனும், அவர்தம் மனைவியும் பல தொண்டுகளைச் செய்தனர். பேச்சு மொழியாக மட்டும் இருந்த நிக்கோபாரி மொழிக்கு இரிச்சர்டுசன் என்ற பாதிரியார் உரோமன் எழுத்துகளைக் கொண்டு முதன்முதல் எழுத்துருவம் அமைத்துக் கொடுத்தார். ‘ழகரம்’ என்ற வளைநா ஒலி, இம்மக்களிடம் உள்ளது.
அந்தமான் நிக்கோபார் பழங்குடிகளிலேயே, நிக்கோபாரிகளில் பலர், நகர்ப் பண்பாட்டை ஏற்றுக் கொண்டு வருகின்றனர்; கல்விகற்றுப் பொதுவாழ்வில் கலந்து சிறந்து வாழ்கின்றனர்.
சோம்பென்
பெரிய நிக்கோபாரில் வாழும் சோம்பென் பழங்குடியினர், நிக்கோபார் மக்களை விடச் சிறிதே உயரமானவர்கள். மூக்கும் தாடையும் அவர்களைவிட எடுப்பாக அமையப்பெற்றவர்கள்.
சோம்பென் மக்களைப் பற்றி விரிவான செய்திகள் கிடைக்கவில்லை. தேன்திரட்டுவது இவர்களது முதன்மைத் தொழில், பரண் கட்டி அதன்மேல் வீடுகளை அமைத்து வாழ்கின்றனர். சாரவாக்களைப் போலப் பிறமக்களின் வருகையைச் சோம்பென்களும் வெறுக்கின்றனர்.
நிக்கோபாரிகளும் சோம்பென்களும் பிற அந்தமான் தீவுப் பழங்குடிகளும் பேரளவு நிர்வாண மக்களாகவே வாழ்ந்து வந்தனர். எனவேதான், பிற்- காலச் சோழர்களின் வெற்றியைப் பேசும் கல்வெட்டுகள், ‘நக்கவாரம்’ என்று இப்பகுதியைக் குறிப்பிடுகின்றன. “தேனக்க வார்பொழில் மானக்கவாரம்” என்பது, முதல் இராசேந்திர சோழனின் (1012–1044) மெய்க்கீர்த்தித் தொடராகும். மணிமேகலை ‘நக்கசாரணர்நாகர் வாழ்மலை’ (ஆதிரை பிச்சையிட்ட காதை–15) என்று குறிப்பிடும் பகுதியும் இதுவே ஆகலாம். நக்கம் என்றால் அம்மணம் என்று பொருள், இங்கு வாழும் மக்கள், பெரும்பாலோர் அண்மைக்காலம் வரை அம்மணமாகவே வாழ்ந்தவராவர். ஒருசில மாற்றங்கள் அண்மைக் காலத்தில்தான் இவர்களிடத்து நிகழத் தொடங்கியுள்ளன.
இன்றைய நிலைமை
குற்றவாளிகளை ஆயிரக்கணக்கில் கொண்டுவந்து குடியமர்த்தியதால் இங்கு இந்தியர்களின் எண்ணிக்கை பெருகியது. இவர்களில் பத்தானியர், பஞ்சாபியர், சிந்தியர், வங்காளியர், தமிழர், தெலுங்கர், மலையாளிகள், மராட்டியர் முதலிய பலரும் இருந்தனர். குறிப்பாக, 1952க்குப் பின் இந்தியாவிலிருந்து அங்குச் சென்று குடியமர்த்தப்பட்டோரின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகியுள்ளது.
இன்று வங்காளம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளைப் பேசுவோரே பெருந்தொகையினர் ஆவர். அவர்கள், தமக்குள் தாய்மொழி பேசினும் இந்தியையே பொது மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் கொண்டுள்ளார்கள். எனினும் தாய்மொழிப் பள்ளிகள் அங்கு நிறைய உள்ளன. இந்து, முசுலிம், கிறித்தவர் போன்ற பாகுபாட்டு உணர்வு அவர்களிடையே மிகவும் குறைவு. எனவே, கலப்புத் திருமணங்கள் அங்கு நடக்கின்றன. இங்குள்ள தமிழர், முருகனுக்கும் சிவனுக்கும் கோயில்கள் கட்டியுள்ளனர். பொங்கல் போன்ற திருவிழாக்கள், தீ மிதித்து வழிபடுதல், சூரிய வணக்கம் முதலியன சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
இங்குத் தென்னை, கமுகு மரங்கள், நெல், பருப்பு வகைகள், கரும்பு, ரப்பர், எண்ணெய்ப்பனை, காய்கறிகள் முதலியன பயிராகின்றன. எனினும், விளைநிலம் குறைவாக இருப்பதால், உணவுப் பொருள்கள் பெரும்பாலும் இந்தியாவிலிருந்தே பெறப்படுகின்றன. மரம் அறுத்தல், ஒட்டுப்பலகை (Ply wood) செய்தல், தீக்குச்சி செய்தல் போன்ற மரத்தொழில்கள் இங்கு நடைபெறுகின்றன. உயர்தர மரங்கள் பல இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. மீன் ஏற்றுமதியும் மிகுதி.
ஆட்சி முறை
அந்தமான் நிக்கோபார் தீவுகள் விடுதலைக்குப்பின் ‘டி’ வகை மாநிலமாக இருந்தன. 1958 நவம்பரில் இத்தீவுகள் இந்தியக் குடியரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதியாக ஆக்கப்பட்டன. இவற்றின் தலைவர், துணை ஆளுநர் (Lieutenant Governor) எனப்படுவார். இவரை இந்தியக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். இத்தீவுகளுக்கென தனிச் சட்டமன்றம் இல்லை. எனவே அமைச்சரவையும் இல்லை. தில்லியிலுள்ள நாடாளுமன்றத்தில் இப்பகுதிக்கு ஓர் உறுப்பினர் உள்ளார். துணை ஆளுநருக்கு உதவ ஆலோசனைக் குழு ஒன்று உண்டு. இதில் அந்தமான் நிக்கோபார் நாடாளுமன்ற உறுப்பினரும் வேறு நால்வரும் உள்ளனர்.
1958–இல் போர்ட்டு பிளேர் நகராட்சி அமைக்கப்பட்டு, அதற்கான தேர்தல் நடைபெற்றது. அந்நகராட்சி மன்றத்தில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் அறுவரும் துணை ஆளுநரால் நியமிக்கப்படும் உறுப்பினர் மூவருமாக மொத்தம் ஒன்பது பேர் உள்ளனர். மத்திய அரசின் உள்நாட்டு அமைச்சருக்கு இத்தீவுகளின் செயல்முறை பற்றி ஆலோசனை கூற, 1961–ஆம் ஆண்டு முதல், ஒரு குழு இயங்கி வருகிறது. இதில் துணை ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர், போர்ட்டு பிளேர் நகராட்சியின் துணைத் தலைவர், மத்திய அரசால் நியமிக்கப்படும் ஐவர் ஆகியோர் உறுப்பினராக உள்ளனர், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தலைமை ஆணையாளர் ஆட்சி மாறி 1982–ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 11–ஆம் நாள் துணை ஆளுநர் ஆட்சி தொடங்கியது. துணை ஆளுநரின் கீழ் ஓரளவு மக்கள் பேராளரும் பங்கு கொள்ளும் ‘கருத்துரை மன்றம்’ உருவாக்கப்பட்டது. போர்ட்டு பிளேரில் ஒரு வானொலி நிலையமும் உண்டு; இந்தி, வங்காளம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒலிபரப்புகள் நிகழ்கின்றன.
இத்தீவுகளின் மக்களுக்கென அரசு ஒரு கலைக் கல்லூரியை நடத்துகிறது; பல பள்ளிகளையும் நிறுவியுள்ளது. இந்தியா முழுவதிலும் கற்றோரின் விழுக்காடு 39.17 ஆகும். ஆனால், அந்தமான் நிக்கோபாரிலோ இது 51.27, ஆண்களில் படித்தவர்கள் விழுக்காடு 58.44; பெண்களில் 41.85. இந்திய நாட்டிலேயே மக்கள் நெருக்கம் குறைவான பகுதி இத்தீவுக் கூட்டமே. ஒரு சதுரக்கிலோ மீட்டர் பரப்பில் 23 பேர் வாழ்கின்றனர். கல்கத்தாவிலிருந்து விமானங்களும், சென்னையிலிருந்தும் கல்கத்தாவிலிருந்தும் கப்பல்களும் போர்ட்டு பிளேருக்குச் செல்கின்றன.
Mathur, L.P., “History of the Andaman and Nicobar Islands”, Sterling Publications, Delhi, 1968.
Portman, M.L., “A History of our Relations with the Andamanese”, Vol. II, Goa Privating Press, Calcutta, 1899. Probhat Kumar, “Land and People of the Andamans: A Geographical and Social–Economic Study”, Post Graduate Book Mart, Calcutta, 1962.
Radcliffe–Brown, A.R., “The Andaman Islanders”, Free Press, New York, 1964.
Colonel Hodson, T.C., “The Primitive Culture of India”, The Royal Asiatic Society, London, 1922.
Edward Horace Man., “Aboriginal Inhabitants of the Andaman Islands”, Sanskaran Prakashak, Delhi, 1883.
Andaman and Nicobar Islands A Glance Statostoca; Bureau, Andaman and Nicobar Administration, Port Blair, 1981.
Mathur G.K., Nicobar Islands (Tamil), National Book Trust, New Delhi-16, 1974.
Lidio Cipriani-The Andaman Islanders, Weidenfeld and Nicolson 20, New Bond Street, London, W.1., 1966.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 367)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5qcs3ckj/
தமிழ்“அந்தமான்–நிக்கோபார் தீவுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5qcs3ckj/APA
Oliyon Research. (2026). அந்தமான்–நிக்கோபார் தீவுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5qcs3ckj/MLA
"அந்தமான்–நிக்கோபார் தீவுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5qcs3ckj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment