இல்லுறை தெய்வம்
illuṟai teyvam
மாந்தர்தம் அகவாழ்வுச் சிறப்பிற்கு உரியவர் மகளிர்; புறவாழ்வுப் புகழுக்கு உரியவர் ஆடவர்.
மாந்தர்தம் அகவாழ்வுச் சிறப்பிற்கு உரியவர் மகளிர்; புறவாழ்வுப் புகழுக்கு உரியவர் ஆடவர். புறவாழ்வில் வீரம் காட்டிப் புகழுடம்பு அடைந்தவர்க்கு நடுகல் நட்டனர். கணவரைத் தெய்வமாகக் கொண்ட மனைவியர் நடுகல்லில் தம் கணவன்மார் தெய்வமாக உறைவதாகக் கொண்டு வழிப்பட்டனர். அன்னார் கல்லுறை தெய்வமாயினர், அகவாழ்வில் இல்லற மாண்புகளிற் சிறந்து, கணவர் இறப்பதற்கு முன் இறந்த மங்கல மடந்தையர் வீடுகளில் தெய்வங்களாகப் போற்றப்பட்டனர். அன்னார் இல்லுறை தெய்வங்களாயினர்.
செல்வ வளமுள்ள இல்லத்தில் செல்வத்திற்குரிய திருமகளும், கல்வியும் கலையும் நிலவும் இல்லத்தில் கலைமகளும் உறைவர் என்பது மரபு. இத்தெய்வங்கள் கோவிலில் உறைவதோடு இல்லுறை தெய்வங்களுமாயின.
இல்லுறை தெய்வங்கள் பெரும்பாலும் பெண் பாலாக அமைந்தன. இவை இல்லத்தையும் இல்லத்தாரையும் தீங்கின்றிக் காக்கும்; துன்பக் காலத்தில் துணை நிற்கும்; தோன்றாத் துணயாகும்; நலமும் வளமும் அருளும் என நம்பினர். சீவகனைப் பிரிந்து துன்புற்ற கேமசரி என்பாளை, ‘இல்லுறை தெய்வம் நோக்கி இரங்கிநின் றுரைக்கும்’ (சீவக. 1527) இல்லுறை தெய்வம் ஆறுதல் கூறிப் பேசியதாகப் பாடப்பட்டுள்ளது. அவள் வண்டுகளைப் பார்த்து. ‘இறந்துபடுவேனது துயரந்தீரும்படி என் மனைதன்னுள் தெய்வ மாவீராக’ (சீவக. 1531 உரை) என்றாளாம். இவை காப்பியப் பாங்கில் கூறப்பட்டவை.
பொதுவாகத் துன்பம் தீரவும், வளமும் நலமும் பெருகவும், சிறப்பாக இரவுப் பொழுது இடரின்றி இன்பமாகவும் இல்லுறை தெய்வங்களைப் போற்றி வழிபட்டனர் என அறிகிறோம். இவ்வழிபாடு நாள் வழிபாடாகவும், அவ்வக் காலங்களில் சிறப்பு வழிபாடாகவும் நிகழ்ந்தப்பட்டது
இவ்வழிபாட்டை வீட்டின் அகத்தே அவ்வல்லில்லத்து மங்கல மகளிர் நிகழ்த்துவர். அந்திப் பொழுதில் ‘அரும்பவிழ் முல்லை நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த மாலை மணிவிளக்கங்காட்டி’ (சிலம்பு. 9:3) என்று இளங்கோவடிகள் பாட, அடியார்க்கு நல்லார், ‘முல்லையினது ஒளிமலரை நெல்லோடே தூவி இல்லுறை தெய்வத்தை வணங்கி மாணிக்க விளக்கை மைவிளக்கோடே எடுத்து’ என்று விளக்கியபடி இல்லுறை தெய்வத்திற்காக முல்லை மலருடன் நெல்லைக் கலந்து தூவி, விளக்கேற்றி வழிபட்டதை அறிகிறோம். ‘மனைக்கு விளக்காயினள் மன்ற’ (ஜங். 405:2) என்றபடி மடவாரை மனைக்கு விளக்கமாகக் கொள்வர். எனவே, இல்லுறை தெய்வத்தின் சின்னமாக விளக்கு கொள்ளப்பட்டது. வளத்தின் அறிகுறியாக நெல்லும், கற்பின் அறிகுறியாக முல்லையும் போற்றிப் பொருள்களாகக் கொள்ளப்பட்டன.
குடும்ப இல்லங்களில் மட்டுமன்றி, வணிக இல்லங்களிலும் இல்லுறை தெய்வ வழிபாடு இவ்வாறு நிகழ்த்தப்பட்டதை நெடுநல்வாடை (40–44) அறிவிக்கிறது. செல்வவளங்கொண்ட வணிக இல்லங்களைத் திருமகள் இருக்கையாகக் கொண்டு இவ்வழிபாடு நிகழ்த்தப்பட்டது.
சிறப்பு வழிபாடு பின்வருமாறு நடந்தது. இல்லத்தில் இல்லுறை தெய்வத்திற்கென அமைந்த அறையிடத்தே முன்னர் வழிபட்டுச் சிதறிக் கிடந்த பூந்துகள்களைத் துடைத்துப் போக்கினர். ‘மங்கல வெள்ளை’ எனப்படும் சந்தனத்தால் தரையை மெழுகினர். பூப்பலி செய்து வழிபட்டனர் (சீவக. 1477). இவ்வாறாக இல்லுறை தெய்வங் கொள்ளு- வதும், இல்லுறை தெய்வ வழிபாடும் பண்டைக் காலத்தில் நடைமுறையில் இருந்தமையை இலக்கியங்கள் அறிவிக்கின்றன. காலப்போக்கில் இந்நடைமுறைகள் வேறுபட்டாலும் வழிபாடு மரபாக நிலைத்தது. இக்காலத்தில் அவை பண்டைப் பாங்கின் நிழலாட்டமாக நிகழ்கின்றன; அருகியே நிகழ்கின்றன.
ஒவ்வொரு இல்லத்திலும் சாமி அறை என்றோர் அறை உண்டு. அங்குக் கிழக்குப் பார்வையான சுவரின் அடிப்பக்கத்தை மஞ்சனால் பூசி மெழுகுவர். தரை ஆவின் சாணத்தால் மெழுகப்படும். அந்திப் போதில் அங்கு விளக்கேற்றி அதற்கு முல்லைப் பூச்சூட்டுவர்; வணங்குவர்; வீட்டு வாயிலின் இரு பக்கங்களிமுள்ள மாடப்புரைகளில் விளக்கேற்றுவர். வணிக இல்லங்களில் இப்பழக்கம் நிறைவாக இல்லையென்றாலும், எந்தவகையான விளக்கேற்றப்பட்டாலும் உடன் வணக்கம் செலுத்தும் பழக்கம் உள்ளது. இது இல்லுறை தெய்வ வழிபாட்டு மரபின் சின்னமாகும்.
சிறப்பு வழிபாடாக ஆண்டுதோறும் மாங்கலிய வழிபாடு (சுமங்கலிப் பிரார்த்தனை) நிகழ்த்தப்படுகிறது. இது செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் நிகழ்த்தப்படும். ஆடி வெள்ளி, தை வெள்ளி சிறப்பாகக் கொள்ளப்படும். இறந்த மங்கல மகளிரின் நினைவாகப் புத்தாடை எடுத்துப் படையலிட்டு வழிபடுவர். நினைவு நாளில் மட்டுமன்றி இல்லத்தில் போன்ற மங்கல திருமணம், பூப்பு நீராட்டல் நிகழ்ச்சி காரணமாகப் புத்தாடைகள் வாங்கப்படும் காலத்தும் அவற்றை வைத்து விளக்கேற்றி வழிபடுவர்.
ஆண்டு தோறும் புரட்டாசித் திங்களில் கொண்டாடப்படும் கலைமகள் விழாவும் ஒரு வகையில் இல்லுறை தெய்வ வழிபாடாகும்.
காலப்போக்கில் மற்றொரு பழக்கம் உண்டாயிற்று. மகளிர் கூடிக் கொழுக்கட்டை வழிபாடொன்று மேற்கொண்டனர். தலைக்கு ஒருபடி நெல்லும் ஒரு தேங்காயும் இரண்டு பணமும் கொடுப்பர். ஆடி அல்லது தைச் செவ்வாய்க் கிழமையில் நள்ளிரவில் ஒரு வீட்டில் கூடுவர். நெல்லைக் குற்றியிடித்து மாவாக்கித் தேங்காய்த் துருவலிட்டு மண் சட்டியில் புளி, புன்கு, அரச இலைகளையிட்டு நீர்விட்டு மாவால் பல உருவங்களில் செய்யப்பட்ட கொழுக்கட்டைகளை அவிப்பர், இதற்கு உப்பிடுவதில்லை. கொழுக்கட்டைகள் விளக்கு, தாலி, அம்மிக்குளவி, பாடை, சாப்பறை, சட்டி முதலிய உருவங்களில் செய்யப்படும். இவ்வுருவங்களை நோக்கினால், இவை மங்கல மகளிர்க்கு உரியவையும், அன்னார்க்குச் செய்யப்பட்ட இறுதிக் கடன்களின் சின்னங்களுமாக இருப்பதை உணரலாம். இவற்றைப் படைப்பதற்கு ஓர் உரு வேண்டுமென்று ஆவின் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்துப் படையலிடுவர். எனவே, இக்கொழுக்கட்டையும் நிகழ்ச்சியும் ‘செவ்வாய்ப் பிள்ளையார் கொழுக்கட்டை’ எனப்பட்டது. மங்கல மகளிர் அல்லாத முதிய மகளிர் இவ்வழிபாட்டின்போது அமைந்து கதை சொல்லுவர். அறிவிற் சிறந்து விளங்கிய அவ்வையார் பற்றிய கதையாக அது அமையும். ஆண் குழந்தைகளைக் கூட இந்நிகழ்ச்சியின்போது இருக்கச் செய்யார். அக்கொழுக்கட்டையை ஆடவர் தின்னத் தர மாட்டார். ஆடி, தைச் செவ்வாய்களில் செய்யாது விட்டால் ‘மறந்தது மாசியில்’ என்று சொல்லி மாசிச் செவ்வாயில் நிகழ்த்துவர். இவ்வழிபாட்டுப் பழக்கம் இக்காலத்தில் சில மரபினரிடம் அருகியே காணப்படுகிறது.
செவ்வாய்க் கிழமை மங்கலக் கிழமை. செவ்வாய்க் கோளுக்கு ‘மங்கலன்’ என்பது ஒரு பெயர் (பிங். 230). ‘மங்கலக்கிழமை தன்னில் கைப்பலி கொடுத்து’ என்று யசோதர காவியமும் (2:58) அறிவிக்கிறது. எனவே மங்கல மகளிர்க்கு உரிய இவ்வழிபாட்டிற்குச் செவ்வாய்க் கிழமையைக் கொண்டனர்.
இல்லுறை தெய்வ வழிபாடுகள் இவ்வாறெல்லாம் நிகழ்ந்தாலும், இதன் அடித்தளம் மறைந்த மங்கல மகளிரது நினைவைப் போற்றி, அவர்தம் இல்லற மாண்புகளை நினைந்து வழிபடுதலேயாகும். கோ.இ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 267)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5mqxjmx7/
தமிழ்“இல்லுறை தெய்வம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5mqxjmx7/APA
Oliyon Research. (2026). இல்லுறை தெய்வம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5mqxjmx7/MLA
"இல்லுறை தெய்வம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5mqxjmx7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment