புவியில் உள்ள அனைத்து உயிரினங்களும் சூரியனிலிருந்து வரும் ஆற்றலைப் பயன்படுத்திச் செயற்படுகின்றன. சூரியனின் மையப் பகுதி 10,00,000°C வெப்ப நிலையிலும், புறப் பகுதி ஏறத்தாழ 6000°C வெப்ப நிலையிலும் உள்ளன. சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றல் ஒளியாற்றலாகவும், வெப்ப ஆற்றலாகவும், பருவ காலங்களைத் தரும் இயற்கையாற்றலாகவும், வளரும் தாவரங்களில் ஒளிச் சேர்க்கை ஆற்றலாகவும் கிடைக்கிறது. சூரியக் கதிர் வீச்சு புவியின் மீது பெரும் பரப்பளவிலும், தொடர்ச்சியாக முடிவற்ற கால அளவிலும் ஆற்றலைத் தருகிறது. எரி பொருள்களாகிய நிலக்கரி, எண்ணெய், நில வளிமம் ஆகியவை குறிப்பிட்ட காலம் வரையே ஆற்றலைக் கொடுக்கும். எனவே, உலகில் பெருகி வரும் ஆற்றல் தேவைகளை நிறைவு செய்யச் சூரிய ஆற்றல் (solar energy) ஒன்றே நிலையான தீர்வாகும். சூரிய ஆற்றலை மாற்றும் வழிகள். சூரிய ஆற்றல் மின் காந்தக் கதிர் வீச்சாகப் பெறப்படுகிறது. சூரிய ஆற்றலின் மிகச் சிறிய பகுதியையே புவி பெறுகிறது. இச்சிறிய அளவே ஆண்டிற்கு 7,50,000 டிரில்லியன் கிலோ வாட் மணியாகும். நடுப்பகலில் 1 ச.மீ. பரப்பளவில் படும் ஆற்றல் அடர்த்தி 1 கிலோ வாட் அளவுடையது. இதைப் பயன்படுத்தக் கூடிய ஆற்றலாக மாற்றுவது மிகவும் இன்றியமையாதது. சூரிய ஆற்றலை மாற்றும் பல வழிகள் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன. சூரிய ஏற்பிகள். சூரிய ஏற்பிகள் சூரிய ஆற்றலை நேரடியாக ஏற்று, வெப்ப ஆற்றலைத் தருகின்றன. ஏற்பியின் திறன், ஏற்பியின் பரப்பு ஆகியன உட்கவர் திறன், வெளி விடு திறன், கடத்தல், கதிர் வீச்சு, சலன முறை, வெப்ப இழப்பு இவற்றைப் பொறுத்தது. ஒரு திறனுள்ள தட்டைத் தகடு ஏற்பி படத்தில் காட்டப்பட்டுள்ளது. இதில் கருமையாக்கப்பட்ட உலோகத் தட்டைப் பரப்பு, காற்று, கண்ணாடிப் படலங்கள் மாறி அமைந்துள்ள தகட்டடுக்கால் மூடப்பட்டிருக்கும். இத்தகட்டடுக்கு, சூரியக் கதிர் வீச்சை உள்ளே ஏற்று, வெப்பத்தை வெளியேற விடாது. சூரிய ஆற்றல் கருந்தகட்டால் உட்கவரப்பட்டு, வெப்ப ஆற்றலாக மாறும். இவ்வெப்பம் நீர் அல்லது காற்றால் வெளியேற்றப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. 100°C வரை வெப்ப நிலையுள்ள சூரிய ஏற்பிகள் வீடு, தொழிற்சாலை, நீச்சல் குளம் ஆகியவற்றில் நீரை வெப்பப்படுத்தவும், சமைக்கவும், விண்வெளியில் வெப்பத்தைத் தரவும் குளிர் பதனேற்றியில் நீரைத் தூய்மைப்படுத்தவும் பயன்படுகின்றன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சூரிய வோல்ட்டா கலங்கள். சூரிய வோல்ட்டா கலங்களில் ஒரு P–வகை N–வகைக் குறை கடத்திச் சந்தி பயன்படுகிறது. சூரிய ஒளி படும் போது, இச்சந்தியிலிருந்து மின் துளை எலெக்ட்ரான் துகள்கள் இரட்டையை உருவாக்குகின்றன. இத்துகள்கள் மின்னோட்டத்தைத் தருகின்றன. சூரியனிலிருந்து வரும் பெரும ஆற்றலாகிய 100 வாட் ச.மீ. என்னும் திறனுக்குக் கிடைக்கும் மின்னழுத்தம் 0.45 வோல்ட் ஆகும். பல ஆயிரக்கணக்கான மின் கலங்களைப் பயன்படுத்தித் திறனை அதிகரிக்கலாம். இவை சூரியக் கல அடுக்கு (solar battery) எனப்படும். இவற்றில் பல கலங்கள் தொடரிணைப்பிலும், பக்க இணைப்பிலும் இணைக்கப்பட்டிருக்கும். இத்தகைய சூரியக் கல அடுக்கு விண்கலங்களில் பயன்படுகிறது. சிலிக்கான் கலங்களும், கேட்மியம் சல்ஃபைடு, கேலியம் ஆர்செனைடு, கேட்மியம் டெல்லுரைடு போன்ற குறை கடத்திகளால் ஆன கலங்களும் பயன் படுகின்றன. இவற்றைத் தவிர மூன்று முக்கியமான மறைமுகச் சூரிய ஆற்றல் மூலங்கள் உள்ளன. அவை காற்று ஆற்றல், கடல் ஆற்றல், தாவர ஆற்றல் என்பன. சூரிய ஆற்றல் புவியின் பரப்பில் சீரற்று உள்ளேற்கப் படுவதால், சுற்றுப் புறத்தின் வெப்ப நிலை மாறுகிறது. சுற்றுப்புற அழுத்த மாறுபாடும், அதனால், காற்றோட்டமும் ஏற்படும். இக்காற்று ஆற்றலைக் காற்று எந்திரங்கள் மூலமாக, மின்னாற்றலாக மாற்றிப் பயன்படுத்தலாம். கடல் பரப்பில் உள்ள நீர், சூரிய ஆற்றலை உட்கவர்கிறது. நில நடுக் கோட்டுப் பகுதியில் சூரிய ஆற்றல் மிகுதியாகவும், துருவப் பகுதியில் குறைவாகவும் உட்கவரப்படுவதால், நில நடுக் கோட்டுப் பகுதியில் வெப்பமான கடல் நீரும், துருவப் பகுதியில் குளிர்ந்த நீரும் இருக்கும். குளிர்ந்த நீர் கீழே மூழ்கி நில நடுக் கோட்டுப் பகுதியில் செல்வதால், குளிர், வெப்பப் பகுதிகள் வெப்ப எந்திரங்கள் போன்று செயற்பட்டு எந்திர ஆற்றலும், மின்னாற்றலும் பெறப் படுகின்றன. இதுவே வெப்ப மாற்றம் எனப் படும். வேளாண்மை, தொழில் மற்றும் நகர்ப்புறக் கழிவுப் பொருள்களையும், தாவரப் பொருள்களையும் பயன்படுத்தித் திண்ம, நீர்ம, வளிம எரி பொருள்களைப் பெறும் முறை தாவர ஆற்றல் எனப்படும். சூரிய ஆற்றல் சேமிப்பு சூரிய ஆற்றல் சில குறிப்பிட்ட காலங்களில் மட்டும் மிகுதியாகக் கிடைப்பதால், அதைச் சேமித்து வைப்பதற்குப் பல வழிகள் உள்ளன. வெப்பச் சேமிப்பு. சூரிய ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றிப் பொருள்களை உருக்கியோ, ஆவியாக்கியோ சேகரிக்கலாம். மின் சேமிப்பு. சூரிய ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றி, மின் தேக்கிகளில் சேமிக்கலாம். வேதியியல் சேமிப்பு. மின்கலங்களில் ஒளி வேதியல் முறையால் மின்னாற்றலாகச் சேமிக்கலாம். நீர்ச் சேமிப்பு. சூரிய ஆற்றல் உதவியால் நீரை அதிக உயரத்திற்கு ஏற்றி, நிலையாற்றலாகச் சேகரித்து வைக்கலாம். சூரிய ஆற்றலைச் சூரியத் தொட்டியிலும் சேகரிக்கலாம். உப்புக் கரைந்துள்ள நீர் ஏரிகளில் சூரிய ஒளி படும் போது, மிகு வெப்பநிலையுள்ள தாழ் நிலைப் பகுதிகளுள் நீர் சேர்வதால், ஆற்றல் சேமித்து வைக்கப்படுகிறது. வெப்ப வேதியியல் முறையிலும், சூரிய ஆற்றலைச் சேமிக்கலாம். சூரிய வெப்ப ஆற்றலால், நீரை ஹைட்ரஜன், ஆக்சிஜன் அணுக்களாகப் பிரிக்கலாம். இதற்கு 400-500°C வரை வெப்ப நிலை தேவைப்படுகிறது. 800-1400°C வரை வெப்ப நிலையில் செயற்படும் வெப்ப வேதி வினைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காந்த நீர்ம இயக்கவியல் (magneto hydrodynamics) முறையில் நீர்ம உலோகம் அல்லது வளிமக் கலவையின் இயக்க ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது. சூரிய ஆற்றலின் பயன்களைப் பெறும் முறைகளைப் பின் வருமாறு கூறலாம். அவை: கட்டடங்களை வெப்பப்படுத்துதல், கட்டடங்களைக் குளிரூட்டுதல், நீர் வெப்பப்படுத்துதல், கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுத்தல், சூரிய ஒளியைப் பயன்படுத்திக் கடல் நீரிலிருந்து தூய நீரைப் பெறுதல், வேளாண் பொருள்களை உலர்த்துதல், சூரிய அடுப்பு, நீர் ஏற்றும் சூரியக் குழாய்கள், சூரியக் குளிர் பதனேற்றி, ஒளி-வோல்ட்டா மின்கலம், சூரிய உலைகள், சூரிய மின் உற்பத்தி என்பன. —வெ. ராதாகிருஷ்ணன்