பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயரால் எழுதப் பெற்றது. இவர் தஞ்சை மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்திலுள்ள பின்னத்தூரில் கி.பி. 1862–ஆம் ஆண்டில் பிறந்தார். பெற்றோர், அப்பாசாமி ஐயர், சீதாலட்சுமி அம்மையார் ஆவர். இவர் காலத்தவரான வேங்கடராமையர் என்பவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இராமாயண அகவல் நூல் எழுதப் பெற்றதாக இதன் முன்னுரையினாலும் உ.வே. சாமிநாத ஐயர் இந்நூலைச் சிறப்பிக்கும் முறையில் எழுதிய பாடலாலும் தெரிகிறது. இராமகாதையை அகவற்பாவால் சுருக்கமாகக் கூறுகிறது இந்நூல். இதனுள் பாலகாண்டம் என்னும் பகுதியில், இராமன் பிறப்பு, லில்லொடித்தது, தயரதன் வருகை, சீதை திருமணம் ஆகியனவும், அயோத்தியா காண்டத்தில் காடேகல், தயரதன் இறப்பு, அந்திமக்கிரியை, பாதுகாபிடேகம் ஆகியனவும், ஆரணிய காண்டத்தில் பஞ்சவடியிருக்கை, சூர்ப்பணகை பங்கம், சீதையை எடுத்துச் செல்லல், பம்பையடைதல் ஆகியனவும் கூறப்பெற்றுள்ளன. கிட்கிந்தா காண்டத்தில் சுக்கிரீவன் முதலியோர் நட்பு, வாலிவதை, சேனைக் காட்சி, மயேந்திர மலையில் அனுமன் ஏறியமை முதலியனவும், சுந்தர காண்டத்தில் தேவியைக் காண்டல், அசோக வனம் அழிதல், இராவணனைக் காணல், கடற்கரை சார்தல் ஆகியனவும், யுத்த காண்டத்தில் வீடணன் சரணாகதி, இலங்கையை அடைதல், அதிகாயன் வதை, மேகநாதன் வதை, இராவண சங்காரம், முடிசூட்டல் ஆகிய பகுதிகளும் பேசப்பட்டுள்ளன. உத்தர காண்டத்தில் இராக்கதசரிதம், பழிச் சொற்கஞ்சுதல், இலவனாதியர் வதை, பரமபத வாழ்க்கை ஆகியன எளிய இனிய நடையில் அமைத்துக் கூறப்பெற்றுள்ளன. ஒவ்வொரு காண்டத்திலும் உள்ள உள்தலைப்புகள் ஒவ்வொன்றும் பதினெட்டு அடிகள் கொண்ட ஆசிரியப்பாவால் அமைந்துள்ளது. சிறிதே கற்றவர்களும் எளிதில் அறிந்து கொள்ளும் வண்ணம் பாடல்கள் எளிமையாக அமைந்துள்ளன. வருணனை, கிளைக்கதைகள் ஆகியவற்றை நீக்கி நேரே கதையைக் கூறிச் செல்கிறார் ஆசிரியர். இந்நூல் 1914–ஆம் ஆண்டு பதிப்பிக்கப் பெற்றுள்ளது. நற்றிணையின் உரையாசிரியரும் பதிப்பாசிரியருமாகத் திகழ்ந்த பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் இதன் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். இவ்வாசிரியர் 1914–ஆம் ஆண்டில் காலமானார். சு.சா