இது கம்ப்போசிட்டே (compositae) என்னும் சூரியகாந்திக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாவரவியல் பெயர் கிரிசாந்த்திமம் இண்டிகம் (Chrysanthemum indicum) <!---- As per the custom the Botanical name of a plant or flower consists of two parts or words. The first letter of the first part start with Capital letter and the second part starts with small letter----> என்பதாகும். இதில் ஏறத்தாழ 150 இனங்கள் உண்டு. இவை பெரும்பாலும் பல பருவச் செடி கள். சில இனங்கள் ஆண்டுதோறும் புதியனவாக விதையினின்று உண்டாகும் ஒரு பருவச் செடிகளாக உள்ளன. இலைகள். மாற்றிலையடுக்க இலைகள்: வெளிர் பச்சை நிறமுடையலை. மலர்கள். பூத்தலைகளாக (head) மலர்கள் உண்டாகும். தனிப் பூக்கள் சிறியவை; அவை சிறு பூக்கள் (florets) எனப்படும். பூத்தலைகள் தனியாக நீண்ட பூத்தண்டுகளின் (peduncle) முனையில் இருக்கும் அல்லது பல பூத்தலைகள் குடை மஞ்சரி (corymbose) வடிவில் ஒன்று திரண்டிருக்கும். மகரந்தக் கேசங்களும், சூலகமும் முழுமையான பூக்களைக் கொண்டுள்ளன. பூத்தலையின் ஓரத்தில் சுற்றிலுமுள்ள கதிர்ச்சிறு பூக்கள் பயன் தருபவை. இச்சிறு பூக்களின் நிறமே சாமந்திப் பூவின் நிறமாகும். பூக்கள் வெள்ளை, மஞ்சள், ரோஜா போன்ற அழகிய வண்ணங்களில் நறுமணத்துடன் காணப்படுகின்றன. சில கம்ப்போசிட்டே இனங்களில் சிறு பூக்களின் இடையில் பூச்செதில்கள் (paleae) என்னும் பூக்காம்புச் சிற்றிலைகள் காணப்படும். இப்பூச்செதில்கள் சாமந்திப்பூவில் காணப்படுவதில்லை. பூக்காம்பிலைகள் பல அடுக்குகளாகச் சிற்றிலை வட்டமாக (involucre) அமைந்திருக்கும். கனி. வெடியாச் சிறு உலர் கனி (achene). ஓர் அறையையும், ஒரு விதையையும் கொண்டது. உலர் கனியை விதை என்பர். கனியின் உச்சியில் மயிர்க் குச்சம் போல் புறவிதழ்கள் காணப்படும். வளரிடம். இது உலகின் பல பகுதிகளில் வளர்கிறது. எனினும் ஆஃபிரிக்காவில் மிகுதியாகக் காணப்படுகிறது. சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் சாமந்திப் பூ முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது ஜப்பான் மன்னரின் அடையாளப் பூவாக உள்ளது. பயிர் செய்யும் முறை. சாமந்தியைத் தொட்டி அல்லது நிலத்தில் பயிரிடுவர். பெரும்பாலும் கிளைகளை நறுக்கி நட்டு, அவை வேர் பிடித்தவுடன் பெயர்த்தெடுத்துக் குறுமண்ணும், மணலும், எருவும் கலந்த மண்ணில் புரவலாக நட வேண்டும். நீரைப் போதிய அளவுக்குப் பாய்ச்ச வேண்டும். கிளைகளின் முளைகளைக் கிள்ளி விட்டால், செடி புதர் போலச் செழித்து வளரும். குளிர் காலத்தில் சாமந்திப் பூக்கள் மிகுதியாக மலரும். சாமந்தியில் பல இனங்கள் இருப்பினும், மிகச் சில இனங்களே தோட்டத்தில் பயிர் செய்யப்படுகின்றன, அவை வருமாறு: உள்வளைந்த சீனவகை. இதில் பூத்தலை உருண்டையாகவும், ஒழுங்காகவும் இருக்கும். சிறு பூக்கள் வழுவழுப்பாக உருண்டு, முனையில் சிறு பற்களுடன் போதிய அளவு நீண்டு, கவர்ச்சியான வளைவைக் கொண்டிருக்கும். அனிமோன் வகை (anemone). இவ்வகை மலர்கள் உயர்ந்த அழகிய நடுப்பகுதியைக் கொண்டவை. கதிர்ச் சிறு பூக்கள் தட்டையாகக் கிடைமட்டத்தில் அமைந்திருக்கும். பாம்ப்பன் வகை. இது தட்டை அல்லது ஏறக்குறைய உருண்டையாக இருக்கும். ஒழுங்காகவும், இறுக்கமாகவும் பொருந்தியிருக்கும். சிறு பூக்கள் குட்டை, தட்டை அல்லது பருமனாகக் காணப்படும். தனி வகை. இதில் சிறுபூக்கள் போதிய அளவுக்கு நெருக்கமாகப் பொருந்தியுள்ளன. பூத்தலை ஒழுங்கான ஓரத்தைக் கொண்டுள்ளது. கதிர்ச் சிறு பூக்கள் ஒன்று அல்லது இரண்டு வரிசையில் இருக்கும். சிலவற்றில் 3 அல்லது 4 வரிசையும் காணப்படும். பூத்தலையின் நடுவில் குட்டையான அல்லது நீண்ட குழாய் வடிவச் சிறு பூக்கள் இருக்கும், அருவி வகை(cascade). இதில் சிறு பூக்கள் ஒரு வரிசை மேலும், ஒரு வரிசை மடிந்தும் அடுக்கடுக்காக இருக்கும்.பயன்கள். சில சாமந்தி வகைகள் அழகுக்காகவும், அணி கலன் செய்யவும் பயனாகின்றன. சில வகைகள் பூச்சி கொல்லிகளாகப் பயன்படும். அஸ்ஸாமில் சாமந்திக் கொழுந்து, சமையலில் பயன்படுகிறது. பூவும் பட்டையும் மருந்தாகப் பயன்படும். —அ. அரங்கநாதன்