இராசராசசோழன், இரண்டாம்
irācarācacōḻaṉ, iraṇṭām
இரண்டாம் குலோத்துங்க சோழன் கி.பி.
இரண்டாம் குலோத்துங்க சோழன் கி.பி. 1150–இல் இறந்த பிறகு, அவர் மகன் இரண்டாம் இராசராச சோழன் சோழப் பேரரசின் அரசராகக் கங்கை கொண்ட சோழபுரத்தில் முடிசூட்டப் பெற்றார். இவர் பரகேசரி என்னும் பட்டம் புனைந்து கொண்டு அரசாளத் தொடங்கினார். இவருடைய மெய்க்கீர்த்திகள் ‘பூமருவிய திருமாதும்’ எனவும், ‘பூமருவிய பொழிலேழும்’ எனவும் தொடங்குகின்றன. இவை இரண்டும் இவர் ஆட்சியின் மூன்றாம் ஆண்டு முதல் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இவற்றுள் ‘பூமருவிய பொழிலேழும்’ என்று தொடங்கும் மெய்க்கீர்த்திகளில் வரலாற்றுக் குறிப்புகள் காணப்படவில்லை. ஆயினும், இவற்றால் இவரது ஆட்சியின் சிறப்பு, தமிழ்த் தொண்டு, மனைவிமார்களின் பெயர்கள் ஆகியவற்றை அறியலாம். ‘கடல் சூழ்ந்த பார் மாதரும்’ எனவும், ‘புயல் வாய்த்து வளம் பெருக’ எனவும் தொடங்கும் வேறு இரண்டு மெய்க்கீர்த்திகளும் இவர் கல்வெட்டுகளில் மிக அருகிக் காணப்படுகின்றன.
இராசராசனின் கல்வெட்டுகள் வடக்கேயுள்ள கோதாவரி, கிருட்டிணா, குண்டூர், நெல்லூர் மாவட்டங்களிலும், மேற்கேயுள்ள சேலம், கோலார் மாவட்டங்களிலும் காணப்படுவதால் வேங்கி நாடு, கொங்கு நாடு, கங்க நாடு ஆகியவை இவர் ஆட்சிக்குட்பட்டிருந்தன என்பது திண்ணம். இவர் தந்தை குலோத்துங்க சோழனது ஆளுகைக்கு உட்பட்டிருத்த நாடுகள் எல்லாம் சோழப் பேரரசிலிருந்து விலகாமல் இவரது ஆட்சியின் கீழும் அமைதியாக இருந்து வந்தன எனலாம். இவர் காலத்தில் பெரும் போர்கள் நிகழாமையால் மக்கள் எல்லோரும் அல்லலின்றி இனிது வாழ்ந்து வந்தனர்.
இவ்வேந்தர் தமிழிலும் வடமொழியிலும் சிறந்த புலமை பெற்று விளங்கினார். இவரை ‘முத்தமிழுக்குத் தலைவன்’ என்றும் ‘இராசராச பண்டிதன்’ என்றும் இவரது மெய்க்கீர்த்தி கூறுவதால் இவர் புலமையை நன்குணரலாம். இத்தகைய தமிழ்ப் புலமையை ஆசிரியர் ஒட்டக்கூத்தர்பால் கல்வி பயின்றே இவ்வரசர் பெற்றிருத்தல் வேண்டும். இராசராசன் வடமொழிப் புலமையைக் கேசவசுவாமி என்பவரிடமிருந்து பெற்றார். ஒட்டக்கூத்தர் இராசராசனின் அவைக்களப் புலவராக விளங்கினார். இவர்தம் தந்தை தில்லையம்பல முன்றிலிலிருந்த திருமாலை அலைகடலில் கிடத்தியமை பற்றி வைணவர்கள் மனம் புண்பட்டிருத்தலையுணர்ந்து, தம் ஆட்சியில் அவர்களுக்கு ஆதரவளித்து அவர்கள் உளங்குளிரச் செய்தார். இதுபற்றி, ‘விழுந்த அரிசமயத்தையும் மீளவெடுத்தனன்’ என்று இவரது மெய்க்கீர்த்தி கூறும். எனவே, இவர் சிறந்த சைவராயினும் பிற சமயங்களிடத்தில் வெறுப்பின்றிச் சமயப் பொறையுடையவராய்த் திகழ்ந்தார் என்பது தெள்ளிது.
இவ்வேந்தரின் ஆட்சிக் காலத்தில் மலையமலைக்குப் பக்கத்தில் காவிரியாறு அடைப்புண்டு, கிழக்கு நோக்கித் தண்ணீர் வாராமல் தடைப்படவே, சோணாட்டு வளம் சுருங்குவதாயிற்று. இவர் அம்மலையை நடுவில் வெட்டுவித்துக் காவிரியாற்றிற்கு வழிகண்டு, சோழ நாட்டிற்கு என்றும் தண்ணீர் வந்து கொண்டிருக்குமாறு செய்தார்.
இராசராசனின் ஆட்சியின் முற்பகுதியில் கங்கை கொண்ட சோழபுரமே தலைநகராயிருந்தது. இங்கிருந்து இராசராசபுரத்திற்குத் (இன்றையதாராசுரம்) தலைநகரை மாற்றினார். இந்நகரின் வடகீழ்ப் பகுதியில் இராசராசேச்சுரம் என்ற சிவாலயம் ஒன்றை இம்மன்னர் எடுப்பித்து, அதில் இராசராசேச்சுரமுடையாரை எழுந்தருளுவித்து வழிபாடு புரிந்தார். கண்டோர் கண்களைப் பிணிக்குஞ் சிற்பத்திறம் உடையது இக்கோயில். கோயிலிலுள்ள கருவறையின் புறச்சுவரில் சிவனடியார் அறுபத்து மூவருடைய வரலாறுகளைக் கூறும் புடைப்புச் சிற்பங்கள் கல்வெட்டுகளுடன் காணப்படுகின்றன. திருச்சுற்று மாளிகையின் வடபுறத்திலுள்ள சைவாசாரியார் நூற்றெண்மர் சிற்பங்களும் இக்கோயிலிலுள்ள இராச கம்பீரன் திருமண்டபமும் புகழ் பெற்றவை. (காண்க – தாராசுரம்).
இவ்வரசரின் அவைக்களப் புலவராக விளங்கியவர் ஒட்டக்கூத்தர். அவர் இராசராச சோழனுலா என்ற நூலொன்று இவ்வரசன் பெயரில் எழுதியுள்ளார். இவ்வரசரின் பெருமைகளை இந்நூலில் விவரித்துள்ளார். இரண்டாம் இராசராசரின் சிறப்புப் பெயர்கள் சோழேந்திரசிங்கன், தெய்வப் பெருமான், கண்டன், சொக்கப் பெருமாள், இராசகம்பீரன் என்பன. தாராசுரம் கோயிலில் உள்ள மண்டபம் ஒன்று இராசகம்பீரன் திருமண்டபம் என்று சொல்லப்படுகிறது.
கி.பி. 1163–ஆம் ஆண்டின் இறுதியில் இவர் நோய்வாய்ப்பட்டுத் துன்புற்ற நிலையில், தான் அந்நோயினின்று விடுபட்டுப் பிழைக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டார். அந்நாளில் இவர் மக்- கள் இருவரும் ஈராண்டும் ஓராண்டும் நிரம்பிய இளங்குழந்தைகளாக இருந்தனர். ஆகவே, அவர்கள் முடிசூட்டப் பெறுவதற்குத் தக்க வயதினராக இல்லை. அதுபற்றி இராசராசன் பெருங்கவலை கொண்டு, தம் தாயத்தினருள் ஒருவனாகிய நெறியுடைப் பெருமாளின் புதல்வன் எதிரிலிப் பெருமாளைக் கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து வருவித்து, அவ்வரச குமாரனுக்கு இளவரகப்பட்டங் கட்டிவிட்டு, அந்நாளிலேயே இறந்து போனார். எதிரிலிப் பெருமாள் கி.பி. 1166–இல் தான் இராசாதிராசன் என்னும் பெயருடன் முறைப்படி அரசராக முடிசூட்டிக் கொண்டார்.இரா.இரா.
துணை நூல்கள்
Sastri, K.A.N., The Cholas University of Madras, 1984.
Majumdar, R.C. (Ed.), The Struggle for Empire, History and Culture of the Indian People, Bharatiya Vidya Bhavan, Bombay, 1979.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 36)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5h7e99gy/
தமிழ்“இராசராசசோழன், இரண்டாம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5h7e99gy/APA
Oliyon Research. (2026). இராசராசசோழன், இரண்டாம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5h7e99gy/MLA
"இராசராசசோழன், இரண்டாம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5h7e99gy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment