ஆங்கிலேய மருத்துவ உளவியலாரும் மானிடவியலாளருமாவார். இவர் இங்கிலாந்தில் கெண்ட்டு (Kent) மாவட்டத்தில் இலூட்டன் (Lutun) என்னுமிடத்தில் கி.பி. 1864–ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 12–ஆம் நான் பிறந்தார். இரிவர்சு (Rivers, William Halse Rivers) மருத்துவம் பயின்று அதனையே வாழ்க்கைத் தொழிலாக அமைத்துக் கொண்டார். மருத்துவ வாழ்க்கையின் தொடக்க காலத்தில் இவர் உடலியங்கியல்சார் உளவியல் (Physiological Psychology) துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். சாராயம், மருந்துகளின் தாக்கம், நிறப் பார்வையின் (Colour vision) தன்மை, மனச் சோர்வு (Mental fatigue) முதலானவற்றைச் செயற்படுத்தும் முறைகளையும் கண்டறிந்ததனால், இவர் சிறந்த உளவியலாராக மதிக்கப்பட்டார். இங்கிலாந்தின் முதல் உளவியல் சோதனைக் கூடத்தின் இயக்குநராக இவர் கி.பி. 1897–ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அவ்வாண்டிலேயே கேம்பிரிட்சுப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக அமர்த்தப்பட்டார். சோதனைசார் உளவியல் (Experimental Psychology) துறையை நிறுவி, அதனை விரிவுபடுத்தப் பெரும் பணிபுரிந்தார். தாரசு நீர்ப் பிரிவு (Tores Strait) ஆய்வுப் பயணத்தை கி.பி. 1898–இல் மேற்கொண்ட கேம்பிரிட்சுப் பல்கலைக் கழகக் குழுவில் சேர்ந்து, மெலனீசியர்களின் (Melanesians) புலன்களின் செயல்களை (Sensory functions) ஆய்வு செய்தார். இந்த ஆய்வுப் பயணத்தால் இவர் மானிடவியலின் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டார். இவர் கேம்பிரிட்சுப் பல்கலைக் கழகத்தின் புனித யோவான் கல்லூரியின் (St. John's College) ஆய்வாளராகி, 1902–இல் பல்கணவர் மணமுறையினைக் கொண்டுள்ள தோடர் (Toda) பழங்குடிகளை ஆய்வு செய்தார். தோடர் குறித்த இவரது ஆய்வு மிக விரிவானதும் சிறப்பானதுமாகும். இரிவர்சு, பழங்குடிகளின் சமூகக் கூட்டமைப்பிலும், உறவுமுறைச் சொற்களிலும் காணப்படும் அமைப்புகளைக் கண்டறிய மீண்டும் மெலனீசியாவுக்குச் சென்றார். மெலனீசியரின் உறவுமுறை அமைப்புகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் கண்டறிந்து, அவற்றைத் தோடர் பழங்குடிகளின் பண்பாட்டுக் கூறுகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்தார். உறவுமுறையும் சமூகச் கூட்டமைப்பும் (Kinship and Social Organization–1914) என்னும் நூல் இன்றைய மானிடவியலாரால் ஒரு நல்ல வரலாற்றுப் பின்னணியுடையது எனப் பாராட்டப் பெற்றுள்ளது. தோடர் {The Todas – 1906), மெலனீசியர் சமுதாயத்தின் வரலாறு (History of Melanesian Society–1914), உறவு முறையும் சமூகக் கூட்டமைப்பும் (Kinship and Social Organization – 1914) முதலானவை, இரிவர்சு மானிடவியல் துறைக்கு அளித்த நூல்களுள் சிலவாகும். முதல் உலகப் போரின் பொழுது ஆங்கில அரசின் நரம்பியல் ஆலோசகராகப் பணியாற்றினார். இரிவர்சு தம் இறுதிக் காலத்தில் மருத்துவ உளவியல் துறையின் ஆய்விலேயே மிகுந்த கவனம் செலுத்தினார். இவர் 1922–ஆம் ஆண்டு சூன் நான்காம் நாள் கேம்பிரிட்சில் காலமானார். நே.தே.