புகழ்மிக்க பிரெஞ்சு மாவீரர்; அமெரிக்கப் புரட்சியிலும், பிரெஞ்சுப் புரட்சியிலும் இணையாகப் பங்கு கொண்டவர்; அமெரிக்கப் புரட்சியில் வாசிங்டனுக்கு அடுத்தபடியாக எண்ணத்தக்கவர்; பிரெஞ்சு நாட்டவராயினும் அவர் தம் வாழ்வையும் வாய்ப்புகளையும் அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு மகிழ்ச்சியாகக் கொடுத்தவர். இவர் பண்டைய பிரெஞ்சுக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். மிண்டன் என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் கி.பி. 1759-ஆம் ஆண்டில் இவர்தம் தந்தையார் கொல்லப்பட்டார். இவர் தம் தந்தையார் இலபயத்திற்கு (Lafayette) விட்டுச் சென்றவை இரண்டு. ஒன்று கோட்டை போன்ற வீடு. மற்றொன்று மார்குவிசு என்னும் விருதுப்பட்டம். தாய்வழியிலும் இவருக்குப் பெருஞ்செல்வம் கிட்டியது. தம்முடைய 16–ஆம் வயதில் இவர் பிரான்சில் புகழ்மிக்க குடும்பமொன்றில் பிறந்த இளம் கன்னியொருத்தியைத் திருமணம் செய்துகொண்டார். இலபயத்து தம் பத்தொன்பதாம் வயதில் இலபயத்து பிரெஞ்சுப் படையின் தலைவராகப் பதவியேற்றிருந்தபோது, பிரான்சின் பகை நாடான இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களின் சுதந்திரப் போராட்டத்திற்குப் பின்னர் விடுதலை பெற்ற செய்தி வந்தது. இப்போராட்டம் இலபயத்திற்கு உணர்ச்சியூட்டியது. தம் அரசரின் ஆணையை மீறியும், தம் மாமனாரின் கடுஞ் சினத்திற்கு ஆளாகியும் கப்பலொன்றை விலைக்குவாங்கிப் பல இன்னல்களுக்கிடையில் கி.பி. 1777–ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்குக் கடற் பயணம் மேற்கொண்டார். ஊதியம் வாங்கிக் கொள்ளாமல் பணியாற்ற ஆயத்தமான இவருக்கு அமெரிக்கச் சட்டமன்றமான காங்கிரசு ‘மேசர் செனரல்’ (Major General) என்னும் பொறுப்பைக் கொடுத்தது. வாசிங்டன் இவர்தம் உற்ற நண்பரானார். திறமை வாய்ந்த அலுவலராகவும், கூர்த்தமதி கொண்ட அறிவுரையாளராகவும் இருந்தார் இலபயத்து. இவர் கி.பி. 1777 செப்தம்பர்த் திங்களில் பிராண்டிவைன் என்னுமிடத்தில் நடைபெற்ற முதல் போரில் சிறுகாயமடைந்தார். அடுத்து நடைபெற்ற போர்களில் இவர் திறமையாகப் போரிட்டுப் பலரின் போற்றுதலையும் பெற்றார். இவர் கி.பி. 1778–ஆம் ஆண்டில் அமெரிக்காவில் குடியேறியவர்களிடம் உடன்படிக்கை செய்து கொள்ளுமாறு பிரெஞ்சு அரசரைத் தூண்டினார். இவ்வுடன்படிக்கைக்கு உதவுதற்காக கி.பி. 1779–ஆம் ஆண்டில் இலபயத்து பிரான்சிற்குத் திரும்பினார். எனினும், இவர் விரைந்து அமெரிக்கா சென்று வர்சீனியா படையெடுப்பிலும், கி.பி. 1781–இல் யார்க்டவுனில் கார்ன்வாலிசு பிரபு சரணடைந்த நிகழ்ச்சியிலும் அமெரிக்காவில் குடியேறிய மக்கள் படைகளுக்குத் தலைமை ஏற்று நடத்தினார். இலபயத்து விடுதலை வேட்கை மிக்கவர். இவர் கி.பி. 1789–இல் பிரான்சில் ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சியை ஆதரித்த பிரபுக்களுடன் இணைந்துகொண்டார். இவர் பிரெஞ்சு சட்டமன்றமான ‘எசுடேட் செனரலின்’ உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமெரிக்கச் சுதந்திர அறிவிப்பின் அடிப்படையில் மக்களின் உரிமைகளை உருவாக்கிக் கொடுத்தார் ‘பாசுடைல்’ சிறை தாக்கப்பட்டபோது இவர் பிரஞ்சுப் புரட்சியைப் பாதுகாத்தற்கு அமைக்கப்பட்டிருந்த புதிய தேசியக் காவல் படைக்குத் தலைமை தாங்கினார். கலகக்காரர்கள் கி.பி. 1789 அக்டோபர் 5 ஆம் நாள் வெர்சே மாளிகையைத் தாக்கிய போது, இலபயத்து அரசியார் மேரி அந்தாயினட்டைக் (Marie Antoinette) காப்பாற்றினார். மேலும், இவர் பிரான்சை விட்டுத் தப்பியோட முயன்ற பதினாறாம் உலூயி மன்னரைத் தடுத்து நிறுத்தும் ஆணையைப் பிறப்பித்தார். இலபயத்து பிரெஞ்சுப் புரட்சியாளரின் கொடூரமான கொலை வெறியைக் கண்டு மனம் நொந்தார். இவர் அரசியல் திட்டத்திற்குட்பட்ட முடியாட்சிக்கு ஆதரவு அளித்தமையால் நாட்டுத் துரோகி என்று குற்றஞ்சாட்டப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டுக் ‘கில்லட்டில்’ என்னும் பொறியில் இவரது தலையைத் துண்டிக்குமாறு தண்டிக்கப்பட்டார். ஆனால், இலபயத்துத் தப்பித்துப் பெல்சியத்திற்கு ஓடினார். அங்கு ஆசுதிரியர்கள் இவரைக் கைதுசெய்தனர். இவர் ஐந்தாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு, முதலாம் நெப்போலியனால் விடுவிக்கப்பட்டார். இலபயத்து நெப்போலியனின் தன்போக்கு ஆட்சியை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, இவர் அவனது வீழ்ச்சிக்காலம்வரை பொது வாழ்வில் பங்கு கொள்ளாமல் ஒதுங்கியிருந்தார். இவ்வாறே இவர் பூர்பன் அரசரின் மீட்சியின்போது அரசியலிலிருந்து விலகியிருந்தார். எனினும், ஆட்சியாளரின் கொடுங்கோன்மையைப் பொறாதவராகி, இவர் அரசுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த எதிர்க்கட்சிகளைத் தலைமை தாங்கி நடத்தினார். இவர் கி.பி. 1830–ஆம் ஆண்டில் நடைபெற்ற புரட்சியிலும் பங்கேற்றார். இலபயத்து தேசியக் காவல் படையின் படைவீரர்களுக்குத் தலைமையேற்று, பத்தாம் சார்லசு மன்னரைப் பிரான்சிலிருந்து விரட்டிவிட்டு, உலூயி பிலிப்புவை அரியணையில் அமர்த்தினார். பிரெஞ்சுப் புரட்சியின் போது புரட்சியரசு இலபயத்தின் சொத்துகளைப் பறிமுதல் செய்தது. ஆனால், அமெரிக்க அரசு 2,00,000 தாலர்கள் நன்கொடையாக வழங்கி இவரை ஈடேற்றியது. இத்தகைய அருஞ்செயல்கள் ஆற்றிய இலபயத்து கி.பி. 1834–ஆம் ஆண்டு மே திங்கள் 20–ஆம் நாள் பாரிசில் காலமானார்.