இவர் பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டத்தைச் சேர்ந்த அரியக்குடி என்னும் ஊரில் 19.5.1891–இல் திருவேங்கடத்தையங்கார், நாச்சியார் அம்மாள் என்னும் செல்லத்தம்மாள் ஆகியோருக்கு மூன்றாம் மைந்தராகத் தோன்றினார். இளமையிலேயே இசையில் ஆர்வமுற்று விளங்கிய இவர் புதுக்கோட்டைத் திருமலையப்பர், நாமக்கல் நரசிம்ம அய்யங்கார், இராமநாதபுரம் அரசவைச் கலைஞர் பூச்சி சீனிவாச அய்யங்கார் ஆகியோரிடம் இசை பயின்றார். தொடக்க நிலையில் பூச்சி சீனிவாச அய்யங்காரோடு பாடி வந்த இவர், 1912–இல் தேவகோட்டையில் முதன் முறையாகத் தம் இசை நிகழ்ச்சியினைத் தனித்து அரங்கேற்றினார். திருவையாற்றுத் தியாகராசர் விழாவில் இவர் நீண்ட நேரம் பாட அனுமதிக்கப்பட்டார். ஒலிபெருக்கி இல்லாத அக்காலத்தில் இவர் அவையோர் பலரும் கேட்குமாறு பாடும் குரல் வளம் பெற்றிருந்தார். பல இசைச் சங்கங்கள் இவருக்கு ‘சங்கீத ரத்னாகர’, ‘சங்கீதகலாநிதி’, ‘காயகசிகாமணி’, ‘காயகக்கண்டீவர’ போன்ற பட்டங்களை வழங்கிப் பாராட்டின. இசை நிகழ்ச்சியில் தொய்வு இன்றிப் பாடும் இயல்பு கொண்ட இவரது குரல் நாகசுர ஓசை போன்று சிறந்து விளங்கும். 1947–இல் இந்தியக் கவின் கலை மன்றத்தினர் (Indian Fine Arts Society) ‘சங்கீத கலா சிகாமணி’ என்னும் பட்டத்தை இவருக்கு வழங்கினர். இவர் 1952–ஆம் ஆண்டு சென்னை அருள்மிகு பார்த்தசாரதித் திருக்கோவிலில் திருப்பாவையை முதன் முறையாகத் தாமே இசை அமைத்து வருண மெட்டுடன் பாடினார். இசை உலகில் இவர் ஆற்றிய தொண்டினைப் பாராட்டி, இந்திய அரசு 1952–ஆம் ஆண்டில் ‘பத்மவிபூசன்’ என்னும் சிறப்பு விருதினை வழங்கிச் சிறப்பித்தது. தமிழ்நாட்டுப் பாடகர்களுள் முதன் முறையாக இச்சிறப்பினைப் பெற்றவர் இவரே. இவர் 1955–இல் முதன்முறையாகச் சென்னை வானொலியில் பாடினார். எளிய மக்களும் இசை இன்பம் பெற்று மகிழும்படி இசைத் தொண்டு புரிந்து வந்தார். தம்முடைய இசைத் திறமையால் கருநாடக இசையுலகில், ‘அரியக்குடிப் பாணி’ என்று சிறப்பித்துச் சொல்லும் அளவிற்குப் புகழ் பெற்றுத் திகழ்ந்தார். தோடி இராகமும், திருப்புகழ்ப் பாடல்களும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்களும் இவர் தம் இசையரங்கங்களில் சிறப்பிடம் பெற்றுத் திகழ்ந்தன. குரல் நலமும், இசை நுணுக்கமும் அமையப் பாடும் இவர். நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும் விளங்கினார். இவர் பொன்னம்மாள் என்பாரை மணந்து இல்லறம் நடத்தினார். கருநாடக இசைவல்லுநருள் ஒருவராக விளங்கி, இசைத் தொண்டு புரிந்த அரியக்குடி இராமானுச அய்யங்கார் 1967–ஆம் ஆண்டு சனவரித் திங்களில் காலமானார்.இரா.கு.