சிவபெருமானை நோக்கிச் செய்யும் நல்வினைகள் யாவும் ‘சிவ புண்ணியம்’ எனப்படும். ‘பதி புண்ணியம்’ எனப்படுவனவாகிய இவை ‘சிவதருமம்’ என்றும் சொல்லப்படும். இவை மனம், மொழி, மெய் என்னும் மூன்றினாலும் நிகழலாம். இவை சரியை, கிரியை, யோகம் என மூன்றாக வகுக்கப்பட்டுள்ளன. சிவபுண்ணியத்திற்கு உண்மைப் பயன் ஞானத்தின் வழியாக வரும் வீடு பேறே. ஆயினும் இவை புகழ், பொருள், வெற்றி, மகப்பேறு முதலிய உலகப் பயன்களை வேண்டிச் செய்யப்படுமாயின் ‘உபாயச் சிவ புண்ணியம்’ எனப்படும். இவை உலகப் பயன்களுள் ஒன்றையும் கருதாது அன்பே காரணமாகச் செய்யப்படும் பொழுது, ‘உண்மைச் சிவபுண்ணியம்’ எனப்படும். உண்மைச் சிவபுண்ணியமே வீடு பேற்றைத் தரும். உபாயச் சிவபுண்ணியம் உண்மைச் சிவ புண்ணியத்திற்கு வழியாக அமையும். சி.அ.