அடி
aṭi
அடி என்பது யாப்பின் அல்லது செய்யுளின் உறுப்புகளுள் ஒன்றாகும்.
அடி என்பது யாப்பின் அல்லது செய்யுளின் உறுப்புகளுள் ஒன்றாகும். பல்பொருள் குறித்த ஒரு சொல்லாகிய அடி, யாப்பியலில் சீரின் தொகுதியைச் சுட்டுகிறது. வடமொழி யாப்பியலில் அடிக்குப் ‘பாத’ என்னும் சொல் வழங்கப்படுகிறது. ஒருவரின் நடையை முடிவு செய்வதில் அவர் ‘காலடி’ இன்றியமையாத பங்கு பெறுவதைப்போலப் பாட்டின் நடையை உறுதி செய்வதில் அடி தலைமையான உறுப்பாக அமைகிறது.
பாட்டமைப்பிற்கும் கருத்தோட்டத்திற்கும் ஒலி நயத்திற்கும் நிலைக்களமாக அமைவது அடியாகும். தமிழில் ஓரடி பாட்டாகாது; இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடிகளால் ஆக்கப்படுவதே பாட்டாகும். அடியைக் கொண்டு பாட்டு அமைக்கப்படுவதால் “அடியின் சிறப்பே பாட்டெனப்படுமே” என்று தொல்காப்பியர் உரைத்துள்ளார். இடைக்காலப் புலவர் பல்காயனாரும் “அடியின் ஈட்டத்து அழகுபட்டு இயலும் செய்யுள்” என்று சிறப்பித்துக் கூறியுள்ளார். அடி என்பது பொதுவாக நாற்சீரடியைச் சுட்டும். தொடை வகைகள் நாற்சீரடி அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தொல்காப்பியம் எடுத்துரைக்கும் 34 செய்யுள் உறுப்புகளுள் அடியும் ஒன்று. அடியின் சிறப்பை நன்கு உணர்ந்த நக்கீரர் ‘அடிநூல்’ ஒன்றை இயற்றியுள்ளார். இந்நூல் இன்று கிடைக்கவில்லை. இருப்பினும் செய்யுளின் உறுப்பாகிய அடியைத் தனியாகவே விளக்கும் நூலொன்று இருந்தது என்பதை யாப்பருங்கல விருத்தியுரையிலிருந்து அறியும்போது, அடியின் இன்றியமையாமை புலப்படும்.
யாப்பின் உறுப்புகளுள் எழுத்து, அசை, சீர்மூன்றும் கீழ்நிலை உறுப்புகளாகும். எழுத்தால் அசையும் அசையால் சீரும் சீரால் அடியும் அடியால் தொடையும் தொடையால் பாவும் அமைவதால் யாப்புறுப்புகள் அடுக்கு முறையில் அமைந்துள்ளன.
பண்டைக் காலத்திலிருந்தே தமிழ் யாப்பியலார் அடிகளைச் ‘சீர்’ அடிப்படையில் பாகுபாடு செய்து வந்துள்ளனர். அடியில் வரும் சீர்களின் எண்ணிக்கையை வைத்து அடிகளை வேறுபடுத்துகிறார்கள். ஆனால், இலக்கண விளக்கம் மட்டும் தளையின் எண்ணிக்கை அடிப்படையில் பகுப்புச் செய்துள்ளது. ஒரு சீரால் அமையும் அடியைச் ‘சொற்சீரடி’ என்றும், ‘கூன்’ என்றும் குறிப்பர். பொதுவாக, ஒரு பாட்டடி அமைவதற்குக் குறைந்தது இரண்டு சீர்களேனும் இருக்க வேண்டும். அடியில் வரும் சீர்களின்மேல் எல்லை குறித்து வேறுபட்ட கருத்துகள் காலப்போக்கில் வளர்ந்து வந்திருக்கின்றன. அடியில் வரும் சீர்களின் மேல் எல்லையாக ‘ஏழு’ என்று தொல்காப்பியமும், ‘எட்டு’ என்று காக்கைபாடினியமும், ‘பத்து’ என்று யாப்பருங்கலமும், ‘வரையறை இல்லை’ என்று வீரசோழியமும் குறிப்பிடுகின்றன. இக்கால யாப்பு நூல்கள் பதினாறு சீர்களை மேல் எல்லையாகக் கூறுகின்றன. ஆனால், பெரும்பாலான யாப்பிலக்கணிகள் எட்டுச் சீர்களுக்கு மேல் வரும் அடிகளை வரவேற்றுப் போற்றுவதில்லை.
இரண்டு சீர்களைக் கொண்டது ‘குறளடி’. மூன்று சீர்களைக் கொண்டது ‘சிந்தடி’, நான்கு சீர்களை உடையது ‘அளவடி’ அல்லது ‘நேரடி’ எனப்படும். ஐந்து சீர்களைக் கொண்டது ‘நெடிலடி’ எனவும் ஆறு சீர்களையும் அதற்கு மேற்பட்ட சீர்களையும் கொண்டவை ‘கழிநெடிலடி’ எனவும் படும். பிற்கால யாப்பியலார் 6 முதல் 8 சீர்களைக் கொண்ட அடிகளை ‘முதலாகு கழிநெடிலடி’ என்றும், 11,12,13,14,15,16 சீர்களைக் கொண்ட அடிகளைக் ‘கடையாகு கழிநெடிலடி’ என்றும் வகைப்படுத்துவர்.
தொல்காப்பியம், ஐந்தாகப் பிரித்து விளக்கிய சீர்வகை அடிகளில் நாற்சீரடியை மட்டும் மேலும் எழுத்து அடிப்படையில் துணைப் பகுப்புச் செய்துள்ளது. அதன்படி, ‘குறளடி’ என்பது நான்கு முதல் ஆறுவரை உள்ள எழுத்துகளைக் கொண்டது. சிந்தடி என்பது ஏழு முதல் ஒன்பது வரையுள்ள எழுத்துகளைக் கொண்டது; ஆகவே, எழுத்தின் அளவால் பதினேழு நிலங்களாகப் பகுத்து ஐவகையடியாகத் தொகுத்துத் தொல்காப்பியம் கூறுகிறது. நாற்சீரடியை எழுத்தளவு அடிப்படையில் செய்யும் பகுப்பு இடைக்காலத்தும் இக்காலத்தும் வழக்கில் இல்லை.
தொல்காப்பியர் எழுத்தின் அளவில் பிரித்த அடிகளைக் ‘கட்டளை அடிகள்’ என்று பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் குறிப்பிடுகிறார்கள். இருவருக்கும் முன்னவரான இளம்பூரணர் அவ்வாறு குறிப்பிடவில்லை. முன்னைய இரண்டு உரையாசிரியர்களின் கருத்தைப் பின்பற்றி அ. சிதம்பரநாதன் செட்டியாரும் வெள்ளைவாரணரும் புலவர் குழந்தையும் தொல்காப்பியரின் எழுத்தினளவு அடிகளைக் கட்டளையடிகள் என்று வழி மொழிகிறார்கள்.
கட்டளை என்னும் சொல் யாப்பியலில் கட்டுப்பாடு, விதிப்பு என்னும் பொருளில் ஆளப்படுகிறது. எனவே, எழுத்து எண்ணிக்கையில் நெகிழ்ச்சியின்றிக் குறிப்பிட்ட கட்டுப்பாடு உடையது கட்டளை அடியாகும். இம்முறையிலே அமைந்த பாக்கள் கட்டளைக் கலிப்பா, கட்டளைக் கலித்துறை, விருத்தக் கலித்துறை போன்ற இடைக்காலப் பாட்டு வகைகளாகும். இப்பாட்டுகளில் உள்ள அடி நேரசையில் தொடங்கினால், இத்துணை எழுத்து வரவேண்டும் என்றும் நிரையசையில் தொடங்கினால், இத்துணை எழுத்து வரவேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வித நெகிழ்ச்சியும் கிடையாது. எண்ணிக்கை குறிப்பிட்டுள்ளபடி சரியாக அமையவேண்டும். ஆனால், இம்முறையில் தொல்காப்பியரின் எழுத்தளவு அடிகள் அமையவில்லை.
தொல்காப்பியம் விளக்கும் ஐவகை எழுத்தளவு அடிகள் ஒவ்வொன்றும் நெகிழ்ச்சிக்கு இடம் தருகிறது. எடுத்துக்காட்டாக, குறளடி நான்கு அல்லது ஐந்து அல்லது ஆறு எழுத்துகளால் அமையும். இவ்வாறே பிற அடிகளும் நெகிழ்ச்சி உடையன. கட்டளை அடியைப்போலக் கட்டுப்பாடு இல்லாமல், ஓரளவு நெகிழ்ச்சியுடன் அமைந்து இருப்பதால் தொல்காப்பியரின் எழுத்தளவு அடிகளைக் கட்டளை அடிகள் என்று கூறக் கூடாது. ஆகவே, தொல்காப்பியரின் எழுத்தளவு அடிகளை ‘எழுத்து வகை அடிகள்’ எனக் கூறுவதே பொருத்தமாகும்.
எழுத்து வகை அடிகள்தாம் முதலில் தோன்றியவை என்று பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் தம் உரைகளில் குறிப்பிட்டுள்ளார்கள். அதாவது, முதற் சங்கத்தாரும் இடைச் சங்கத்தாரும் எழுத்து வகை அடிகளால் பாட்டு யாத்தனர் என்றும் அம்முறையில் பாட்டு யாப்பது கடினம் என்பதால், அதனைக் கைவிட்டுச் சீர்வகையடியினைக் கொண்டனர் என்றும் மொழிந்துள்ளார்கள்.
அடியின் அமைப்பு, எண்ணிக்கை, பயின்றுவரும் முறை ஆகியவை பா வகைகளையும் பாவினங்களையும் வேறுபடுத்தப் பயன்படுகின்றன. இருசீர்க் குறளடி வஞ்சிப்பாவிலும், வஞ்சித்தாழிசையிலும், வஞ்சித் துறையிலும், இணைக்குறள் ஆசிரியப்பாவிலும், ஆசிரியத்துறையிலும், ஒத்தாழிசைக் கலிப்பாவின் மற்றும் கொச்சகக் கலிப்பாவின் அம்போதரங்க உறுப்பிலும் வரும். முச்சீர்ச் சிந்தடி வஞ்சிப்பாவிலும், வஞ்சி விருத்தத்திலும், வெண்பாவின் எல்லா வகைகளிலும், வெண்டுறையிலும், நேரிசை மற்றும் இணைக்குறள் ஆசிரியப் பாக்களிலும், வெண்டாழிசையிலும், ஆசிரியத் துறையிலும், கலித்தாழிசையிலும் இடம்பெறும்.
நாற்சீர் அளவடி நான்கு பா வகைகளிலும், வெண்பாவின் எல்லாப் பாலினங்களிலும், ஆசிரியத் தாழிசையிலும், ஆசிரியத் துறையிலும், கலித்தாழிசையிலும், கலி விருத்தத்திலும் பயின்று வரும். ஐஞ்சீர் நெடிலடி இணைக்குறள் ஆசிரியப்பாவிலும் ஒத்தாழிசைக் கலிப்பாவின் மற்றும் கொச்சகக் கலிப்பாவின் அராக உறுப்பிலும் காணப்படுகிறது. கழிநெடிலடி வெண்கலிப்பா தவிர மற்றக் கலிப்பாவகைகளிலும் வெண்டுறையிலும், ஆசிரியப்பாவின் மூன்று பாவினங்களிலும் பரிபாடலிலும் இடம் பெறுகிறது.
மேலே தரப்பட்டுள்ள விளக்கத்திலிருந்து நாற்சீர் அளவடி பெரும்பாலான பாக்களிலும் பாவினங்களிலும் அதிகமாகப் பயின்று வருகின்றமை புலனாகும். தொல்காப்பியரின் கருத்துப்படி, நாற்சீர்க் குறளடி முதல் நாற்சீர்க்கழிநெடிலடிகள் வரையுள்ள (4-20 எழுத்தடிகள்) யாவும் ஆசிரியப்பாவில் வரும். வெண்பாவில் நாற்சீர்ச் சிந்தடிகளும் அளவடிகளும் (7-14 எழுத்தடிகள்) பயின்றுவரும். நாற்சீர் அளவடியும் நெடிலடியும், கழிநெடிலடியும் (11-20 எழுத்தடிகள்) கலிப்பாவிற்குரியவை.
வெண்பாவிற்குக் குறைந்தது இரண்டு அடிகள் தேவை. வஞ்சிப்பாவிற்கும் ஆசிரியப்பாவிற்கும் குறைந்த அளவு எல்லை மூன்றடிகள். கலிப்பா குறைந்த அளவு நான்கு அடிகளால் ஆக்கப்படும். ஆசிரியத்தின் உயர்த்த அடியளவு ஆயிரம் என்று தொல்காப்பியமும் ‘வரையறை இல்லை’ என்று இடைக்கால நூல்களும் தெரிவிக்கின்றன. பொதுவாகக் கலிப்பாவின் உறுப்புகளுக்கே வெவ்வேறு குறைந்தளவு அடிகளும் அதிக அளவு அடிகளும் தரப்பட்டுள்ளன.
சில சலயங்களில் அடிகள் பாவின் பெயரோடு, அகவலடி, வெள்ளடி, கலியடி என்றும் சுட்டப்படுகின்றன. இயற்சீர், ஆசிரிய உரிச்சீர், வெண்சீர் ஆகிய சீர்களால் அமையும் அடிகள் அகவலடிகள். வெள்ளடிகள் வெண்சீர்களாலும் அவற்றால் ஆன வெண்டளைகளாலும் ஆக்கப்படும். கலியடிக்குத் தனியான சீர்கள் இல்லை; அது வெண் சீர்களால் ஆன கலித் தளையால் உருவாகும். சிற்சில இடங்களில் கலியடியில் இயற்சீர்களும் இடம் பெறுவதுண்டு 5,6,7 சீர்களால் ஆகும் முடுகியல் அடிகள் கலிப்பாவிலும் பரிபாடலிலும் இடம் பெறும்.அ.பி.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 241)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5b28vtp6/
தமிழ்“அடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5b28vtp6/APA
Oliyon Research. (2026). அடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5b28vtp6/MLA
"அடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5b28vtp6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment