கிழக்கிந்திய வணிகக்குழுவின் சார்பாக மராத்தியர்களுடன் கி.பி. 1776–இல் புரந்தர் உடன்படிக்கையைச் (Treaty of Purandar) செய்து கொண்டவர். மொகலாயப் பேரரசு கி.பி. 1707–ஆம் ஆண்டிற்குப்பின் செல்வாக்கிழந்தது. சிவாசி மன்னரின் பெரு முயற்சியால் உருவாக்கப்பெற்ற மராத்தியரின் மதிப்பு கி.பி. 1772–இல் நன்கு வளர்ந்திருந்தது. ஒழுங்கு முறைச் சட்டம் (Regulating Act) கி.பி. 1773–இல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. அதையடுத்து, முதல் அரசப்பேராளராகப் பதவியேற்ற வாரன் ஏசுடிங்சு (Warren Hastings) பம்பாய், சென்னை மாநிலங்களின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தார். உரோகில்லர்களை (Rohillas) ஒடுக்குவதற்கென்று நவாபு சுசா–உத்–தௌலாவிற்கு (Shuja–ud–daula) வாரன் ஏசுடிங்கு கி.பி. 1773–இல் உதவியளித்தார். வங்காளத்தில் ஆங்கிலேயரின் செல்வாக்கு வளர்ந்து வருவதை மராத்தியர் விரும்பவில்லை. ஐரோப்பியப் போர்முறைகளைக் கடைப்பிடித்தாலன்றி, ஆங்கிலேயரை வங்காளத்திலிருந்து வெளியேற்றவியலாது என்பது மராத்தியருக்கு நன்கு தெரிந்திருந்தது. எனவே, மராத்தியர் பிரெஞ்சுக்காரரின் உதவியை நாடினர். அவ்வமயம் ஐதர் அலியின் (Hyder Ali) கை ஓங்கியிருந்தது. பிரெஞ்சு அமைச்சரவை அவருடன் அரசியல் உறவு கொள்வதற்கு மிகவும் விழைந்தது. பாண்டிச்சேரியில் பிரெஞ்சு ஆளுநராகவிருந்த இலா (Law) என்பவர் மராத்தியரின் உறவு மிக்க பலனளிக்குமெனக் கருதினார். இறுதியில் இலாவின் பரிந்துரையின்படி பிரெஞ்சுக்காரர்கள் மராத்தியருடன் உடன்பாடு செய்துகொண்டனர். அமெரிக்காவில் கி.பி. 1774–இல் ஆங்கில, பிரெஞ்சுக் குடியேற்ற நாடுகளிடையே போர் மூண்டது. அதன் எதிரொலியாக இந்தியாவிலும் ஆங்கிலேய–பிரெஞ்சுப் போர்கள் நிகழ்ந்தன. இலாவையடுத்து மார்குவிசு பெல்லி கோம்பே (Marquess of Belle Combe) 8–1–1777–இல் பாண்டிச்சேரி ஆளுநராகப் பதவியேற்றார். பேசுவா மாதவராவ் உயிருடனிருந்தபோது ஐதர் அலியின் அதிகாரப் பெருக்குத் தடைபெற்றிருந்தது. மாதவராவ் இறந்த பின்னர் மராத்திய அரசியலில் குழப்பமேற்பட்டது. ஐதரின் செல்வாக்குப் பெருகத் தொடங்கியது. மாதவராவைத் தொடர்ந்து பதவியேற்ற நாராயணராவும் கொலையுண்டார். நாராயணராவும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையே நாடியிருந்தார். நாராயணராவின் மரணத்திற்குப்பின் மராட்டிய அரசியலில் பிளவு ஏற்பட்டது. இரகோபா என்பவர் ஆங்கிலே- யரின் உதவியுடன் தம் கட்சியை வலுப்படுத்த எண்ணினார். இரகோபாவின் வேண்டுகோளை ஏற்று 28–12–1774–இல் சால்செட்டு (Salsette) என்னுமிடத்தை ஆங்கிலேயர் கைப்பற்றினர். மற்றுமொரு தலைவரான நானா பட்நவிசு (Nana Fadnavis) கி.பி. 1775 சூன் மாதத்தில் பிரெஞ்சுக்காரருடன் நட்புக்கொள்ள விரைந்தார். இந்நிலையில் கி.பி. 1776–இல் தளபதி உப்டன் (Upton, Colonel) புனேவிற்குச் சென்று, புரந்தர் உடன்படிக்கையைச் செய்து கொண்டது மராத்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. அரசப்பேராளர் வாரன் ஏசுடிங்சு போரைத் தொடர்ந்து மராத்தியப் பகுதிகளைக் கைப்பற்ற விரும்பினார். அவருடைய கருத்தை அவரது நிருவாகக்குழு (Council) ஒப்புக்கொள்ளவில்லை. நிருவாகக்குழுவின் முக்கிய உறுப்பினரான பிரான்சிசு (Francis) என்பவருக்குத் தளபதி உப்டன் கருத்துக் கூறினார். நானா பட்னவிசின் திறமையையும் அரசியல் நுண்ணறிவையும் பிரான்சிசிற்கு உப்டன் எடுத்துரைத்தார். தார் (Dhar) என்னுமிடத்தில் 10–1–1775–இல் ஆனந்திபாய் அம்மையாருக்குப் ‘பாசிராவ்’ (இரண்டாம் பாகிராவ்) பிறந்த செய்தியை எடுத்துரைத்து, இரகோபாவின் (இரகுநாதரால்) செல்வாக்குத் தேய்ந்துவிட்டது என உணர்த்தினார். சிறந்ததோர் அரசியல் நுண்திறத்திற்கு (Diplomacy) எடுத்துக்காட்டாகப் புரந்தர் உடன்படிக்கை விளங்குகிறது. இயக்குநர் குழு (Court of Directors) வெட்டுரிமையைப் (Veto Power) பயன்படுத்தி நிருவாகக் குழுவின் முடிவைமாற்றியது. வாரன் ஏசுடிங்சு கி.பி. 1778–இல் புரந்தர் உடன்படிக்கைக்கு மீண்டும் உயிரளித்தார். மோசுட்டின் (Mostyn) என்பார் கி.பி. 1777–ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ஆங்கிலத் தூதுவராகப் பணியாற்றினார். மராத்திய–பிரெஞ்சு உறவை உரிய நேரத்தில் துண்டித்து, ஆங்கிலேயரின் செல்வாக்கைப் பாதுகாத்தவர் என்ற முறையில் கர்னல் உப்டன் பெரிதும் போற்றப்பட்டார். தி.வெ.கு. துணை நூல்கள் Majumdar, R.C. and Others, An Advanced History of India, 4th edition, Macmillan, Delhi, 1982. Sathyanathier, R. and Vasudeva Rao, N.T., History of India, Vol. III, S. Viswanathan (Pvt) Ltd., Madras, 1982.