இவை நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தடுப்பவை. நோய்கள் பரவுவதற்கு நுண்ணுயிரிகளே பெரிதும் காரணமாகின்றன. சீழ் எதிரிகள், பெரும்பாலும் மனிதன் மற்றும் விலங்கினங்களில் உள்ள நுண்ணுயிரிகளை அழிக்கப் பயன்படுகின்றன. மாறாக, நுண்ணுயிர்க் கொல்லிகள் (disinfectants) பெரும்பாலும், உயிரிலாப் பொருள்களில் (எ-டு: அறுவை செய்யப் பயன்படும் கருவிகள்) உள்ள நுண்ணுயிரிகளையே கொல்லப் பயன்படுகின்றன. ஆயினும், நடை முறையில் இவை இரண்டுமே ஓரே பொருளைக் கொண்டவையாகக் கருதப்படும். நுண்ணுயிர் கொல்லிகளைக் குறைந்த அடர்த்தியில் பயன் படுத்தும் போது, அவை சீழ் எதிரிகளாகப் பயனாகின்றன, சீழ் எதிரிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டன என்பதற்குச் சான்றுகள் உள்ளன. எகிப்தியர்கள் பண்டைக் காலத்தில், சீழ் எதிரிகளைப் பயன்படுத்தி, இறந்தவர்களின் உடலைப் பாதுகாத்து வந்துள்ளனர். செம்மெல் வெய்ஸ் எனும் மருத்துவப் பேராசிரியர் வியன்னாவில் உள்ள மகப் பேறு மருத்துவமனையில், பிணங்களை அறுவை செய்யும் இடத்திலிருந்து வரும் மாணவர்களை, அவர்களின் கைகளைக் குளோரினேற்றமடைந்த சுண்ணாம்பு நீரில் கழுவிய பின்பே, மகப் பேறு மருத்துவ மனைக்குள் வர வேண்டும் என ஆணையிட்டார்; சுண்ணாம்பு நீரில் கழுவிய பிறகே, மருத்துவ மனையில் ஏற்படும் நோய்த் தொற்றுகளின் விகிதத்தை 10%இலிருந்து 1% ஆகக் குறைத்துக் காட்டினார். லிஸ்டர் என்பார் 1867 ஆம் ஆண்டு சீழ் எதிர் அறுவை மருத்துவத்தை (aseptic surgery) அறிமுகப்படுத்தியதன் மூலம், அறுவை முறைகள் வெற்றிகரமாக நடைபெற வழி வகுத்தார். சீழ் எதிரிகளின் வகைகளும், அவை பயன்படுத்தப்படும் முறைகளும் 1. இயற்கைச் சீழ் எதிரி. சூரிய ஒளி, காற்று. 2. இயற்பியல் சீழ் எதிரி. கொதிக்க வைத்தல், எரித்தல், நீராவி, அயனிக் கதிர் வீச்சு. 3. வேதிச் சீழ் எதிரி. அ. அமிலம்: அசெட்டிக் அமிலம், பென்சோயிக் அமிலம், போரிக் அமிலம். ஆ. ஆல்கஹால்: எத்தில் ஆல்கஹால், ஐசோப்புரோப்பைல் ஆல்கஹால். இ. ஆல்டிஹைடு; ஃபார்மால்டிஹைடு. ஈ. குளோர்ஹெக்சிடின். உ. ஹாலோஜன், ஹாலோஜன் சேர்மங்கள்: குளோரின், குளோரோஃபோர், அயோடின், அயோடின் சேர்மங்கள். ஊ. கன உலோகம்; பாதரசச் சேர்மம், வெள்ளிச் சேர்மம், துத்தநாகச் சேர்மம். எ. நைட்ரோஃபுரான். ஏ. சாயம்:; ஜென்சியன் வயலட், அக்ரிடின் சாயம். ஐ. ஆக்சிஜனேற்ற காரணி: ஹைட்ரஜன் பெராக்சைடு. ஓ. ஃபீனால்கள்: ஃபீனால், குளோரோசைலினால், ரெசால்கள். சூரிய ஒளி: சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக் கதிர்கள் நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைக் கொல்லுகின்றன. காற்று. உலரச் செய்வதன் மூலம் பாக்டீரியாக்களை அழிக்கிறது. கொதிக்க வைத்தல். பொருள்களை 30 நிமிடம் கொதிக்க வைப்பதன் மூலம் பாக்டீரியாக்களை நன்கு அழிக்க முடியும். எரித்தல். காயங்களுக்குக் கட்டுப் போட்ட துணிகள் முதலியவற்றை எரிப்பதன் மூலம் பாக்டீரியாக்களை அழிக்க முடியும். நீராவி. பொருள்களை நீராவி எந்திரத்துள் (autoclave) வைத்து 100°C வெப்ப நிலையில், 5 நிமிடம் கொதிக்க வைப்பதன் மூலம், எல்லா நுண்ணுயிரிகளையும் கொல்ல முடியும். அயனியாக்கக் கதிர் வீச்சு. அறுவை மருத்துவக் கருவிகள் அயனியாக்கக் கதிர் வீச்சு முறையில் நுண்ணுயிரி நீக்கம் செய்யப்படும். அசெட்டிக் அமிலம். இது 1% கரைசலில் தீப் புண்களில் பயன்படுகிறது. இது டோமோனஸ் எனும் பாக்டீரியாவை எதிர்க்க வல்லது. பென்சோயிக் அமிலம். இது உணவுப் பொருள்களைக் கெடாமல் காக்கும் பொருளாகப் (preservative) பயன்படுகிறது. இதற்கு நச்சுத் தன்மை குறைவு; சுவையற்றது; எனவே, இது உணவுப் பொருள்களில் சேர்க்கப்படுகிறது. இது 0.1% அடர்த்தியில் பாக்டீரியாக்கள், காளான்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. போரிக் அமிலம். இது பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது, காயங்களுக்காகத் தோலில் இதைத் தடவும் போது, உள்ளுறிஞ்சப்பட்டு நச்சுத் தன்மையை ஏற்படுத்தக் கூடும்; எனவே, சீழ் எதிரியாக இதைப் பயன்படுத்தக் கூடாது. எத்தில் ஆல்கஹால். இது 70% அடர்த்தியில் சிறந்த பாக்டீரியா கொல்லியாக இயங்குகிறது. இது பாக்டீரியாக்களின் புரதங்களை வீழ்படிவு அடையச் செய்வதாகக் கருதப்படுகிறது. அறுவை மருத்துவம் செய்யும் முன்னும், ஊசி செலுத்தும் முன்னும், தோலைத் தூய்மைப்படுத்த, பரவலாகப் பயன்படுகிறது. ஐசோபுரோப்பைல் ஆல்கஹால். இது 50% அடர்த்தியில், எத்தில் ஆல்கஹாலுக்கு இணையான சீழ் எதிரியாக உள்ளது. ஃபார்மால்டிஹைடு. இது 2-8% அடர்த்தியில் அறுவை மருத்துவக் கருவிகளையும், கையுறைகளையும் தூய்மைப்படுத்தப் பயன்படுகிறது. நுண்ணுயிரிகளால் ஏற்படும் சிதைவிலிருந்து பிணங்களையும், பிரித்தெடுக்கப்பட்ட உறுப்புகளையும் பாதுகாத்து வைக்கப் பயன்படுகிறது. குளோர்ஹெக்சிடின். அறுவை மருத்துவத்துக்கு முன், மருத்துவர்கள் கைகளைக் கழுவவும், நோயாளிகளின் தோலைத் தூய்மைப்படுத்தவும் 4% அடர்த்தியில் இது பயன்படுகிறது. பிறந்த குழந்தைகளைக் குளிப்பாட்டும் போதும் பயன்படுகிறது. குளோரின். இது தனிம நிலையிலும் நீராற்பகுப்புக்கு உட்படும் போதும், ஹைப்போகுளோரஸ் அமிலத்தை வெளியிடுவதன் மூலம், சீழ் எதிரியாக இயங்குகிறது. இது வளிம நிலையில் இருப்பதால், தற்போது பெரும்பாலும் குளோரின் சேர்மங்களே பயன்படுகின்றன. குளோரினேற்றமடைந்த சுண்ணாம்பு. இது பெரும்பாலும், குடி நீரைத் தூய்மைப் படுத்தப் பயன்படுகிறது. இது உறுத்தும் தன்மை வாய்ந்ததாகையால், உடலில் இதைப் பயன்படுத்த முடியாது. ஓர் ஆண்டிற்கு மேல் இதை வைத்திருந்தால், இதன் வீரியம் குறையத் தொடங்கும்; ஆயிரம் காலன் நீரைத் தூய்மை செய்ய ஓர் அவுன்ஸ் தேவைப்படுகிறது. இது குளோரினை வெளியிடுவதன் மூலம், பாக்டீரியா கொல்லியாகச் செயல்படுகிறது. அயோடின். இது விலை குறைவான—நச்சுக் குறைவான ஆனால், ஆற்றல் வாய்ந்த சீழ் எதிரி ஆகும். அயோடின் ஆல்கஹால் கரைசல் 2% அயோடினைக் கொண்டது; இது அறுவை மருத்துவத்துக்கு முன் தோலைத் தூய்மைப்படுத்த உதவுகிறது; இது சிலரிடத்தில் தோல் எரிச்சலை ஏற்படுத்தக் கூடும். போவிடோன் அயோடின். இது பாலிவினைல் பைராலிடோன், அயோடின் ஆகியவற்றின் கூட்டு ஆகும். இது அயோடினை நாட்பட வெளியிடுகிறது. அயோடின் ஆல்கஹால் கரைசல்களை விட, இது தோல் எரிச்சலைக் குறைவாக ஏற்படுத்துகிறது. பாதரசச் சேர்மம். இது மெர்குரிக் குளோரைடு, மெர்க்குரோகுரோம் ஆகும். மெர்க்குரிக் குளோரைடு. இது பாக்டீரியாக்களின் சல்ஃபைட்ரில் தொகுதியுடன் இணைவதன் மூலம் இயங்குகிறது. இது தோலில் உள்ள நுண்ணுயிரிகளை எதிர்க்கிறது. மெர்க்குரோகுரோம். இது பாதரசத்தின் கரிம வழி வந்த மருந்தாகும். இதுவும் தோலில் உள்ள நுண்ணுயிரிகளை அழிக்கப் பயன்படுகிறது. இது வலிமை குறைவான நுண்ணுயிரி எதிர் இயக்கம் கொண்டது என்பதால், இது இன்னும் பயன்படுத்தப்பட்டு வருவது விரும்பத்தக்கது அன்று. வெள்ளிச் சேர்மங்கள். வெள்ளி நைட்ரேட் 1% கரைசல், பிறந்த குழந்தைகளின் இமை இணைப் படல அழற்சியில் (conjuctivities) சொட்டு மருந்தாகப் பயன்பட்டு வந்தது. வெள்ளி சல்ஃபாடயசின். இது தீப்புண்களில் தடவும் களிம்பு மருந்தாகப் பயனளிக்கிறது. துத்தநாக உப்புகள். துத்தநாக ஆக்சைடு, பல்வேறு தோல் நோய்களில் தடவும் மருந்தாகப் பயன்பட்டு வருகிறது. நைட்ரோ..பியூரான்கள். நைட்ரோஃபுரசோன், தீப்புண்களில் தடவும் மருந்தாகச் சிறந்த பயனளிக்கிறது, ஜென்சியன் வயலெட். இது பாக்டீரியாக்களையும், காளான்களையும் எதிர்க்கிறது. இது 10% ஆல்கஹாலில் 1% கரைசலாகத் தோலில் தடவப்படுகிறது. இது பயன் மிக்க மலிவான மருந்தாகும்; ஆனால், அழுகிய கரிம திசுக்களால் இது செயலிழக்கப்படுகிறது. அக்ரிடின் சாயங்கள். அக்ரிஃபிளேவின், புரோஃப்ளேவின் ஆகியவை ஜெனிசியன் வயலெட்டை விடத் திறன் வாய்ந்தவை. ஹைட்ரஜன் பெராக்சைடு. சீழ்க்கட்டிகளில் 3-6% கரைசலாக இதை ஊற்றும் போது, பிறப்பு (nascent) ஆக்சிஜனை இது வெளியிடுகிறது. இவ்வாறு வெளியிடப்படும் ஆக்சிஜன் குமிழ்கள், கரிமப் பொருள்களையும், சீழையும் வெளியேற்ற உதவுகின்றன. ஃபீனால் (கார்பாலிக் அமிலம்). இது அரிக்கும் தன்மை வாய்ந்தது. இது 1:70 என்ற நீர்த்த அளவில் 10 நிமிடங்களில் பாக்டீரியாக்களைக் கொல்கிறது. காயம், புண்களில் தடவும் போது, இது உள்ளுறிஞ்சப் பட்டு, நச்சை ஏற்படுத்தக் கூடும்; எனவே, உடலில் சீழ் எதிரியாகப் பயன்படுத்த இது ஏற்ற மருந்து அன்று. குளோரோசைலினால். இது 5% கரைசலில் திறன் வாய்ந்த சீழ் எதிரியாகப் பயன்படுகிறது. டெட்டால் எனும் வணிகப் பெயரில் இது விற்கப்படுகிறது. கிரசால். இது ஃபீனாலை விட நச்சுக் குறைவான, ஆனால், திறன் வாய்ந்த சீழ் எதிரியாகும், எத்திலீன் டை ஆக்சைடு வளிமமும், காமாக் கதிர் வீச்சும் தொற்று நீக்கியாக உள்ளன. நடைமுறையில் உள்ள சில சீழெதிர் முறைகள் மலம், சிறுநீர். இவற்றில் நுண்ணுயிரிகளை நீக்க இவை ஒரு பாத்திரத்தில் சேகரிக்கப்பட வேண்டும். பின், இவற்றிற்குச் சம அளவு குளோரினேற்றமடைந்த சுண்ணாம்பைப் பாத்திரத்தில் இட்டு, இரண்டு மணி நேரம் வைத்திருந்தால், இவற்றிலுள்ள நுண்ணுயிரிகள் அழிந்து விடும். அறைகள். அறைகளின் சுவர்களையும் தரைகளையும் சோப்பு நீரில் கழுவி விட வேண்டும். ஃபீனால் 5% கரைசல் அல்லது 10% ஃபார்மால்டிஹைடு கரைசலைக் கொண்டு, தரைகளையும் சுவர்களையும் துடைக்க வேண்டும். பார்மால்டிஹைடைக் கொதிக்க வைத்து, அதன் நீராவியை 6 மணி நேரம் அறையில் இருக்குமாறு செய்வதன் மூலமும், அறைகளைச் சீழ் எதிர் நுண்ணுயிரிகளிலிருந்து காக்கலாம். தொற்று நோயாளியின் உடைகள். இவற்றில் நோயாளி மலம் கழித்திருந்தால், இவற்றை 2.5% கிரசால் கரைசலில் 12 மணி நேரம் நனைய வைத்து, பின் துவைக்க வேண்டும். பிணங்கள். பிணங்களைச் சீழ் எதிரிகளிலிருந்து பாதுகாக்க, இவற்றை 40% ஃபார்மால்டிஹைடு கரைசலில் நனைத்து வைக்க வேண்டும். அறுவை மருத்துவக் கருவிகள். இவற்றை ஃபினால் கரைசலில் நனைத்து எடுப்பதன் மூலம், இவற்றிலுள்ள நுண்ணுயிரிகளை அழிக்கலாம். —மு. துளசிமணி நூலோதி. F.S.K. Harar, Essentials of Pharmaco-therapeutics, S. Chand & Company, Ltd., New Delhi, 1985. <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு மேலே முடிவுற்றது. கீழே புதிய தலைப்பு ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->