கற்பித்தலுக்கான குறிக்கோளை முறைப்படி இனங்கண்டு, அதை நிறைவேற்றுவதற்காக அறிவியல் நுட்பம் சார்ந்த வகையில் செயற்படும் தன்மையே, அமைப்பு முறை வழிக் கற்பித்தலாகும் (Systems Design in Instruction). ஒரு குறிப்பிட்ட செயலைக் கற்பித்தல் குறிப்பிட்ட கால அளவில் நிறைவேற்ற உதவும் ஒரு திட்டமே அமைப்பு முறை (Systems Design) எனப்படும். இம்முறையில் கற்பிக்கும் சூழல், கற்பிக்கும் முறை, கற்பித்தலுக்கு உதவும் துணைப் பொருள்கள் ஆகியவற்றை முன்கூட்டியே முடிவெடுத்தல் தலையாயதாகும். அமைப்புமுறை வழிக் கற்பித்தலில் மிகுதியாகக் கல்வித் தொழில் நுட்பவியல் (Educational Technology) பயன்படுத்தப்படுகின்றது, கல்வித்திடப் பொறிகளான (Educational Hardwares) கணிப்பொறி (Computer), தொலைக் காட்சிப் பெட்டி (Television) திரைப்பட ஒளியுருப்படிவுக் கருவி (Projector) ஆகியனவும், கல்வி மென் பொருள்களான (Educational Softwares) பாடநூல், ஆசிரியர் கையேடு போன்றனவும் கல்வித் தொழில் நுட்பலியலில் அடங்கும். கற்பித்தல் செயலை அடுக்கடுக்கான படிகளாகப் பகுத்து, ஒவ்வொரு படியிலும் குறிக்கோளுக்கும் குறிக்கோளை அடையக் கூடிய ஒவ்வொரு கற்பித்தல் நிகழ்ச்சிக்கும், அமைப்பு முறை வழிக் கற்பித்தலில் தொடர்பு ஏற்படுத்தப்படுகிறது. அமைப்பு முறை வழிக் கற்பித்தலில் ஒரு பாடத்தையோ (Lesson) ஒரு தொடர் பயிற்சியையோ (Course), முழுக் கல்வித் திட்டத்தையோ (Curriculum) கற்பிக்க இயலும். அமைப்பு வகைகள் அமைப்பு, திறந்த அமைப்பாகவோ (Open System) மூடிய அமைப்பாகவோ (Closed System) இருக்கலாம். செய்தவற்றையே செய்யக்கூடிய பெரும்பாலான தானியங்கி இயக்கத்தால் ஏற்படும் செயல்கள் பற்றிய அமைப்பை மூடிய அமைப்பு எனவும், நடத்தை இலக்குகளை ஒட்டி ஏற்படும் பிற அமைப்புகளின் செயல் விளைவுகளால் பாதிக்கப்படும். செயல்கள் பற்றிய அமைப்பைத் திறந்த அமைப்பு எனவும் குறிப்பிடலாம். கல்வி அமைப்பு ஒரு திறந்த அமைப்பாகவே செயற்படுகிறது. அமைப்பின் உட்கூறுகள் ஒவ்வொரு அமைப்பும் உள்ளீடு (Input), செயற்பாங்கு (Process), வெளியீடு (Output) என்ற அடிப்படையான உட்கூறுகளைப் பெற்றிருக்கிறது. இவ்வடிப்படை உட்கூறுகளின் கூட்டமைப்பைப் பின்வரும் படவிளக்கம் மூலம் எளிதில் காணலாம். உள்ளீடு — → செயற்பாங்கு — → வெளியீடு பதனிடப்படாமல் முதலில் அளிக்கப்படும் பொருள்கள் உள்ளீடு என்றும், அம்மூலப் பொருள்களைப் பதனிடப்படுத்தும் முறை செயற்பாங்கு என்றும், பதனிடப்பட்ட பின் எண்ணிய விளைவுகளைப் பெற்ற பொருள்கள் வெளீயீடு என்றும் வழங்கப் பெறும். இயற்கையான திறன்களோடு (உள்ளீடு) வரும் மாணவர், பள்ளியில் நிகழும் கற்பித்தல் (செயற் பாங்கு) மூலம் புதிய திறன்களோடு (வெளியீடு) வெளி வருவதும் ஓர் அமைப்பு ஆகும். பாடம் கற்பித்தபின், மாணவர் திறன்கள் அளந்தறியப்படுகின்றன. அத்திறன்கள், கற்பித்தலின் நோக்கங்களை எட்டியுள்ளனவா என்று ஒப்பீடு செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் மறுபடியும் மாணவர்களுக்குக் கற்பித்தல் என்ற பின்னூட்டல் (Feed back) நடைபெறுகிறது. கல்வி கற்பித்தலில், ஆசிரியரே தம் கற்பித்தலை நேர்படுத்திக்கொள்ளக் கூடிய அமைப்பின் மாதிரியைப் பின்வரும் படம் விளக்குகிறது. கல்வி நிலையம் ஓர் அமைப்பு சமூக அமைப்பு என்பதை ஓர் அமைப்பாகக் கொண்டால் கல்வி என்பதை அதன் துணை அமைப்பாகக் கொள்ளலாம். கல்வியையே ஓர் அமைப்பாகக் கொண்டால் மேலும் அதைப் பல்வேறு துணை அமைப்புகளாகப் பிரிக்கலாம். பள்ளிக்கல்வி என்ற அமைப்பானது கல்வி என்ற அமைப்பின் துணை அமைப்பாகும். எடுத்துக்காட்டாக, கல்வி நிலையத்தை அமைப்பு எனக்கொண்டால், திட்ட இலக்குகள், திட்டங்கள் கட்டுப்பாடுகள் (Controls), விதிகள், விதிமுறைகள், அமைப்பின் கூறுகள், கற்பித்தலின் தொழில் நுணுக்கம், நிலையச் சூழல், மனிதச் செயற்பாடுகள் போன்றவை பள்ளி அமைப்பின் உள்ளீடு ஆகும். இவ்வுள்ளீடுகளின் ஒன்றிணைந்த உறவுகளின் செயற்பாட்டில் விளையும் பள்ளிச் சூழ்நிலை, வெளியீடு எனப்படும். இதனைப் பின்வரும் கருத்தியல் மாதிரி மூலம் அறியலாம். பள்ளிக்கூடத்தை ஓர் அமைப்பாகக் கொண்டால் வகுப்பறைப் பாடம் பயிற்றல் என்பது ஒரு துணை அமைப்பாகும். பின்வரும் வரிசை முறையான மாணவரின் நுழைவு நடத்தை என்பது, அம்மாணவர் கற்பித்தலுக்கு முன் இயல்பாகப் பெற்றுள்ள திறன்களைக் குறிக்கும். மாணவரின் நிறைவு நடத்தை என்பது, அம்மாணவர் கற்பித்தலுக்குப்பின் பெற்ற புதிய திறன்களைக் குறிக்கும். படங்கள், வகுப்பறைப் பாடம் பயிற்றலையும் அதன் வரிசை முறையான வழிகளையும் குறிக்கின்றன. மாணவரின் நுழைவு நடத்தை (Entry Behaviour) உள்ளீடாகவும், பாடம் பயிற்றல் செயற்பாங்காகவும், மாணாக்கரின் நிறைவு நடத்தை (Terminal Behaviour) வெளியீடாகவும் கொண்ட பாடம் பயிற்றுதல் அமைப்பின் பல்வேறு நிலைகளைக் கீழ்க்கண்ட பட விளக்கம் மூலம் காணலாம். பாடம் பயிற்றல் — படிநிலைகள் பள்ளிப்பாடம் பயிற்றல் ஓர் அமைப்பு ஆகும். மாணாக்கர்கள் தங்களுடைய அறிவு, திறன், திறமை, மனப்பாங்கு, ஊக்கம் எனப் பற்பல பண்பு நலன்களுடன் பள்ளிக்கு வருகின்றனர். இம்மாணாக்கர்களிடம் புதிய அறிவுத் திறன்கள், விரும்பத்தக்க மனப்பாங்கு, நிறை நலன்கள் ஏற்பட வேண்டும் என்பதே கல்வி கற்பித்தலின் திட்ட இலக்குகள். இத்தகு திறன்களை “வெளியீடு” ஆக மாணவர் பெறுவதற்கு ஆசிரியர், மாணாக்கர், பாடங்கள் என முக்கூற்று உறவு இன்றியமையாதது. இம்முக்கூற்று உறவைத் திட்டங்கள், மாதிரிகள், குறிக்கோள்கள், கட்டுப்பாடுகள், உத்திகள், மனிதச் செயற்பாடுகள், சூழ்நிலை என்ற பல்வேறு உட்கூறுகள் உண்டாக்குகின்றன. மாணவர்கள் செய்வதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட “வெளியீடுகள்” மாணவர்களிடம் ஏற்பட்டுள்ளனவா என்று அறிய முடிகிறது. மீள் கற்பித்தல் என்னும் “பின்னூட்டல் வளையம்” ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு உட்கூற்றிலும் விரும்பத்தகு கல்வி விளைவுகள் ஏற்படுத்த ஏதுவாக அமைகிறது. கற்பித்தல் அமைப்பின் முதன்மையான கூறுகளாகக் கருதப்படுபவை பல்வேறு பண்பு நலன்களுடன் கூடிய மாணாக்கர், ஆசிரியர் மற்றும் அனைத்துக் கற்பித்தல் நுட்பவியலின் கூறுகளும் ஆகும். ஆசிரியர் (பேசுநர்), மாணவர் (கேட்குநர்) என்ற இரு தலையாய உட்கூறுகளும் இடையறாத, ஒன்றோடு ஒன்று பின்னிய உறவு (Interaction) கொண்டுள்ளன என்பதே கற்பித்தல் அமைப்பு அணுகுவியலின் அடிப்படைத் தன்மையாகும். ஓர் அமைப்பிற்கு வரை வடிவம் (Design) கொடுக்கும் பொழுது ஆசிரியர்களின் எவ்வகையான பண்புகள் (Teacher Variables) இன்றியமையாதவை? மாணவர்களின் எவ்வகையான பண்புகள் (Learner Variables) தேவையானவையாக, ஏற்றவையாகக் கருதப்பட வேண்டும்? எவ்வகையான வகுப்பறைப் பண்புகள் (Situational Variables) எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்? என்ற வினாக்கள் எப்பொழுதும் எழுகின்றன. மேலும் இக்கற்பித்தல் அமைப்பிற்கு எல்லைகளை எவ்வாறு வரையறுப்பது என்ற கேள்வியும் எழுகிறது. கற்பித்தல் அமைப்பியலின் மற்றொரு சான்றாக, உளவியல் அடிப்படையில் அமைக்கப்பட்ட இராபர்ட்டு கிளேசர் (Robert Glaser) என்பாரின் கற்பித்தல் பற்றிய கருத்துரு மாதிரியைக் கூறலாம். பாடத்திட்டத்தின்படி பாடப் பகுதிகளை இம்முறையில் ஆசிரியர் மாணவரின் திறன் வேறுபாட்டிற்குத் தகுந்தாற்போல வரிசைப்படுத்த வேண்டும். மேலும் இப்பாடப் பகுதிகளை அறிந்து கொள்ள மாணவர்களிடம் எவ்வகையான நிறைநிலைத் துலங்கல்கள் (கற்றல் திறன்கள்) ஏற்படும் எனத் தீர்மானித்தல் வேண்டும். பின், மாணாக்கரின் நுழைவு நடத்தைத் தகுதியிலிருந்து மாணாக்கர்களை நிறை நடத்தைக்குக் கொண்டு வருவதற்குக் கற்பித்தல் செயல்முறைகளை எவ்வகைத் துணைப் பொருட்களைக் கொண்டு எவ்வாறு நடத்துதல் வேண்டும் என்றும் ஆய்வு செய்ய வேண்டும். பின் இப்பாடம் கற்பிப்பதன் மூலமாக வரையறுத்த இலக்குகளை, மாணாக்கர்கள் தம் நிறை நிலை நடத்தையினை வெளிப்படுத்தும் பாங்கினை அளவிடவும் மதிப்பிடவும் வேண்டும். கிளேசரின் கற்பித்தல் வரைபட விளக்கத்தைப் பின்வரும் கருத்தியல் மாதிரி விளக்குகிறது. கற்பித்தல் அமைப்பின் வளர்ச்சி கல்வி இலக்குகளை அடைய வரையப்படும் எந்தக் கற்பித்தல் அமைப்பிலும் மூன்று அடிப்படை நிலைகள், வரைதல் (Design), வளர்ச்சி (Development), மதிப்பிடுதல் (Evaluation) ஆகியனவாகும். இம்மூன்று அடிப்படை நிலைகளிலும் காணப்படும் செயல்களைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம். 1. இயலுமா என்பதை அறிய, சிறிய அளவில் செய்து பார்த்தல்; 2. செயல் பகுப்புகளை ஆய்தல்; 3. கற்றல் குறிக்கோள்களை விரிவுபடுத்தல்; 4. இறுதி நடத்தைத் தேர்வைத் தயாரித்தல்; 5. இறுதி நடத்தைத் தேர்வைத் தகுதிப்படுத்தல் (Validation); 6. கற்றல் குறிக்கோள்களைத் தகுதிப்படுத்தல்; 7. கல்வி வளர்ச்சிப்படிகளைத் தயாரித்தல்; 8. கல்வி வளர்ச்சி நிலைகளைத் தயாரித்தல்; 9. ஒவ்வொரு பாடத்தையும் தயாரித்தல்; 10. தயாரித்த பாடத்தைத் தகுதிப்படுத்தல்; 11. அமைப்பை மேற்கொள்ளல் மற்றும் தேர்விடல்; 12. மேல்தொடரல். பின்னூட்டல் வளையம் கல்வியில் அமைப்பு முறை கல்வியில் அமைப்பு முறை அணுகலைப் பயன்படுத்தும்போது நோக்கங்- கள் தெளிவாகக் குறிக்கப்படுகின்றன; அமைப்பில் ஈடுபடுவோரின் பங்குகளும் பொறுப்புகளும் தெளிவாகச் சுட்டப்படுகின்றன. பயனுடைய வழிகள் இனங்காணப்படுதலோடு இடையூறுகள் என்ன என்று முன்னரே தெளியப்படுகின்றன. பாடத் திட்டம் வரைதல், பயிற்றுவிக்கும் பொருள்கள், அவற்றைப் பயன்படுத்தல் முதலியன சிறந்த முறையில் அமைக்கப்படுகின்றன. பின்னூட்டல் வளையம், உள்ளீட்டையும், செயற்பாட்டையும் ஆராய்ந்து ஆசிரியர்கட்கும் மாணாக்கர்கட்கும் தேவைப்பட்ட மற்றங்களை உடனுக்குடன் தெரிவிக்கிறது.ஜெ.கோ.பி. துணை நூல்கள் Albert F. Eiss, “Evaluation of Instructional Systems”, Gordon & Breach, Science Publishers, New York, 1970. Banghart, Frank, W., “Educational System Analysis”, Collier Macmillan, London, 1969. Kaufman, R. A, “Educational System Planning”, Prentice Hall, New Jercy, 1972.