பகு திறன்
paku tiṟaṉ
ஒரு பொருளின் தோற்ற அளவு, அது கண்ணில் அமைக்கும் பார்வைக் கோணத்தைப் பொறுத்தது.
ஒரு பொருளின் தோற்ற அளவு, அது கண்ணில் அமைக்கும் பார்வைக் கோணத்தைப் பொறுத்தது. பார்வைக் கோணம் அதிகரிக்கும் போது, பொருளின் அளவும் அதிகமாகத் தோன்றும். இரு பொருள்கள் கண்ணில் ஏற்படுத்தும் பார்வைக் கோணத்தின் வேறுபாடு 1'க்கும் குறைவாக இருந்தால், இவ்விரு பொருள்களையும் தனித்துக் காண முடியாது. இதையே கண்ணின் பகு திறன்(resolving power) என்பர்.
பார்வைக் கருவி அமைப்பில் தலையாய செயல், கருவியின் பார்வைக் கோணத்தை அதிகரிப்பதேயாகும். இவ்வாறு பார்வைக் கோணத்தை அதிகரிக்கச் செய்யும் கருவிகள் உருப் பெருக்கு கருவிகள் எனப் படும். பார்வைக் கருவியின் பகு திறன் என்பது ஒரு பொருளைப் பற்றிய நுண்ணமைப்புகளைத் தெளிவாகக் கண்ணிற்கு ஏற்படுத்தும் திறன் ஆகும். பார்வைக் கருவி, ஒரு புள்ளிப் பொருளின் பிம்பத்தை ஒரு புள்ளியாகத் தராமல், விளிம்பு விளைவு வளையங்களை உண்டாக்கும். இரு பொருள்களின் விளிம்பு விளைவு வளையங்கள் மேற்பொருந்தாமல் இருக்கும் போது மட்டுமே அப்பொருள்கள் பகுக்கப் படும். இதற்கான ராலே நிபந்தனையைக் கீழ்க் காணுமாறு கூறலாம். ஒரு பொருளின் விளிம்பு விளைவு மையப் பெருமம் அருகிலுள்ள மற்றொரு பொருளின் விளிம்பு விளைவு முதல் சிறுமத்துடன் பொருந்தும் போது, அப்பொருள்கள் பகுக்கப் படும்.
ஒரு நுண்ணோக்கியினால் தெளிவாகப் பார்க்கப் படும் அருகருகே உள்ள இரு பொருள்களின் மீச்சிறு இடைத் தொலைவு எல்லை x = \frac {\lambda} {2\mu sin x} ஆகும்.இதில் λ ஒளியின் அலை நீளமாகும். μ ஊடகத்தின் ஒளி விலகல் எண். 2α என்பது புள்ளிப் பொருள்கள் பொருளருகு வில்லையுடன் ஏற்படுத்தும் கோணமாகும்.
இச்சமன்பாட்டின்படி, கருவியின் பகு திறன் அதிகரிக்க வேண்டுமாயின், பார்வைக் கோணம் 2α மிக அதிகமாக இருத்தல் வேண்டும். வில்லையின் குவியத் தொலைவு மிகக் குறைவாக (2/3, 1/6, அல்லது 1/12 அங்குலம்) இருத்தல் வேண்டும்.
ஆபேயின் எண்ணெய் அமிழ்ப்பு பொருளருகு வில்லை பகு திறன் மிக அதிகம் பெற்றதாகும். இதில் உள்ள செடார் மர எண்ணெயின் அடர்வு காரணமாக, ஒளி விலகல் எண் அதிகரிக்கப் படுவதால், பகு திறனும் அதிகரிக்கிறது. மேலும், ஒளியின் அலை நீளத்தைக் (λ)குறைப்பதாலும், பகு திறனை அதிகரிக்கலாம். இந்த வகையில், புற ஊதாக் கதிர் நுண்ணோக்கி அமைக்கப் படுகிறது. கண்ணுறும் ஒளியை ஒப்பிட அலைநீளம் λ பாதியாகக் குறைக்கப் படுவதால், பகு திறன் இரு மடங்கு உயர்கிறது.
எதிரொளிப்பு நுண்ணோக்கியில் பொருள் மிகத் தொலைவில் இருந்த போதும், நுண்ணோக்கியின் பகு திறன் அதிகமாக உள்ளது. எலெக்ட்ரான் நுண்ணோக்கி எலெக்ட்ரான்களுடன் செறிந்துள்ள அலைகளால் செயல் படுகிறது. எலெக்ட்ரான்களின் வேகம் அதிகரிக்கும் போது, அதன் அலை நீளம் குறைவதால், நுண்ணோக்கியின் பகு திறன் மிக அதிகமாகிறது. ஒளியியல் நுண்ணோக்கியை விட இந்நுண்ணோக்கியினால் பெறப் படும் பகு திறன் 1,00,000 மடங்கு அதிகமாகும்.
தொலை நோக்கிகள். அருகருகே உள்ள இரு புள்ளிகள் தொலை நோக்கியின் பொருளருகு வில்லையில் ஏற்படுத்தும் கோணம் Φ எனில், தொலை நோக்கியின் பகுப்பு எல்லை \phi = 1.22 \frac {\lambda}{a} ஆகும். இதில் λ என்பது ஒளியின் அலை நீளம். a பொருளருகு வில்லையின் விட்டம். விட்டம் அதிகமானால், தொலை நோக்கியின் பகு திறன் அதிகரிக்கும். எதிரொளிப்பு வகைத் தொலை நோக்கிகளுக்கும் இச்சமன்பாடு பொருந்தும்.
கண்ணினுடைய பகுப்பு எல்லை = 60 நொடி கோணம் யெர்க்கினஸ் ஒளி விலகு தொலை நோக்கியின் பகுப்பு எல்லை = 15 நொடி கோணம் பலோமர் குன்றில் உள்ள எதிரொளிப்பு வகைத் தொலை நோக்கியின் பகுப்பு எல்லை = 03 நொடி கோணம்
இவற்றிலிருந்து கண்ணுடன் ஒப்பு நோக்கும் போது, ஒளியியல் கருவிகளின் பகு திறன் மிகுந்துள்ளமையை அறியலாம். —ரெ. ஆறுமுகம்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 375)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/54rpm888/
தமிழ்“பகு திறன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/54rpm888/APA
Oliyon Research. (2026). பகு திறன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/54rpm888/MLA
"பகு திறன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/54rpm888/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment