இந்திய வேளாண்மைப் பொருள்களின் தரத்தை உறுதிசெய்து, அவற்றை வரையறுக்கும் விற்பனைக் குறியீடு ஆகும். தரத்திலும் அளவிலும் ஒரே வகையான வேளாண்மைப் பொருள்களை உற்பத்தி செய்வது இயலாத ஒன்று. மண்வள வேறுபாடு, இயற்கைச் சூழலில் மாற்றம், பயிர் தாக்கு நோய்கள் ஆகியவற்றால் விளைபொருள்களின் தரம் பெரிதும் மாறுபடுகிறது. எனினும் இயன்ற அளவு விற்பனைக்கு வரும் விளைபொருள்களின் தரத்தை மையமாகக் கொண்டு அக்மார்க்குக் குறியீடு (Agmark) வழங்கப்படுவதால், பொருள்களை ஒன்று சேர்த்து ஏலத்திற்குவிட வசதி ஏற்படுகிறது. சிறு உழவர்களின் எதிர்பார்ப்பு, விற்பனைக் கூடத்தில் பாதுகாக்கப்பட்டு நல்ல விலை கிடைக்க ஏதுவாகிறது. வணிகர்கள், இடைத்தரகர்கள் ஆகியோரைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. ஆகவே, விற்பனைக்கு வரும் வேளாண்மை விளைபொருள்களைத் தரம் அறிந்து பிரிப்பதற்கு ஓர் அமைப்பும் ஒருங்கிணைந்த வழிமுறையும் இன்றியமையாதன. தரத்தை வரையறை செய்வதுடன் குறிக்கோள் முடிவுறுவதில்லை. தரம் வரையறை செய்யப்பட்டு விளைபொருள்கள் நுகர்வோரைச் சென்றடையும்வரை, இடைப்பட்ட காலங்களில் அவற்றின் தரம் குறைந்து போகும் வாய்ப்புண்டு. ஆகவே, தரத்தின் வேறுபாடுகளைக் கண்டறிய ஓர் அளவுகோலாகவும், அனைவருக்கும் பொதுவான குறியீட்டு மொழி ஒன்றைப் பயன்படுத்தவும், 1937-இல் வேளாண்மை விளைபொருள்களின் (தரமும் அளவும் பற்றிய) சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் தரக் கட்டுப்பாட்டை வரையறை செய்வதன் மூலம் நுகர்வோரையும் உற்பத்தி செய்வோரையும் பாதுகாக்க வழிசெய்கிறது. நாட்டில் விற்கப்படும் அல்லது வாங்கப்படும் விளைபொருள்களின் தரத்தை எவ்வகையில் வரையறை செய்வது என்பதைத் தெளிவாக்குகிறது. தரத்தை மையமாகக் கொண்டு விளைபொருள்களுக்கு ஒழுங்கான விலை கிடைக்கவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுமான நோக்கங்களைக் கொண்டு விளங்குகிறது. இச்சட்டத்தின்படி பிரிக்கப்படும் தரங்கள் அக்மார்க்குத் தரம் என வழங்கப்படுகின்றன. இவ்வாறு, வேளாண்மைப் பொருள்களின் தர வரையறையினை அனைத்துப் பொருள்களுக்கும் கட்டாயமாக்க விரும்பும் உற்பத்தியாளர் மட்டுமே இப்போது இதைப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்விதம் விரும்புவோர் வரையறை செய்யப்பட்ட தரத்தை மையமாகக் கொண்டு, தம் விளைபொருள்களுக்குத் தகுந்த சான்றிதழ் பெற விண்ணப்பம் செய்துகொள்ள வேண்டும். தரம் பிரித்துச் சான்றிதழ் வழங்கப்பட்ட ஒவ்வொரு மாதிரியிலும் வரையறை செய்யப்பட்ட தரமும் ‘அக்மார்க்கு’ என்ற சொல்லும் குறிக்கப்படுகின்றன. முதலில் இச்சட்டம் துகர்வோருக்கு மட்டும் பலன் அளிப்பதாக இருந்தது. அதனால், உற்பத்தி செய்வோருக்கும் உதவும் வகையில் தர வரையறை செய்ய, 1963-இல் வழி வகுக்கப்பட்டது. தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்துத் தரமறிந்து பல பிரிவுகளாகப் பிரிப்பதற்குத் தேவையான விதிமுறைகளை இச்சட்டம் உருவாக்கிக் கொண்டுள்ளது. இதை நிறைவேற்றத் தர வரையறை ஆய்வு இணையகம் செயல்பட்டு வருகிறது. உள்நாட்டு நுகர்வுப் பண்டங்களுக்கும் ஏற்றுமதிப் பண்டங்களுக்குமான தர வரையறை வழிமுறைகளை வகுத்து, அவற்றை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை விளைபொருள் விற்பனை அலுவலர் பெற்றுள்ளார். இதுவரை 122 விளை பொருள்களுக்குரிய தர வரையறைக் கோட்பாடுகள், 81 தர அளவு வரையறை விதிகளின் மூலம் வகுக்கப்பட்டுள்ளன. அக்மார்க்குத் தர வரையறையின் வழிமுறைகள் “அக்மார்க்கு” கோட்பாட்டுக்குள் தம் விளை பொருள்கள் வரவேண்டுமென விழையும் உற்பத்தி- யாளர் இதற்குத் தேவையான சான்றிதழை இந்திய அரசு வேளாண்மை விற்பனை அலுவலர் மூலம் பெறவேண்டும். இதற்கென நாகபுரியில் அமைக்கப்பட்டுள்ள தர வரையறை ஆய்வு இயக்ககத்தின் (Directorate of Marketing & Inspection) மேற்பார்வையில், அறிவிக்கப்பட்ட இடத்தில் தரம் பிரிக்கப்பட்டு அக்மார்க்குத் தரச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. இவ்விதம் தரம் பிரிக்கப்படும் அக்மார்க்குத் தரப் பொருள்களைத் தர வரையறை இணையக அலுவலர்கள், மாதிரி எடுத்து, மீண்டும் ‘மண்டல அக்மார்க்கு’ ஆய்வுக் கூடங்களில் ஆய்வு செய்து, வழங்கப்பட்ட அக்மார்க்குத் தரங்களை உறுதி செய்கிறார்கள். குறிப்பிடப்பட்டுள்ள அக்மார்க்குத் தரத்தில் மாறுதல் இருப்பது மேற்கூறிய ஆய்வுகளில் தெரிய வந்தால், தகுந்த தண்டனை அளிப்பதற்குத் தேவையான விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன. அக்மார்க்குத் தரத்தின் கீழ் வரும் அனைத்துப் பொருள்களின் குறிப்பிட்ட தரத்திற்கும் தூய்மைக்கும் வேளாண்மை விற்பனை அலுவலர் தம் உறுதியினை அளித்துச் சான்றிதழ் அளிக்கிறார். இதற்காக நாடு முழுவதும் 400 ஆய்வுக் கூடங்கள் செயல்படுகின்றன. இப்பணி, தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள வேளாண்மை விற்பனை இயக்ககத்தின் மேற்பார்வையில் நடைபெறுகிறது. தரக் கோட்பாட்டு வரையறை ஏற்படுத்தும் பல்வேறு விளைபொருள்களுக்கும், கால்நடைப் பொருள்களுக்கும் விற்பனை ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இவ்வாய்வுகளின் முடிவுகளை மையமாகக் கொண்டு, அனைத்து விளைபொருள்களுக்கும் பல்வேறு இடங்களிலிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு, விரைவு மறு ஆய்வுகன் நடத்தப்படுகின்றன. ஆய்வுக் கூடங்களில் ஆய்வு செய்ய இயலாத விளைபொருள்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்ட அலுவலர்கள் மூலம், அவர்களின் நேரடிப் பார்வையில் தரம் வரையறை செய்யப்படுகிறது. விளைபொருளின் மாதிரிகளின் மேல் முத்திரை வைப்பதன் மூலம் குறிப்பிட்ட தரம் நுகர்வோரைச் சென்றடையும்வரை அப்பொருள் பாதுகாக்கப்படுகிறது. முத்திரைகளில் வரிசை எண், வரையறை செய்யப்பட்ட தரம், நாள், எடை, மேற்பார்வை செய்த அலுவலரின் கையொப்பம் ஆகியன குறிக்கப்படுகின்றன. பழங்களில் (சாத்துக்குடி, ஆரஞ்சுப் பழங்கள் போல்வன) விட்டத்தை வைத்தும், (மாம்பழங்கள் போல்வன) எடைகளை வைத்தும் தரம் வரையறை செய்யப்படுகிறது. முட்டைகளின் தரமும் அவற்றின் எடையைப் பொறுத்தே பிரிக்கப்படுகிறது. முட்டைகளில் 4 தரக்கோட்பாடுகள் உள்ளன. முட்டைகளில் தேதிகள் குறிக்கப்படாததால், புதிய முட்டைகளைத் தரம் கண்டுகொள்வது இயலாது. இதைத் தவிர்ப்பதற்கு, அவ்வப்போது விற்பனை செய்யக் கூடிய அளவிற்கு மட்டுமே தர வரையறை இப்போது செய்யப்படுகிறது. உருளைக் கிழங்கு அளவைப் பொறுத்துத் தரம் பிரிக்கப்படுகிறது. இவை தவிர, கரும்பு வெல்லத்தில் மணல் கலக்கப்படுவதையும், துவரம் பருப்பில், ‘லேதைரிசம்’ என்னும் நோயை ஏற்படுத்தக் கூடிய ‘கேசரிப் பருப்புகள்’ கலக்கப்படுவதையும் தர ஆய்வுகள் வெளிப்படுத்த இயலும். உயூகாலிப்டசு (Eucalyptus) தைலத்தில் மண்ணெண்ணெயும் தர்பன்டைனும் (Turpentine) கலக்கப்படுவதையும் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. அக்மார்க்குத் தர வரையறை செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு 1938 – 39 – ஆம் ஆண்டுகளில் 0.15 கோடி உரூபாயாக இருந்து, 1979–80 – ஆம் ஆண்டுகளில் 251.97 கோடி உரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. ஏற்றுமதியில் அக்மார்க்கு விளைபொருள்களின் தரம் ஒன்றே ஏற்றுமதியில் முன்னேற்றம் காணச் சிறந்த வழியாகும். தரமான விளைபொருள்களை ஏற்றுமதி செய்யும்போது சிறு தவறு ஏற்பட்டுத் தரம் குறைந்துவிட்டாலும், வெளிநாடுகளில் மதிப்புக் குறைந்துபோகும் வாய்ப்புண்டு. மீண்டும் நல்லெண்ணத்தைப் பெறுவதென்பது கடினமானது. இதனால் நேரிடும் இழப்பினை ஈடுசெய்யவும் முடியாது. தர வரையறைச் சட்டம் (1945–இன்படி). இப்போது இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் 833 பொருள்களில் வேளாண்மைப் பொருள்களும் கால்நடையிலிருந்து கிடைக்கும் பொருள்களுமாக மொத்தம் 63 பொருள்கள் அடங்குகின்றன, தரமும் அளவும் வரையறை செய்யும் இணையகத்தின்கீழ் 41 விளைபொருள்கள் அடங்குகின்றன. ஏற்றுமதி ஆய்வுக் கழகம், இந்தியப் பட்டு ஏற்றுமதியாளர் ஒன்றியம், தேயிலை நிறுவனம், காப்பி வாரியம், முந்திரி ஏற்றுமதி ஊக்குவிப்புக் கழகம், உணவு நிறுவனம், இந்திய எண்ணெய் உற்பத்தியாளர் ஒன்றியம் போன்ற நிறுவனங்கள் தத்தம் பொருள்களின் தர வரையறையைக் கவனித்துக் கொள்கின்றன. கட்டாய ஏற்றுமதிச் (தரக் கட்டுப்பாடும் ஆய்வும் குறித்த) சட்டம் 1963-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் புகையிலை, கம்பளி, மிளகு, வெங்காயம், ஏலக்காய், மஞ்சள், சந்தனத்தைலம், இஞ்சி, கடலை எண்ணெய், சணல், பருப்பு வகைகள், பூண்டு, உருளைக் கிழங்கு போன்ற அனைத்து ஏற்றுமதி விளைபொருள்களும் கண்காணிக்கப்படுகின்றன. ஏற்றுமதியில் அக்மார்க்குத் தர வரையறை செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு, 1942–43-ஆம் ஆண்டுகளில் 0.29 கோடி உரூபாயிலிருந்து, 1978-79 -ஆம் ஆண்டுகளில் 377.38 கோடி உரூபாய் மதிப்பிற்கு ஏற்றம் பெற்றுள்ளது. வேளாண்மைப் பொருள்களின் தரமும் அளவும் பற்றிய சட்டத்தின் வழிமுறைகளைச் சீரிய முறையில் நடைமுறைப்படுத்த வேளாண்மைக்கான தேசியக் குழு, தனது அறிக்கையில் கீழ்க்கண்ட கருத்துகளைப் பரிந்துரைத்துள்ளது. தரமும் அளவு வரையறையும் விற்பனைக்கு வரும் அனைத்து விளைபொருள்களுக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும். கால்நடையிலிருந்து கிடைக்கும் பொருள்கள், காட்டில் விளையும் பொருள்கள், சிறிய அளவினாலான பிற விளைபொருள்கள் ஆகிய யாவும் மேற்கூறிய கட்டாயத் தர வரையறைக் கோட்பாட்டின்கீழ்ச் சேர்க்கப்பட வேண்டும். இப்போது வெவ்வேறு நிறுவனங்கள் தர வரையறை அலுவலில் ஈடுபட்டுள்ளதை மாற்றித் தர வரையறைக் கோட்பாட்டினை முடிவு செய்வது முதல், அதை நிறைவேற்றும் வரையுள்ள அனைத்துச் செயல்களையும் ‘தர வரையறை ஆய்வு இணையகத்திடம்’ ஒப்படைக்கவேண்டும். தர வரையறையைச் செயல்படுத்தும் பணியாளர் தகுந்த தேர்ச்சி பெற்றிருப்பதுடன், தர வரையறை ஆய்வு இயக்ககத்தின் அல்லது மாநில விற்பனைத் துறைகளின் பணியாளராகவும் இருத்தல் வேண்டும். ஏற்றுமதிப் பொருள்களின் மீது தரம், அளவு வரையறைக் கோட்பாட்டினைச் செயல்படுத்தும் உரிமை, மாநிலங்களிடமும் தர வரையறை ஆய்வு இயக்ககத்திடமும் இருக்கவேண்டும். மாநிலத்திற்குள்ளும் இதனைச் செயல்படுத்தும் உரிமை மாநில விற்பனைத் துறையிடம் இருக்கவேண்டும். சு.ரா.சு. துணை நூல்கள் Sbelar. V.M., and Dhankar. G.H., “Quality Control of Agricultural Commodities in India and some Foreign Countries”. A Review of Agricultural Marketing XXV (2) July, 1982.