அயலார்
ayalār
அயலார் தாம் வாழும் நாட்டின் குடியாக இல்லாதவர்.
அயலார் தாம் வாழும் நாட்டின் குடியாக இல்லாதவர். அவரை அயலார், அயல் நாட்டார் என்றும் கூறுவர். அவருடைய சட்ட நிலைமை நாட்டுக்கு நாடு வேறுபடுவதுண்டு. அயலார் தாம் வாழும் நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கக் கடமைப்பட்டவர், அவர் வாழும் நாட்டின் அரசு அவருடைய உடல், பொருள், மானம் மூன்றையும் பாதுகாக்கக் கடமைப்பட்டதாகும். அயலார் அடிபட்டாலும் அவதூறு செய்யப்பட்டாலும் திருடப்பட்டாலும், நீதி மன்றங்களில் வழக்குத் தொடரலாம். அயலார் சில வரையறை கட்டளைகளுக்குட்பட்டுத் தொழில்களிலும் வாணிகத்திலும் ஈடுபடலாம். குறிப்பிட்ட பதவிகள், தொழில் போன்றவற்றை மேற்கொள்ளுவதிலிருந்து முற்றிலும் தடைப்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, நீதிபதி வழக்கறிஞர், மற்றுமுள்ளோர் சொத்து வாங்கலாம், விற்கலாம். ஆனால் அவர் தங்கியுள்ள நாட்டுக்கு அந்த உரிமைகளைப் பறித்துக் கொள்ளவும் அவர்களை வெளியேற்றவும் உரிமை உண்டு. இந்த உரிமைகள் பெறுவதால் அவர்கள் தங்கும் காலம் முழுவதும் தங்கியிருக்கும் நாட்டுக்கு நம்பிக்கை உடையவர்களாக இருக்கவேண்டும். நாட்டை விட்டு அயலாரை அகன்று விடும்படி கூற எப்பொழுதும் அரசுக்கு அதிகாரமுண்டு. அயலார் தேர்தலில் வேட்பாளராக நிற்கவும், வாக்களிக்கவும், அரசில் பணியாற்றவும், இராணுவத்தில் பணியாற்றவும் முடியாது.
இந்தியாவில் ஓர் அயலார் வாழ்ந்து வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த அரசு அவருக்குச் சட்டத்துக்கு மாறாகத் தீங்கு ஏதாவது செய்தால், அதுபற்றி நீதிமன்றத்தில் அரசின்மீது வழக்குத் தொடுக்க அவருக்கு உரிமையுண்டு. அவர் நாட்டில் வாழும்போது இந்தியாவிலுள்ள யாரோ ஒரு தனி மனிதரால் அவருக்குத் தீங்கு விளைந்தால் அதுபற்றி அவர் இந்திய நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். ஆனால் அயல்நாட்டு அரசர் மீதும், அயல்நாட்டுத் தூதர் மீதும் இந்திய நீதி மன்றங்களில் வழக்குத் தொடர முடியாது. அரசு அயலாரைக் காவல் துறையிலும், நெருப்பணைப்புப் படையிலும் சேருமாறு கட்டாயப்படுத்தலாம். ஆனால் இராணுவத்தில் சேருமாறு கட்டாயப்படுத்த முடியாது.
ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு வந்துள்ள அயலார், தம் தாய் நாட்டிலோ வேறு ஒரு நாட்டிலோ செய்த குற்றத்துக்காக அந்த நாடுகள் அவர் தங்கியுள்ள நாட்டுக்கு வந்து அவரைக் கைது செய்ய முடியாது. ஆனால் அந்நாடுகள், அவரைக் கைது செய்து தங்களிடம் ஒப்புவிக்குமாறு அவர் தங்கியுள்ள நாட்டிடம் கேட்கலாம். அவ்வாறு ஒப்படைப்பதை ‘அயலார் ஒப்படைப்பு’ என்பர். ஆனால் அரசியற் குற்றவாளிகளை அவ்வாறு ஒப்படைக்கலாகாது. இவ்வாறு பிற நாட்டில் தங்கும் அயலாரை ‘அயல் நண்பர்’ என்று கூறுவர்.
ஒரு நாட்டுடன் போர் தொடுத்துள்ள மக்கள் ‘அயற் பகைவர்’ எனப்படுவர். அயற் பகைவர்கள் அரசின் இசைவின்றி நீதிமன்றங்களில் வழக்குத் தொடரவும் வணிகமும் தொழிலும் செய்யவும் சொத்து வைத்திருக்கவும் முடியாது.
அயலாரை அனுமதிப்பது பற்றி நான்கு வகையான கருத்துக்கள் நிலவி வருகின்றன. அவை: (1) ஒவ்வொரு நாடும் அயலாரையும் தன் நாட்டில் அனுமதிக்கக் கடமைப்பட்டது. (2) ஒரு நாடு அயலாரை அனுமதிக்கக் கடமைப்பட்டிருந்தாலும் விரும்பத்தகாதவர்களை அனுமதிக்க மறுக்கும் உரிமையும் அதற்கு உண்டு. (3) ஒரு நாடு அயலாரை அனுமதிக்கக் கடமைப்பட்டு இருந்தாலும், அவர்களைச் சில கட்டுப்பாடுகளின் மேல் அனுமதிக்கலாம். (4) ஒரு நாடு அயலாரை அனுமதிக்க வேண்டியதில்லை. அவர்களை உள்ளே விடாமல் புறக்கணிக்கவும் உரிமை உண்டு. நடைமுறையில் நாடுகள் கடைசிக் கருத்தையே பின்பற்றுகின்றன. முதல் கருத்து, யாராலும் என்றுமே பன்னாட்டுச் சட்ட விதியாகக் கருதப்படவில்லை.
அயலாரை, நாடுகள் அனுமதிக்க வேண்டியதில்லை. ஆனால், அனுமதித்து விட்டால், அவர்களுக்குப் பன்னாட்டுச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் குறைந்த அளவுச் சலுகைகளான உடல் உரிமை உடைமைப் பாதுகாப்புகளை வழங்க வேண்டும். அவர்களை வெளியேற்றும் உரிமையும் நாடுகளுக்கு உண்டு. இவை அரசாட்சியால் வரும் உரிமையாகும். அந்நாடு அயலாருக்கு அரசியல் உரிமைகள், சில தொழில் உரிமைகள் முதலியவற்றை மறுக்கலாம். அயலாரை ஒரு நாடு அதன் எல்லைக்குள் அனுமதிக்கக் கடமைப்பட்டிருக்கவில்லையென்றாலும், அவர்கள் துன்புறுத்தப்படும்போது அவர்களுடைய உயிரைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு நாட்டிடம் அடைக்கலம் வேண்டுவார்களானால், அந்த நாடு அடைக்கலம் கொடுப்பதே முறைமை. பொதுவாக உலக அரங்கில், இன்றைய நாடுகள் இதனை ஏற்றுப் பின்பற்றி வருகின்றன. எடுத்துக் காட்டாக பங்களா தேசம் இந்தியாவிடம் அடைக்கலம் கேட்டபொழுது, இநதியா அந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுத்தது நினைவு கூரத்தக்கது.
ஒரு நாட்டின் உள்நாட்டுக் குடிகளைப் பொறுத்த வரையில் உள்நாட்டுச் சட்டங்களையும், அயலவர்களைப் பொறுத்தவரையில் பன்னாட்டுச் சட்டத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்ட அயலார், தூதுவர் போன்ற சலுகை பெற்ற பிரிவினராக இருந்தாலொழிய மற்றவர்கள் எல்லோரும் புகும் நாட்டின் சட்டத்திற்கும் அந்நாட்டின் ஆதிக்கத்திற்கும் தங்களை உட்படுத்திக் கொண்டவர்களாவார்கள். இருப்பினும் அவர்கள் தங்கள் நாட்டு அரசின் நேரடி மேலாண்மைக்கும் உட்பட்டவர்கள். சில வேளைகளில் ஒரு நாட்டிற்குள் அயலாராக நுழைபவர்களுக்கு, அந்நாட்டு மக்கள் துய்க்கும் உரிமைகளை விடச் சிறிது குறைவான உரிமைகளே வழங்குவதுண்டு. அதாவது வாக்குரிமை, சில தொழிலில் ஈடுபடுதல் போன்ற உரிமைகளை அவர்கள் பெற முடியாது. எடுத்துக்காட்டாக, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பகுதியில், 14–ஆம் பிரிவிலும் வேறு பிரிவிலும் உள்ள உரிமைகள், இந்தியக் குடிமக்கள், அயலார் அனைவருக்கும் உரியவை. ஆனால் 19–ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே உரியவை.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 582)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4zr3skrr/
தமிழ்“அயலார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4zr3skrr/APA
Oliyon Research. (2026). அயலார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4zr3skrr/MLA
"அயலார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4zr3skrr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment