இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்
iṉṟiyamaiyāp paṇṭaṅkaḷ caṭṭam
இந்தியக் குடியரசால் இயற்றப்பட்டு, 1955–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் முதல் தேதியில் செயல்முறைக்கு வந்தது.
இந்தியக் குடியரசால் இயற்றப்பட்டு, 1955–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் முதல் தேதியில் செயல்முறைக்கு வந்தது. அனைத்து இந்தியாவுக்கும் இச்சட்டம் செல்லத் தக்கது.
இன்றியமையாப் பண்டங்களை வழங்குவதைச் சீரான நிலையில் வைத்திருப்பதற்கு அல்லது அதிகரிப்பதற்கு அல்லது நியாயமான விலையில் பங்கீடு செய்வதற்கு அல்லது இந்தியாவின் தற்காப்புக்கும் சிறப்பான முறையில் இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கும் அப்பண்டங்களைச் சேகரிப்பதற்கு, இந்தியக் குடியரசு விரும்பினால் உகந்த வகையில் ஆணைகள் பிறப்பிக்கலாம்.
இச்சட்டப்பிரிவு 3, உட்பிரிவு (1), 1. இன்றியமையாப் பண்டங்களின் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கு உரிமம், அனுமதிச்சீட்டு அல்லது அவை போன்றவற்றை அளித்தல், 2. உணவுப் பொருள் உற்பத்தியைப் பெருக்குவதற்காகத் தரிசாக இருக்கும் அல்லது வேளாண்மை செய்யத்தக்க நிலத்தை வேளாண்மை செய்ய ஏற்பாடு செய்தல், 3. இன்றியமையாப் பண்டங்களை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் ஆன விலையைக் கட்டுப்படுத்துதல், 4. விற்பனைக்குக் கொண்டுவராமல் பதுக்கும் செயலைத் தடுத்தல், 5. இன்றியமையாப் பண்டங்களைக் குவித்து வைப்போர், உற்பத்தி செய்லோர், விற்பனை செய்வோர், வாங்குவோர் ஆகியோரிடமிருந்து முழுமையாகவோ பகுதியாகவோ மத்திய அரசு மாநில அரசு அல்லது அந்த அரசுகளின் அல்லது அந்த அரசுகளால் நடத்தப்படும் கடிதங்களுக்கு அல்லது அந்த அரசுகளின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கிய கழகங்களுக்கு விற்பனை செய்ய வைத்தல், 6. பொது மக்களின் நலனைப் பாதிக்கக்கூடிய முறையில் உணவுப் பொருள்கள் அல்லது பருத்தித் துணிகள் ஆகியவை சம்பந்தப்பட்ட வாணிகம் அல்லது தொழில் முறை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல் அல்லது தடை செய்தல், 7. மேற்கூறிய காரியங்களைத் தடைசெய்யும் அல்லது ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன் தகவல் அல்லது புள்ளிவிவரம் சேகரித்தல், 8. இன்றியமையாப் பண்டங்களை உற்பத்தி செய்தல், மக்களுக்கு வழங்குதல், பங்கீடு செய்தல், வாணிகஞ் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டவர்களைக் கணக்கு வைத்திருக்கச் செய்தல், தேவைப்பட்ட தகவல் கொடுக்க வைத்தல், 9. உரிமம், அனுமதி வழங்குவதற்குக் கட்டணம் வசூலித்தல், மேலும் உரிமம், அனுமதி ஆகியவற்றில் அடங்கியுள்ள நிபந்தனைகளை நன்கு கடைப்பிடிக்கச் செய்வதற்காகப் பிணையப் பணம் வசூல் செய்தல், 10. மேற்கூறிய செய்கைகளை நிறைவேற்றுவதற்காகப் பிறப்பிக்கப்பட்டுள்ள ஆணைகளை மீறும் செய்கைகளைக் கண்டுபிடிப்பதற்காகச் சோதனை நடத்துவதற்கும், அவ்வாறான அத்துமீறிய செய்கைகளில் தொடர்புடைய இன்றியமையாப் பண்டங்கள், அவற்றை எடுத்துச் செல்லப் பயன்படுத்தும் வாகனங்கள், விலங்குகள் ஆகியவற்றைக் கைப்பற்றுவதற்கும், ஆவணங்களைப் பரிசீலனை செய்தற்கும் கைப்பற்றுதற்கும் அதிகாரம் வழங்குதல்.
மேற்கூறியவாது இச்சட்டத்தின் 3–ஆம் பிரிவில் சொல்லப்பட்டுள்ள ஆணைகளைப் பிறப்பிக்க மத்திய அரசு தன் அதிகாரிகளுக்கும், மாநில அரசுகளுக்கும், மாநில அரசின் அதிகாரிகளுக்கும் அதிகாரம் வழங்கலாம். இவ்வாறு மத்திய அரசால் அளிக்கப்படும் அதிகாரத்தின் அடிப்படையில்தான் நெல்கொள்முதல் செய்தல், நெல்லை ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு எடுத்துச் செல்வதைத் தடை செய்தல், இன்றியமையாப் பண்டங்களை நியாய விலைக் கடைகளின் மூலம் மக்களுக்குப் பங்கீடு செய்தல் ஆகிய காரியங்களை நிறைவேற்றுவதற்காக மாநில அரசுகளால் ஆணைகள் (Orders) பிறப்பிக்கப்படுகின்றன.
மேற்கூறிய 3–ஆம் பிரிவின் கீழ்ப் பிறப்பிக்கப்படும் ஆணைகளில் தகவல் மற்றும் புள்ளிவிவரம் சேகரிப்பது, உற்பத்தியாளர், வாணிகம் செய்வோர் ஆகியோரைக் கணக்கு வைத்திருக்கச் செய்வது ஆகிய காரியங்களை நிறைவேற்றுவதற்காகப் பிறப்பிக்கப்படும் ஆணைகளை மீறும் குற்றத்துக்காக ஓராண்டுக் காலம் வரை சிறைத் தண்டனையும், ஒறுப்புக் கட்டணமும் விதிக்கலாம். ஏனைய ஆணைகளை மீறும் குற்றத்துக்காக ஏழாண்டுக்காலம் வரை சிறைத் தண்டனையும், ஒறுப்புக் கட்டணமும் விதிக்கலாம். மேலும், அச்சிறைத் தண்டனை மூன்று மாதக் காலத்துக்குக் குறையாமலிருக்க வேண்டும்.
மேற்கூறியவாறு ஆணைகளை மீறும் குற்றத்தைக் கண்டுபிடிக்கும் போது அக்குற்றத் தொடர்புடைய பண்டங்களையும், அவற்றை எடுத்துச் செல்லப் பயன்படுத்திய வண்டிகள், விலங்குகள் ஆகியவற்றையும் கைப்பற்றி விசாரணைக்குப் பின் அவற்றைப் பறிமுதல் செய்யவும் இச்சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
இன்றியமையாப் பண்டங்கள் பட்டியலில் கீழ்க்காணும் பண்டங்கள் அடங்கியுள்ளன. அவையாவன, 1. கால்நடைத் தீவனம் (இதில் பிண்ணாக்குகள், வேறு செறிவுத் தீனிகள் உள்ளடங்கும்), 2. நிலக்கரி (இதில் கல்கரியும் வேறு வழிப் பொருள்களும் அடங்கும்) 3. பேருந்து வண்டிகளின் உறுப்புகள், துணைக் கருவிகள், 4. பருத்தி, கம்பளித் துணிகள், 5. மருந்துப் பொருள்கள், 6. உணவுப் பண்டங்கள் (இதில் உண்ணத்தக்க எண்ணெய் வித்துக்களும், எண்ணெயும் அடங்கும்), 7. இரும்பு, எஃகு ஆகியவற்றிலிருந்து செய்யப்பட்ட பொருள்கள், 8. காகிதம் (இதில் பத்திரிகைக் காகிதம், காகித அட்டை, வைக்கோல் அட்டை ஆகியவை அடங்கும்.) 9. பெட்ரோலியமும் அதைச் சார்ந்த பொருள்களும், 10. பயன்படுத்தப்படாத பருத்தி (இதில் கொட்டை நீக்கப்பட்டதும் நீக்கப்படாததும் அடங்கும்), 11. பருத்திக்கொட்டை, 12. பண்படுத்தப்படாத சணல், சிமெண்டு ஆகியவையும், இந்திய அரசியலமைப்பு–அட்டவணை ஏழு–பட்டியல் மூன்று–பதிவு 33–இல் நாடாளுமன்றம் சட்டம் இயற்றத்தக்கதாகச் சொல்லப்பட்டுள்ளவை எவையும், மத்திய அரசு அறிவிப்புச் செய்யும் காலத்தில் இன்றியமையாப் பண்டங்களாகக் கருதப்படும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 561)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4zcqctaq/
தமிழ்“இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4zcqctaq/APA
Oliyon Research. (2026). இன்றியமையாப் பண்டங்கள் சட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4zcqctaq/MLA
"இன்றியமையாப் பண்டங்கள் சட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4zcqctaq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment