இரண்டாம் உலகப் போரை அடுத்த காலத்தில் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட தொடர் இரும்புத்திரை (Iron Curtain) என்பதாகும். சோவியத்து ஒன்றிய உருசிய நாடு, தனக்கும் தன்னைச் சார்ந்துள்ள கிழக்கத்திய ஐரோப்பிய நாடுகளுக்கும் மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளோடும், மற்றப் பொதுவுடைமை அல்லாத நாடுகளோடும் தடை இல்லாத, வெளிப்படையான தொடர்பு ஏதும் ஏற்படாதபடி தடுத்து மூடிவிடுவதற்குச் செய்த முயற்சிகளே ‘இரும்புத்திரை’ என்பதாகும். இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு முதலிய நாடுகளுக்கும், சோவியத்து உருசிய நாட்டிற்கும் இடையே ஒற்றுமை உணர்வும் ஒத்துழைப்பும் நிலவின. ஆனால், போர் முடிந்த பின்னர் இந்நிலை மாறியது. உருசிய நாடு பொதுவுடைமைக் கோட்பாட்டிற்கும் தனது அரசியல் தலைமைக்கும் பாதுகாப்பாக, மேற்கத்திய நாடுகளுக்கெதிராகத் தனது படை வலிமையை இக்கால முறையில் பெருக்கியது; தனது அண்டை நாடுகள் தனக்கு ஆதரவாக இருக்குமாறு பல வழிகளைக் கையாண்டது. உருசியாவின் இந்நடவடிக்கைகளுக்கு எதிராகப் பொதுவுடைமைக் கோட்பாடு பரவுவதைத் தடுக்கும் பொருட்டும், தங்களுடைய தன்னுரிமை அமைப்புகளைப் பாதுகாத்தற் பொருட்டும், மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும் எதிர் முயற்சிகளைச் செய்யலாயின. இவ்வாறு இரு வல்வரசுகளுக்குமிடையே (ஐக்கிய அமெரிக்கா, சோவியத்து உருசியா முதலியவை) தத்தம் சமூக, பொருளாதார, அரசியலமைப்புகளைப் பாதுகாத்துக் கொள்ளும்பொருட்டு, அவை எடுத்துக்கொண்ட ஒன்றுக்கொன்று எதிரான முயற்சிகளே கெடுபிடிப் போர் (Cold War) எனப்படும். கெடுபிடிப் போரின் விளைவாகத் தோன்றியவையே, மேற்கு ஐரோப்பிய நாடுகளமைத்துக் கொண்ட வட அட்லாண்டிக்கு இராணுவக் கூட்டு ஒப்பந்தமும், (N.A.T.O) சோவியத்து உருசியாவும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் அமைத்துக் கொண்ட வார்சா இராணு ஒப்பந்தமும் (Warsaw Pact) ஆகும். மேற்குப் பெர்லின் நகரப்பகுதிக்கும், கிழக்குப் பெர்லின் நகரப் பகுதிக்குமிடையேயும், மேற்குச் செருமனிக்கும், கிழக்குச் செருமனிக்குமிடையேயும் தொடர்புகள் சோவியத்து அரசாங்க அலுவலர் இசைவு அளித்தாலல்லாமல் நடைபெறமாட்டா. இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற போது பிரிட்டிசுப் போர்க்காலத் தலைமை அமைச்சராயிருந்த வின்சுட்டன் சர்ச்சில் (Winston Churchill) ஐக்கிய அமெரிக்க நாட்டில் புல்டன் நகரத்தில் (Fulton), வெசுட்டு மினிசுட்டர் கல்லூரியில் (Westminster College), 1946–ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 5–ஆம் நாள் ஆற்றிய உரையில், ‘கிழக்குச் செருமனியில் பால்ட்டிக்குக் கடற்கரையிலுள்ள இசுட்டெட்டின் துறைமுகத்திலிருந்து (Stettin) தெற்கே ஏட்ரியாட்டிக்குக் கடற்கரையிலுள்ள திரியசிட்டே (Trieste) துறைமுகம் வரையிலும் ஐரோப்பியக் கண்டத்தின் குறுக்காக இரும்புத் திரை போடப்பட்டுவிட்டது’ என்று முதன் முதலாக இத்தொடரைக் குறிப்பிட்டார். இரு வல்லரசுகளும் படைக்குறைப்பு, பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, அமைதி முதலிய ஆதாரமான துறைகளில் ஒத்துழைப்பு ஏற்பட இயலாதவாறு இத்தகைய தடைகள் இருந்தன. உருசிய நாட்டின் சருவதிகாரியாகிய இசுட்டாலின் (Stalin) கொண்டுவந்த இந்தத் தனித்திருக்கும் கொள்கை அல்லது ஒதுங்கியிருக்கும் கொள்கை, அவர் ஆட்சியிலிருக்கும் வரையில் மிகவும் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வந்தது. அவர் 1953–ஆம் ஆண்டிவ் இறந்த பின்னர், இரும்புத் திரைக் கொள்கை மிகுதியாகத் தளர்த்தப்பட்டுவிட்டது. இரு கூட்டு நாடுகளுக்குமிடையே வாணிகத் தொடர்புகளும், கலை, இலக்கியத் துறையில் தொடர்புகளும் இப்பொழுது பெருமளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனினும், சோவியத்து உருசியாவும், அதன் பிடியிலுள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் இரும்புத்திரை நாடுகள் என்று சொல்லப்படுகின்றன. சோவியத்து உருசியாவைப் போலவே பொதுவுடைமை நாடாகிய சீனாவும் 1949–இல், தன்னை மற்ற நாடுகளின் தொடர்பினின்றும் தனித்து வைத்துக் கொள்ளும் கொள்கையைக் கடைப்பிடித்தது. சீனாவின் தனித்திருக்கும் கொள்கை மூங்கில் திரை (Bamboo Curtain) எனப்பட்டது.