உத்தரகுரு என்பது இன்பம் நுகருவதற்குரிய பூமியினைக் குறிக்கும். இதனைப் ‘போகபூமி’ என்றும் கூறுவர். இப்போகபூமி ஆறுவகைப்படும் என்று திவாகரநிகண்டு கூறுகிறது. அவை ஆதியரிவஞ்சம், நல்லரிவஞ்சம், ஏமதவஞ்சம், இரணவஞ்சம், தேவகுருவம், உத்தரகுருவம் ஆகியனவாகும். நிலவுலகில் தலைமையான தானஞ் செய்தவர்கள் உத்தரகுருவாகிய போக பூமியிற் பிறந்து அவ்வறப் பயன் உள்ள வரையில் இன்பம் துய்ப்பர். அவர்கள் இன்பம் துய்க்குமாற்றை, ‘ஒத்த அன்பும் ஒத்த நலனுங் கொண்ட பதினாறு வயதுக் குமரனும், பன்னிரண்டு வயதுக் குமரியுமாகத் தோன்றிக் கற்பகதரு முதலியன விரும்பியவற்றைக் கொடுக்க, அறப்பயன் உள்ள வரையில் இன்பம் நகருவர்’ என்றும் திவாகர நிகண்டு கூறுகிறது. இப்போக பூமி, இமயம், ஏமகூடம், நிடதம், மேரு முதலிய மலைகளுக்கு அப்பால் உள்ளது என்றும், இராம ராவணப் போரில் அனுமன் சஞ்சீவி கொண்டு வருவதற்காகச் சென்ற போது இடையில் இதனைக் கண்டு, இதன் ஒளியால் பொழுது விடிந்து விட்டது போலும் என மயங்கிப் பின் இது வேறொரு பூமி எனத் தெளிந்து சென்றான் என்றும் நூல்கள் கூறுகின்றன. உத்தரகுரு மேருவிற்கு வடக்கிலுள்ளதாகக் கருதப்படுகிறது. இது ‘உத்தரகுருவம்’ என்று பெருங்கதையில் கூறப்பட்டுள்ளது.