உட்சமுதாயம்
uṭcamutāyam
சமுதாயம் என்பது தனித்ததும் தன்னிறைவு கொண்டதுமான பெருந்திரளான மக்கள் தொகையைக் குறிப்பிடுவதாகும்.
சமுதாயம் என்பது தனித்ததும் தன்னிறைவு கொண்டதுமான பெருந்திரளான மக்கள் தொகையைக் குறிப்பிடுவதாகும். ஒரு சமுதாயத்தில் உள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லையைச் சார்ந்தும், தனித்தன்மையான பண்பாட்டினைக் கொண்டும், மணத் துணையைத் தமக்குள் மாற்றிக் கொண்டும், ஒருமித்த சமூக அமைப்புடையராய்ப் பொருளாதார செயற்பாடுகளிலும் அனைத்து வாழ்க்கைச் செயல்களிலும் தனிப்பட்டவர்களாகவும் தன்னிறைவுடையவர்களாகவும் காணப்படுவர்.
சமுதாயத்தை வரையறுக்கும்போது பலர் பல நிலைகளைச் சிறப்பிடம் கொடுத்து வரையறுப்பதுண்டு. சமுதாயம் பற்றிய கோட்பாட்டின் வரலாற்றைக் காணும்போது பல வரையறைகள் முன் வைக்கப்பட்டன. தன்னிறைவு (Self Sufficiency) கொண்ட சமுதாய மக்கள் கூட்டம் சமுதாயம் எனவும், ஒத்த பண்பாட்டைக் கொண்ட மக்கள் கூட்டத்தினரும் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியைச் சார்ந்த மக்களினத்தவர்களும் சமுதாயத்தினர் எனவும் குறிப்பிடப்பட்டனர். இருப்பினும், சமுதாயவியலின் வளர்ச்சிப் போக்கில் இதன் வரையறைகள் பல கருத்துகளை ஒருங்கே ஏற்றுக் கொண்டுள்ளன.
பரு நிலையில் காணப்படும் சமுதாயத்தில் பல உட்சமுதாயங்கள் (Sub-Societies) காணப்படுகின்றன. இவற்றைச் சிறு சமுதாயங்கள் (Small Societies) என்றும் குறிப்பிடலாம். இவை முதன்மைக் குழுக்கள் (Primary Groups), நேருக்கு நேர் குழுக்கள் (Face to face Groups) ஆகியவற்றின் தன்மையினைக் கொண்டவை எனலாம். சமுதாயவியலாரும் சமுதாய மானிடவியலாரும் உட்சமுதாயத்தைச் சிறிய அளவினைக் கொண்ட மக்கள் கூட்டம் எனச் சுட்டுகின்றனர். இவ்வகை சிறிய அளவிலான சமுதாயத்தை ஆராய்வதைச் சமுதாய மானிடவியலார் முதன்மையாகக் கொண்டுள்ளனர்.
உட்சமுதாயத்தினர் குறிப்பிட்ட நிலப்பரப்பில் நெருக்கமான உறவுகளைப் பெற்றவர்களாவர். இவர்கள் அனைவருமே சமுதாயத்தின் அனைத்துச் செயற்பாடுகளிலும் நெருங்கிய தொடர்புகளையும் தொழில் பரிமாற்றங்களையும் மணவுறவுத் தொடர்புகளையும் கொண்டவராவர். தொழிற் பாகுபாடு- களையும் மிகுதியாகச் செயல்களையும் கொண்ட நிலையில், உட்சமுதாயத்தில் ஒவ்வொரு செயலுக்கும் மீண்டும் மீண்டும் ஒரு குறிப்பிட்ட குழுவினருடன் தொடர்பு கொள்ளும் நிலையில் இவர்களின் தொழிற் பகுப்பு அமைந்திருக்கும். பொருளாதாரம், சமயம், அரசியல், சமூகம் முதலான அனைத்து நிறுவனங்களிலும் உட்சமுதாயத்தினரிடையே காணப்பெறும் பிணைப்பும் உறவும் நீண்ட காலத்திற்குரியவை. நெருங்கிய உறவுக் கூட்டத்தினரைக் கொண்டதனால் மணத் துணைவரை இவர்களுக்குள் பரிமாற்றம் செய்துகொண்ட போதிலும், உட்சமுதாயத்தினரிடையே சமய நம்பிக்கைகள், வழிபடும் தெய்வங்கள், சமூக அமைப்பு, பொருளாதார உறவு, முதலான அனைத்துப் பரப்பிலும் ஒரு தனித்தன்மையுள்ள உறவு காணப்படும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 757)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4t3c5965/
தமிழ்“உட்சமுதாயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4t3c5965/APA
Oliyon Research. (2026). உட்சமுதாயம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4t3c5965/MLA
"உட்சமுதாயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4t3c5965/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment