சங்கப் புலவர்களுள் ஒருவர். நாகனார் என்பது இப்புலவரின் இயற்பெயர். அம்மெய்யன் என்பது இவர் தந்தை பெயராக இருத்தல் கூடும். இவருடைய ஒரே பாடல் நற்றிணை 252–ஆம் செய்யுளாக அமைந்துள்ளது. பாலைத் திணையில் தோழி கூற்றாக அமைந்துள்ள இப்பாடல், ‘தலைவன் பொருள் தேடி வருவதற்காகப் பிரிந்து செல்வான்’ என்று வருந்திய தலைவியிடம் கூறியதாக அமைந்துள்ளது. தலைவியின் அடிகளுக்கு, வேட்டை மேற் செல்லும் நாயின் நாக்கினை உவமையாகக் கூறியிருப்பது நயமிக்கதாகும்.