மடக்கைக் கோட்பாட்டைக் (theory of logarithm) கண்டு பிடித்த, ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த செல்வந்தர் ஜான் நேப்பியர் 1550ஆம் ஆண்டு பிறந்தார். 13 வயதில், ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்த போதிலும், சில காலத்திற்குள், கல்வியை முடித்துப் பட்டம் பெறாமலேயே, கல்லூரியை விட்டு வெளியேறினார். அவர் தந்தை ஆர்ச்பால்டு நேப்பியர் அளித்த பண்ணையை நிர்வகிப்பதில், தம் காலம் முழுவதையும் கழித்தாலும், ஓய்வு நேரங்களில், கணிதவியல், இறைவியல் (theology) ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். 1594ஆம் ஆண்டிலிருந்து மடக்கை அட்டவணை தயாரிப்பதிலும், மடக்கைக் கொள்கையைக் கண்டு பிடிப்பதிலும் 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து செயலாற்றினார். 1614இல் மடக்கையில் மிகச் சிறப்பான விதியைப் பற்றி, Mirifici Logarithmorum canonis Descriplio என்னும் நூலை விரிவாக வெளியிட்டார். இதில் e \big[ = 2.71828 \dots = \lim_{n \to \infty} \big[ 1 + \frac {1}{n} \big ]^n \big] என்னும் எண்ணை மடக்கையின் அடியாகக் (base of logarithm) கொண்டமையால், இம்மடக்கை இயல் அல்லது நேப்பியரின் (natural of Napierian) மடக்கை எனக் குறிக்கப் பட்டது. 1615இல் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த கணித அறிஞர் ஹென்றி பிரிக்ஸ் என்பாருடன் இணைந்து, 10ஐ அடியாகக் கொண்ட பொது மடக்கை (common logarithm) அட்டவணையைப் பற்றி ஆய்வு நடத்தினார். பிரிக்ஸ்,1–1000 முடிய உள்ள எண்களுக்குப் பொது மடக்கை அட்டவணையை 1617இல் வெளியிட்டார். நேப்பியரின் Mirifici Logarithmorum canonis Constructive என்னும் இரண்டாம் நூல் 1617இல் அவர் இறந்த பின்னர், 1619இல் வெளியிடப்பட்டது. இந்நூலில், நேப்பியரின் மடக்கை அட்டவணை தயாரிக்கப்பட்ட விவரங்கள் முழுமையாகவும், விரிவாகவும் கொடுக்கப் பட்டுள்ளன. மடக்கைக் கொள்கைகளைத் தவிர, நேப்பியரின் எலும்புகள் (Napier's bones) எனப் படும் குச்சிகளைப் பயன் படுத்தி, இயக்கஞ் சார்ந்த பெருக்கல் முறையையும், கோள முக்கோணங்களின் தீர்வுகளை எளிய முறையில் காணும் முறையையும் கண்டு பிடித்துள்ளார். மேலும், கிறிஸ்துவத் திருக் கோயிலின் செயல்பாடுகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, கத்தோலிக்கக் கொள்கையை மறுத்து, பிரிந்து சென்ற கிறிஸ்துவ சமயம் (Protestantism) பற்றியும் இவர் எழுதியுள்ளார். —பங்கஜம் கணேசன்