இவர் இடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர் என்பதனை முதன்முதலாக இறையனார் களவியலுரை உணர்த்துகிறது. இறையனார் களவியல் முதல் நூற்பா உரையில் முச்சங்க வரலாறு கூறப்படுகிறது. அதில், ‘இனி, இடைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும், தொல்காப்பியனாரும், இருந்தையூர்க் கருங்கோழி மோசியும், வெள்ளூர்க் காப்பியனும், சிறுபாண்டரங்கனும், கீரந்தையும் என இத்தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்மர் என்ப’ என்றமைந்த இடைச்சங்கம் பற்றிய பகுதியில் இவர் பெயர் இடம்பெற்றுள்ளது. சிலப்பதிகார உரைப்பாயிரத்திற்கு அமைந்த அடியார்க்கு நல்லார் உரையிலும் இம்மோசியார் பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘இரண்டாம் ஊழியதாகிய கபாடபுரத்தில் இடைச்சங்கத்துத் தொல்காப்பியம் புலப்படுத்திய மாகீர்த்தியாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் அவைக்களத்து அகத்தியனாரும், தொல்காப்பியனாரும் இருந்தையூர்க் கருங்கோழி மோசியாரும் ...... என்றித் தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்மர் உள்ளிட்ட மூவாயிரத்து எழு நூற்றுவர்’ என்னும் உரைப்பாயிர உரைப்பகுதியில் அடியார்க்கு நல்லார் மோசியார் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இவ்விரு உரையாசிரியர்கள் உரைகளிலும் அமைந்துள்ள புலவர் வரிசைகளில் மோசியார் வைத்தெண்ணப்படும் முறைமையிலிருந்தே இவர் ஒருசீரிய புலவராகத் திகழ்ந்தவர் என்பது புலப்படுகிறது. இடைச்சங்க நூல்களுள் பெரும்பான்மை கடல் கோளால் மறைந்தபோது, இவர் நூல்களும் அழிந்திருக்க வேண்டும். தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் வட்டத்தில் ‘இருந்தை’ என்னும் ஓர் ஊர் உள்ளது. இதுவே ‘இருந்தையூர்’ என்று வழங்கப்பட்டதனைப் பரிபாடல் திரட்டு, ‘இருந்தையூர் அமர்ந்த செல்வதின், திருந்தடி தலையுறப் பரவுதும் தொழுது’ என்னும் வரிகளில் குறிப்பிடுகிறது. இதனைத் தவிர இவர் பாடல் வரலாறு பற்றிய பிற செய்திகள் கிடைக்கவில்லை. ஈ.வே.மா.