இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சோவியத்து ஒன்றியத்தை நிறுவியவர்; மார்க்சும் ஏங்கல்சும் கற்பித்த பொதுவுடைமைச் கொள்கையைச் சோவியத்து அரசாங்கக் கொள்கையாக்கி அதை நடைமுறைக்குக் கொண்டு வந்தவர். காரல் மார்க்சு (Karl Marx) கொள்கையைக் கண்டார். இலெனின் (Lenin) அக்கொள்கை ஆளும் நாட்டைக் கண்டார். அக்கொள்கைக்காகச் சோவியத்துப் பொதுவுடைமைக் கட்சியை உருசியாவில் நிறுவி, உழவர்களையும் ஆலைத் தொழிலாளர்களையும் அதன் உறுப்பினர்களாக்கி, அவர்களை ஆயுதமேந்தச் செய்து அக்டோபர்ப் புரட்சியை நடத்தி வெற்றி கண்டார். சோவியத்து ஒன்றியத்தை அழிக்க மற்ற ஐரோப்பிய நாடுகள் முனைந்தபோது அவற்றுடன் கடும்போர் நிகழ்த்தி அதனைக் காத்தார். உருசிய நாட்டிலும் அதன் சார்பு நாடுகளிலும் முடியாட்சி, சமய ஆட்சி ஆகியவற்றையும் தொழிலதிபர்கள், நிலப்பிரபுக்கள், குலாக்குகள் எனப்படும் வட்டிக் கடைக்காரர்கள் போன்றவர்களின் ஆதிக்கத்தையும் அடியோடு அழித்தார். இவர் உலகின் முதல் பொதுவுடைமைப் புரட்சிக்காரர். இலெனின் இலெனின் என்பது இவருடைய புனைபெயர்களுள் ஒன்று. சைபீரியாவில் ஓடும் இலேனா (Lena) என்ற ஆற்றின் நினைவாக இலெனின் என்ற பெயரை இவர் புனைபெயராகக் கொண்டார். இவருடைய முழுப் பெயர் விளாடிமிர் இலியிச் உலியானவ் என்பதாகும். இவர்தம் தந்தை இலியா நிக்கலாயெவிச் உலியானவ்; தாய் மரீயா அலெக்சாந்திரவ்னாவ். இவர்தம் தந்தை பள்ளிகளின் பார்வையாளராகப் பணியாற்றியவர். இவர் குடும்பம் வருவாய் குறைந்த குடும்பம். விளாடிமிருடன் (இலெனின்) பிறந்தவர்கள் ஐந்து பேர். இலெனின் வோல்கா ஆற்றங்கரையில் உள்ள சிம்பீர்கு நகரில் கி.பி. 1870 ஏப்பிரல் 10–ஆம் நாள் பிறந்தார். இலெனின் சிம்பீர்கு உயர்நிலைப்பள்ளியிலும் கசான் பல்கலைக் கழகத்திலும் தங்கப்பதக்கம் பெறும் அளவுக்குச் சிறப்பாகப் பயின்றார்; சட்டப் படிப்பைத் தனியாகப் படித்துத் தேர்ந்தார். உருசியச் சக்கரவர்த்தியைக் கொல்ல முயன்ற குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்ட மாணவர்களுள் இலெனினின் அண்ணன் அலெக்சாந்தரும் ஒருவர். தந்தையோ அதற்கு முன்னமேயே நோயால் இறந்தார். தலைவனின்றியும் பொருளின்றியும் குடும்பம் தவித்தது. வீடு விற்கப்பட்டது. காசான் நகரில் குடும்பம் குடியேறியது. இலெனின் காலத்தில் உருசியப் பேரரசில் மக்கள் பெரும் கொடுமைக்கு உள்ளாகியிருந்தனர். வயல்களிலும் தோட்டங்களிலும் பண்ணைகளிலும் ஆலைகளிலும் தொழிற்சாலைகளிலும் சுரங்கங்களிலும் படைகளிலும் உழைப்பாளிகள் இரக்கமின்றித் துன்புறுத்தப்பெற்றுச் சுரண்டப் பெற்றனர். போதுமான உணவு, உடை, இருக்கை, மருத்துவ வசதிகளின்றி மக்கள் அடிமை வாழ்வு நடத்தினர். சார் எனப்பட்ட உருசிய அரசனும் பிரபுக்களும் நிலக்கிழார்களும் மதகுருக்களும் கிராமப்புறங்களில் வாழ்ந்த குலாக்குகள் எனப்பட்ட வட்டிக்காரர்களும் மக்களைப் பிழிந்தெடுத்தனர். சாரிடம் 1905–ஆம் ஆண்டு சனவரி மாதம் 9–ஆம் நாளன்று தங்களுடைய துன்பங்களை முறையிடுவதற்காகச் சென்று வழியில் வழிபாட்டுப் பாடல்களைப் பாடியபடி வந்த தொழிலாளர்களின் ஊர்வலம் மீது, அரண்மனையின் முன் அரசனின் கட்டளைப்படி துப்பாக்கிச் சூடு நடந்தது. தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்தனர். நாட்டின் நிலைமையை இளமையிலிருந்தே இலெனின் கூர்ந்து கவனித்தார். இலெனின் நிறையப் படித்தார். புசுக்கின், இலேர் மந்தன், கோகல், தூகானிவ், நெக்ராசவ், சல்திகோவ், கவுண்ட்டுலியோ தால்சுதாய் ஆகியவர்களுடைய நூல்களை ஆழ்ந்து பயின்றார். புரட்சிக்காரர்களான பெலின்சுய், கெர்ட்சன் போன்றவருடைய படைப்புகளை விரும்பினார். செர்னிசேவ்கியின் ‘என்ன செய்வது’ என்ற நூல் இவருடைய சிந்தனைகளைப் பெரிதும் உருவாக்கியது. ஆனால், இவருடைய வாழ்க்கை முழுவதையும் ஆண்டுகொண்டது கார்ல் மார்க்சின் பொதுவுடைமைத் தத்துவம் தான். இவர் பொதுவுடைமைத் தத்துவத்தை ஆழ்ந்து கற்கலானார். பலதடவை படித்து அதவை ஆராய்ந்து, அந்தத் தத்துவம்தான் மனிதகுலத் துன்பங்களைப் போக்க வல்லது என்ற உறுதியான முடிவிற்கு இவர் வந்தார். பொதுவுடைமைத் தத்துவம் (Communism) புரட்சிகரமான கொள்கையாகும். தொழிலாளி வர்க்கத்தையும். ஏனைய உழைப்பாளிகளையும் தனியுடைமையின்–மூலதனத்தின் அதாவது முதலாளிகளின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கவேண்டும். உழைப்பாளிகள் சுரண்டப்படுவது நிறுத்தப்படவேண்டும். இன்றைய சமூக ஏற்பாடுகள் அனைத்தும்–அரசாங்கம், மதம், கல்வி போன்றவை–இச்சுரண்டலுக்கே கருவிகள். அரசாங்கத்தை உழைப்பாளிகளே எடுத்துக் கொண்டால்தான் இச்சுரண்டல் நிற்கும். அதற்கு உழைப்பாளிகள் ஆயுதமேந்திப் போராட வேண்டும். இவ்வாறு பாட்டாளி மக்களுக்கும், முதலாளிகளுக்கும் ஏற்படும் போராட்டம் முடிவில் சமதருமத்திற்கு இட்டுச் செல்லும்; பாட்டாளிகளின் சர்வாதிகாரம் ஏற்படும். உருசியாவில் மார்க்சீயத்தை முதலில் பரப்பியவர் நாடு கடத்தப்பட்ட புரட்சிக்காரர் பளென்கானவ். இவர் மார்க்சின் நூலை உருசிய மொழியில் பெயர்த்தார். நாட்டில் மார்க்சியக் கழகங்கள் தோன்றின. இலெனின் கி.பி. 1892-ஆம் ஆண்டு சமாராவில் வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். முதலாம் மார்க்சிய வட்டத்தை அமைத்தார். மற்ற மார்க்சியவாதிகள் அனைவருடனும் தொடர்பு கொண்டார். உழவர்கள், தொழிலாளர்களுடன் கலந்து பழகி, அவர்களுடைய சிக்கல்களை அறிந்தார். ‘குடியானவர்களின் வாழ்க்கையில் பொருளாதார இயக்கங்கள்’ என்ற கட்டுரை எழுதினார். இலெனின் கி.பி. 1893–ஆம் ஆண்டு பீட்டர்சுபர்கு வந்தார். மற்ற மார்க்சியவாதிகளுடன் சேர்ந்து மார்க்சியத் தொழிலாளர் கட்சி அமைக்க முனைந்தார். மிதவாதிகளான நரோத்விக்குகளும், பிற்போக்கு வாதிகளான பொருள் முதல்வாதிகளும் தொழிலாளர்களுக்கு வருவாயில்தான் கண், அவர்கள் நாட்டினை ஆள்வதற்குத் தகுதியற்றவர்கள் என்று சொன்னார்கள். அவர்களை, இலெனின் கடுமையாக எதிர்த்தார். குடியானவர்களும் தொழிலாளர்களும் புரட்சியின் இரு கண்கள் என்று வலியுறுத்தி, இரு சாராரையும் ஒரு கட்சியின்கீழ்க் கொண்டு வந்தார். நதேசுதா குரூப்சுகாயா என்ற புரட்சிப் பெண் கி.பி. 1894 ஆம் ஆண்டு இலெனினுக்கு அறிமுகமானார். பின்னர் இருவரும் திருமணம் புரிந்து கொண்டனர். இலெனினின் புரட்சிகரமான வாழ்க்கைக்கு இவர் பேருதவி புரிந்தார். மாபெரும் அக்டோபர்ப் புரட்சிக்கு உருசிய மக்களைத் தயார் செய்ய இலெனின் கட்டுரைகள் வெளியிடுதல், நூல்கள் வெளியிடுதல், பத்திரிகைகள் வெளியிடுதல், பொதுவுடைமைக் கட்சிக் கிளைகளைத் தொழிலாளர், மாணவர், உழவர் ஆகியோரிடையே நிறுவுதல், நாடாளுமன்றமாகிய தூமாசுக்குக் கட்சி உறுப்பினர்களை அனுப்பிவைத்தல். வேலை நிறுத்தங்களுக்கு ஏற்பாடு செய்தல், படைகளிடையே மார்க்சின் புரட்சிக் கருத்துகளைப் பரப்பல், பிற்போக்குக் குழப்பவாதிகளின் பிடியிலிருந்து நரட்டினரை விடுவிக்கக் கடும் பிரசாரம் செய்தல் ஆகிய ஆக்க பூர்வமான வழிகளைக் கையாண்டார். கருத்துகளைப் பரப்ப இலெனின் பல நூல்களை எழுதினார். மக்களின் நண்பன், உருசியாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி, உருசிய சமூக மக்களாட்சிவாதிகளின் கடமைகள், என்ன செய்வது? நாட்டுப்புற ஏழை மக்களுக்கு, ஓரடி முன்னே, இரண்டடி பின்னே, புரட்சியிற் பிற்போக்குவாதிகளின் போர்த் தந்திரங்கள், சோசியலிசமும் போரும் என்னும் முக்கிய நூல்களையும், ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களையும், கடிதங்களையும் இலெனின் எழுதினார். தொழிலாளரின் செயற்பாடுகள், தீப்பொறி, புதுவாழ்வு, நட்சத்திரம் சிந்தனை, பிராவ்தா முதலிய பத்திரிகைகள் இவரால் நடத்தப்பட்டன. இவருடைய நூல்களும், தீப்பொறி (இசுக்ரா) பத்திரிகையும் வெளிநாடுகளில் அச்சிடப்பட்டு உருசிய நாட்டுக்குள் மறைமுகமாகக் கொணரப்பட்டன. பலமுறை இலெனின் சிறைத்தண்டனை அடைந்தார். பீட்டர்சுபர்குச் சிறைச்சாலையில் பலமாதங்கள் இருந்தார். சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்; சுவிட்சர்லாந்து, பின்லாந்து, நார்வே, சுவீடன், பிரிட்டன், பிரான்சு, செருமனி, ஆசுத்திரியா போன்ற ஐரோப்பிய நாடுகளில் உருசியாவிலிருந்து தப்பிச் சென்று மனைவியுடன் வாழ நேர்ந்தது. அங்கு நிறையப் படித்துச் சிந்தித்து எழுதினார். உருசியப் புரட்சிக்காரர்கள் இவரிடம் வந்து திட்டங்களையும் கருத்துரைகளையும் பெற்றுச் சென்றனர். வெளி நாட்டு இரகசியக் காவல்காரர்களும் இவருக்கு மிகுந்த தொல்லைகள் கொடுத்தனர். முதல் உலகப்போர் தொடங்கியபோது ஆசுத்திரிய நாட்டுக் காவலர் இவரைச் சுடவிருந்தனர். ஆனால், அந்நாட்டுப் புரட்சிக்காரர்கள் இவரைக் காப்பாற்றினர். பற்றாக்குறையினால் வெளிநாடுகளில் இவர் துன்புற்ற போதிலும், வெளியிலிருந்து வரும் புரட்சிக்காரர்களுக்கு இவர் பேருதவி செய்தார். வெளிநாடுகளில் கட்சி மாநாடுகள் பலவற்றை வெற்றியுற நடத்தினார். கட்சிக்குள்ளே வம்புசெய்த மென்சுவிக்குகளை (சிறுபான்மையினரை) இவர்தம் கூட்டணியான போல்சுவிக்குகள் (பெரும்பான்மையினர்) அடக்கி வெளியேற்றினர். முதல் உலகப் போரில் உருசியா பெருந்துன்பம் அடைந்தது. போருக்கு எதிரான பிரசாரங்களை இலெனின் புரிந்தார். போல்சுவிக்குக் கட்சியின்–இலெனின் கட்சியின் – அழைப்பிற்கு இணங்கி, 1917–ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் பெத்ரோகிராத்து நகரில் இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் போரை எதிர்த்து வேலை நிறுத்தம் நடத்தினர். சார் சக்கரவர்த்தியின் படைகளும் தொழிலாளர்களுடன் சேர்ந்துகொண்டன. மார்க்சிசுட்டுக் கட்சியால் தலைமையேற்று நடத்தப் பெற்ற தொழிலாளர்களும் உழவர்களும் வென்றனர். முடியரசு அகற்றப்பட்டது. ஆனால், பிற்போக்கு வாதிகளான பூர்சுவாக்கள் கையில் அரசாங்கம் வீழ்ந்துவிட்டது. இவ்வாறு நாட்டில் பூர்சுவா சர்வாதிகாரம், பாட்டாளிச் சர்வாதிகாரம் என இரட்டையாட்சி ஏற்பட்டது. ஏப்பிரல் மாதம் 16–ஆம் நாள் இலட்சக்கணக்கான மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்திற்கு இடையே இலெனின் நாடு திரும்பினார். புரட்சிக்குத் தலைமை தாங்கி அக்டோபர் மாதம் பிற்போக்குவாதிகளிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றினார். இலெனினைக் கொல்வதற்குச் செய்யப்பட்ட முயற்சிகள் பலிக்கவில்லை. அரோரா என்னும் போர்க்கப்பல் பிற்போக்கு அரசாங்கம் தங்கியிருந்த பனிக்கால அரண்மனையைத் தாக்கிப் புரட்சியை வெற்றியுறச் செய்தது. பாட்டாளிகள் இலெனின் தலைமையில் உலகின் மாபெரும் பொதுவுடைமைப் புரட்சியில் வெற்றி பெற்றனர். முதல் சோவியத்து அரசாங்கத்தை இலெனின் உறுதியான அடித்தளத்தில் காலமெல்லாம் நிலைத்திருக்கும் வகையில் அமைத்தார். செருமானியருடன் அமைதி உடன்பாடு செய்துகொண்டு முதல் உலகப் போரிலிருந்து சோவியத்து ஒன்றியத்தை விடுவித்தார். போரைத் தொடர்ந்து வந்த பெரும் பஞ்சத்தினைத் திறமையாகச் சமாளித்து நாட்டினைக் காப்பாற்றினார். பொதுவுடைமைச் சோவியத்து ஒன்றியத்தை அழிக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள் உருசியாவிற்குள் படைகளை அனுப்பி, உள்நாட்டுப் போரினை உண்டாக்கி, பெருத்த ஆபத்தினை ஏற்படுத்தியபோது, இலெனின் திறமையாகப் பேராடி அவர்களை விரட்டினார். இவருடைய நம்பிக்கையான தலைமையின் கீழ் சோவியத்து மக்கள் மாவீரத்துடன் போராடினர். சோவியத்துநாடு காப்பாற்றப்பட்ட பிறகு, இலெனினின் அரசாங்கம் அதை நன்கு வளர்த்தது. உழவர்கள் ஆலைத்தொழிலாளர்களின் ஒற்றுமை வளர்க்கப்பட்டது. சோவியத்து நாட்டில் குழந்தைகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டது. நிலம் உழுபவர்கள் அதிகாரத்தின்கீழும், ஆலைகள் தொழிலாளிகளின் அதிகாரத்தின்கீழும் வந்தன. உழைப்பாளிகள் தாங்கள் உற்பத்தி செய்ததன் பலன்களை நன்கு அனுபவித்தார்கள். சுரண்டுபவர்கள் அடியோடு அழிக்கப்பட்டார்கள். நாடு முழுவதும் மின்சார மயமாக்கப்பட்டு, கனரகத் தொழில்களும் அறிவியல் அடிப்படையில் வேளாண்மையும் பெருகின. சோவியத்து ஒன்றியம் வல்லரசாகியது. இலெனினின் ஆட்சிக்காலத்தில் அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்கள் பல ஏற்பட்டன. உருசியப் புரட்சிக்குப்பின் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்ட இலெனினை நடு உருசியாவைச் சார்ந்த பெருநகரங்கள் ஆதரித்தன. ஆனால், தொலைவிலிருந்த பகுதிகளில் உள்நாட்டுப் போர் மூண்டது. இலெனின் 1918–ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் பெருஞ்சேனையை நிறுவி, அதற்கு உலகப் பொதுவுடைமை இயக்கத்தின் செங்கொடியின் நினைவாகச் செஞ்சேனை எனப் பெயரிட்டார். செஞ்சேனையை எதிர்த்தவர்களை வெள்ளையர் (Whites) என்றனர். புரட்சிக்காரர்கள், மக்களாட்சிக்காரர்கள், உருசியத் தேசியவாதிகள், பழைய அரசை விழைந்தவர்கள், மாற்றம் எதனையும் விரும்பாதவர்கள் போன்றோர் வெள்ளையருள் அடங்கியிருந்தனர். எனினும் வெள்ளையரிடம் கருத்து ஒற்றுமை உருவாகவில்லை; அவர்களால் எதிர்ப்பு அணியையும் செம்மையாக அமைக்க இயலவில்லை. போல்சுவிக்குகள் 1920–ஆம் வெற்றி ஆண்டளவில் அனைத்துப் போர்களிலும் பெற்றனர். உள்நாட்டுப்போர் 1922-ஆம் ஆண்டில் முடிவுற்றது. இதனால் உருசியாவின் பொருளாதாரம் சீர் குலைந்திருந்தது. தொழிற்சாலைகளில் உற்பத்தி எதுவும் நடைபெறவில்லை. வேளாண்மைச்சாகுபடி பயங்கரமாக வீழ்ச்சியுற்றது. நகரமக்கள் வறுமையால் வாடினர். பல இலட்சக்கணக்கான உருசிய மக்கள் இறந்தார்கள்; ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளுக்கு ஓடினர். எனினும் பொதுவுடைமை அரசு தப்பிப் பிழைத்தது. சீர்கெட்டிருந்த பொருளாதார நிலையைச் சீர்படுத்த இலெனின் பல தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டார். இவர் 1921–ஆம் ஆண்டு மார்ச்சில் புதிய பொருளாதாரக் கொள்கைத் (New Economic Policy) திட்டத்தைத் தொடங்கினார். ஆட்சியின் தொடக்கத்தின்போது தொடங்கப்பட்ட சமதர்ம நடவடிக்கைகளை இத்திட்டம் மாற்றியமைத்தது. சிறு வணிகர்கன் குறிப்பிட்ட நடவடிக்கைகளைச் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். இவைசச் சில்லறை வாணிகம் மீண்டும் அனுமதிக்கப்பட்டது. அயல்நாட்டு முதலாளிகள் உருசியாவில் முதலீடு செய்ய அழைக்கப்பட்டார்கள். குடியானவர்கள் தனிப்பட்ட வாடிக்கைக்காரர்களுக்கு உணவுப்பொருள்களை விற்க அனுமதிக்கப்பட்டார்கள். அமெரிக்காவின் அகதிகள் பாதுகாப்புக் குழுவினர் அனுப்பிய உணவுப்பொருள்கள் பல இலட்சம் உருசியர்களைப் பஞ்சத்திலிருந்து காத்தன. இக்குழுவின் தலைவர் எர்பர்ட்டு ஊவர் எனப்படுவார். இப்புதிய பொருளாதாரக் கொள்கையைச் செயற்படுத்தத் தொடங்கியதும் ஐரோப்பிய நாடுகள் சோவியத்து ஒன்றியத்தை அங்கீகரித்து, அரசியல்துறைத் தொடர்பான உறவினை ஏற்படுத்திக் கொண்டன. இலெனினை முதலாளிகளின் கூலிக்காரி ஒருத்தி கிரெம்ளினில் சுட்டுப் படுகாயப்படுத்தினாள். ஆனால் அந்தக் கொலை முயற்சியிலிருந்து இலெனின் தப்பினார். காயங்கள் குணமாகி இவர் பிழைத்தார். நாடு இவர் மீது அந்தச் சமயத்தில் அன்பைப் பொழிந்தது. இலெனின் 1924–இல் காலமானார். இவர் கிரெம்ளினில் அடக்கம் செய்யப்பட்டார். இப்போது அச்சமாதியில் ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கான மக்கள் மரியாதை செலுத்துகின்றனர். இலெனின் எளிய குடும்பத்தில் பிறந்தவர்; எளிய பழக்க வழக்கங்கள் கொண்டவர்; உணவு, உடை, இருக்கை யாவும் எளியவை. இவர் குடும்பம் உணவுப் பங்கீட்டு பொருளைப் பெற்று உண்டு வாழ்ந்தது. தலைவர் என்பதற்காகத் தனிச் சலுகைகள் எதையும் அவர் பெறவில்லை. பஞ்சக் காலத்தில் நாட்டுத் தொழிலாளர்கள் அன்புடன் அனுப்பிய உணவுப் பொருள்கள் அனைத்தையும் இலெனின் குழந்தைகளுக்கு அளித்து மகிழ்ந்தார். உழவர்கள், தொழிலாளர்கள் கூறுவதை மிகவும் பொறுமையுடன் கேட்டு அரசாங்கச் சட்டங்கள் செய்தார்; அவர்களுள் ஒருவராகவே பழகினார். ஒருதடவை இவர் மாணவர்களுடன் சேர்ந்து விடியற்காலைப்போதிலேயே மாசுக்கோவில் மரக்கட்டைகளைச் சுமந்து சிரமதானம் செய்தார்; சுய விளம்பரத்தை அறவே வெறுத்தார். தம் ஐம்பதாம் ஆண்டுவிழாக் குறித்து இவர் மிகவும் நாணி அதைக் கண்டித்தார். நிழற்படம் எடுப்போருக்கு இவர் இடம் தருவதில்லை. ஆனால், குழந்தைகளை உயிருக்குயிராக நேசித்தார். ‘எல்லோரும் இந்நாட்டில் சமம்தான். ஆனால், குழந்தைகளுக்கு யாரும் சமம் இல்லை’ என்றார். நாட்டில் கடுமையான பஞ்சம் வந்தபோது, குழந்தைகளுக்கு மட்டும் முழுப் பங்கீடு தரச் செய்தார். இலெனின் விடிய விடியப் படிப்பார்; எழுதுவார். அச்சமின்றி மாறு வேடங்கள் புனைந்து காவலரை ஏமாற்றி உலாவுவார். காலை மாலை உலாவுவதையும் சதுரங்கம் ஆடுவதையும் பியானோ இசை கேட்பதையும் இவர் ஓய்வாகக் கருதினார். இவருக்கு உயிரான கருத்துகள் இரண்டு; போர் மனிதக் குலத்தின் பயங்கர எதிரி. அதை அடியோடு ஒழிப்பதற்குப் பாட்டாளிகளின் சர்வாதிகாரத்தினால் தான் முடியும் என்று கருதினார். சே.சு.இரா.