அரணிடுதலும் முற்றுகையிடுதலும்
araṇiṭutalum muṟṟukaiyiṭutalum
வீரவாழ்வையே உயர்ந்த வாழ்வாகக் கருதிய மக்கட்கு இன்றியமையாதனவாகும்.
வீரவாழ்வையே உயர்ந்த வாழ்வாகக் கருதிய மக்கட்கு இன்றியமையாதனவாகும். அரசனின் உறுப்புகளுள் அரணினை ஆறில் ஓர் உறுப்பாகத் திருவள்ளுவர் கூறுகின்றார். சிறந்த படை, குடிமக்கள், செல்வம், அமைச்சர், நண்பர், அரண் ஆகியன அவ்வாறு உறுப்புகளாகும். அரண்களின் தன்மையினைக் கூறப்புகுந்த வள்ளுவர் நிலவரண், நீரரண், மலையரண், காட்டரண் என்ற நான்கு அரண்களைக் கூறுகிறார். வெற்றியினை விரைந்து தேடிய வேந்தர்கள் வலிமைமிக்க கோட்டைகளைக் கட்டியிருந்தனர். பெரும்பாலான கோட்டையமைப்புகள் அரசர்களாலும் குறுநிலத்தலைவர்களாலும் நகர அரசாக நிறுவப்பட்டிருந்தன. சில பேரரசுகளும் தங்கள் தலைநகரை உயர்ந்த மதில்கள் அமைத்துக் காத்தன.
வரலாற்றின் தொடக்கக் காலத்தில் எழுப்பப் பெற்ற கோட்டையானது கி.மு. 7000–ஆம் ஆண்டில் கட்டப்பெற்றது. அது செரிகோ என்ற இடத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பெற்றது. சுவர் 4.5 மீட்டர் பருமனுள்ளதாகவும் 6.3 மீட்டர் உயரமுள்ளதாகவும் 3 மீட்டர் ஆழமுள்ளதாகவும் சுட்டப்பெற்றது. அது அக்கால மக்கட்கு நல்லதொரு பாதுகாப்பினை நல்கியது. அதுபோன்றதொரு கோட்டையமைப்பு, பின்னர் எகிப்திலும் அசிரியாவிலும் கட்டப்பெற்றது. இங்குக் காணப்படும் கோட்டைச் சுவர் 9 மீட்டர் பருமனுடையது. இதன் உயரம் 37 மீட்டர். கிரீசு, இசுபார்டா, உரோம் ஆகிய இடங்களில் கட்டுப்பட்டுள்ள கோட்டைகள் இன்றுள்ள பொறியாளர்களின் செயல் திறனை விஞ்சுகின்ற அளவிலும் வியக்கத்தக்க அளவிலும் அமைக்கப்பட்டுள்ளன. உடைந்துபோன கோட்டையின் பகுதிகள் உறுதியான கோட்டைக்குள் பலர் பாதுகாக்கப்பட்டனர் என்பதைக் கூறுகின்றன. தீராய் (Troy) என்னும் நகரத்தில் வலிமை வாய்ந்த கோட்டையொன்று இருந்ததாக ஓமர் (Homer) எழுதிய இலியாது (Illiad) என்னும் நூலால் அறியலாம். அக்கோட்டைக்குள் நுழையப் பல நாள்கள் முயன்றும், கிரேக்கர்கள் தோல்வியுற்றதால் இறுதியில் சூழ்ச்சித் திறனால் மரக் குதிரைக்குள் புகுந்து கோட்டைக்குள் நுழைந்து திராயைக் கைப்பற்றினர். இதனால் வலிமைவாய்ந்த போர் எண்ணம்கொண்ட கிரேக்கர்களாலும் வெல்லமுடியாத கோட்டைகள் அக்காலத்தே கட்டியுள்ளமையை அறியலாம். நாடோடிக் கூட்டத்தினரின் தொல்லைகளுக்காளான சீனர்கள் பருமனான நெடுஞ்சுவர் ஒன்றை எழுப்பியுள்ளனர். இது இன்றும் மாபெரும் அரணாக உலகினரை வியப்படையச் செய்கிறது. அவ்வரணே நாடோடிக் கூட்டத்தினரைச் சீனாவில் நுழைய விடாமல் தடுத்தது.
சங்க இலக்கியங்களில் பல கோட்டை அமைப்புகளைக் காண முடிகிறது. அக்காலக் கோட்டைகள் உயர்ந்த மதில்களை அரணாக்கிக் கொண்டு விளங்கின. அரணை ஒட்டி ஆழமான அகழி வெட்டப்பட்டிருந்தது. அகழியைக் கடக்க இயலாதவாறு கணைய மரத்தொடு கூடிய தொங்கு பாலம் அமைத்திருந்தனர். சில கோட்டைகள் காடுகளையும் மலைகளையும் அர- ணாகக் கொண்டு விளங்கின. தகடூரில் இருந்த கோட்டை, காடுகளை அரணாகக் கொண்டு விளங்கிற்று. வல்லம் என்னுமிடத்திலிருந்த கோட்டையானது மிளைக்காடுகளை அரணாகக் கொண்டு விளங்கியது. கானப்பேரெயில் கோட்டையானது காட்டின் நடுவில் பகைவர்கள் யாரும் நெருங்க முடியாதபடி அமைக்கப்பட்டிருந்தது. அக்காடுகள் போர் வீரர்களின் பயிற்சிக் களமாக விளங்கின. மேலும் சில ஊர்களில் மதில் அமைக்கப்பட்டிருந்ததெனத் தேவாரப் பாடல்கள் தெரிவிக்கின்றன. ‘வலங்கொள் மாமதில் சூழ் திருவாரூர்’ எனச் சம்பந்தர் தேவாரம் குறிப்பிட்டுள்ளது. மதுரையில் நீள் கடின மதில் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. வட்ட மதிலும் திகழ்ந்தவண் திருவையாறு என்றும், மலையென ஓங்கும் மாளிகை நிலவும் மாமதில் ஓமாம்புலியூர் என்றும், மதி தோய்கின்ற மாமதில் காஞ்சி என்றும், தொன்மதிற் சீர்காழி என்றும், சேணுலாமதில் ......... வேணு நற்புரம், திண்ண நன் மதிலணி சிரபுரம், சண்பை நகரில் நீள் மாடமதில் என்றும், பருமதில் குழ்ந்துள்ள பாம்புரம் என்றும் பலவாறாக மதில், அரண், புரிசை, அகழி ஆகியவை அமைந்திருந்தமையினைச் சம்பந்தர் பாடியுள்ளார். இதனால் பல மாமதில்களைக் கொண்ட ஊர்கள் அக்காலத்தே விளங்கியிருந்தன என்பது தெளிவாகும், கோட்டைகள் அமைக்கத் தகுதியமைந்த இடத்தைத் தெரிந்தெடுத்தலும் உண்டு. முயல், வேட்டை நாய்களை விரட்டிய இடத்தில் விசயநகர் அமைக்கப்பட்டது என்பது கூறப்படுகிறது. கோட்டையில், கொத்தளங்கள், வளைந்து தானே இயங்கும் அமைப்புடைய வில், கரிய விரலினையுடைய கருங்குரங்கு போன்ற பொறி, கற்களை வீசுகிறகவண், கோட்டைக்கருகில் நெருங்கியவர் மீது வெம்மை மிக்க நெய், உருக்கிய செம்பு இரும்பு, ஆகியவற்றை ஊற்றும் கருவி, தூண்டில் போன்ற பொறிகள், கழுத்திற் பூட்டிக் குறுக்கும் இரும்புச் சங்கிலி, அகழியைத் தாண்டிக் கோட்டைமீது ஏற முயலுவோரைத் தள்ளும் இரும்புக் காப்புகள், அரண்மீது ஏறியவரைக் கோட்டாற் கிழிக்கும் பன்றிப்பொறி, அவர்களின் கைகளை நடுங்கச் செய்யும் கணிப்பொறிகள், பகைவரைத் தாக்கும் சிச்சிலிப்பொறி, மூங்கில் வடிவான பகைவர்களை அடித்துத் துன்புறுத்தும் பொறி, எறிகோல் ஈட்டி, மதிற்குரிய ஏனைய பொறிகள் போல்வன மிகுந்திருந்தன என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அகழிகளில் முதலைகள் விடப்பட்டிருந்தன. அவைகள் பகைவர்களை அருகில் நெருங்கவிடாமல் தடுத்தன.
சார்லமேனின் (Charlemagne) கோட்டையமைப்பு முறையானது இக்கால அமைப்புகளைக் கொண்டு விளங்கிற்று. அவன் கோட்டைகள் கி.பி. 8–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பெற்றன ஆகும். அவன் அமைத்த முறையைப் பின்பற்றியே, ஐரோப்பா அனைத்திலும் இடைக் காலத்தில் கட்டபெற்றன போன்று ஐரோப்பாவிலுள்ள கோட்டைகள் காணப் படுகின்றன. அவ்வமைப்புகள் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள முறையே உள்ளன.
வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் போர் முறைகள் மாறின. அரணமைக்கும் முறைகளும் மாற்றியமைக்கப்பட்டன. கோட்டைகள் வலிமை வாய்ந்தவைகளாக விளங்க அவற்றின் அடித்தளம் செம்பால் உருக்கி வார்க்கப்பட்டதும் உண்டு. துப்பாக்கித் தாக்குதல்களையும், பீரங்கிக் குண்டுகளையும் தாங்கும் திறன் வாய்ந்தவைகளாகப் பிற்காலக் கோட்டைகள் கட்டப்பெற்றன. ஐரோப்பாவில் உள்ள கோட்டை அமைப்பு முறையினைப் போன்று குசராத்து மாநிலத்தில் மண்டு என்ற இடத்தில் ஒரு மலைப்பகுதியில் கோட்டையொன்றை அமைத்துள்ளனர். அது வலிமை மிக்க அரணை மதிலாகக் கொண்டது. அங்குக் காணப்படும் கொத்தளங்கள், கதவுகள் ஆகியன சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற கோட்டைகளை இந்தியாவில் ஆக்ரா, தௌலதாபாத்து, மதுரை, செஞ்சி, வேலுர் போன்ற இடங்களில் காணலாம். செஞ்சியில் கட்டப்பெற்ற கோட்டையானது தென்னிந்தியாவின் திராய் (Troy) எனப் போற்றப்படுகிறது. இதன்றியும் மராத்தியர் காலத்தில் மகாராட்டிர மலைப்பகுதிகளில் அமைந்த இருநூற்றுக்கும் மிகுதியான கோட்டைகள் காணப்படுகின்றன. அவை கருங்கல்லால் ஆனவை. அக்கோட்டைக்குள் மக்களுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் கிடைக்க வழி செய்யப்பட்டிருந்தன. அரண்கள் சிறந்த பாதுகாப்பினை மக்களுக்கு அளித்தன. இதனால் எளிதில் மொகலாயர்களும் பாமினி சுல்தான்களும் வெல்ல முடியாதபடி இவை இருந்தன. அவற்றுள் இராய்கட்டு என்ற கோட்டையே மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கோட்டையின் மீதுள்ள கொத்தளங்களில் பீரங்கிகள் நிறுத்தப்பட்டுத் தொலைதூரங்களில் உள்ள பகைவர்களைத் தாக்கியதும் உண்டு. பகைவர்கள் வலியவர்களானபோது அரணமைப்பும், வலிமை மிக்கதாகச் செய்யவேண்டிய கட்டாயத்தினை உணர்ந்து ஆல்பிரைட்டு டியூரர் (Albright Durear) என்ற செருமானியர் புதுமையான கோட்டை வடிவமைப்பு முறையினை நூலாக வெளியிட்டுள்ளார். கோட்டைகள் இரண்டு அல்லது மூன்று மதில்களைக் கொண்டனவாகவும் அமைந்திருந்தன. கோட்டைக்கருகாமையில் அகழியும், கோட்டையின் உயரே பல முனைகளிலும் திரும்பித் தாக்கச் செய்யும் பொறியமைப்புகளும் இடம் பெற்றிருந்தன. பின்னாளில் நாடுகள் சிறிய கோட்டைகளை முற்றுகையிடாமல் போர் தொடுத்து அவற்றை விழுங்கிய நிலையில், நாட்டின் எல்லையோரத்தில் கோட்டை- களும், முள்வேலியும் அமைக்கப்பெற்றன. நாடுகளின் எல்லையோரங்களில் மிக நீளமாகவும் வரிசையாகவும் கோட்டைகள் அமைத்துப் பகைவரைத் தடுத்தனர். முதன் முதலில் பிரான்சு தனது கிழக்கெல்லைப் பகுதியில் ‘மாகிநாட் கோடு’ (The Maginot Line) என்று பல கோட்டைகள் அமைத்துச் செருமானியரின் போர் வெறியிலிருந்து தப்பித்துக்கொள்ள நினைத்தது. இதேபோன்ற அமைப்புடைய தொடர் கோட்டைகள் இத்தாலியின் வடக்குப் பகுதியிலும், வடகிழக்குப் பகுதியிலும் கட்டப் பெற்றுள்ளன. போலந்தின் எல்லையோரத்தில் உருசியாவும், செருமனியின் எல்லையோரத்தில் செக்கோசுலோவாகியாவும் கட்டியுள்ளன. இவை யாவும், பீரங்கி, கவச மோட்டார், டாங்கி ஆகியவைகளைத் தடுத்து நிறுத்த அமைக்கப்பட்ட அரண்களாகும்.
இரண்டாம் உலகப்போரின் பின்னர் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன. இவை, போர் தொடுத்து நாட்டை அழிப்பதைவிட ஒரு நாட்டில் இருந்தபடியே ஓர் இயக்கியின் உதவியால் பகைவரின் நாட்டைச் சில மணித்துளிகளில் அழித்துவிடும். எனவே, ஒரு நாடு தன் அணு ஆயுதங்களை இன்றியமையாத தளத்தில் நிறுவச் செய்தலும், அதனைப் பகைவர் நாடு விழிப்புணர்வோடு அணு ஆயுதத்தின் அவ்வப்போதுள்ள நிலையினைக் கண்காணித்த வண்ணமே இருத்தலும் நடைபெற்று வருகின்றன. ஒரு நாட்டில் நிறுவப்பட்டுள்ள ஏவுகணைகளுக்கு எதிராகப் பகைவரது நாடுகளும் ஏவுகணைகளை ஆயத்த நிலையில் வைத்துள்ளன. இவை ஒன்றையொன்று தாக்கி உயிர் இழப்பும் பொருள் இழப்பும் விளைவிக்கும் என்ற அச்சமே வல்லரசுகளின் முதன்மையான அரணாக இன்று விளங்குகிறது.
முற்றுகை என்பது கோட்டையினை வளைக்கை அல்லது சூழ்ந்து கொள்ளுதல் என்ற பொருள் கொண்டதாகும். பகைவனின் கோட்டையை முற்றுகையிட்டுக் கைப்பற்றும் போரினைத் தமிழர்கள் உழிஞைப் போர் என்றனர். கோட்டைக்குள் பகைவர்கள் ஏணிகளின் உதவியால் நுழைய முயலுதலும், அவற்றைத் தடுக்கக் கோட்டையில் உள்ளோர் அம்பு மாரி பொழிதலும், பலவகைப் பொறிகளால் பகைவரைத் தாக்கி எறிதலும் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளன. உடும்புகளின் துணையால் மதில் மீது ஏறுவதும் உண்டு. கோட்டையில் இருப்போர் வெளியேவந்து தங்கிய நிலையும் உண்டு. அவர்கள் தாமே கோட்டைப் போரில் விழுப்புண்பட்டு இறந்தமையினைத் தொல்காப்பிய நொச்சித்திணை கூறுகிறது. கோட்டையைக் காக்க வீரர்கள் போராடிய நிலையினையும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. மதிலின் உச்சியைக் கைப்பற்றிய பகைவர்கள் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து மங்கல நீர் தெளித்து, மண்ணு மங்கலம் என்ற விழாவைக் கொண்டாடியதும் உண்டு, முற்றுகையிடப்பட்ட நிலையில் தூதுவர்களையும் புலவர்களையும் கோட்டைக்குள் அனுப்பியும், கோட்டைக்குள் இருப்போர் பகைவனுக்கு அனுப்பியும் இருபாலாரும் ஒத்த உடன்படிக்கை செய்து கொண்டமையும் உண்டு. முற்றுகையினை நீட்டித்துக் கோட்டைக்குள் இருந்த மக்கள், விலங்கினங்கள் உணவில்லாமல் தவிக்கச் செய்வதும் உண்டு. தமிழ்நாட்டில் சங்க காலத்தில் நடைபெற்ற உறையூர் முற்றுகை இத்தன்மை வாய்ந்ததாகும். இதுபோன்ற ஒரு நிலையைக் கிரேக்கர்கள் திராய் (Troy) நகரை முற்றுகையிட்ட போது கையாண்டனர். அந்த முற்றுகை பலகாலம் நீட்டித்தது. தொடர்ந்து முற்றுகையிட்ட போதிலும் திராய் மக்கள் பணிய மறுத்தனர். பின்னர்க் கிரேக்கர்கள் தம் சூழ்ச்சித் திறனால் கோட்டைக்குள் புகுந்துப் திராய் மக்களைத் தோற்கடித்து எலனைக் (Helen) கைப்பற்றினர்.
அசிரியர்கள் போர் வீரர்களுக்கு முறைப்படி சிறப்பான பயிற்சிகள் அளித்து முற்றுகையில் ஈடுபடுத்தினர். சக்கரக் கவச வண்டிகள் அமைத்து, அதில் வில் வீரர்களை அனுப்பிக் கோட்டைகளை முற்றுகையிட வைத்தனர். இதனால், கோட்டைக்குள் இருந்தோர் ஏவும் அம்புகளால் அசிரியர்கள் தப்பித்துக் கொள்ளவும், வலிந்து தாக்குதல் மேற்கொள்ளவும் முடிந்தது. உயிரிழப்புகள் மிகுதியாக ஏற்படாமல் பகைவர்களின் கோட்டையை முற்றுகையிட்டுக் கைப்பற்றியுள்ளனர்.
சீனாவில் மங்கோலியர்கள் சிறப்பான முற்றுகை முறைகளைக் கையாண்டார்கள். இவர்களின் படையானது ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இரு பிரிவினைச் சார்ந்தவர்கள் ஏனைய மூன்று பிரிவினருக்குப் பாதுகாப்புக் கவசமாக விளங்கினர். மூன்று பிரிவினர்களும் வில் அம்புகளைத் தாங்கியிருந்தனர். முன் நின்ற இரு பிரிவினரும் ஈட்டிகளைத் தாங்கி நின்றனர். போர் நிகழ்ந்தபோது பின்னர் இருக்கும் வில்வீரர்கள் ஈட்டிவைத்திருப்போர்களின் இடையில் வந்து நின்று ஒரே நேரத்தில் அம்பு மழை பொழிவர். பகைவர்கள் குழப்பம் அடையும் வரையில் ஓயாமல் போர் செய்வர். ஈட்டி வைத்திருப்போரும் அதே நேரத்தில் போர் புரிவர். ஈட்டியும், அம்பும் மாறி மாறித் தாக்குவதால் பகைவர்கள் நிலை குலைந்து போய்விடுவர். அவர்கள் சிறந்த கட்டுப்பாடு கொண்டோராகவும், இலக்கினைத் தவறாமல் வீழ்த்தும் திறன் கொண்டோராகவும் திகழ்ந்து வேகத் திறனைக் கணக்கிட்டுக் காலமுறையில் தாக்குதல் நிகழ்த்தி முற்றுகையிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இசுகாண்டினேயாவின் வடபகுதியான குளிர்நாட்டில் வாழ்ந்து வந்த வைகிங் என்ற இனத்தவர் சிறந்த முற்றுகைகளை அறிந்திருந்தனர். இவர்கள் பாரிசு நகரத்தைக் கி.பி. 885–இல் முற்றுகையிடத் தொடங்கிக் கி.பி. 887–இல் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் நிலத்திலும் நீரிலும் முற்றுகையிடுதலைக் கையாண்டனர். போரைத் தொடங்கியவுடன் தற்காப்பைப் பற்றிப் பெரிதும் கவலை கொள்ளாமல் எதிரியைச் சாய்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டு போரிட்டனர். இவர்கள் பெரும்பாலும் செல்வம் நிரம்பியுள்ள நாட்டையே முற்றுகையிட்டனர்.
சார்லமேனின் படைவீரர்கள் முற்றுகையில் சிறந்து விளங்கினர். தங்கள் முன்னோரின் போர் முறைகளையும் போர்க் கருவிகளையும் நவீன மயமாக்கினர். போர் வீரர்கள் கத்தி, ஈட்டி, வாள், கவசம் ஆகியன ஏந்தி முற்றுகையிட்டனர். இவர்கள் நிகழ்த்திய 53 போர் முற்றுகைகளில் முற்றுகைக் கருவியினை உடன் கொண்டு சென்றனர். மூன்று மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களையும், ஆறு மாதங்களுக்குத் தேவையான போர்க் கருவிகளையும் கொண்டு சென்று பகைவர்களுக்கு ஓயாமல் தொல்லை கொடுத்து நாட்டைக் கைப்பற்றினர். இவர்கள் கி.பி. 773–இல் இலம்பார்டி நாட்டு அரசனை எதிர்த்து அவனது கோட்டையினை முற்றுகையிட்டனர். போர் வீரர்கள் அனைவரும் இலம்பார்டிக் கோட்டையை எட்டு மாதங்கள் முற்றுகையிட்டனர். உணவின்றி இருந்த இலம்பார்டி மக்கள் சார்லமேனிடம் சரணடைந்தனர். இலம்பார்டி சார்லமேன் வசமாயிற்று.
இசுலாமியர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் ஏற்பட்ட சிலுவைப்போரில் பல முற்றுகைத் தந்திரங்கள் பின்பற்றப்பட்டன. கிறித்தவர்கள் பயன்படுத்திய முற்றுகைக் கருவிகள், கவண்பொறி, குறுவில் போன்ற பல ஆயுதங்களும் தேள், உடும்பு போன்ற விலங்கினங்களும் ஆகும். மதில்களைத் தகர்ப்பதற்குரிய பெரும்பூணிட்ட உத்திரங்களைப் பயன்படுத்தினர். கிறித்தவர்கள் கி.பி 1097–இல் மாரா என்ற கோட்டையை முற்றுகையிட்டனர். பகைவர்களின் கோட்டைக்கெதிரில் பெரிய மரத்தாலான அரண் ஒன்றை அமைத்தனர். அவ்வரணில் அமர்ந்து எதிரிகளை இரும்புத் தூண்டில் முள்களைப் பயன்படுத்திக் கோட்டையிலிருந்து வெளியில் இழுத்தனர். எருசலம் கோட்டையைக் கிறித்தவர்கள் தகர்த்து உள்ளே நுழைந்தனர். இவர்கள் ஐரோப்பாவின் போர் முறைகளையும் முற்றுகை முறைகளையும் மாற்றி அமைத்தனர். இதனால் இவர்களுக்குப் பின்னர் முற்றுகை முறையில் பெரிய மாற்றங்கள் மேற்கொண்டு குறுகிய காலத்தில் கோட்டைகள் கைப்பற்றப்பட்டன. ஐந்தாண்டுக் காலத்திற்குமேல் முற்றுகையிடப்பட்டும் கைப்பற்ற இயலாத கான்சுடாண்டிநோபிள் கோட்டை துருக்கியர் முற்றுகையின் விளைவால் ஐம்பத்தைந்தே நாள்களில் வீழ்ச்சியுற்றது.
இந்திய வரலாற்றில், அக்பரின் கோண்டுவானா முற்றுகையும் ஆங்கிலேயரின் பாண்டிச்சேரி முற்றுகையும் சிறப்பானவையாகும். கி.பி. 1761–இல் பாண்டிச்சேரியை ஆங்கிலேயர் முற்றுகையிட்ட போது மக்கள் உணவின்றியும், பணமின்றியும் தவித்தனர். பட்டினியால் பலர் இறக்கலாயினர். புசிப்பதற்கு ஏதும் இன்மையால் நாயின் விலைகூட உயர்ந்து இருபத்துநான்கு ரூபாய்க்கு விற்பனை ஆயிற்று. இறுதியில் பாண்டிச்சேரி ஆங்கிலேயரிடம் வீழ்ச்சியடைந்தது. பாண்டிச்சேரியின் செல்வச் செழிப்பும் அழகும் அழிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து செஞ்சி முற்றுகையும் மாகி முற்றுகையும் இந்திய வரலாற்றில் கூறப்படுகின்றன.
அண்மைக் காலத்துப் போர்கள் உலக நாடு பலவும் பங்குபெற்று உலகப் போர்களாக நிகழ்ந்துள்ளமையால், சிறிய நாடுகளின் மேல் செய்யப்படும் முற்றுகையில் நாட்டமிழந்து, பெரிய நிலப்பரப்பைக் கைப்பற்ற நினைத்தனர். மேலும், விமானப்படை பெரும் பணிபுரிந்து வருவதால் கோட்டைகளை வெகு விரைவில் அழிக்க வாய்ப்புள்ளதாலும் கோட்டைகளைக் கட்டாமல் தற்காப்புக்கான புதிய வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர். இதன் காரணமாகவே அரணிடுதலும் முற்றுகையும் இக்காலப் போர் முறைக்கு ஒவ்வாதனவாயின. இக்காலத்தில் வீடுகளுக்கும் கோயில்களுக்குமே வலிமைமிக்க அரண்கள் அமைத்துள்ளனர்.ஏ.சு.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 745)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4qywrw8k/
தமிழ்“அரணிடுதலும் முற்றுகையிடுதலும்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4qywrw8k/APA
Oliyon Research. (2026). அரணிடுதலும் முற்றுகையிடுதலும். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4qywrw8k/MLA
"அரணிடுதலும் முற்றுகையிடுதலும்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4qywrw8k/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment