இலூரி ஆரி இலாரன்சு
ilūri āri ilāraṉcu
அமெரிக்க ஐக்கிய நாட்டின் முதல் சமூகப்பணிக் களஞ்சியத்திற்குப் பதிப்பாசிரியராக 1965–ஆம் ஆண்டில் பணியாற்றினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் முதல் சமூகப்பணிக் களஞ்சியத்திற்குப் பதிப்பாசிரியராக 1965–ஆம் ஆண்டில் பணியாற்றினார். பின்னர், இவர் சமூகப்பணி ஆண்டு நூலுக்கும் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார். இவர் 60 ஆண்டுக் காலம் பல்வேறு துறைகளில் பணியாற்றினார். இலூரி ஆரி (Lourie Aurie) பொருளியல், சமூகவியல், சமூகப்பணி போன்ற துறைகளில் ஆசிரியராகவும் நல நிறுவனங்களிலும், ஆய்வு நிறுவனங்களிலும் நிருவாகியாகவும் பணியாற்றினார். இவர் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
இலேட்டியாவில் இவர் 1892–ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பெற்றோர் 1898–ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்று குடியேறினர். மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் இவர் உயர்நிலைக் கல்வி கற்றார். தேசிய நாடிழந்தோர் பணி அமைப்பை (National Refugee Service) உருவாக்க உதவிய இவர் 1930–ஆம் ஆண்டில், யூதர்களின் தேசிய சமூக ஆய்வுக் கழகத்தின் (Bureau of Jewish Social Research) இயக்குநராகப் பதவியேற்றார். இதன் பிறகே இவரது பணி குறிப்பிடத் தகுந்ததாகக் கருதப்படுகின்றது. இந்த ஆய்வுக் கழகம், யூதர்களின் தேவை, அவர்களுடைய தொல்லைகள் ஆகியவற்றை உலகினுக்குத் தெரியப்படுத்தியது; யூதர் சமுதாயத்தை ஒருங்கிணைப்பது பற்றியும் ஆய்வு செய்தது; பல நிறுவனங்களுக்குச் சமூக ஒருங்கமைப்பு, திட்டமிடல், பொருளாதாரத் திட்டமிடல் போன்றவற்றைப் பற்றியும் அறிவுரை கூறியது. இந்த ஆய்வுக் கழகம், ‘யூதர்கள் கூட்டமைப்பும் நலநிதியும்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியது. இவர் தலைமை ஏற்ற பிறகு 200க்கும் மிகுதியான யூதர்கள் கூட்டமைப்புகளை ஏற்படுத்தினர்.
இலூரி ஐக்கிய யூதர்கள் மேல் முறையீட்டுக் கழகம் (United Jewish Appeal) என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இது ஒரு தனியார் அமைப்பாகும். இது உலகிலுள்ள பல பெரிய மனிதவின முன்னேற்ற நிறுவனங்களுள் ஒன்றாகும். மேலும், ‘தேசிய யூதர்கள் சமுதாயத் தொடர்பு ஆலோசனை மன்றம்’, ‘யூதர்கள் தொழில் துறை மன்றம்’, ‘அமெரிக்க யூதர்கள் கல்வி நிறுவனம்’ போன்ற அமைப்புகளையும் ஏற்படுத்துவதற்கு இவர் காரணமாக இருந்தார்.
இவர் இயற்றிய ‘மரபின் உறுதிப்பாடு’ (A Heritage Affirmed) என்னும் நூலில் இவர்தம் கொள்கைகளைக் குறிப்பிட்டுள்ளார். தெட்ராய்டிலுள்ள மெரில்-பாமெர் (Meril Palmer) கல்லூரியில் சமூகவியல் விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர், கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்திலும் நியூயார்க்குச் சமூகப்பணிக் கல்லூரியிலும் மேலும் பல பல்கலைக் கழகங்களிலும் விரிவுரையாற்றினார். சமூகப் பணிக் கல்வி மன்றத்திற்காகச் சமுதாய ஒருங்கிணைப்பு என்னும் பாடத்திற்குப் பாடத்திட்டம் வகுத்துக் கொடுத்தார்.
இவரைச் சிறப்பிக்கும் பொருட்டு யூதர்கள், சமுதாயப் பணியின் தேசிய மாநாட்டிற்குத் தலைவராகத் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்கினர். இவர் கட்டுரைகள், இன்றைய சமூகப்பணி, மருத்துவமனை, சமூகச் சேவை, குழந்தை நலம், சமூகச் சேவை மறு ஆய்வு, பள்ளியும் வீடும், யூதர்கள் சமூக ஆய்வு, அமெரிக்க யூதர்கள் ஆண்டுமலர் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 432)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4qss6qh7/
தமிழ்“இலூரி ஆரி இலாரன்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4qss6qh7/APA
Oliyon Research. (2026). இலூரி ஆரி இலாரன்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4qss6qh7/MLA
"இலூரி ஆரி இலாரன்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4qss6qh7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment