என்பார் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த மறுப்புரை (Protestant) சமயச் சீர்திருத்தக் கொள்கையர்; கொள்கைகளுக்காகப் போராடித் தம் உயிரை ஈந்தவர். இலாட்டிமர் (Latimer) கி.பி. 1485–ஆம் ஆண்டில் பிறந்தார். இவருடைய தந்தையார் இவரைக் கற்பதற்காகக் கேம்பிரிட்சுக்கு கி.பி. 1506–இல் அனுப்பி வைத்தார். இவர் வாழ்வியல் கல்வியில் முதுகலைப் பட்டத்தை கி.பி. 1514–இல் பெற்றார்; பின்னர்ச் சமய குருவானார். தொடக்கத்தில் கத்தோலிக்கரான இவர், தம் நண்பர் தாமசு பில்னி (Thomas Bilney) என்பாரின் செல்வாக்கினால் மறுப்புரைச் சமயத்தில் நம்பிக்கை கொண்டவரானார். தம் சமகாலத்தவரான இங்கிலாந்து அரசர் எட்டாம் என்றியின் ஆதரவைப் பெற்ற இலாட்டிமர், மேற்கு கிங்டன் (West Kington) என்னும் பகுதியை கி.பி. 1531–இல் கொடையாகப் பெற்றார். தாமசுகிராம்வெல் (Thomas Cromwell), தாமசு கிரான்மர் (Thomas Cranmer) என்னும் இருவர் இலாட்டிமருக்கு நண்பா ஆயினர். இவர்களுள் முன்னவர் பிற்காலத்தில் அரசரின் தலைமை அமைச்சரானார். பின்னவர் காண்டர்பரித் தலைமைக்குரு ஆனார். இலாட்டிமர் சமயங்களுக்கு மாறான கருத்துகளைப் போதித்தவர் என்னும் குற்றச்சாட்டு வந்தபோது, இவருடைய நண்பர்களால் இவரைக் காப்பாற்ற இயலவில்லை. இவரை விசாரிக்க வந்தவர்கள் சமயங்களுக்கு மாறான கருத்துகளைப் போதிக்கக் கூடாது எனக் கூறியபோதும் இவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார். அதனால் இவர் சமயநீக்கம் செய்யப்பட்டதுடன், கி.பி. 1532–ஆம் ஆண்டு ஏப்பிரலில் சிறையிலும் அடைக்கப்பட்டார். பின்னர்த் தாமசு கிராம்வெல்லின் செல்வாக்கினால் இலாட்டிமர் கி.பி. 1535–இல் வொர்செசுடர் குருவின் ஆட்சிப் பகுதியின் தலைவராக உயர்த்தப்பட்டார். சமயச் சீர்திருத்தத் தலைவர்களுள் ஒருவராக கி.பி. 1536–ஆம் ஆண்டளவில் இவர் கருதப்பட்ட போதிலும், திருச்சபைக் கோட்பாடுகளில் மாற்றம் வேண்டி இவர் யாதொரு பணியையும் செய்யவில்லை. எனினும் சமய குருமார்களின் குருட்டு நம்பிக்கைகளைக் கடுமையாகச் சாடியும், திருச்சபையின் பணியால் உயர்த்தப்பட வேண்டியவர்களின் வறுமையைத் திருச்சபையின் செல்வ வளத்தோடு ஒப்பிட்டும் இவர் ஆற்றிய உரைகள், நாட்டில் விழிப்புணர்ச்சியை உண்டாக்கின. இலாட்டிமர் கி.பி. 1536–ஆம் ஆண்டில் தம் பொறுப்பை விட்டு விலகுமாறு வற்புறுத்தப்பட்டார். இதற்குக் காரணமாய் அமைந்தது இங்கிலாந்தில் வைதிக கத்தோலிக்கச் சமயத்துக்கு அப்போது ஏற்பட்ட ஆதரவுதான். கிராம்வெல் கி.பி. 1540–இல் வீழ்ச்சியுற்றார். இலாட்டிமரின் வாழ்வு எட்டாம் என்றி மன்னரின் எஞ்சியிருந்த ஆட்சிக்காலத்தில் இருள் சூழ்ந்ததாக இருந்தது. சமய எதிர்ப்பாளர் என்னும் ஐயப்பாட்டின் விளைவாக இலண்டன் கோபுரச் (Tower) சிறையில் சிறிது காலம் இவர் அடைக்கப்பட்டார். எட்டாம் என்றியின் ஆட்சிக்கால இறுதி மாதங்களில் இவர் மிகத் துன்புறுத்தப்பட்டார். ஆறாம் எட்வர்டு கி.பி. 1547 சனவரியில் முடி சூட்டிக் கொள்ளும்வரை இத்தொல்லை நீடித்தது. இப்புதிய அரசரின் ஆட்சிக் காலத்தில் மறுப்புரைக் கிறித்தவச் சமயம் பெரும் செல்வாக்கடைந்தது. இலாட்டிமருக்குத் தம் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புக் கிட்டியது. குரு (Bishop) ஆட்சிப் பகுதியின் பொறுப்பினை ஏற்க மறுத்த இவர், சுதந்திரமாகச் சமயச் சீர்திருத்தக் கருத்துகளைப் பேச முற்பட்டார். இவருடைய சொற்பொழிவுகளை மக்கள் பெரும் கூட்டமாகக் கூடிக் கேட்டனர். அரண்மனையிலும் இவரை ஆதரிப்போர் உளராயினர். ஆனால் ஆறாம் எட்வர்டின் சமயச் சீர் ஆட்சி முடிவுற்றபோது இவருடைய திருத்தக் கருத்துகளை அரியணை ஏறிய மேரி தியூடர் (Tudor) அம்மையார் ஆதரிக்கவில்லை. அரசியார் ஒரு கத்தோலிக்கச் சமயச் சார்பாளராக இருந்தமையால் இவருக்குத் தொல்லைகள் தொடர்ந்தன. இவர் கி.பி. 1553–ஆம் ஆண்டு செப்டம்பரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக ஆக்சுபோர்டுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு கி.பி. 1555–ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16–ஆம் நாள் மற்றொரு சமயச் சீர்திருத்தக்காரரான நிக்கோலசு இரிட்லி என்பாருடன் எரிக்கப்பட்டு உயிர்துறந்தார்.