கட்டப்படும் பொருள்களைப் பொறுத்தும், பயன்படுத்தப்படும் காரணங்களை ஒட்டியும், சாலைகள் பலவகையாகப் பிரிக்கப்படலாம். கட்டுமானப் பொருள்களைப் பொறுத்துச் சாலைகள், மண் சாலை, கூழாங்கல் சாலை, நீர் இணைப்புக் கற்சாலை, தார்ச் சாலை, சிமெண்ட் சாலை அல்லது கற்காரைச் சாலை, தகட்டுச் சாலை எனப் பிரிக்கப்படும். மண் சாலை, மணல், களிமண் ஆகியவற்றைச் சரியான அளவில் கலந்து உருவாக்கப்படுகிறது. முதலில் உள்ள மண்ணின் மேற்பரப்பு மேலும் கீழுமாகவும் கரடு முரடாகவும் இருக்கும். அவற்றின் மீது மணல், களிமண் கலவையைப் பரவலாகப் போட்டு, ஏறத்தாழ 12 செ.மீ. உயரத்திற்குப் புதிய சாலை அமைக்கப்படுகிறது. பின்னர், அதே சாலை 7.5 செ.மீ உயரமாகக் குறையும் வரை மீண்டும், மீண்டும் கல் உருளையால் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. முழுமையாக அழுத்தம் கொடுத்து முடிந்த பின்னர், சாலைகளின் இரு பக்கமும் முறையான கழிவு நீர்ப் பாதைகள் அமைக்கப்படும். கூழாங்கல் சாலை அல்லது சரளைக் கல் சாலை எனப்படுவதும் இதே முறையில் அமைக்கப்படும். 6—30 மி.மீ. அளவுடைய கூழாங்கற்கள் அல்லது சரளைக் கற்கள் தேர்வு செய்யப்படும். இக்கற்களைக் கரடு முரடான மண் மேற்பரப்பில் மணல், களிமண் கலவையுடன் பரவலாகப் போட வேண்டும். இக்கலவையில் 26% மணலும், 13% களிமண்ணும் இருக்கும். இச்சாலையின் கனம் 15—30 செ.மீ. வரையிலும் அமைக்கப்படும். அதன் மேற்புறம் 6—12 மி.மீ. உயரத்திற்குக் குறுமணல் பரப்பப்பட்டு மூடப்படும். மழைக் காலங்களில் இவை பெருமளவில் சேறு உண்டாக்கக் கூடியவை. நீர் இணைப்புக் கற்சாலை, நீர் மிகுதியாகப் பயன்படுத்திக் கட்டப்படும் சாலையாகும். 10 செ.மீ. உயரத்தில், இரு அடுக்குக் கற்சாலை அமைக்க வேண்டும். 7 செ.மீ. அளவுள்ள கற்கள் இதற்குப் பயன்படும். முதலில் சிறிய அளவிலான கற்களைப் பயன்படுத்தி, 5 செ.மீ. உயரத்திற்கு ஓர் அடுக்குக் கற்சாலை அமைக்க வேண்டும். கல் தூள், பருமணல் ஆகியவை இணைப்புப் பொருளாகவும், நிரப்பும் பொருளாகவும் பயன்படும். ஒவ்வோர் அடுக்காகக் கற்கள் அமைக்கப்பட்ட பின், மிகுந்த நீர் தெளிக்க, இறுக்கமான பிணைப்பு ஏற்படும். தார்ச்சாலை, கருங்காரை அல்லது தார் போன்ற ஒட்டும் பொருள் மிகுதியாகப் பயன்படும் கற்சாலை ஆகும். இது ஒட்டும் பொருளின் தன்மைக்கேற்ப வெப்ப அல்லது குளிர்ந்த நிலையில் அமைக்கப்படுகிறது. பொதுவாக, தார் போன்ற இணைப்புப் பொருள்கள் உருகிய நிலையில், கற்களுடன் கலக்கப் பட்டு, அக்கற்கள் பரவலாக்கப்படுவதால் இச்சாலைகள் கட்டப்படுகின்றன. இக்கற்களின் அடிப்புறமும், மேற்புறமும் தார் நிரப்பப்பட்டுச் சாலை கறுப்பு நிறத்தில் அமைந்திருக்கும். இவற்றின் மொத்தக் கனம் 15 செ.மீ. வரை இருக்கும். சில வேளைகளில் கருங்காரை அல்லது நீலக்கல் போன்ற வாஷிங்டன் கிறித்தவ ஆலயத்தின் அன்றைய, இன்றைய சாலை அமைப்பு இணைப்புப் பொருள்களுடன் கல் பொடிகள் சேர்த்துக் கெட்டியாக்கப்பட்டு, நீர் இணைப்புக் கற்சாலையின் மீது இட்டு அழுத்தப்பட்டுத் தார்ச் சாலையாக அமைக்கப்படும். சிமெண்ட் சாலை அல்லது கற்காரைச் சாலையைக் கட்டடங்களில் தளம் போடுவது போல அமைக்க வேண்டும். மண்ணின் மேற்பரப்புச் சமப்படுத்தப்பட்ட பின்பு, கற்காரைத் தளம் போட வேண்டும். சிமெண்ட், கல், மணல், நீர் ஆகியவற்றைச் சரியான அளவில் கலந்து இச்சாலைகள் கட்டப்படுகின்றன. 10 செ.மீ. கனம் உள்ள தளங்கள் வரிசையாகவோ, குறிப்பிட்ட தொலைவிற்கு ஒன்றாகவோ அமைக்கப்படும். குறைந்தது 14 நாள் நீர் விடப்பட்டு, இறுக்கமடைய வேண்டும். 28 நாளுக்குப் பின்னரே, ஊர்திகள் செல்லக் கூடிய அளவில் முழு வலிமை அடையும். தகட்டுக் கற்சாலையில், குறிப்பிட்ட அளவில் கற்கள் தகடுகள் போல வெட்டப்பட்டு, அவை தளமாக அமைக்கப்படும். சிறு வீதிகளில் மண்ணின் மேற்பரப்புச் சமப்படுத்தப்பட்டு, இறுக்கமடைந்த பின்னர், தகட்டுக் கற்கள் பாவப்பட்டுக் கற்களுக்கு இடையில் உள்ள சிறு இடைவெளிகள் சாந்தால் மூடப்படும். கற்காரைத் தட்டுகளும் இதில் பயன்படும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> நிர்வாகக் காரணங்களுக்காக, சாலைகள் நாக்பூர் திட்டத்தின் மூலம் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட நெடுஞ்சாலை, சிற்றூர்ச் சாலை, மலைச்சாலை என இவை பிரிக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அடுத்துள்ள மாநில நெடுஞ்சாலைகள் மாநிலங்களையும், மாவட்டத் தலைநகர்களையும், முக்கிய நகரங்களையும் இணைக்கும் சாலைகள் ஆகும். மாவட்ட நெடுஞ்சாலைகள் என்பன பொருள்கள் உற்பத்தி, விற்பனை ஆகும் இடங்களின் நெடுஞ்சாலைகள், பாதைகள் உள்ள இடங்களுடன் இணையும் சாலைகள் ஆகும். இச்சாலைகள் ஆண்டு முழுதும் போக்குவரத்தை நகரப் பகுதிகளுக்குள் கொண்டு செல்லும் வல்லமை பெற்றவை. இவ்வகைச் சாலைகள் பெரிய மாவட்டச் சாலைகள், பிற மாவட்டச் சாலைகள் என இருவகைப்படும். சிற்றூர்ச் சாலைகள் சிற்றூர்களை ஒன்றோடு ஒன்று இணைக்கவும், அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலை, இருப்புப் பாதை, படகுத் துறை ஆகியவற்றுடன் இணைக்கவும் பயன்படுகின்றன. சிற்றூர் மக்களின் தேவையை இவை நிறைவு செய்கின்றன. இவை, பயன்படுத்தப்படும் விதம், தாங்கக் கூடிய சுமை, அவற்றின் அகலம், இன்றியமையாமை ஆகியவற்றைப் பொறுத்துப் பல வகைப்படும். வெளிப்புறச் சாலைகள், அகச் சாலைகள், மாவட்டச் சாலைகள் அல்லது வீதிகள், பண்ணைச் சாலைகள் எனப் பிரிக்கப்படும். வெளிப் புறச் சாலைகள், சிற்றூர் இணைப்புச் சாலைகள் எனப் பிரிக்கப்படும். பெரிய மாவட்டச் சாலைகள் சிற்றூர்களைக் கடந்து செல்லக் கூடிய தேசிய நெடுஞ்சாலைகள் ஆகும். இவை நேரிடையாகப் பயன்படுவதில்லை. சிற்றூர் இணைப்புச் சாலைகள் ஓர் ஊரை ஏனைய சிற்றூர்களுடனோ, நகர நெடுஞ்சாலையுடனோ இணைக்கக் கூடியவையாகும். அகச் சாலைகள், ஊரின் சுற்றுச் சாலைகள், ஆரச் சாலை, முதன்மை வீதிகள், கிளை வீதிகள் எனப் பல வகைப்படும். சுற்றுச் சாலை, ஊருக்குள் பொருள்களை எடுத்துச் செல்லப் பயன்படும் சாலையாகும். இது சிற்றூரின் முழுப் பகுதியை யும் சுற்றியுள்ள சாலையாகும். ஊர்திகள் நிறுத்தும் வசதி உடைய சாலைகளாகவும் இருக்கும். ஆரச் சாலைகள் (radial roads) ஊர் மையத்திலிருந்து சுற்றுச் சாலையை அடையும். கனரக ஊர்திகள் செல்ல இவை பயன்படுவதில்லை. எனினும், மாட்டு வண்டிகளும், வேளாண் ஊர்திகளும் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். முதன்மை வீதிகள் ஊரிலுள்ள இல்லங்களைக் கடந்து, சுற்றுச் சாலைகளை அடையும் சாலைகளாகும். கிளைச் சாலைகள் முக்கிய வீதிகளிலிருந்து பிரிந்து செல்லும் சாலைகள் ஆகும். இச்சாலைகள் சுற்றுச் சாலைகளில் முடிவதும் உண்டு; இல்லந்தோறும் சென்று முடிவதும் உண்டு. பண்ணைச் சாலைகள், பெரும் பண்ணைச் சாலை, சிறு பண்ணைச் சாலை, விலங்குச் சாலை எனப் பல வகைப்படும். பெரும் பண்ணைச் சாலைகள் சிற்றூர்களின் வெளிப்புறச் சாலைகளில் உள்ள பண்ணைகளையும், வயல்களையும் இணைக்கும்; வேளாண் ஊர்திகள், சுமை ஏற்றிச் செல்லும் ஊர்திகள் அனைத்தும் செல்லக் கூடியன. சிறு பண்ணைச் சாலைகள், பெரும் பண்ணைச் சாலைகளின் கிளைகளாகப் பிரிந்து செல்லும் துணைச் சாலைகளாகும். ஒற்றையடிப் பாதையே விலங்குச் சாலைகள் ஆகும். மலைச் சாலைகளின் இன்றியமையாமை அகலம், அவற்றில் செல்லக் கூடிய சுமை முதலியவற்றைப் பொறுத்துப் பலவாறாகப் பிரிக்கப்படும். தேசிய நெடுஞ்சாலை, வகுப்பு 9, 5, 3, எனப் பிரிக்கப்படும். முக்கியத்துவம் வாய்ந்த மலைச் சாலைகள் தேசிய நெடுஞ்சாலை எனப்படும். வகுப்பு 9, 6 மீ அகலம் உடையது; 3 டன் எடையுள்ள ஊர்திகள் செல்லக் கூடியது. வகுப்பு 5, 4.9 மீ அகலம் உடையது; 1 டன் எடையுள்ள ஊர்திகள் செல்லக் கூடியது. வகுப்பு 3, 2.5—3.65 மீ. அகலம் உடையது. சிற்றுந்துகள் மட்டுமே செல்லக் கூடியது. நகரச் சாலைகள் நகரத்திலிருந்து பிற நகரத்திற்குச் செல்லும் சாலைகள், பெரும் பிரிவுச் சாலைகள், சுற்றி வரக் கூடிய சாலைகள், சந்துச் சாலைகள், நகரத்தின் ஒவ்வொரு பகுதியையும் சுற்றியுள்ள சாலைகள், இல்லங்களுக்கு உள்ள இணைப்புச் சாலைகள், நடைபாதை மற்றும் மிதிவண்டிச் சாலைகள் என ஏழு வகைப்படும். போக்குவரத்து வசதிகளைப் பொறுத்து இவை நான்கு வகைப்படும். அவை உயர் வகை நெடுஞ்சாலை, முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்புச் சாலைகள் ஆகும். உயர் வகை நெடுஞ்சாலைகள் நான்கு ஊர்திகள் செல்லக் கூடிய அகலம் உடையவை. இவற்றில் நாள் ஒன்றுக்கு 3000க்கு மேற்பட்ட ஊர்திகள் செல்லும். முதல் வகுப்புச் சாலையில் நாள் ஒன்றுக்கு 1500 ஊர்திகள் வரை செல்லும். இச்சாலைகள் தார்ச் சாலைகளாக இருக்கும். இரண்டாம் வகுப்புச் சாலை நாள் ஒன்றுக்கு 300 ஊர்திகள் வரை செல்லக் கூடியது. கற்சாலைகளாகவும், நீர் இணைப்புக் கற்சாலைகளாகவும் கட்டப்பட்டிருக்கும். மூன்றாம் வகுப்புச் சாலை ஓர் ஊர்தி செல்லும் பாதையாகப் பயன்படக் கூடியது. நாள் ஒன்றுக்கு 75 க்கும் குறைவான ஊர்திகள் செல்லும். சில சாலைகள் வேறு பெயருடன் குறிக்கப்படும். உடலில் குருதி எடுத்துச் செல்லும் குருதிக் குழாய்கள் போன்று நாடிச் சாலை என ஒரு சாலை செயல்படுகிறது. இது முக்கியமான சாலைகளை நகரச் சாலைகளுடன் இணைக்கிறது. முதன்மைச் சாலை அல்லது ஊர்வலச் சாலை என்பது ஊர்வலம், அணி வகுப்பு நடைபெற மிக வசதியாக உள்ளதாகும். புறவழிச்சாலைகள் நகரங்களினுள்ளே செல்லாமல், வெளிப்புறமாகவே செல்பவை. நாட்டுச் சாலை எனப்படுவது ஒரு நகரத்தை அடுத்த நகரத்துடன் இணைக்கும் சாலை ஆகும். மிகு விரைவுப் பாதை எனப்படுவது விரைந்து செல்லும் ஊர்திகள் மட்டுமே செல்லக் கூடிய மிக அகலமான சாலையாகும். இது மித தட்ப வெப்ப நிலை இயல்பாக இருக்கும் போது மட்டுமே பயன்படக் கூடியது. தடையற்ற சாலை எனப்படுவது நாடிச் சாலை போன்ற குறுக்கீடு எதுவும் இல்லாததாகும். காட்டுச் சாலை அல்லது சீரில்லாச் சாலை எனப்படுவது, மேடு, பள்ளங்கள் நிறைந்தது. நிலையச் சாலை, ஊர்திகள் நிறுத்துவதற்கு ஏற்ற இட வசதி கொண்டது. பணிச்சாலை முக்கியமான சாலைகளுக்கு இணையாக, அவற்றிற்கு அருகிலுள்ள சாலை ஆகும். இப்பணிச் சாலை முக்கிய சாலையில் ஊர்தி நெருக்கடியைக் குறைக்கவும், அவசரக் காலங்களில் பயன்படவும் கூடியது. —ஏ. எஸ். எஸ், சேகர்