அகார் மட்கலன்கள் அகார் இராசசுதான் (Rajasthan) மாநிலத்தில் உதயப்பூருக்கு அருகில் அமைந்துள்ள சிற்றூர் (Ahar). இவ்வூர், வரலாற்றுக்கு முந்திய நாகரிகத்தினைக் கொண்டு திகழ்கிறது. இடைக்காலக் கல்வெட்டில் “அகதபுரா” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேவார் இராணாக்களின் மூதாதையர்களான கொகில்லா அரசர்களின் தலைநகராக இவ்வூர் இருந்தது. இவ்வூருக்கு அருகில், அகார் என்ற சிற்றாற்றங்கரையில் துல்கோட் என அழைக்கப்படும் பண்டைய நாகரிகத்தின் தடயங்கள் கொண்ட மண்மேடு உள்ளது. இங்கு முதன் முதலாக இராசசுதான் மாநிலத் தொல்லியல் துறையினர் 1952-இல் மாதிரிக் குழிகளை அகழ்ந்து ஆய்வு செய்தனர். இவ்வாய்வின்முடிவு உறுதியாக அறியப்படாததாலும், மேலும் இங்குப் புதையுண்ட நாகரிகத்தினை நன்கு அறிதற் பொருட்டும், 1954–55–இல் மறுமுறை அத்துறையினர் அகழாய்வு மேற்கொண்டனர். இது 1955-56-லும் தொடர்ந்து நடைபெற்றது. 1961-62-இல் புனேயிலுள்ள தக்காணக் கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Deccan College of Post–graduate and Research Institute), இராசசுதான் மாநிலத் தொல்லியல் துறை, மெல்போர்ன் (Melbourne) பல்கலைக்கழகம் ஆகிய மூன்று நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் இங்கு மீண்டும் அகழாய்வு தொடங்கியது. இவ்வகழாய்விற்கு டாக்டர் எச்.டி. சங்காலியா இயக்குநராகப் பொறுப்பேற்றிருந்தார். இவ்வகழாய்வுகளின் மூலம் இரண்டு பெரிய கால கட்டங்களைச் சேர்ந்த பண்பாட்டுக் கூறுகளுக்கான சான்றுகள் வெளிக்கொணரப்பட்டன. இங்குத் தொல்பொருள்கள் 10 மீட்டர் ஆழம் வரை கிடைக்கின்றன. கன்னி மண்ணின் (Virgin Soil) மேல் தொடங்கி, ஏறத்தாழ 6.5 மீட்டர் கனமுள்ள படிவு- கள் முதற் காலத்தைச் சேர்ந்தவையாகும். இக்கனமான படிவுகளைக் கொண்டு அக்கால மக்கள் இங்கு நீண்ட காலம் வாழ்ந்திருக்கவேண்டும் என அறிகிறோம். இந்நாகரிகத்தின் சிறப்புக் கூறான கருப்பு சிவப்பு மண்பாண்ட ஓடுகளின் படிவுகள் முழுவதும் கிடைத்துள்ளன. அக்காலத்தினை ஆய்வாளர் மூன்று துணைப் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். முதல் துணைப்பிரிவில் கிடைக்கும் கருப்பு சிவப்பு ஓடுகள் உட்புறம் சொர சொரப்பாகவும் பளபளப்பாகவும் உள்ளன. இரண்டாம் துணைப் பிரிவில் இவ்வோடுகள் இரு பக்கமும் பளபளப்பாகச் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை வெள்ளை நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டுத் திகழ்கின்றன. வெள்ளைநிற வண்ணம் தீட்டப்பட்ட கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள் இங்குக் கிடைத்த மட்பாண்டங்களில் குறிப்பிடத்தக்கவனவாகும். கடைசி துணைப் பிரிவில் இதனுடன் கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட செந்நிறப் பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. இவ்வோடுகள் அரப்பா (Harappa) நாகரிகத்திலும் அதன் பின்னர்ச் செப்புப் பண்பாட்டுக் காலத்திலும் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. இங்குப் பானை ஓடுகள் மட்டுமன்றி நுண்கற் கருவிகளும் (Microliths) செப்புப் பொருள்களும் கிடைத்துள்ளன. அக்கால மக்கள் வீடு கட்டி வாழ்ந்த தடயங்களும் இவ்வகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இப்பண்பாட்டு மண்ணடுக்குகளில் இரும்பிலான அம்புகளும் ஆணிகளும் இரும்புக் கசடுகளும் (Iron Slags) கிடைத்துள்ளன. இதனால் ஏறத்தாழ கி.மு.16-15 ஆம் நூற்றாண்டுகளிலேயே இங்கு உருக்குத்தொழில் நடைபெற்றிருக்கலாம் என்று சாகி என்னும் ஆய்வாளர் கருதுகிறார். ஆயினும். இதனை உறுதிப்படுத்த மேலும் சான்றுகள் தேவை. அகழாய்வின் மூலம், முதற் காலத்தில் வாழ்ந்த மக்களின் கட்டிடக் கலைத்திறனை ஒருவாறு உய்த்துணரலாம். வீட்டுச் சுவர்கள் மண்ணாலும் கல்லாலும் ஆனவை. மூங்கில் தட்டிகள் தடுப்புச் சுவர்கள் போல் பயன்படுத்தப்பட்டன. ஏறத்தாழ 36, ச.மீ. அளவுடைய வீடுகள் காணப்பட்டன. பல அறைகள் கொண்ட வீடுகளும் அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. இங்குள்ள பல வாய்களைக் கொண்ட அடுப்பின் பயனைச் சரிவர அறிய முடியவில்லையாயினும், கூட்டாக உணவு சமைப்பதற்கோ உலோகத்தாதுகளை உருவாக்குவதற்கோ இவை பயன்பட்டிருக்க வேண்டும். செப்புக் கோடரிகளும் செப்புப் பாளங்களும் மிகுதியாகக் கிடைத்துள்ளன. இவற்றினைக் கொண்டு செப்புத் தாதுகளை உருக்கிச் செப்புப் பொருள்கள் செய்யும் தொழில் இங்கு நடைபெற்றிருக்க வேண்டுமென உணரலாம். இவையன்றிச் சுடுமண்ணால் ஆன ஆடு, பெரிய கொம்பினை உடைய காளை, மற்றும் பல பொம்மைகள் போன்றவை இங்குக் கிடைத்த தொல்பொருள்கள் ஆகும். இக்காலத்தில் கல்லினாலான கருவிகள் கிடைக்காமல் செப்புப் பொருள்கள் மட்டும் கிடைத்ததால் இக்காலத்தினைச் செப்புக் காலம் (Bronze Age) என அறிஞர்கள் கொள்வர். இரண்டாம் காலம் வரலாற்றுக் காலத் தடயங்களை கொண்டுள்ளது. இக்காலப் படிவத்தின் அளவு 1.5 மீ. முதல் 1.8 மீ. வரை இருந்தது. இக்காலத்தையும் இரண்டாம் காலம்–அ, இரண்டாம் காலம்–ஆ, இரண்டாம் காலம்–இ என மூன்று துணைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். இரண்டாம் காலம் அ–வில் வடக்கத்திய மெருகேற்றப்பட்ட கருப்பு நிற மட்பாண்டங்களும் (Northern Black Polished Ware), வண்ணம் தீட்டாத கருப்பு சிவப்பு மட்பாண்டங்களும், சிவப்பு மட்பாண்டங்களும் மற்றும் இரும்பாலான பொருள்களும் கிடைத்துள்ளன. இரண்டாம் காலம்-ஆ - வில் கிடைத்துள்ள பொருள்களைக் கொண்டு அதன் காலத்தை கி.பி. 100 முதல் கி.பி. 300 வரை கணிக்காலம். இக்காலத்தில் கிடைத்த இரண்டு சுடுமண் முத்திரை அச்சுகளில் (Terracotta Scaling) கி.மு. 200 முதல் கி.பி. 100 வரை கணிக்கத்தக்க பிராமி எழுத்துகள் உள்ளன. இரண்டாம் காலம்–இ-யில் இடைக்காலத்தின் முற்பகுதியைச் சார்ந்த தொல்பொருள்கள் கிடைத்துள்ளன.டி.த. துணை நூல்கள் “Archaeological Remains Monuments and Museums, Part I & II”, Archaeological Survey of India, New Delhi, 1964. Kailash Chand Jain, “Ancient Cities and Towns of Rajasthan”, Motilal Banarsidas, Delhi, 1972.