சிறுநீரக இயக்க ஆய்வுகள்
ciṟunīraka iyakka āyvukaḷ
சிறுநீரகங்களின் இயக்கத்தைக் காண பல ஆய்வுகள் உள்ளன.
சிறுநீரகங்களின் இயக்கத்தைக் காண பல ஆய்வுகள் உள்ளன. சிறுநீரகங்களின் இன்றியமையாத பணிகள் பின்வருமாறு: உடலிலுள்ள நீரின் கொள்ளளவைக் கட்டுப்படுத்துதல், உடலின் மின்பகுளிகளைக் (electrolytes) கட்டுப்படுத்தல், குருதியின் அமில கார நிலையை இயல்பான நிலையில் வைத்திருத்தல், குளுக்கோஸ் அமினோ அமிலங்கள், பாஸ்ஃபேட், பைகார்பனேட், புரதங்கள் ஆகியவற்றைச் சரியான அளவில் தக்க வைத்தல், வேண்டாத ஆக்கச் சிதை மாற்றப் பொருள்கள், நச்சுப் பொருள்கள், மருந்துகள் ஆகியவற்றை வெளியேற்றுதல் முதலியனவாம்.
மேற்கூறிய பணிகள் முறையாக நடைபெறுகின்றனவா என அறியும் ஆய்வுகளில் முக்கியமானது சிறுநீர் ஆய்வாகும். 24 மணி நேரத்தில், இயல்பான தட்ப வெப்ப நிலையில் வெளியேற வேண்டிய சிறுநீரின் அளவு 800—2500 மி.லி ஆகும். இது மிகவும் குறைந்து விட்டால், சிறுநீர்க் குறைவு (oliguria) ஏற்படுகிறது. இது நீரிழப்பு, குருதிக் குறை அழுத்தம், இதயத் தளர்வு, சிறுநீரக அழற்சி ஆகிய நோய்களின் போது உண்டாகலாம். இந்நோய்கள் முற்றி விட்டால், சிறுநீர்த் தடை (anuria) தோன்றுகிறது.
சிறுநீர் மிகையாகப் பிரிந்தால் அதைச் சிறுநீர்ப் பெருக்கு (polyuria) என்பர். நீரிழிவு நோயும் (diabetes), சர்க்கரை வியாதி (diabetes mellitus) இதற்குச் சிறந்த சான்றாகும். சிறுநீரின் ஒப்பு அடர்வு எண் 1.020 க்குக் குறையாமல் இருக்க வேண்டும். நீரிழிவு நோயிலும், புரதம் மிகையாக வெளிப்படும் நிலையிலும் ஒப்பு அடர்வு எண் மிகவும் குறைந்து விடுகிறது. சிறுநீரின் அமில கார நிலையும் அளவிடப் பட வேண்டும். இயல்பான நிலையில் சிறுநீரின் pH 4.3—8.0 இருக்கலாம். மிகவும் அதிகமாக இருந்தால், நுண்ணுயிரிப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். அந்நுண்ணுயிரிகள், யூரியாவிலிருந்து அம்மோனியாவை உண்டாக்கக் கூடியனவாக இருக்கும்.
சிறுநீரில் இயல்புக்கு மாறான பொருள்கள். புரதம், குருதிச் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பாக்டீரியாக்கள் ஆகியவை சிறுநீரில் காணப்பட்டால், அவை பல வகை நோய் நிலைகளைச் சுட்டிக் காட்டுகின்றன. சில வேளை குருதி, மேலணிச் செல், பளிங்குப் படிகம் போன்றவற்றின் வார்ப்புகள், குளூக்கோஸ், பித்த நீர் நிறமிகள், உப்புகள் போன்றவை சிறுநீரில் காணப்பட்டால் அவை குறிப்பிட்ட நோய்களைச் சுட்டிக் காட்டும்.
குருதியின் வேதிப் பகுப்பாய்வு சிறுநீரக இயக்க ஆய்வுகளில் அடங்கும். யூரியா, கிரியாடினின், பாஸ்ஃபேட், சல்ஃபேட் போன்றவற்றின் இயல்பான அளவு அதிகரித்தால், அது சிறுநீரகப் பாதிப்பைக் குறிக்கும். சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவையும் அளவிடப்பட வேண்டும். சிறுநீரக வடி முடிச்சின் (glomeruli) வடிகட்டு விகிதம் (GFR) மிகவும் முக்கியமான ஆய்வாகும். இனுலின் எனப்படும் பாலிசாக்கரைடு, ஒரு நிமிடத்திற்கு 120 மி.லி. அளவில் வெளிப்பட்டால் அது ஆரோக்கிய நிலையாகும்.
எக்ஸ் கதிர் ஆய்வு. வயிற்றின் எக்ஸ் கதிர்ப்படம் எடுத்தால், சிறுநீரகக் கற்கள் இருப்பதை எளிதில் கண்டு பிடித்து விடலாம். இப்படம் மூலம் சிறு நீரகத்தின் அளவையும் மதிப்பிடலாம்.
சிரைவழிச் சிறுநீரக வரைவு (intravenous pyelograph). இந்த ஆய்வில் சிரை வழியாக வேறு படுத்திக் காட்டும் ஊடகத்தைச் செலுத்துவதற்குப் பதிலாகச் சிறுநீர்ப் பை உள்நோக்கி மூலம் சிறுநீரகக் குழலினுள் செலுத்தப்படுகிறது. சிறுநீரகத் தமனி வரைபடமும் (renal arteriography) சிறுநீரக நோய் நிர்ணயத்தில் துணை புரிகிறது.
சிறுநீரகத்தின் புற ஒளிக் கதிர் வரைபடம்(renal ultrasonography). இது அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மிக முக்கியமான ஆய்வுக் கருவியாகும். நீர் நிறைந்த சிறுநீரகம், பல நீர்ப் பை கொண்ட சிறுநீரகம் (polycystic), புற்றுக் கட்டிகள் ஆகியவற்றை எளிதில் கண்டுபிடிக்கலாம். சிறுநீரகப் பிணிக் கூறாய்வு, சிறுநீரகப் பணிகள் பற்றிய ஆய்வுகளில் முக்கிய பங்கு பெறுகிறது. —சாரதா கதிரேசன் நூலோதி. B.M. Brennen, The Kidney, Vol I and II, W.B. Saunders Co., Philadelphia, 1981.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 360)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4es5b2en/
தமிழ்“சிறுநீரக இயக்க ஆய்வுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4es5b2en/APA
Oliyon Research. (2026). சிறுநீரக இயக்க ஆய்வுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4es5b2en/MLA
"சிறுநீரக இயக்க ஆய்வுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4es5b2en/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment