உம்மத்தூர்க் குறுநில மன்னர்கள்
ummattūrk kuṟunila maṉṉarkaḷ
உம்மத்தூர் ஒரு சிறிய கிராமமாகும்.
உம்மத்தூர் ஒரு சிறிய கிராமமாகும். இது மைசூரின் தெற்குப் பகுதியில் கோயம்புத்தூர் மாவட்டத்தினை ஒட்டிக் காணப்படுகின்ற ஓர் ஊராகும். இது ஒரு காலத்தில் கங்க நாட்டின் தலைநகராக விளங்கிய தலக்காட்டுக்கருகில் இருந்தது. இவ்விடமானது இன்று சாமராச நகர வட்டத்திற்குள் அடங்கியுள்ளது. கி.பி. 15–ஆம் நூற்றாண்டின் முடிவில் கர்நாடகப் பகுதியை ஆண்டுவந்த குறுநில மன்னர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளை அளித்தவர்கள் இரைசு என்பாரும் அயவருமாவார்கள். உம்மத்தூர்க் குறுநில மன்னர்களைப் பற்றி முன்னுக்குப் பின் முரணான செய்திகளை இவர்கள் கூறியுள்ள போதிலும் இவை வரலாற்றிற்குப் பெரிதும் பயன்படுகின்றன.
‘உம்மத்தூர் உடையார்கள்’ என மிகச் சிறப்பாக அழைக்கப்பட்டு வந்த இவர்கள் விசயநகரப் பேரரசைச் சில காலம் எதிர்த்து வந்தனர்.
இக்குறுநில மன்னர்களைப் பற்றி இருகல்வெட்டுகள் நன்கு அறிவிக்கின்றன: 1. சாமராச நகர்க் கல்வெட்டு, 2. குண்டலூ பேட் கல்வெட்டு. ‘சௌராட்டிரா பிரபு’, ‘பெனுகொண்டா விக்காக்ரேசுவரா’ என்பது இவர்களின் பட்டங்கள். ஆனால் இவை இரண்டுமே இவர்கள் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இவர்கள் பொற்கொல்லர்கள் வழி வந்தவருமல்லர். இவர்களுக்கும் கங்கநாட்டினருக்கும் தொடர்பு இருந்ததைப் போன்று மைசூரை ஆண்ட வம்சத்தினருக்கும் கங்கர்களுக்கும் தொடர்பு இருந்தது. ஆகவே இவர்கள் கர்நாடகத்தினைச் சேர்ந்தவர்களென்றும் மத்திய அரசு பலவீனமடைந்த காரணத்தால் இவர்களும் பலவீனமடைந்தனர் என்றும் தெரிய வருகின்றது. உம்மத்தூரும் அண்டை நிலப்பகுதியான தெர்க்கா நம்பியும் விசயநகர வீரனான கம்பண்ண உடையாரின் (1356–1376) ஆளுநர் ஒருவரால் ஆளப்பட்டு வந்தன என்பதை அக்கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. அச்சன்னா 1376, 1407 ஆகிய ஆண்டுகளில் ஆட்சி செலுத்தியுள்ளான். உம்மத்தூரை ஆண்டவர்கள் விசய நகர ஆளுநர்களைப் பின்பற்றியதுடன் விசயநகர அரசரின் கீழ் ஆட்சி செய்திருக்க வேண்டும் என்பதும் தெளிவாகின்றது.
கொங்கு நாட்டைச் சேர்ந்த கோயம்புத்தூர் வரை இவர்களின் ஆட்சி பரவியிருந்திருக்கிறது. கொங்கு நாட்டில் தொடர்ச்சியான ஆட்சியிருந்திருக்க வேண்டுமென்பது அப்பகுதியில் கிடைத்த கல்வெட்டுகளால் தெளிவாகின்றது. உம்மத்தூர்க்குறுநில மன்னர்களின் வம்சாவளியைக் கீழ்க்கண்டவாறு அமைக்கலாம்.
மேலே காட்டிய வம்சா வளியானது வீரநஞ்சராயன்–1, இம்மடிதெப்பண்ணா ஆகிய இருவரும் சில காலம் ஆண்டுள்ளதையும், சிக்காவும் வீரநஞ்சராயா–2–உம் அவர்களுக்குப் பின் குறுநிலப் பகுதிகளை ஆண்டுள்ளதையும் காட்டுகின்றது. கொங்கு நாட்டின் தொடர்பு உம்மத்தூர்க் குறுநில மன்னர்களின் வம்சாவளியை அறியவும், ஆட்சி, மக்கள் வாழ்க்கை ஆகியவற்றை பற்றித் தெரிந்து கொள்ளவும் உதவுகின்றது.
நஞ்சண்ணா என அழைக்கப்படும் இரண்டாம் நஞ்சராயனைப் பற்றிய குறிப்பு நம்பியூர், பட்டணம், தாராபுரத்திலுள்ள தாத்தாங்கன்னி ஆகிய ஊர்களிலுள்ள சாசனங்களில் காணப்படுகிறது.
முதலாம் நஞ்சராயன்
இவன் முசுலிம்களால் கொடுவாய்க்கருகில் இடித்துத் தள்ளப்பட்ட பெருமாள் கோயிலைக் கட்டினான்; அதனைப் புனிதப்படுத்தினான். அழிந்துபோன சேர சோழ மன்னர்களின் எழுத்துகளை மீண்டும் சுவரில் பொறித்தான். கோயிலின் பூசைக்காகவும், அதனைப் பழுது பார்க்கவும் இரு கிராமங்களை ஈந்தான். கொடுவாய் மக்கள் அவ்வூர் வழியாகச் சென்ற மக்களுக்குச் சுவையான உணவுடன் கம்பும் தருமமாக வழங்கினர் என்று மற்றொரு கல்வெட்டுக் கூறுகின்றது. அக்காலத்தில் கொடுவாய் முக்கிய ஊராக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அது வழி புக்க நாடு என்ற பகுதியில் அமைந்திருந்து.
சிக்காவின் அனாசிச் சாசனம், குன்னத்தூர்ச் சாசனம், குண்டூர்ச் சாசனம் ஆகியவை இவன் காலத்தில் நிகழ்ந்த வணிகரின் கொடை, வெட்டிய குளம், 50 உடையார்களுக்கு அளிக்கப்பட்ட உணவு, உடை முதலியவற்றையும் குறிப்பிடுகின்றன. பட்டணத்தில் கிடைக்கப்பெற்ற இரண்டாம் நஞ்சராயனின் கல்வெட்டொன்று ஆறு வணிகர்கள் அக்கிராமத்தை உருவாக்கினார்கள். என்றும் அதற்குச் சிரீநாத பட்டணம் என மறு பெயரிட்டனர் என்றும் குறிப்பிடுகின்றது.
இது குறுநில மன்னர்களின் ஆட்சித் திறமையையும், மக்கள் நலம் கருதி அவர்கள் வாழ்ந்தமையையும் தெளிவுபடுத்துவதுடன், மக்கள் குறைவான கிராமங்களில் மக்களைக் குடியேறச் செய்வித்தனர் என்றும், ஆலயங்களைப் புதுப்பித்தனர் என்றும் கூறுகின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையத்துக்கருகில் இன்றும் காணப்படும் நஞ்சராயன் குளம் இரண்டாம் நஞ்சராயனால் வெட்டப்பட்டது என்றும், இவன் விவசாயத்தில் கவனம் செலுத்தினான் என்னும் தெரிகின்றது. இவன் விவசாயமே கிராமத்தின் முதுகெலும்பு என்பதை நன்கு அறிந்திருந்தான் போலும். அழிந்து போன ஆலயத்திலிருந்து கிடைத்த கல்வெட்டொன்று இவனே அக்குளத்தை வெட்டினான் எனக் கூறுகின்றது.
இரண்டாம் நஞ்சராயனின் தாத்தாங்கன்னிச் சாசனமானது திருபுவனத்து ராசாக்கள் தம்பிரானார் பராக்கிரம பாண்டிய தேவனுடைய மகனான நயினார் ராகுத்த பெருமாள் என்பவனைப் பற்றிக் குறிப்பிடுவதுடன் அவன் நன்கொடையாக அளித்த வரியையும் குறிப்பிடுகின்றது. விக்கிரமபாண்டிய பிரமராயன் உம்மத்தூர்க் குறுநில மன்னருக்குக் கீழ்ச் சிறு குறுநில மன்னராக இருந்தான் என்றும் கூறுகின்றது.
வலிமைமிக்க கிருட்டிண தேவராயர் பதவிக்கு வந்ததும் உம்மத்தூர்க் குறுநில மன்னர்களை அடக்க எண்ணினார். குமார வீரய்யாவைச் சீரங்கப் பட்டணத்திற்கும் மலபார் எல்லையில் காணப்படும் நிலப்பரப்பிற்கும் அரசனாக்கினார். இது கொங்கு நாட்டையும் உள்ளடக்கியது. இவை யாவும் கி.பி. 1510க்கும் 1512க்கும் இடையில் நிகழ்ந்தவையாகும். இவ்வாறு கொங்கு நாட்டின் சில பகுதிகளில் மேலாண்மை செலுத்திவந்த உம்மத்தூர்க் குறுநில மன்னர்களின் ஆட்சி முடிவடைந்தது. க.பு.சீ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 928)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4az6k7ck/
தமிழ்“உம்மத்தூர்க் குறுநில மன்னர்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4az6k7ck/APA
Oliyon Research. (2026). உம்மத்தூர்க் குறுநில மன்னர்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4az6k7ck/MLA
"உம்மத்தூர்க் குறுநில மன்னர்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/4az6k7ck/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment