காற்றை விடக் கனமாக உள்ள, நேர் செங்குத்தாக ஏறவும் இறங்கவும் இயலாத சில விமானங்கள், பிற விமானங்களை விடக் குறைவான தொலைவிற்குள் ஏறவும், இறங்கவும் செய்கின்றன. இவ்வகை விமானங்கள் சிறு தொலைவில் ஏறவும், இறங்கவும் வல்லவை. இச்செயல் சிறு தொலைவு ஏறலும், இறங்கலும் எனப்படும். விமானங்கள் நிலைச் சிறகு உடையவையாகவும், சிறகின் மேல் பரவும் காற்றுப் பாய்விலிருந்து ஏற்ற விசையைப் பெறுபவையாகவும் உள்ளன. உந்து பொறி (propulsion) மூலமும், ஏற்ற விசையை உயர்த்திக் கொள்ளும். திருகு ஊர்தி போன்று நேர் செங்குத்தாக ஏறவும், இறங்கவும் வல்ல விமானங்கள் சிறு தொலைவு ஓடி எழுந்தால், மிகுதியான பளுவைச் சுமந்து செல்லும் திறன் கிடைக்கும். ஆனாலும், இவற்றைச் சிறு தொலைவில் எழும் விமானங்கள் என்று கொள்வதில்லை; இவை சிறு தொலைவில் செயலாற்றும் செங்குத்து எழுதல் வகை எனக் கருதப்படும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> ஓடு பாதை நீளம். ஏறத்தாழ 15 மீ. உயரமுள்ள ஒரு தடையைத் தாண்டிப் பறப்பதற்கு விமானம் ஓடு பாதையில் ஒட வேண்டிய தொலைவைப் பொறுத்து விமானத்தின் சிறு தொலைவு ஏறு திறனும், இறங்கு திறனும் முடிவு செய்யப்படும். (படம்-1) சிறு தொலைவு என்பது 150—850 மீ. வரை பல நிறுவனங்களால், பல் வேறு அளவுகளில் குறிக்கப்படும். எனவே, சிறு தொலைவு என்பது இது வரை வரையறுக்கப்படவில்லை. பொதுவாக, சிறு தொலைவில் ஏறும் விமானங்கள் குறைந்த வேகத்தில், மிகக் கட்டுப்பாடாகப் பறக்கக் கூடியவையாகவும், மிக குறுகிய காற்றுப் பரப்பில் திசை மாற வல்லவையாகவும் இருத்தல் வேண்டும். 150 மீ. தொலைவிற்குள் 15 மீ. உயரமுள்ள தடைகளைத் தாண்டுதலே, சிறு தொலைவு ஏறும் திறனைக் குறிக்கும் என்று கக்கன்ஹெய்ம் போட்டியில் (Guggenheim competition) முடிவு செய்யப்பட்டது. பொதுவாக, பெரிய சிறகுகளின் உதவியுடனும், உயர் ஆற்றல் உருவாக்கும் எந்திரங்களின் துணையுடனும் சிறு தொலைவு ஏறும், இறங்கும் திறனை அடையலாம். தற்கால விமானங்களில், சிறகின் முனையில் பல் வேறு கோணங்களில் திருப்ப வல்ல தகடுகளின் மூலம் காற்றுப் பாய்வைத் திசை திருப்பிப் போதுமான அளவு ஏற்றத்தை உயர்த்த முடிகிறது. பயன்கள். பொதுவாகப் பெரு நகரங்களில், நகருக்கு வெளியே மிகத் தொலைவிலேயே விமான தளம் இருக்கும். விமானம் மூலம் வரும் சரக்குகள், நகருக்கு உள்ளே இருக்கும் தொழிற்சாலைகளை அடைவதற்குச் சாலை வழிப் போக்குவரத்து ஊர்திகளையே நாட வேண்டியுள்ளது. சிறு தொலைவில் ஏறவும், இறங்கவும் வல்ல விமானங்களை நகரின் மையப் பகுதிக்கே இட்டுச் சென்று, மிகக் குறுகிய பரப்பில் இறக்கி விடலாம். மேலும், முறையான விமானத் தளம் இல்லாத இடங்களில் சென்று இறங்குதற்கும், இவ்வகை விமானங்கள் பயன்படுகின்றன. —வயி. அண்ணாமலை