நெடுஞ்சாலைப் பொறியியல்
neṭuñcālaip poṟiyiyal
பொதுவாக ஊர்திகள் வசதியான முறையில் செல்ல உதவும் பாதை, நெடுஞ்சாலை (highway) எனப் படும்.
பொதுவாக ஊர்திகள் வசதியான முறையில் செல்ல உதவும் பாதை, நெடுஞ்சாலை (highway) எனப் படும். பயன் படுத்தும் வகைக்கு ஏற்ப, பார வண்டிப் பாதை, கன ரக ஊர்திப் பாதை, மிதி வண்டிச் சாலை, மலைச் சாலை எனக் குறிக்கப் படுவதுண்டு.
சாலை பொதுவாக எளிதான வகையில், ஓர் இடத்திலிருந்து பிறிதோர் இடம் சென்று வரவும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் , நாட்டின் வளர்ச்சிக்கும், கலை, கல்வி, தொழில் வளர்ச்சிக்கும் உதவுகிறது. போர்க் காலங்களில் சாலை இன்றியமையாத தேவையாகி விடுவதோடு, சட்டம், ஒழுங்கு நிலையைச் சீராக நிலை நிறுத்தவும் உதவுகிறது.
எப்போதும் உலர்ந்த நிலையில், புல், செடி எதுவும் வளராத நல்ல சாலையில், தேவையான அளவு சரிவும், எளிய வளைவுகளும், நல்ல மேற்பரப்பும் இருக்க வேண்டும். நீண்ட காலம் உழைக்கக் கூடியதாகவும், குறைந்த செலவில் கட்டக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இந்தியாவில் நகர்ப் புறச் சாலைகள், கிராமப் புறச் சாலைகள் என இரு வகையுண்டு. நகர்ப் புறச் சாலைகள் ஐவகையாகவும், கிராமப் புறச் சாலைகள் நால் வகையாகவும் பகுக்கப் படும்.
நகர்ப் புறச் சாலை மீவிரைவுச் சாலை. மிக வேகமாகச் செல்லும் கன ரக ஊர்திகளுக்கென ஒதுக்கப் பட்ட நகரச் சாலைகள் பெரும் தொழிற் சாலைகள் உள்ள நகரங்களை நேரடியாக இணைக்கக் கூடியவை.
இணைப்புச் சாலை. தொடர்ந்து செல்லக் கூடிய இந்த ஊர்திச் சாலைகளைக் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே குறுக்காகக் கடந்து செல்லலாம்.
துணை இணைப்புச் சாலை. இது போக்குவரத்துக் குறைவான நகரங்களுக்குள் உள்ள இணைப்புச் சாலைகளில் கிளைகளாக உள்ளது. குறுகிய சாலையாக உள்ளமையால், ஊர்திகளை நிறுத்திச் சுமை ஏற்றவோ, இறக்கவோ கூடாது. இச்சாலை பொது மக்கள் மிகுதியாகப் பயன் படுத்தக் கூடியது.
ஒருங்கிணைக்கும் சாலை. இது பரவலாக அனைத்துத் திசைகளிலும் உள்ள பெரிய பொதுச் சாலைகளை ஒருங்கிணைக்கிறது.இச்சாலை குடியிருப்புப் பகுதி, தொழிற்சாலைப் பகுதி, வணிகச் சந்தைப் பகுதிகளை இணைக்கிறது. சாலைப் போக்குவரத்து மிகுந்த நேரங்களில் இச்சாலைகளில் ஊர்திகளை நிறுத்தக் கூடாது.
உள்ளுர்ச் சாலை. தனிப்பட்ட கட்டடங்களையும், குடியிருப்புகளையும் சென்றடையப் பயன் படும் இச்சாலை, போக்குவரத்து முடியவும், தொடங்கவும் பயனாகும். இச்சாலையில் மனிதர் நடமாடுவதற்கும், ஊர்தி நிறுத்துவதற்கும் தடை இல்லை.
கிராமப் புறச் சாலை தேசிய நெடுஞ்சாலை. இது நாட்டின் முதன்மை இடங்களான விமான நிலையம், துறைமுகம், வெளிநாட்டுச் சாலை, தலை நகரம், போர்ப் பணி நிலையம் ஆகியவற்றை நேரிடையாக இணைக்கும் மிக நீண்ட தொலைவுச் சாலையாகும். ஆண்டு முழுவதும் பயன்படுத்தக் கூடிய இது, மையப் பொதுப் பணித் துறையினரால் பராமரிக்கப் பட்டு வருகிறது. இச்சாலை நகரங்களுக்குள் நுழைந்து வருகிறது. அவ்வாறு செல்லும் சாலைகளில், நகரங்களுக்குள் உள்ள பகுதிகள் மட்டும் நகரச் சாலை எனக் குறிப்பிடப் படும்.
மாநில நெடுஞ்சாலை. இது அருகே உள்ள மாநிலங்களையும், பெருநகரங்களையும், மாவட்டத் தலைநகர்களையும் இணைக்கும் சாலையாகும். மாநிலங்களுக்குள் போக்குவரத்துக்கென உள்ள இந்த இணைப்புச் சாலை, பொதுப் .பணித் துறையினால் பராமரிக்கப் படுகிறது.
மாவட்ட முதன்மைச் சாலை. இது மாவட்டங்களில் உள்ள வணிக மையங்களை இணைக்கவும், அவற்றைத் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளுடன் இணைக்கவும் பயன் படும்.
கிராமச் சாலை. இது கிராமங்களை இணைக்கவும், அவற்றைப் பிற முதன்மைச் சாலைகளுடன் இணைக்கவும் பயன் படும். இது பொதுவாகப் படகுத் துறை, நெடுஞ்சாலை, புகை வண்டி நிலையம் முதலிய இடங்களுக்குத் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கும் சாலை ஆகும். சாலை அமைக்கும் முன்பு, அவற்றின் வழித் தடங்களை வரையறுக்கப் பல்வேறு கூறுகளையும் ஆராய வேண்டும். மிகவும் பயனளிக்கும் வழித் தடங்களையே தேர்வு செய்து, சாலை அமைக்கும் போது, அச்சாலையின் திறனையும் அது அமைக்கப் படவிருக்கும் காரணத்தையும் அறிந்து, முடிந்த அளவு நேராகவும், தவிர்க்க முடியாத இடங்களில் மட்டுமே விலகிச் செல்லுமாறும் அமைக்க வேண்டும். சாலை அமைப்பது, அது செல்லும் இடங்களின் வளர்ச்சிக்காகவே. ஆதலால், அச்சாலை, அனைத்து முதன்மை இடங்களையும், பெரும் எண்ணிக்கையிலான இடங்களையும் இணைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அச்சாலையில், வழக்கமாகச் செல்லக் கூடிய ஊர்திகளின் வசதிக்கேற்ப வழித் தடங்களை அமைக்க வேண்டும். சாலையில் மிகவும் செங்குத்தான சரிவுகள் இல்லாமல், சாலைகளில் வளைவுகள் அமைக்கும் போது, அகலமாக இருக்குமாறு நீண்ட ஆரங்களில் அமைக்க வேண்டும். சாலையை ஊர்தி ஓட்டுநர் முழுமையாக ஊன்றிப் பார்க்க வசதியாக அமைக்க வேண்டும்.
நெடுஞ்சாலை வழித் தடங்களில், குளம், கிணறு, புதர், சுடுகாடு, மதச் சடங்கு நடக்கும் இடம் முதலியவை குறுக்கிடாமல் அமைக்க வேண்டும். ஒன்றை ஒன்று குறுக்காகக் கடக்கும் நீரோட்டங்களில், கட்டுமானங்கள் மிகுதியும் குறுக்கிடக் கூடாது. நதி குறுக்கிடும் இடங்களில், செங்கோணத்தில் கடந்து செல்லும் வகையிலும், பாலங்கள் கட்டுவதற்கு ஏற்ற முறையிலும் வழித் தடம் அமைக்க வேண்டும். இருப்புப் பாதைகளைச் செங்கோணத்தில் கடக்க வேண்டும். சிறந்த அடிவாரம் அமைத்துப் பெருமளவிற்கு மண்ணை வெட்டுதல், நிரப்புதல் செய்யாது, அடர்ந்த காடுகளும், விலை உயர்ந்த விளை நிலங்களும் இல்லாமல், சாலை அமைதல் வேண்டும். முன்னரே அவ்விடங்களில் பயன் படுத்தப் பட்டு வரும் வழித்தடங்களைப் புதிய சாலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வழித் தடங்கள் அப்பகுதி மக்களின் முழுத் தேவையையும், நிறைவு செய்யக் கூடியவையாக இருக்க வேண்டும்.
சாலைகளின் வழித் தடங்கள் மலை வழிப் பாதைகளாக இருக்கும் போது, கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்துகள் உள்ளன. குறைந்த செலவில் மலைகளில் உள்ள இரண்டு இடங்களை இணைக்கும் வழிகளை அறிதல் வேண்டும். பெருங் காற்றினால் தாக்காதவாறும், சூரிய ஒளி மிகுதியாகக் கிடைக்கும் வகையிலும் சாலைகளை அமைக்க வேண்டும். கற்பாறைகளைத் தகர்த்துப் பாதை அமைப்பதனைக் குறைக்க வேண்டும். பாதையின் சாய்வு மிக அதிகமாக இராமலும், மண் சரிவு ஏற்படாத வகையிலும் அமைக்க வேண்டும்.
கூடுமான வரையில் குகைப் பாதைகளைத் தவிர்த்து, பாலங்கள் மிகுதியும் வராத வகையில் சாலை அமைக்க வேண்டும். கூடுதலான கொண்டை ஊசி வளைவுகளைத் (hair pin bends) தவிர்க்க வேண்டும். இடையிடையே ஊர்திகளை நிறுத்தி ஓய்வு பெற வசதியான இடங்கள் அமையுமாறு சாலைகளை அமைக்க வேண்டும்.
சிக்கன வழித் தடம், சாலைகளின் சாய்வு, வளைவு, வளைவுகளில் தேவையான அகலம், சாலையின் மையப் பகுதியிலிருந்து, ஓரம் வரையிலும் உள்ள சாய்வு, ஓட்டுநர்களின் பார்க்கக் கூடிய தொலைவு, ஊர்தி முந்திச் செல்வதற்குப் பார்க்கக் கூடிய தொலைவு, சாலையின் கொள்ளவு முதலியவற்றைக் கணக்கிட்டுச் சாலைகளை அமைக்க வேண்டும்.
நகரங்களில் அமைக்கப் படும் சாலைகளின் வடிவம் பல வகைகளில் அமைக்கப் படுகிறது. இது செவ்வக வகை, அறுங்கோண வகை எனப் பல வகைப் படும். சாலைகளின் சந்திப்பு, இரு திசைச் சந்திப்பு, குறுக்கு வெட்டுச் சந்திப்பு, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சந்திப்பு, ஒரு தளச் சந்திப்பு, அடுக்குத் தளச் சந்திப்பு, வட்ட வடிவச் சாலைச் சந்திப்பு எனப் பல வகைப் படும்.
நகரச் சாலை அமைக்கும் போது, முதலில் மொத்த அகலத்தையும் கணக்கிட்டு, அதற்குச் சாலையின் அகலம், சாலையின் இரு புறமும் உள்ள குழிவான பகுதிகளின் சாய்வு, சாலையைத் தாங்கும் மேடு, அதன் உயரம், எதிர் காலத்தில் சாலையை விரிவு படுத்தத் தேவையான இடம், ஓட்டுநர் பார்க்கக் கூடிய தொலைவு ஆகியவற்றைக் கணக்கிட்டு, அறிய வேண்டும். சாலையின் இரு புறமும் உள்ள கழிவு நீர்ப் பாதை வரை உள்ள தொலைவைச் சாலையின் அமைப்பு அகலம் எனலாம். சாலைப் போக்குவரத்து மிகுந்திருந்தால், இந்த அமைப்பு அகலம் மிகுதியாகத் தேவைப் படும்.
சாலையின் மையப் பகுதியில் ஊர்திகள் செல்லும் பாதையின் அகலமே ஊர்திப் பாதை எனப் படும். இப்பகுதி தார் அல்லது கற்காரையினால் மூடப் பட்ட சாலைப் பகுதி ஆகும். சாதாரணமாக ஊர்திப் பாதையின் அகலம் 3.75 மீ. இருக்கும். இது அகலத்தில் நடுவில் அமைந்துள்ள மையப் பகுதி உயர்ந்தும், இரு புறமும் சரிவாகவும் கட்டப்பட்ட சாலை ஆகும். நடுப் பகுதி, சாலையின் உச்சி அல்லது தலைமைப் பகுதி என்று குறிக்கப் படும். சரிவான புற அமைப்பு சாலையின் நடுவே மழை நீர் தங்காமல், செல்லும் பொருட்டு அமைக்கப் படுகிறது. அகலமான சாலைகளில் நடுப் பகுதியில் உள்ள சிறிய தடுப்புச் சுவர், இரு புறமும் செல்லும் ஊர்தியின் பாதையைப் பிரித்துக் காட்டப் பயன் படுகிறது. ஊர்திப் பாதைக்கு அடுத்துக் கழிவு நீர்ப் பாதை வரையிலும் உள்ள பகுதி, சாலையின் கரை எனப் படும். இக்கரைப் பகுதி உறுதியாகக் கற்களாலும், செங்கற்களாலும், இறுக்கப் பட்ட மண்ணாலும் அமைக்கப் பட்டிருக்கும். இக்கரைப் பகுதிகள் கழிவு நீர்ப் பாதையை நோக்கிச் சாய்வுடன் இருக்கும். இக்கரையின் அகலம் 0.5–4 மீ. இருக்கும். இக்கரை, சாலை ஓர அறிவிப்புப் பலகை நிறுத்தவும், அவசரத் தேவைக்கு ஊர்திகளை நிறுத்தவும், மாட்டு வண்டி போன்ற ஊர்தி செல்லவும், சாலையின் மையப் பகுதிக்குப் பக்கத் துணையாகச் செயல்படவும் பயன் படுகிறது. கரைகளின் சரிவு 1 மடங்கு உயரத்திற்கு 1.5 மடங்கு அகலம் என்னும் அளவில் மண் கரைகளாக அமைக்கப் படும். பாறைகளாக இருந்தால், செங்குத்தாக அமைத்துக் கொள்ளலாம். இக்கரைகளுக்கும், கழிவு நீர்க் குழிகளுக்கும் இடையே திணடு போன்ற பகுதி உள்ளது.
கட்டுமானப் பொருள்களின் தன்மைக்கேற்பச் சாலையினைப் பல வகையாகப் பிரிக்கலாம். அது மண் சாலை, சரளைக் கல் சாலை, உருளைக் கல் சாலை, சுண்ணாம்புக் கல் சாலை, நீர், கல், மண் இணைந்த சாலை, தார்ச் சாலை, சிமெட்டிச் சாலை, கற்காரைச் சாலை எனப் பல வகைப் படும். சில குறிப்பிட்ட இடங்களில், அழகுற சில வகையான சாலைகள் கட்டப் படுவதும் உண்டு. அவை கற்பலகை, செங்கல் ஓடு, மரப் பலகை, ரப்பர் விரிப்பு, உலோகத் தகடு, கண்ணாடித் தகடு முதலிய பொருள்களைக் கொண்டு அமைக்கப் படும் சாலைகள் ஆகும். கிராமங்களில் கருங்கற்கள் இன்றி, மண் மற்றும் சரளைக் கற்களால், அதில் செல்லக் கூடிய ஊர்திகளின் எண்ணிக்கை, தாங்கும் பாரம், அதன் செயல்பாடு ஆகியவற்றைப் பொறுத்தும் தேர்வு செய்யப் படும்.
மண் சாலை குறைந்த சுமையைத் தாங்கக் கூடியது. இச்சாலை களிமண், மணல், வண்டல் ஆகிய மண் வகைகளால் கட்டப் படும். மணலும், களிமண்ணும் சரியான விகித்தில் கலந்து, நீர் சேர்த்து 11.5 செ.மீ. கனம் வரும் வரை அமைத்து, அதுவே 7.5 செ.மீ. கனம் வரும்படி அழுத்தம் கொடுத்து, இறுக்கம் அடையச் செய்ய வேண்டும்.
சரளைக் கல், உருளைக் கல் சாலை அமைக்க 6–36 மி.மீ. கற்களை 26% மணலும், 13% களிமண்ணும் சேர்ந்த இணைப்புக் கலவையுடன், 15–30 செ.மீ. கனத்திற்குப் போட வேண்டும். மேற்பரப்பில் 1 செ.மீ கனத்திற்கு மணல் தூவ வேண்டும். மழைக் காலங்களில் இச்சாலை சகதியும், சேறுமாகக் காட்சியளிக்கும்.
நீரினால் இணைப்புப் பெறும் கற்சாலை நீர் இணைப்புக் கற்சாலை எனப்படுகிறது. இச்சாலைக்கு மண் தரையின் மீது முதலில் 2.5–7.5 செ.மீ அளவுள்ள கற்களைப் பரப்பி, மிகுதியான நீரைத் தெளிக்க வேண்டும். மீண்டும், மீண்டும் நீரைத் தெளிப்பதால், கற்கள் படிந்து, ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து, இணைந்து கொள்கின்றன. பின்னர், அவற்றின் மீது நொறுங்கிய கற்செதில்கள் தூவப் படுகின்றன. பின்னர், நீரும், மணலும் சேர்க்கப் படுகின்றன. மேற்பரப்பு, நீர் தெளிக்கப்பட்ட பின்பு, மணல் படிந்து, மென்மையான சாலையாக அமைகிறது.
தார்ச்சாலை எனப் படுவது, தார் நீர்ம நிலையில் வெப்பத்துடன் கற்களுடன் கலக்கப் பட்டு, சமன் படுத்தப் பட்ட, இறுக்கமான மண் தரையின் மீது போடப் பட்டுக் கனரக ஊர்தி இணைக்கப் பட்ட, பெரிய, கனமான உருளையால் உருட்டப் பட்டு, அழுத்தம் கொடுக்கப் பட்டு, இறுக்கமடைவதால், உருவாகும் சாலையாகும். இதன் மேற்பரப்பினைக் கவனமாகப் பராமரிக்க வேண்டும். கோடைக் காலத்தில், சூரிய ஒளி வெப்பத்தால் தார் மீண்டும் உருகி, நீர்ம நிலையை அடையக் கூடும்.
சிமெண்ட் கற்காரைச் சாலை எனப்படுவது, சிமெண்ட், கல், மணல், நீர் ஆகியவற்றைச் சரியான அளவில் கலந்து, கற்காரைத் தளமாகச் சமப் படுத்தப் பட்ட மண் தரையில், கட்டுவது ஆகும். சாலை 5 மீ. குறைவான அகலத்தில் கட்டப் பட வேண்டுமானால், முழு அகலத்திற்கும் ஒரே தளமாகக் கற்காரைத் தளம் கட்டப் படும். இத்தளங்களின் ஒரு பகுதி நீளம் 10–20 மீ. இருக்கும். ஒவ்வொரு பகுதித் தளத்திற்கும் இடையில் 12 மி.மீ. இடைவெளி விடப் பட்டிருக்கும். தளத்தில், வெப்பத்தினால் சிறு விரிவு ஏற்படும். அதனை எதிர் கொள்ளவே இடைவெளிகள் விடப் படுகின்றன. சாலையின் அகலம் 5 மீட்டருக்கு மேல் இருந்தால், சாலையின் அகலம் இரு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டு, முன்னர் அமைத்தது போலவே, ஒவ்வொரு பகுதியாகக் கட்டப் படும். இவ்விரு பகுதிகளுக்கிடையேயும் நீள வாக்கில், கட்டுமான இடைவெளி விடப் பட்டிருக்கும். இச்சாலை கற்காரைக் கலவை போடப் பட்ட பின்னர், திமிசுக் கட்டைகளால் அடிக்கப் பட்டு, இறுக்கம் அடையச் செய்யப் படும். இக்காலங்களில் அதிர்வுத் தண்டுகளைப் பயன் படுத்திக் கற்காரைக் கலவையின் இடையே, காற்றுக் குமிழ்கள் இல்லாமல் ஏறத் தாழ 10 செ.மீ. கனத்தில் கட்டப் படும் கற்காரைத் தளம் ஒரு நாள் உலர்ந்த பின்னர், 28 நாள்கள் வரை நீர் ஊற்றி இறுக்கமடைய வைக்கப் பட்ட பின், ஊர்தி செல்லும் சாலையாகப் பயன் படுத்தப் படுகிறது. —எஸ். எஸ். சேகர்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 171)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/487bua24/
தமிழ்“நெடுஞ்சாலைப் பொறியியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/487bua24/APA
Oliyon Research. (2026). நெடுஞ்சாலைப் பொறியியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/487bua24/MLA
"நெடுஞ்சாலைப் பொறியியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/487bua24/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment