சைவ சித்தாந்த சமயாசாரியர்களுள் ஒருவர். மெய்கண்டார், அருள் நந்தி சிவாசாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாசாரியார் ஆகிய நால்வரும் சித்தாந்த சைவ சந்தானாசாரியர் எனப்படுவர். உமாபதி சிவாசாரியருக்குப் பின்னர் இச்சமயாசாரிய பரம்பரை அருளுரை பெறு முறையில் பல பிரிவுகளாகப் பிரிந்து வளர்ச்சியுற்றது. உமாபதி சிவத்திடம் சீர்காழி மச்சுச் செட்டியார் என்பவர் அருளுரை பெற்று அருள்நமச்சிவாயர் என்னும் பெயரோடு ஆசாரியராக விளங்கினார். அவருடைய மாணவர் பலருள் சித்தர் சிவப்பிரகாசர் என்பவர் வழியாகச் சமய பரம்பரை ஒன்று உருவாகியது. அடுத்த தலைமுறைக்குப் பின்னர் அப்பரம்பரையே திருவாவடுதுறை ஆதீனம் ஆகியது. மற்றொரு மாணவராகிய காழிக் கங்கை மெய்கண்டார் வழியாகப் பிறிதொரு பரம்பரை வளர்வதாயிற்று. சில தலைமுறைக்குப் பின்னர் அந்த ஞானபரம்பரையில் வந்த கமலை ஞானப்பிரகாசர் வழியாகத் தருமபுர ஆதீனம் தோன்றியது. அருள்நமச்சிவாயர் ‘ஞான பூசைத் திருவிருத்தம்’ முதலிய ஐந்து நூல்கள் இயற்றினார். இவர் கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராவார்.