இதயத்தின் உள்ளுறை, ஸ்ட்ரெப்டோகாக்கஸ் விரிடான்ஸ் என்னும் நுண்ணுயிரால் பெருமளவில் பாதிக்கப் படுகிறது. பற்களின் மீது செய்யப் படும் அறுவையாலும், குழந்தை பிறந்த பின்னரும், முடக்கு வாதக் காய்ச்சலின் பின்னரும், நுண்ணுயிர் இதய உள்ளுறை அழற்சி (bacterial endocarditis) வருவதாகத் தெரிகிறது. பிறவி இதய ஊனங்களும், பெறப் பட்ட இதய நோய்களும் (எ-டு: மேக நோய், பெருந்தமனி அழற்சி) இந்நோயின் அறிகுறிகளாக உள்ளன. முடக்கு வாத இதய உள்ளுறை அழற்சியின் போது, காணப் படும் துகள்கள் பெரியவையாகவும், மெல்லியவையாகவும், எளிதில் நொறுங்கக் கூடியவையாகவும் இருக்கின்றன. இவை எளிதில் குருதி ஓட்டத்தின் மூலம் பரவி, இந்நோயை உண்டாக்குகின்றன. நுண்ணோக்கியினடியில் பார்த்தால், இந்தத் துகள்களில் பைபிரின் நுண் தகடு, வெள்ளணு, நுண்ணுயிரி, கால்சிய உப்பு ஆகியவை காணப் படும். மேலும், இதயத் தசை சிதைவுட னும், அழற்சியுடனும் தோன்றும். அறிகுறிகள். படிப்படியான வலிமையிழப்பு, மூச்சுத் திணறல், எடையிழப்பு, மிகையான வியர்ப்பு, இடை விடாக் காய்ச்சல், மூட்டுகளில் வீக்கமும், வலியும், மேல் வயிற்றின் இடப் புறத்தில் வலி ஆகியன அறிகுறிகளாகும். நுண்ணிய குருதிப் புள்ளிகள் தோலிலும், இமை இணைச் சவ்விலும், நகங்களின் அடியிலும் காணப் படும். இதயத்தில், அடிப்படை நோயின் அறிகுறிகளை ஆய்வு செய்து அறியலாம். ஆஸ்லர் கணுக்கள் (Orler's nodes) எனப் படும் குருதித் துகள்கள் உள்ளங்கைகளிலும் காணப் படுகின்றன குருதித் துகள்கள் நுரையீரல் அல்லது மூவிதழ்களையும் பாதிக்கலாம். சிறுநீரில் குருதி வெளிப் படலாம். அல்புமின் உப்பும் இருக்கும். கண்களிலும், நுண்ணிய குருதிப் பொட்டுகள் காணப் படுகின்றன. நோய் அறுதியிடல். குருதியை வளர் கள ஊடகத்தில் இட்டு, 24 மணி நேரத்தில் நுண்ணுயிர் வளர்ச்சியைக் காணலாம். சோகையும், வெள்ளணு அதிகரிப்பும், சிவப்பணு படியும் விகிதம் மிகுந்தும் காணப் படுகின்றன. சிறுநீரில் குருதியும், அல்புமினும் காணப் படுகின்றன. மருத்துவம். பென்சைல் பெனிசிலின், புரோகைன் பெனிசிலின், புரோபெனசிட், பல நுண்ணுயிர் எதிர் மருந்துகள் அளித்து நோயைப் போக்கலாம். அடிப்படையான இதய நோய்களுக்கும் மருத்துவம் அளிக்க வேண்டும். —மு. கி. பழநியப்பன் துணை நூல். E. Braunwald, Heart Diseases. A Text book of Cardiovascular Medicine, W.B. Saunders, Philadelphia, 1983.