தொண்டை நாட்டிலுள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. இது புதுச்சேரிக்கு வடமேற்கில் 5 கல் தொலைவிலுள்ளது. மாகாளர் வழிபட்ட தலம் என்று கூறப்படுகிறது. இறைவன் பெயர் மாகாளேசுவரர்; இறைவி பெயர் குயில்மொழியம்மை, திருஞானசம்பந்தர் இத்தலத்தினைப் பாடிப் பரவியுள்ளார். ‘இறைவன் எங்கள் பெருமானிடம் போலிரும்பைதனுள் மறைகள் வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே’ என்று இவர் பாடியுள்ளமையால், ஊரின் பெயர் இரும்பையென்றும் அதன்கண் இறைவன் திருக்கோயில் மாகாளம் என்றும் பெயர் பெற்றிருந்தமையினை அறியமுடிகிறது. இருபெயரும் இணைந்த இரும்பை மாகாளம் என்னும் தொடர், ஊர்ப் பெயராக அமைந்தது. இது இப்பொழுது இரும்பை என்று வழங்கப்படுகிறது. இக்கோயிலின் திருச்சுற்றில் அமைந்துள்ள ஆறுமுகப் பெருமாள் கோயில் சிறப்பு வாய்ந்தது. இங்குப் பங்குனி உத்திர நாளில் காவடி எடுக்கும் விழா சிறப்பாக நடைபெறும்.