இலக்குமண பாரதியார்
ilakkumaṇa pāratiyār
கொங்கு நாட்டிலுள்ள மடவளாகம் எனப் பெயரிய ஊரில் தோன்றிய புலவர்; சைவ அந்தணர் மரபினர்.
கொங்கு நாட்டிலுள்ள மடவளாகம் எனப் பெயரிய ஊரில் தோன்றிய புலவர்; சைவ அந்தணர் மரபினர். மார்க்கண்டே கோத்திரத்தினைச் சேர்ந்த இவர் தந்தையார் பெயர் தேவராசப் பண்டிதர்; தாயார் பெயர் நஞ்சுண்டம்மாள். இரட்டையராக கி.பி. 1768–இல் பிறந்த இருவருள் இவர் இளையவர். ஆதலால், இவர் இலக்குமணன் எனப்பெயர் சூட்டப் பெற்றார். தமையனார் இராமன் எனப்பட்டார். இவர்தம் தந்தையார் அரசாங்கத்தில் உயர்ந்த பதவியில் விளங்கினார். இவர் குழந்தைப் பருவத்திலேயே தந்தையார் இறந்தமையால் செல்வாக்கு மிக்க இவரது குடும்பம் மிக்க துன்பமுற்றது. தாய்வழி உறவினர்கள் இவர்களைத் தம் ஊருக்கு அழைத்துச் சென்றனர். இவர் சிலகாலம் திருவாவடுதுறை மடத்தில் தங்கிக் கல்வி பயின்றார். வடமொழி தென் மொழிகளில் இவர் நல்ல புலமை பெற்றார். மேலும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், அரபு ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றார். தாய்மாமனது ஊரில் வாழ்ந்தபோது, சக்தி வழிபாட்டினரான உத்தண்ட வேலாயுதசாமி என்பவரிடம் பக்தி பூண்டிருந்தார். தேவியின் திருவருள் பெற்ற இவர், பல நோய்களைப் போக்கினார் எனவும் கூறப்படுகிறது. சந்தப் பாடல்களை இன்னிசையோடு பாடவல்ல இவர். ஆடல், பாடல் போன்ற கலைகளில் ஆர்வங் கொண்டிருந்தார். இயற்கையாகக் கவிதை புனையும் ஆற்றல் இவரிடம் அமைந்திருந்தது.
இராமநாதபுரம் சேதுபதிமன்னர்பால் சென்று தம் புலமைத் திறங்காட்டி அவரால் சிறப்பிக்கப் பெற்றார். அம்மன்னர் இவருக்குப் பாரதி என்னும் பட்டம் நல்கினார். அவர் இவருக்குப் படியில் முத்தினை அளந்து பரிசாக வழங்கினார் என்றும், அவற்றைச் சிவன்மலை இறைவன் திருக்கோயிலில் அட்ட பந்தனஞ் செய்யுங்கால் பீடத்தினடியில் இட்டார் என்றும் கூறப்படுகிறது.
இசைத்தமிழ்ப் புலமை மிக்க இவர் பல பாடல்களை இயற்றியுள்ளார். கொங்கு நாட்டுப் பகுதியில் பல திருக்கோயில்களுக்குச் சூர்ணிகை, எச்சரிக்கை, அம்மானை, அட்டகங்கள் ஆகியவற்றை இயற்றியுள்ளார். சிவன்மலை இறைவன் மீது சிவன் மலைக் குறவஞ்சி பாடியுள்ளார். இச்சிவன் மலை கொங்கு நாட்டுப் பகுதியில் காங்கேயத்திற்கு வடக்கே 3 கல் தொலைவில் உள்ளது. இக்குறவஞ்சியில் வரலாற்றுச் செய்திகள் பலவற்றை இணைத்துள்ளார். இக்குறவஞ்சி 1918–இல் திருச்செங்கோடு தி.அ. முத்துச்சாமி என்பவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
ஒருசமயம் கரூர் முதல் பேரூர் வரை உள்ள பகுதியில் விளங்கும் 64 திருக்கோயில்களின் நிலங்களை அரசாங்கம் வரிக்காகப் பறிமுதல் செய்தபோது அத- னோடு வாதாடி, அவற்றை மீட்டுத் தந்தார். இவர் 90 ஆண்டுகள் வாழ்ந்து காலமானார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 295)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/42jtd9x8/
தமிழ்“இலக்குமண பாரதியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/42jtd9x8/APA
Oliyon Research. (2026). இலக்குமண பாரதியார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/42jtd9x8/MLA
"இலக்குமண பாரதியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/42jtd9x8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment