ஒரு நாட்டைச் சார்ந்த நுகர்வோர், உற்பத்தியாளர் ஆகியோருக்கு மற்றொரு நாட்டின் பணம் வழங்குதல் அயற் செலாவணி யாகும் (Foreign Exchange). அயற் செலாவணியும் பன்னாட்டு வணிகமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. பல்வேறு நாடுகளிடையே ஒரு பொதுவான பணம் இல்லாமையால், பன்னாட்டுச் செலுத்து முறையில் ஒரு குறிப்பிடத்தக்க சிக்கல் ஏற்படுகிறது. ஒரு நாட்டின் பணம் அந்த நாட்டுக்குள் மட்டுமே ஒப்புக்கொள்ளப்படுகிறது. எடுத்துக்காட்டாக, இந்தியாவின் உரூபாய் இந்தியாவிலும், அமெரிக்க தாலர் (Dollar) அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும், பவுண்டு இசுடெர்லிங்கு (Pound Sterling) இங்கிலாந்திலும் அந்தந்த நாட்டு மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், பன்னாட்டு வாணிகத்தில் பொருள்களை வாங்கும் போதும் விற்கும் போதும் ஒரு நாட்டின் பணம் இன்னொரு நாட்டின் பணத்திற்கு மாற்றிக் கொள்ளப்படுகிறது. பேராசிரியர் இசுகேமல் (Scammell) என்பவரின் கருத்துப்படி, “பண்டமாற்று முறையில் இயங்கி வந்துள்ள ஒரு பொருளாதார அமைப்பில் பணம் பயன்படுத்தப்பட்டால் என்ன விளைவு ஏற்படுமோ, அதே விளைவைப் பன்னாட்டுப் பொருளாதாரத்தில் அயற் செலாவணி அங்காடியானது ஏற்படுத்துகிறது”. எனவே, அயற் செலாவனி ஏற்படும் விதம் பற்றியும், அதன் இன்றியமையாமை பற்றியும் அறிந்து கொள்வது தேவையாகும். வரையறை அயற் செலாவணி என்பது பன்னாட்டு வாணிகத்தில் பணம் மாற்றப்படும் விதத்தை விளக்கும் அறிவியலும் கலையும் ஆகும். உள்நாட்டு வழக்கத்தில் கடன் கருவிகள் (Credit Instruments) எவ்வாறு உலோக நாணயங்களைச் சிக்கனப்படுத்துகின்றனவோ, அவ்வாறே பன்னாட்டு வாணிகத்தில் தங்கத்தைப் பயன்படுத்துவதை அயற் செலாவணி சிக்கனப்படுத்துகிறது. அயற் செலாவணி அங்காடியில் (Market) அயற் செலாவணி வாங்கவும், விற்கவும் படுகிறது. இந்தியாவின் அயற் செலாவணி அங்காடியில், அயற் செலாவணிகள் குறிப்பிடப்பட்ட வரைவோலைகளை (Drafts) உரூபாய்க்குப் பெற்றுக் கொள்ளலாம். அமெரிக்க தாலர், பிரான்சின் பிராங்கு, பிரிட்டனின் பவுண்டு இசுடெர்லிங்கு, சப்பானின் ‘என்’ போன்ற செலாவணிகளை உரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். இத்தகைய விலைகளே அயற் செலாவணி வீதங்கள் அல்லது மாற்று வீதங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, ஒரு நாட்டின் பணம் மற்றொரு நாட்டின் பணத்திற்கு எந்தவிதெத்தில் மாற்றிக் கொள்ளப்படுகிறதோ, அதுவே அயற் செலாவணி மாற்று வீதம் எனப்படும். இந்தியாவின் அயற் செலாவணி அங்காடியில் அமெரிக்க தாலருக்கான தேவை கூடினாலோ, தாலரின் அளிப்புக் குறைந்தாலோ, தாலரின் உரூபாய் விலை அதிகரிக்கும். இது அயற் செலாவணி மாற்று வீதம் அதிகரித்துள்ளது என்பதைக் காட்டும். இதனால், இந்தியர்களுக்கு அமெரிக்கத் தாலரின் விலை அதிகமாகி, அமெரிக்கர்களுக்கு இந்திய உருபாயின் விலை குறைகிறது. ஒவ்வொரு செலாவணிக்கும் பன்னாட்டு அளவில் அங்காடி இருக்கிறது. இவ்வங்காடியில் உலகின் பல்வேறு நிதி மையங்களுக்கிடையே பல விதங்களிலும் தொடர்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு நாடும், முந்திய இரவில் தொலைபேசி, தந்தி ஆகியவற்றின் மூலமாக வந்து சேரும் ஆணைகளுடன் (Orders) வாணிகம் தொடங்குகிறது. சில வேறுபாடுகளின் காரணமாக, பல அயற் செலாவணிகட்குத் தேவை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. உலகில் உள்ள பல்வேறு செலாவணி அங்காடிகளில் நிலவக்கூடிய மாற்று விகிதங்களைச் செலாவணி அங்காடியில் உள்ள வணிகர் பலரும் தெரிந்து கொள்கின்றனர். மேலும், ஒரு நாட்டின் செலாவணி அங்காடி மூடப்படும்போது, மற்றொரு செலாவணி அங்காடி திறக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, இலண்டனில் அங்காடி பிற்பகல் 3 மணிக்கு மூடப்படும்போது நியூயார்க்கிலுள்ள செலாவணி அங்காடி திறக்கப்படுகிறது. நியூயார்க்கு அங்காடி திறக்கப்பட்ட 4 மணி நேரம் கழித்தே சான்பிரான்சிசுகோ அங்காடி திறக்கப்படுகிறது. தோக்கியோவிலுள்ள (Tokyo) அங்காடி திறந்து மூடும்போது பன்னாட்டுச் செலாவணி அங்காடி முற்றுப் பெற்ற நிலை அடைகிறது. அயற் செலாவணிகளுக்கான கருவிகள் அயற் செலாவணி அங்காடியில் கீழ்க்காணும் கருவிகள் வழக்கத்தில் உள்ளன. (1) அயல் வாணிக உண்டியல், பன்னாட்டு வணிகத்தில் கடனைத் தீர்க்கப் பயன்படுத்தப்படும் ஒரு கடன் கருவி அயல் வாணிக உண்டியல் (Foreign Bills of Exchange). எடுத்துக் காட்டாக ‘ஏ’ என்பவன் (எழுதுபவன்), ‘பி’ க்கு (எழுதப்படுபவன்) ஒரு குறிப்பிட்ட தொகையை அவனுக்கோ, அவன் சொல்லும் ஆளுக்கோ ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் தருமாறு எழுதிக் கொடுக்கும் கடன் கருவியாகும். (2) வங்கி வரைவோலை: தன்னுடைய கிளைவங்கிக்கோ, வேறு ஒரு வங்கிக்கோ காசோலை உடையவருக்கு, அதில் குறிப்பிட்ட தொகையைக் கேட்கும் காலத்தில் கொடுக்கப் பணிப்பதற்கான ஓர் ஆணை வங்கி வரைவோலை (Bank Draft) எனப்படும். (3) தொலைபேசி மூலம் பணம் மாற்றும் முறை: ஒரு வங்கி, தன் கிளை வங்கிக்கோ வேறு ஒரு வங்கிக்கோ, ஒரு குறிப்பிட்ட தொகையை, ஒரு குறிப்பிட்ட ஆளுக்குத் தனது வைப்புத் தொகையிலிருந்து தொலைபேசி மூலம் கொடுக்கச் சொல்லும் ஓர் ஆணை, தொலைபேசி மூலம் பணம் மாற்றும் முறை (Telegraph Transfer) எனப்படும். இது மிக்க விரைவில் பணம் செலுத்தும் முறையாகும். (4) கடனுறுதிக் கடிதம்: ஓர் ஆளுக்கு, ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு காசோலையையோ, உண்டியலையோ எடுத்துக் கொள்ளும் உரிமையை அளிக்கும் கருவி கடனுறுதிக் கடிதம் (Letter of Credit) எனப்படும். (5) பயணிகள் காசோலை: ஒரு வங்கியால் கொடுக்கப்பட்ட பயணிகளின் காசோலையைக் கொண்டு, ஒரு பயணி அதன் கிளை வங்கியிலோ, தொடர்புடைய வேறு ஒரு வங்கியிலோ பணமாக மாற்றிக் கொள்ளப் பயன்படும் கருவி பயணிகள் காசோலை (Traveller's Cheque) எனப்படும். அயற் செலாவணி வீதம் வரையறுத்தல் முறை அயற் செலாவணி வீதம் வரையறுக்கப்படும் வகையினை விளக்க மூன்று கோட்பாடுகள் உள்ளன. (1) தங்கச்சாலை கோட்பாடு இரு நாடுகள் ஒரே திட்டத்தை மேற்கொண்டிருந்தபோது, இரு நாடுகளிலும் உள்ள இரு நாணயங்களின் தங்கச்சாலை விகிதங்களுக்குச் சமமாக மாற்றுவீதம் வரையறுக்கப்பட்டது. இரு நாடுகள் ஒரே திட்டத்தை மேற்கொண்டிருந்தபோது, வரையறுக்கப்பட்ட மாற்று வீதத்தை விளக்குகின்ற கோட்பாட்டிற்குத் தங்கச்சாலைச் சமன்பாட்டு மாற்றுக் கோட்பாடு என்பது பெயர். இரு நாடுகள் தங்க நாணயத் திட்டத்தில் இருந்தபோது, இரண்டு நாடுகளுடைய நாணயங்களின் மாற்று விகிதத்திற்கு அடிப்படை, தங்கச் சாலைச் சமன்பாட்டு மாற்று வீதம் ஆகும். இதுவே சமநிலை மாற்று வீதம் (Par Exchange Value) ஆகும். அங்காடியிலுள்ள மாற்று வீதம், இந்தச் சமநியை மாற்று வீதத்திற்கு ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்கிடையே மாறாதிருந்தது. இந்த எல்லைகளுக்குத் ‘தங்கப் புள்ளிகள்’ (Specie Points) என்பது பெயர். இவை தங்க ஏற்றுமதிப் புள்ளி என்றும், தங்க இறக்குமதிப் புள்ளி என்றும் அழைக்கப்பட்டன. தங்கத்தை ஏற்றுமதி செய்வதில் ஏற்படக்கூடிய காப்புத் தொகை (Insurance), போக்குவரத்துச் செலவு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தங்க ஏற்றுமதி, இறக்குமதிப் புள்ளிகள் வரையறுக்கப்படுகின்றன. தங்கச்சாலைக் கோட்பாட்டில் (Mint Par Value) சமன்பாட்டு மாற்று வீதம் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது என்பதைக் கீழ்வரும் எடுத்துக்காட்டு விளக்குகிறது. (தங்கம் உள்ளடக்கியது) (தங்கம் உள்ளடக்கியது) எனவே, ஒரு தாலருக்கு உரூ. 7.50 சமமாகும். இக்கோட்பாடு இன்று நடைமுறையில் இல்லை. இதன் குறைபாடுகள் பின் வருமாறு: (1) இன்று உலகின் எந்த நாடும் தங்கச் சட்டத்தை நாணய முறைக்கு அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. (2) பெரும்பான்மையான நாடுகள் தங்கத்தை ஏற்றுமதி செய்வதையோ இறக்குமதி செய்வதையோ அனுமதிப்பதில்லை. (3) இன்று அனைத்து நாடுகளும் காகிதப் பண முறையையே (Paper Currency Standard) கொண்டுள்ளன. 2. வாங்குதிறன் சமன்பாட்டுக் கோட்பாடு இப்போது எந்த நாட்டிலும் தங்கத் திட்டம் வழக்கில் இல்லை. எனவே, எந்த நாட்டுச் செலாவணியையும் தங்கமாக மாற்ற இயலாது. ஆகையால், செலாவணிகள் மாற்ற இயலாத பணத்தாளாக உள்ளன. மாற்ற முடியாத பணத்தாளாக உள்ள செலாவணிகளுக்கிடையே எவ்வாறு மாற்று வீதங்கள் வரையறுக்கப்படுகின்றன என்பதை, வாங்கும் திறன் கோட்பாடு (Purchasing Power Parity Theory) விளக்கம் தர முயலுகிறது. கசுடவ் காசல் (Gustav Cassel) என்பவர் 1916–ஆம் ஆண்டு நவீன முறைக்குப் பொருந்துமாறு இக்கோட்பாட்டைத் திருந்தியமைத்தார். இக்கோட்பாட்டின் அடிப்படைக் கருத்தாவது; ஒரு நாட்டிலுள்ள மக்களுக்கு அயற் செலாவணி தேவைப்படுகிறது. ஏனெனில், அச்செலாவணி அயல்நாட்டுப் பொருள்களையும் தேவைகளையும் வாங்கும் திறன் பெற்றுள்ளது. உள்நாட்டுச் செலாவணி ஒன்றை வெளிநாட்டுச் செலாவணியாக மாற்றும் போது, உள்நாட்டு வாங்கும் திறனும் வெளிநாட்டு வாங்கும் திறனும் ஒன்றுக்கொன்று மாற்றப்படுகின்றன. இதனால், இச்செலாவணிகளுக்கிடையே மாற்று வீதம் வரையறுக்கப்படுவதில் வாங்கும் திறன் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இரு செலாவணிகளுக்குமிடையே உள்ள சமநிலை மாற்று வீதமானது, சம அளவிலுள்ள வாங்கும் திறன்களினுடைய மாற்று வீதத்தைக் கொண்டிருக்கும். ஆகவே, செலாவணிகளுடைய வாங்கும் திறன்களுக்கிடையே உள்ள சமன்பாடுதான் மாற்று வீதத்தை வரையறுக்கும். வாங்கும் திறன் கோட்பாடு தனித் தனியான முறை, ஒப்பீட்டு முறை என இருவகைப்படும். அவை பின்வருமாறு: தனித்தனி முறை தனித் தனியான முறையில் செலாவணிகள், வாங்கும் திறன் இரு நாடுகளின் சமமாக இருக்கும் வண்ணம், மாற்று வீதம் வரையறுக்கப்படுகிறது. ஒரு செலாவணியின் வாங்கும் திறன் என்பது, செலாவணியினுடைய ஓர் அலகு (Unit) எவ்வளவு பொருள்களையும் சேவைகளையும் பெறுகிறது என்பதாகும். எடுத்துக்காட்டாக, இந்தியாவில் ஒரு உரூபாய், 1 அலகு கோதுமையை வாங்கினால், 1 உரூபாயின் வாங்கும் திறன் 1 அலகு கோதுமை. ஓர் அமெரிக்க தாலர் அமெரிக்காவில் 8 அலகு கோதுமையை வாங்கினால், அமெரிக்க தாலரின் வாங்கும் திறன் 8 அலகு கோதுமை. இந்தியாவில் 8 அலகு கோதுமையை உரூபாய் 8க்கு வாங்கலாம். எனவே, உரூ. 8-இன் வாங்கும் திறனும், 1 அமெரிக்க தாலரில் வாங்கும் திறனும் ஒன்றுக்கொன்று சமமாக இருக்கிறது. வாங்கும் திறன் சமன்பாட்டுக் கோட்பாட்டின்படி அமெரிக்க தாலர்– இந்திய உரூபாயின் மாற்று விகிதம் $ 1 = உரூ. 8. ஆகும். ஓர் அமெரிக்க தாலர் 8 அலகு கோதுமையை வாங்குவதற்குப் பதிலாக, அமெரிக்காவில் 10 அலகு கோதுமையை வாங்குவதாகவும், இந்தியாவில் ஒரு உரூபாய் அதே 1 அலகு கோதுமையை வாங்குவதாகவும் கொண்டால், வாங்கும் திறன் சமன்- பாட்டுக் கோட்பாட்டின்படி அமெரிக்க தாலர்-இந்திய உரூபாயின் மாற்று வீதம் $ 1 = உரூ. 10 ஆகும். ஒப்பீட்டுமுறை தனித்தனியான முறையிலுள்ள சில குறைபாடுகள் காரணமாக ஒப்பீட்டு முறை உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோட்பாடானது, மாற்று வீதங்களை வரையறுக்கும் கடுமையான முறைக்கு மாறாக, பொதுவானதொரு போக்கை வலியுறுத்துகிறது. மற்ற நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, ஒரு குறிப்பிட்ட நாட்டில் விலைகள் உயருமானால், மாற்று வீதம் வீழ்ச்சி அடையும் போக்குத் தோன்றும், இதுபோல், மற்ற நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஒரு குறிப்பிட்ட நாட்டில் விலைகள் குறையுமானால், மாற்று வீதத்தில் உயரும் போக்குத் தென்படும். செலுத்துநிலைக் கோட்பாடு மாற்ற முடியாத பண அமைப்பு முறையில் மாற்று வீதம் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது என்பதை விளக்கும் மற்றுமொரு கொள்கைக்குச் ‘செலுத்துநிலைக் கோட்பாடு’ (Balance of Payments Theory) என்பது பெயர். இரு செலாவணிகளின் வாங்கும் திறன்களும் சமமாகின்ற புள்ளியில் மாற்று வீதம் வரையறுக்கப்படுகிறது என்று, வாங்கும் திறன் சமன்பாட்டுக் கோட்பாடு வலியுறுத்திக் கூறுகிறது. பன்னாட்டு வாணிக நடவடிக்கைகனில், புலனாகும் இனங்களும் (Visible Items), புலனாகாத இனங்களும் (Invisible Items) அடங்கியுள்ளன. மாற்று வீதம் இவ்விரு இனங்களையும், அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆனால், வாங்கும் திறன் சமன்பாட்டுக் கோட்பாடு புலனாகும் இனங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது. அயல்நாட்டுச் செலுத்துநிலைக் கோட்பாடு இவ்விரு இனங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது. இக்கோட்பாட்டின்படி, அயற் செலாவணிக்கான தேவை ஒரு புறமும் (உள் நாட்டவர்களால்), அயற் செலாவணிக்கான அளிப்பு (வெளி நாட்டவர்களால்) மறுபுறமுமாக மாற்றுவீதம் வரையறுக்கப்படுகிறது. அதாவது, மாற்றுவீதத்திற்கும், அயற் செலாவணியின் தேவைக்கும் அளிப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று வலியுறுத்திக் கூறுகிறது. அயல் செலாவணிக்கான தேவையும் அளிப்பும் ஒரு புள்ளியில் சமமாகும்போது, மாற்று வீதம் சமநிலை அடைகிறது. எனவே, இக்கோட்பாட்டிற்கு ‘மாற்று வீதம் வரையறுப்பதற்கான தேவை அளிப்புக் கோட்பாடு’ என்ற வேறு பெயரும் உண்டு. அயற் செலாவணிக்கான தேவையை வரையறுக்கும் காரணிகள் இறக்குமதிகளின் மதிப்பு, மூலதனப் பெயர்ச்சியின் அளவு, வெளிநாட்டுக்குத் தரப்படும் கொடைகள், நன்கொடைகளின் அளவு ஆகிய காரணிகள் அயற் செலாவணித் தேவையை வரையறுக்கின்றன. அயற் செலாவணிக்கான அளிப்பை வரையறுக்கும் காரணிகள் ஏற்றுமதிகளின் மதிப்பு, நாட்டிற்குள் வரும் மூலதனத்தின் அளவு, ஏற்றுக் கொள்கிற கொடைகள், நன்கொடைகளின் அளவு ஆகிய காரணிகள் அயற் செலாவணிக்கான அளிப்பை வரையறுக்கின்றன. அயல்நாட்டுச் செலுத்துநிலைக் கோட்பாட்டின்படி, அயற் செலாவணிக்கான மொத்தத் தேவையும், மொத்த அளிப்பும் ஒன்றுக்கொன்று சமமாகும் புள்ளியில் மாற்று வீதம் வரையறுக்கப்படுகிறது. அயற் செவாவணித் தேவைக் கோடும் (Demand Curve), அயற் செலாவணி அளிப்புக் கோடும் (Supply Curve) ஒன்றுக்கொன்று வெட்டும் புள்ளியில் மாற்று வீதம் வரையறுக்கப்படுகிறது. இதனைக் கீழ்வரும் படம் காட்டும். அயற் செலாவணி அளவு வரைப்படத்தில் ‘P’ என்பது சமநிலைப் புள்ளி ஆகும். ‘OR’ சமநிலை மாற்று வீதத்தைக் குறிக்கும் இந்த மாற்று வீதத்தில் அயற் செலாவணியின் தேவையும், அளிப்பும் ‘OQ’ இல் சமமாக இருக்கின்றன. ஒரு நாட்டின் அயல்நாட்டுச் செலுத்துநிலைக் கணக்கில் தேவையின் பக்கம் உள்ள இனங்கள் செலவினங்களாகும். அளிப்புப் பக்கம் உள்ள இனங்கள் ஒரு நாட்டினுடைய அயல்நாட்டுச் செலுத்துநிலைக் கணக்கில் வரவினங்களைக் குறிக்கும். ஆகையால், அயற் செலாவணிக்கான தேவை அளிப்பு ஆகியவற்றுக்கிடையே ஏதாவது வேறுபாடு இருக்குமானால், அது நாட்டின் அயல்நாட்டுச் செலுத்துநிலையில் உபரியோ பற்றாக்குறையோ இருப்பதைக் காட்டும். தேவையைக் காட்டிலும், அளிப்பு அதிகம் இருந்தால், அது உபரி அல்லது அயல்நாட்டுச் செலுத்துநிலைக்குத் துணையாக (Favourable Balance of Payments) இருக்கிறது என்பது பொருள். பேராசிரியர் குரிகரா (Kurihara} என்பவர் இக்கோட்பாட்டின் இன்றியமையாமையைத் தனது “பணக் கோட்பாடு, மற்றும் அரசுக் கொள்கை” என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். தேவையையும் அளிப்பையும் இது வலியுறுத்துவதால், சமநிலை ஆய்விற்கு இக்கோட்பாடு வழி வகுத்துள்ளது. வாங்கும் திறன் சமன்பாட்டுக் கோட்பாடு, பொது விலை மட்டத்தை மாத்திரம் வலியுறுத்துகிறது. அன்றியும், இக்கோட்பாடு பல காரணிகளைக் கணக்கில் எடுத்துக் கொள்வதால் நடைமுறைக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. பல நாடுகள் தத்தம் செலாவணிகளில் பன்னாட்டு வாணிகத்தை மேற் கொள்வதில்லை; மாறாக, அமெரிக்க தாலர், இங்கிலாந்தின் பவுண்டு முதலிய செலாவணிகளில் மட்டும் வாணிபத்தை மேற்கொள்கின்றன. தங்களின் ஏற்றுமதிப் பொருளுக்குத் தாங்கள் பெறும் விலையை மேற் குறிப்பிட்ட செலாவணிகளிலோ, இந்தச் செலாவணிகட்கு மாற்றிக் கொள்ளத்தக்க வேறு செலாவணிகளிலோ நாடுகள் பெறு விரும்புகின்றன. தங்கள் இறக்குமதிப் பொருளுக்கும் இதே செலாவணிகளில் தொகையைச் செலுத்துகின்றன. அயற் செலாவணி அங்காடியின் மற்றொரு கூறு, அதில் பங்கேற்கும் நிறுவனங்கள், அமைப்புகள் அல்லது தனி மனிதர் பற்றியதாகும். ஒவ்வொரு செலாவணிக்கும் உரிய அங்காடியில் செயற்படக் கூடிய வாங்குவோரும், விற்போரும் பலவகைப்படுவர். 1) வாடிக்கையாளர்கள் வாணிகத்திற்காகவோ, நிதித்தேவைக்காகவோ, வெளிநாட்டுப் பயணத்திற்காகவோ, தங்கள் நாட்டுச் செலாவணியைத் தவிர்த்து, இதர செலாவணியைப் பெற விரும்புவோரே இவ்வங்காடியின் வாடிக்கையாளராவர். 2) வணிக வங்கிகள் வணிக வங்கிகள் தலைமையகத்திலிருக்கும் தங்கள் அந்நியச் செலாவணிப் பிரிவின் மூலம் வங்கிகளுக்கான அயற் செலாவணி அங்காடியில் ஈடுபடுகின்றன. இத்தகைய வங்கிகளின் கிளைகள் அன்றாடப் பேரங்கட்குத் தேவைப்படும் செலாவணிகளை முக்கியமான இருப்பாக வைத்துள்ளன. கைவசம் இருக்கும் அயற் செலாவணிகள், பேரங்கட்குப் போதவில்லையெனில், கிளைகள் தமக்கு வேண்டிய அயற் செலாவணியைத் தமது மைய அலுவலகத்திடமிருந்தோ, பிற அயற் செலாவணி வங்கிகளிடமிருந்தோ கடனாகப் பெற்றுக் கொள்கின்றன. 3) மைய வங்கிகள் ஒரு நாட்டின் மைய வங்கி அந்நாட்டின் அயற் செலாவணியைப் பாதுகாக்கும் நிறுவனமாக மட்டுமன்றி, செலாவணி மாற்றுவீதத்தை நிலைப்படுத்தக்கூடிய ஓர் அமைப்பாகவும் இருந்து வருகிறது. இதற்கு மைய வங்கி, அயற் செலாவணி அங்காடியில் தனது நாட்டுச் செலாவணியையே வாங்கவும் விற்கவும் செய்கிறது. தனது பணம் மிதமிஞ்சிச் செலாவணி அங்காடியில் விற்கப்பட்டிருந்தால், மைய வங்கி, தனது இருப்பிலுள்ள அயற் செலாவணியை விற்றுத் தனது பணத்தையே திரும்ப வாங்கிக் கொள்கிறது. மாறாக, தனது பணம் செலாவணி அங்காடியில் அதிகம் விற்கப்படவில்லை எனில், மைய வங்கி அதனை விற்க முற்படுகிறது. அதன் மூலமாக, அது பிற செலாவணிகளைப் பெற்றுத் தனது அயற் செலாவணி இருப்புகளோடு சேர்த்துக் கொள்கிறது இதனை மைய வங்கியின் தலையீடு என்று கூறலாம். அயற் செலாவணி அங்காடியில் மைய வங்கி இவ்வாறு தலையிடுவதன் காரணமாக, அதன் மைய வங்கியே மிகப் பெரும் வாடிக்கையாளராக இருப்பதுண்டு. இம்மூன்று தரப்பினரும், உலகின் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ள அயற் செலாவணி அங்காடிகளில் பங்கேற்கின்றனர். இம்மூன்று தரப்பினரிடையே பல கட்டங்களில் அயற் செலாவணிப் பேரங்கள் நடைபெறுகின்றன. (1) வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்க்குமிடையே பேரங்கள் நடைபெறுகின்றன. (2) ஓர் அங்காடிப் பகுதிக்குள்ளாகவே, வங்கிகளுக்கு இடையில் இத்தகைய பேரங்கள் நடைபெறுகின்றன. (3) பல மையங்களிலுள்ள வங்கிகளின் தலைமையகங்களிடையே அயற் செலாவணிப் பேரங்கள் நடைபெறுகின்றன. (4) வங்கிகளுக்கிடையே நடைபெறும் பேரங்களில், மைய வங்கிகள் தமது செலாவணியின் மதிப்பைக் கூட்டவோ, குறைக்கவோ தம் கைவசம் உள்ள அயற்செலாவணிகளைப் பயன்படுத்துகின்றன. (5) இவையன்றி, மைய வங்கிகள் தமக்குள்ளாக அயற் செலாவணிக் கடன்வசதியையும் வேண்டும்போது ஏற்படுத்திக் கொள்கின்றன. இது அதிகப் பற்றுமுறை (Swap) என்று அழைக்கப்படுகிறது. அயற் செலாவணி அங்காடிகள் தீர்வகப் பணி (Clearing Function), கடனளிக்கும் பணி (Credit Function), மதிப்பு மாற்றங்களுக்கெதிரான பாதுகாப்பு (Hedging Function) ஆகிய மூவகைப் பணிகளை ஆற்றுகின்றன. தீர்வகப் பணிகள் மூலமாக அயற் செலாவணி அங்காடியில் பன்னாட்டு அளவில் வாங்கும் திறன் மாற்றிக் கொள்ளப்படுகிறது. எடுத்துக்காட்டாக, உள்நாட்டுப் பணம் மட்டுமே பயன்படுத்தப்படும் பொழுது, ஓர் அமெரிக்க ஏற்றுமதியாளர், தம் பொருள்களை ஓர் ஆங்கில இறக்குமதியாளருக்கு அனுப்புகிறார். இதில் இரு நாடுகளும் மாறி மாறிச் செலுத்துரிமைகளை அளித்திருக்கும். இத்தகைய செலுத்துரிமைகள் அயற் செலாவணி அங்காடி- யின் மூலமாகத் தீர்க்கப்படுகின்றன. ஏற்றுமதியும் இறக்குமதியும் மதிப்பில் சமமாக இருக்க நேரிட்டால், இரு தரப்பினரும் கொடுக்க வேண்டிய பாக்கித் தொகை எதுவுமின்றி, செலுத்துரிமைகளும் முழுமையாகத் தீர்க்கப்பட்டிருக்கும். அதாவது, அமெரிக்காவில், இறக்குமதியாளர் ஏற்றுமதியாளருக்குச் செலுத்துரிமைகளைக் கொடுப்பதன் மூலம் இரு நாடுகளுக்குமிடையே ஏற்பட்ட பரிமாற்றம் முழுமை பெறுகிறது. அமெரிக்காவில், ஓர் இறக்குமதியாளர் தாம் கொடுக்க வேண்டிய பணத்தை ஏற்றுமதியாளருக்குக் (ஆங்கிலேயர்) கொடுத்துவிடுகிறார். அவ்வாறே, இங்கிலாந்தின் இறக்குமதியாளர் தாம் அனுப்பவேண்டிய பணத்தை இங்கிலாந்தின் ஏற்றுமதியாளருக்கு (அமெரிக்கர்) கொடுத்து விடுகிறார். ஆனால், இரு நாடுகளின் ஏற்றுமதியும் இறக்குமதியும் மதிப்பில் சமமாக இல்லையெனில், அந்த மதிப்பு மாறுபாட்டுக்கு உரிய பணத்தை இறக்குமதியாளர் கொடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, பிரிட்டனின் இறக்குமதியாளர் அமெரிக்க ஏற்றுமதியாளருக்குத் தாம் கொடுக்கவேண்டிய தாலரைப் பிரிட்டனில் உள்ள அயற் செலாவணி அங்காடியில் பிரிட்டனின் பவுண்டு இசுடெர்லிங்கைக் கொடுத்து வாங்கக் கூடும். ஏற்றுமதி வருவாய் மூலமாக அமெரிக்காவின் தாலர் இங்கிலாந்தின் அயற் செலாவணி அங்காடிக்கு வருகிறது. இவ்வாறு வரக்கூடிய தாலரைப் பிரிட்டனின் இறக்குமதியாளர் பவுண்டு இசுடெர்லிங்கைக் கொடுத்து வாங்கி அமெரிக்க ஏற்றுமதியாளருக்கு அனுப்புகின்றனர். இவ்வாறு, அயற் செலாவணிப்பேரமானது இலண்டன் அயற் செலாவணி அங்காடி மூலமாக நடைபெறுகின்றது. பொதுவாக, இன்றைய வாணிக உலகில் (உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வாணிகம் இரண்டிலும்) கடன் முறை வாணிகம் மிகுதியாக வழக்கில் உள்ளது. இது பன்னாட்டு வாணிகத்தில் மிகுந்து காணப்படுகிறது. பன்னாட்டு வாணிகத்தில் பொருள்கள் ஒரு நாட்டினின்று மற்றொரு நாட்டுக்கு அனுப்பப்படுவதற்கு நீண்டகாலம் பிடிக்கும். ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு பொருள், வேறொரு நாட்டில் திரும்ப விற்கப்படுவதற்குள், வாரங்கள் பல கடந்து விடும். இக்காலத்தில், யாரேனும் ஒருவர் அப்பொருள்களுக்குரிய மதிப்புக்குச் சமமான நிதிச் சுமையை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். எடுத்துக்காட்டாக, £. 10,000 மதிப்புள்ள பிரிட்டனின் கார்கள் கனடாவைச் சேர்ந்த ஒரு வணிகரால் வாங்கப்படுகின்றன. கார்கள் இங்கிலாந்திலிருந்து கனடாவை அடைய ஆறு வாரங்கள் அல்லது அதற்கு மேலும் ஆகக்கூடும். எனவே, கனடாவில் இறக்குமதியாளர் அதுவரை காத்திருக்க வேண்டும். இந்த வாணிகம் பல முறைகளில் செயற்படக் கூடும். ஆனால், அடிப்படையில் அவை அனைத்தும் ஒரே கொள்கை உடையன. இம்முறைகளின் மூலமாக, ஏற்றுமதி செய்வோர் உடனுக்குடன் தமது பொருளுக்குரிய பணத்தைப் பெறவும், பொருளை வாங்குவோர் அல்லது இறக்குமதி செய்வோர் பொருளுக்குரிய பணம் செலுத்துவதை ஒத்திப் போடவும் ஏதுவாகிறது. இவற்றில் எளிய முறை, கனடாவின் இறக்குமதியாளர், ஒரு கனடா வங்கியில் இறக்குமதிப் பொருளின் மதிப்பைக் கடனாகப் பெற்று, பிரிட்டன் ஏற்றுமதியாளருக்குப் பவுண்டு இசுடெர்லிங்காகவோ, தாலராகவோ செலுத்துதலாகும். பின்னர், தாம் இறக்குமதி செய்த பொருள்களை விற்று, வங்கிக்குத் தர வேண்டிய கடனைத் தீர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு, வங்கியிடம் வங்கியிடம் கடன் பெறுவதற்கு அவர் தாம் பெற்ற இறக்குமதி ஒப்பந்தச் சீட்டை அல்லது அனுமதிச் சீட்டை ஆதாரமாகப் பயன்படுத்தலாம். வங்கியும் இதற்கு மிக எளிய முறையில் ஒரு கடன் ஏற்பாடு செய்கிறது. அயற் செலாவணி அங்காடியின் மற்றொரு பணி, அங்காடியில் தோன்றக் கூடிய இடர்ப்பாடுகளுக்கு எதிராகப் பாதுகாப்பு அளிப்பதாகும். குறிப்பாக, ஒரு செலாவணியில் கடன்முறைப் பேரம் மேற்கொள்ளப்படும் போது, அக்கடன் தீர்க்கப்படுவதற்குள்ளாக, அதன் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களினின்று பாதுகாப்பு அளிப்பதாகும். ஒரு பொருளின் விலை, அதன் தேவை, அளிப்பு ஆகியவற்றால் வரையறுக்கப்படுவது போன்று, ஒரு செலாவணியின் மதிப்பும் அதன் தேவை, அளிப்பு ஆகியவற்றால் வரையறுக்கப்படுகிறது. எடுத்துக் காட்டாக, தேவை மாறாதிருக்க ஒரு செலாவணியில் அளிப்பு மிகுந்தால் அதன் மதிப்புக் மதிப்புக் குறையும்; அவ்வாறே அதன் அளிப்புக் குறைந்தால் அதன் மதிப்புக் கூடும். மற்றவை மாறாதிருக்க, ஒரு பொருளுக்கான தேவை அதிகரிக்கும் போது, அதன் மதிப்பும் கூடுகிறது. தேவை குறையும்போது அதன் மதிப்புக் குறைகிறது. அவ்வாறே, ஓர் அயற் செலாவணி அங்காடியில், ஒரு செலாவணிக்கான தேவை திடீரென அதிகரித்தால், அதன் மாற்று மதிப்புக் கூடும்; தேவை குறைந்தால் அதன் மதிப்பும் குறையும். ஒரு செலாவணியின் தேவை, அளிப்புகளைப் பல்வேறு காரணிகள் வரையறுக்கின்றன. ஒரு நாட்டின் செலுத்துநிலை அந்நாட்டுச் செலாவணியின் மதிப்பை வரையறுக்கும் ஒரு முக்கியமான கூறாகும். ஒரு நாடு சாதகமான செலுத்து நிலையைப் பெற்றிருப்பின் அந்நாட்டுச் செலாவணியின் மாற்று மதிப்பு உயரும். குறிப்பிட்ட ஒரு நாட்டுக்குப் பணம் தர வேண்டிய பிற நாடுகள், தம் செலாவணிகளை அந்நாட்டின் செலாவணிக்கு மாற்ற விரும்புகின்றன. எனவே, அயற் செலாவணி அங்காடியில் பிற செலாவணிகளின் அளிப்புக் கூடி, குறிப்பிட்ட ஒரு நாட்டுச் செலாவணியின் தேவை மிகுதியாகிறது. ஆகவே, அந்நாட்டுச் செலாவணியின் மாற்று மதிப்பு உயருகிறது. ஒரு குறிப்பிட்ட நாடு பாதகமான செலுத்து நிலையில் இருக்குமாயின், அந்நாட்டுச் செலாவணியின் மாற்று மதிப்புத் தாழ்ந்துவிடும். அந்நாட்டின் ஏற்றுமதி, அதன் இறக்குமதியை விடக் குறைவாக இருப்பதால், அந்நாடு பிற நாடுகளுக்குத் தரவேண்டிய தொகை மிகுதியாக இருக்கும். எனவே, தனது செலாவணி அங்காடியில், அந்நாட்டின் அளிப்புக் கூடி, பிற நாடுகளின் செலாவணிகளுக்கான தேவை அதிகரிக்கிறது. இவ்வாறு, அங்காடியில் குறிப்பிட்ட அச்செலாவணியின் மதிப்புக் குறைகிறது. காண்க: அயல்நாட்டுச் செலுத்து நிலை. ஒரு செலாவணியின் மாற்று மதிப்பை அயற் செலாவணி அங்காடியின் ஊக வாணிகப் பேரங்களும் (Speculative Dealings) வரையறுக்கின்றன. ஒரு செலாவணியின் மாற்று மதிப்பு உயரக் கூடிய நிலையிலிருந்தால் வணிகர் அதனைப் பெருமளவில் வாங்கி வைக்க முற்படுவர். இதன் காரணமாக, அச்செலாவணியின் மாற்று மதிப்பு மேலும் உயரக்கூடும். மாறாக, ஒரு செலாவணியின் மாற்று மதிப்புக் குறைவதாகத் தெரிந்தால், வணிகர் அச்செலாவணியை விற்க முற்படுவர். எனவே, அதன் அளிப்புக் குறைந்து, அதன் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையக் கூடும். மூலதனப் பெயர்ச்சிகளும் ஒரு செலாவணியின் மாற்று மதிப்பை மாற்ற வல்லவை. ஒரு நாட்டுக்குள் அயல்நாட்டு மூலதனம் வருகையில், அந்நாட்டுச் செலாவணிக்கான தேவை அதிகரிக்கிறது. எனவே, அதன் மாற்று மதிப்பும் உயருகிறது. மாறாக, ஒரு நாட்டினின்று மூலதனம் வெளியேறும் போது, அந்நாட்டின் செலாவணியும் வெளியேறி, பன்னாட்டுச் செலாவணி அங்காடியில் அதன் அளிப்புக் கூடுகிறது. எனவே, அதன் மாற்று மதிப்புக் குறைகிறது. ஒரு நாட்டின் வட்டி வீத மாற்றங்களினாலும் அந்நாட்டுச் செலாவணியின் மாற்று மதிப்புப் பாதிக்கப்படலாம். எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டின் வங்கி வீதம் (Bank Rate) உயர்ந்து, அதனைத் தொடர்த்து அங்காடி வட்டி வீதங்களும் உயரும்போது, வெளிநாட்டு மூலதனம் அந்நாட்டுக்குள் மிகுதியாக வந்து சேருகிறது. மாறாக, வட்டி வீதங்கள் குறையும்போது அந்நாட்டின் மூலதனம் வெளியேறக் கூடும். இவ்வாறு வட்டி வீத மாற்றங்களையொட்டி மூலதனம் நாட்டுக்குள் வருகையில், அந்நாட்டுச் செலாவணி மதிப்பு உயருகிறது. மூலதனம் வெளியேறுகையில், அந்நாட்டுச் செலாவணி மதிப்புக் குறைகிறது. ஒரு நாட்டில் இறக்குமதி வரிகள் கூட்டப்பட்டாலோ, அன்றி இறக்குமதி வரி வீதங்கள் உயர்த்தப்பட்டாலோ, இறக்குமதிகள் குறைந்து அந்நாட்டுச் செலாவணியின் மதிப்பும் உயரக் கூடும். மாறாக, இறக்குமதி வரிகள் வெகுவாகக் குறைக்கப்பட்டால், இறக்குமதிகள் பெருகி, அந்நாட்டுச் செலாவணியின் மதிப்புக் குறையக்கூடும். ஒரு நாட்டில் நிலவும் விலைகளின் போக்கும் அந்நாட்டுச் செலாவணியின் மதிப்பைப் பாதிக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டில் பணவீக்கப் போக்கு (Inflation) நிலவுமாயின், ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி கூடி, அந்நாட்டுச் செலாவணியின் மதிப்புக் குறையும், விலைகள் இறங்குமுகமாக இருக்கும் போது, ஏற்றுமதி கூடி, இறக்குமதி குறைந்து, அந்நாட்டுச் செலாவணி மதிப்பு உயரும். இவ்வாறு, ஒரு நாட்டுச் செலாவணியின் மாற்று மதிப்பு, மேற் குறிப்பிட்ட பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படுகின்றன. ஒரு நாட்டின் செலாவணி மாற்று வீதம், மாறாமல் நிலையாக இருக்க வேண்டுமா, நெகிழ்வுள்ள செலாவணி மாற்று வீதமாக இருக்கவேண்டுமா என்பதில் கருத்து வேறுபாடு பொருளியல் அறிஞர்களிடையே இருந்து வருகிறது. சில வல்லுநர்கள் நிலையான செலாவணி மாற்று வீதம் (Stable Exchange Rate) இருக்க வேண்டும் என்று, பின்வரும் காரணங்களால் வலியுறுத்துகின்றனர்: (1) நிலையான செலாவணி மாற்று வீதம், பன்னாட்டு முதலீடுகளையும், வாணிகத்தையும் தூண்டி, வளர்ச்சி பெற உதவுகிறது. (2) பன்னாட்டு வாணிகத்தில் ஈடுபட்டிருக்கும் வணிகர்கள் மத்தியில், நிலையான மாற்று வீதம் நம்பிக்கையை உண்டாக்குகிறது. அயல் நாடுகளிலிருந்து பொருள்களைப் பெறும்போது, தாம் எவ்வளவு பணம் தர வேண்டும் என்பதையும், அயல்நாட்டுக்குப் பொருள்களை அனுப்பும்போது, தமக்கு எவ்வளவு அயற் செலாவணி வரும் என்பதையும் வணிகர்கள் நுட்பமாகத் தெரிந்து கொள்கின்றனர். (3) நிலையான செலாவணி மாற்று வீதம், ஒரு நாட்டின் தொழில்களை வளர்த்து, பொருளாதாரத்தை விரைவில் முன்னேற்றம் அடையச் செய்கிறது. (4) பன்னாட்டு வாணிகத்தையே பெரிதும் நம்பி இருக்கும் நாடுகளுக்கு, நிலையான செலாவணி வீதம் பெரிதும் உதவுகிறது. (5) ஒரு நாட்டின் வேலைவாய்ப்பு, கடன், வட்டி வீதம் ஆகியவை சீரான நிலையில் செலாவணி இருக்க உதவுகிறது. (6) நிலையான மாற்று வீதங்கள், ஒரு நாட்டிலிருந்து மூலதனம் வெளியேறுவதைத் தடை செய்கிறது. விரைவான மாற்றங்களும், முன்னேற்றமும் அடைந்து வரும் இவ்வுலகில், நிலையான செலாவணி வீதம் நடைமுறைக்கு ஏற்றதன்று. செலாவணி மாற்று வீதம், முன்னேறி வரும் நாட்டின் தேவைக்கு ஏற்ப, மாற்றிக் கொள்ளத் தக்கதாக இருக்க வேண்டும். நெகிழ்வுள்ள செலாவாணி மாற்று வீதங்கட்குப் (Flexible Exchange Rate) பொருளியல் அறிஞர்கள் பலரும், நிதி வல்லுநர்கள் பலரும் 1969–ஆம் ஆண்டிலிருந்து ஆதரவு தெரிவித்துள்ளனர். செருமனி 1969–இல் தனது செலாவணியை, அயற் செலாவணி அங்காடியில் மிதக்கவிட்டது. பிரிட்டன், ஆலந்து, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் தங்களுடைய செலாவணிகளை 1970–இல் மிதக்க விட்டன. அமெரிக்காவின் வலுவிழந்துவிட்ட செலுத்து நிலையைச் சீரமைக்க 1971–ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் நிக்சன் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகளில் மிதக்கும் செலாவணிக் கொள்கையும் (Floating Currency) ஒரு பகுதியாக விளங்கியது. இருப்பினும், பன்னாட்டு நிதிக் கழகம் நிலைத்த மாற்று வீத முறைக்கு வலுவான ஆதரவு தெரிவிக்கிறது. நெகிழ்வுள்ள மாற்று வீதம் பல நன்மைகளைப் பெற்றுள்ளது. முதலில், இது ஓர் எளிமையான முறையாகும். ஒரு செலாவணிக்கான தேவையும், அளிப்பும் எப்படி இருந்தாலும் அந்தத் தேவை, அளிப்புகளைச் சமன் செய்ய ஒரு செலாவணி வீதம் நிலவவேண்டும். இந்த மாற்று வீதத்தில் ஏற்படும் மாற்றங்கள், தேவை, அளிப்புகளால் தூண்டப் பெற்றவையாக இருக்கும். இதன் காரணமாக, அந்த நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றில் தக்க மாற்றங்கள் ஏற்படலாம்; அல்லது, குறுகிய கால ஊக வாணிக அடிப்படையிலான மூலதனப் பெயர்ச்சி ஏற்படலாம்; அல்லது இவை இரண்டுமே ஏற்படலாம். அடுத்து, நெகிழ்வுள்ள மாற்றுவீத முறையில் செலுத்து நிலையில் தோன்றும் மாற்றங்கள், இணக்கமான சீரமைப்புப் பெறுகின்றன. இதனை நெகிழ்வற்ற மாற்று வீத முறையில் காண இயலாது. நெகிழ்வுள்ள மாற்றுவீத முறையின்கீழ், ஒரு பற்றாக்குறை நாட்டுச் செலாவணியின் மதிப்புத் தானாகக் குறைந்துவிடும். அதனைத் தொடர்ந்து, சீரமைவுச் சக்திகள் அயற் செலாவணி அங்காடி மூலமாகச் செயற்படத் தொடங்குகின்றன. இவ்விளைவுகள் பின்னர்ப் பொருளாதார அமைப்புக்குள் பரவுகின்றன. அன்றியும், வேலை நிறைவுச் சூழ்நிலைவில், கட்டுப்பாடற்ற மாற்று விகிதங்கள் நிலவுவது மிகப் பொருத்தமாக இருக்கும். ஆனால், இன்றையப் பொருளாதார அமைப்புகளில், வேலை நிறைவுநிலை (Full Employment Level) நிலவினாலும், வருமான ஏற்றத்தாழ்வுகள் மூலமாகப் பொருளாதார அமைப்புச் சீரமைவு பெற இயலாது. எனவே, செலாவணி மாற்றுவீத மாற்றங்கள், அல்லது செலாவணிக் கட்டுப்பாடு முறைகள் ஆகிய இருவகை முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்ற வேண்டியிருக்கும். முடிவாக, நெகிழ்வுள்ள மாற்றுவீத முறையில் நாடுகளின் நீர்மைத் தேவை (Liquidity) வெகுவாகக் குறைக்கப்படுகிறது. எனவே, பன்னாட்டு நீர்மைச் சிக்கல் தவிர்க்கப்படுகிறது. இருப்பினும், நடைமுறையில் நெகிழ்வுள்ள மாற்று வீத முறையிலும் ஓரளவுக்கு மைய வங்கியின் குறுக்கீடு இருக்கத்தான் செய்யும். அன்றாட மாற்று வீதத்தை நிலைப்படுத்த இத்தகைய குறுக்கீடு இருக்கத்தான் செய்யும். சில நாடுகளின் அயல்நாட்டு வாணிக அமைப்பு, அவற்றின் செலாவணி மாற்றுவீதச் சீரமைவுக்கு ஏற்ப அமைந்திருக்கலாம். ஆனால், எல்லா நாடுகளின் வாணிக அமைப்பும் அவ்வாறு இருப்பதில்லை. அன்றாடம் மாறும் அளவிற்கு இருக்கக்கூடிய செலாவணி மாற்று விதிமுறை, பன்னாட்டு வாணிகத்தின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும். மேலும், அடிக்கடி மாறக் கூடிய செலாவணி மாற்று வீதங்கள், பன்னாட்டு மூலதனத்தின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. இந்தகைய முறையின்கீழ், பன்னாட்டு அளவில் மேற்கொள்ளப்படக் கூடிய கொடுக்கல், வாங்கல் ஒப்பந்தங்களுக்கு ஓர் அடிப்படையில்லாமல் போய்விடக் கூடும். கட்டுப்பாடற்ற செலாவணி மாற்று வீதத்தில், சில அங்காடிக் கூறுகள் பல்வேறு தீமைகளை உருவாக்கக் கூடும் எனவும் கருதப்படுகிறது. மேற்குறிப்பிட்ட இரு மாற்று வீதங்களில், எந்த ஒரு முறையும் முற்றிலும் குறைபாடற்றதன்று. எனவே, எம்முறையில் நன்மைகள் மிகுதியாக இருக்குகின்றனவோ, அம்முறையை ஒரு நாடு மேற்கொள்வது நன்று.ந.து. துணை நூல்கள் Bosdersten., “International Economics”, Mc. Millan, London, 1971. Scammell. W.M., “International Trade and Payments”, Mc. Millan, London, 1974. Srivasthava. S.K., “Monetary Economics”, Atmaram & Sons, New Delhi, 1972. Mithani. D.M., “Introduction to International Economics”, Vota & Company, Bombay, 1979.